'செயற்கை நுண்ணறிவு' எனப்படும் 'ஏ.ஐ.' எவ்வளவு வேகத்தில் அனைத்துத் துறைகளிலும் இப்போது ஊடுருவிவிட்டதோ, அதே வேகத்தில் அது தந்திருக்கும் புதிய வார்த்தையும் உலகெங்கும் இப்போது பரவி வருகிறது. அதுதான் 'ஒர்க் ஸ்லாப்' அல்லது 'ஏ.ஐ. ஸ்லாப்'. இதன் பொருள் ஏ.ஐ-யினால் வரும் வேலைத் தளர்ச்சி!
'மிகவும் துரிதமாக வேலையைச் செய்வதுபோல முதலில் காணப்பட்டாலும், உண்மையில் பார்த்தால் அதில் எந்த அர்த்தமும் இருப்பதில்லை, தரமும் இருப்பதில்லை'' என்பதே இப்போதைய நிபுணர்களின்கருத்தாக அமைகிறது. இதை 'ஏ.ஐ.ஸ்லாப்' என்றும் கூறலாம். ஏனெனில், இது தரும் படங்களும் செய்திகளும், உரைகளும் தரம் தாழ்ந்தவையாகவே உள்ளன.
இந்த வார்த்தையை முதலில் உருவாக்கியது அமெரிக்காவில் உள்ள பிரபலமான ஸ்டான் ஃபோர்ட் சோஷியல் மீடியா லாபரட்டரியும் பெட்டர் அப் லாபரட்டரியும்தான்!
உற்பத்தியை ஏ.ஐ. பாதிக்கிறது, குறைக்கிறது என்பது 2025 செப்டம்பர் மாதத்திய கண்டுபிடிப்பு. 95 சதவீத நிறுவனங்கள் 'ஏ.ஐ.யில் தாங்கள் போட்ட முதலீட்டுக்குத் தக்க வருமானம் வரவில்லை'' என்று அங்கலாய்க்கிறார்கள்; கோபப்படுகிறார்கள்.
'3000 கோடியிலிருந்து 4000 கோடி டாலர்களை முதலீடு செய்து ஓர் ஆதாயமும் இல்லை'' என்பது அவர்களின் புகார். கூகுளைச் சேர்ந்த, முன்னாள் இறுதி முடிவை எடுக்கும் விஞ்ஞானியான பெண்மணி கேஸிகோஸிரோ, ஏ.ஐ.யைக் கடுமையாக விமர்சிக்கிறார்.
'அது ஒரு பெரிய சிந்தனையே அற்ற ஆக்கச் சக்தி'' என்பது அவரது விமர்சனம். 'இது ஆக்கபூர்வமான மனிதர்களை சோம்பேறிகளாக ஆக்குகிறது'' என்கிறார் அந்தப் பெண்மணி. இதற்கான ஆதாரங்களை ஸ்டான்ஃபோர்ட் லாபரட்டரியின் ஆய்வு முடிவுகளிலிருந்து அவர் தருகிறார்.
அது மட்டுமல்ல, 'ஏ.ஐ.கருவிகளைப் பயன்படுத்துவதால் அவை தங்கள் படைப்பாற்றலைக் குறைக்கிறது; புத்திக்கூர்மையை மழுங்கடித்து சிந்தனை ஆற்றலையே போக்கடிக்கிறது'' என்பது பலரது கருத்தாக அமைகிறது. 42 சதவீதத்தினர், 'தங்கள் சகாக்களை நம்பமுடியாதவர்களாக இது ஆக்கிவிட்டது'' என்கின்றனர்.
'ஏ.ஐ. சாதனங்களும் கருவிகளும் ஒருநாளும் சுயமாகச் சிந்திப்பவர்களின் அருகில் கூட வரமுடியாது'' என்பதே சிந்தனையாளர்களின் கருத்து! இந்த ஆய்வு முடிவுகள் அனைத்தும் உலகின்ஆகப் பெரிய ஸ்டான்ஃபோர்ட் லாபிலிருந்து வந்திருப்பதால் இது பெரிய பேசுபொருளாகிவிட்டது. எங்குப் பார்த்தாலும் இன்றைய ட்ரெண்டிங் டாபிக் இதுதான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.