ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அடிவயிற்றில் வாயுவின் அழுத்தம் நீங்க...

என் வயது 51. அதிக உதிரப் போக்கு ஏற்பட்டதால் கருப்பையை ஸ்கேன் செய்து பார்த்ததில் 'சப்ஸிரோசல்' கட்டி உருவாகியிருப்பதாய் தெரியவந்துள்ளது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அடிவயிற்றில் வாயுவின் அழுத்தம் நீங்க...
Published on
Updated on
1 min read

எஸ். சுவாமிநாதன்

என் வயது 51. அதிக உதிரப் போக்கு ஏற்பட்டதால் கருப்பையை ஸ்கேன் செய்து பார்த்ததில் 'சப்ஸிரோசல்' கட்டி உருவாகியிருப்பதாய் தெரியவந்துள்ளது. கருப்பை அருகிலுள்ள சிறுநீர்ப் பையை அழுத்துவதால் அடிக்கடி சிறுநீரும் போக வேண்டியுள்ளது. அடி வயிற்றில் வாயுவின் அழுத்தம் காரணமாக, உப்புசமும் ஏற்படுகிறது. இதை எப்படிக் குணப்படுத்துவது?

-சித்ராதேவி, சென்னை.

ஆயுர்வேதக் கண்ணோட்டத்தில் ஃபைப்ராய்டுகள் 'க்ரந்தி /அர்புதம்' என்ற வகையில் பார்க்கப்படுகின்றன. அதிக இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்.

வாத, பித்த, கப சமநிலை குன்றுதல். கபம் எனும் தோஷம் அதிகரித்து மாம்ஸதாது மற்றும் ரத்த தாது அதிக வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதுவே 'ஃபைப்ராய்டு' எனும் கட்டியாக வளர்ச்சி அடைகிறது.

பித்தம் அதிகரித்து உடல் உட்பகுதியில் சூடு அதிகமாவதால் இரத்தப் போக்கு அதிகரிக்கிறது. இதனால் ஏற்படும் இரத்தக் கசிவானது கட்டுப்பாடின்றி வரும்.

உணவு மற்றும் வாழ்வியல் காரணங்கள். அதிக புளி, உப்பு, காரம், சூடான வீர்யம் கொண்ட உணவுகள்.

மன அழுத்தம், தூக்கமின்மை.

பிறவியிலிருந்தே ஹார்மோன் சமநிலைப் பிரச்சனை.

சிகிச்சை முறைகள்

உள்மருந்துகள்: அசோகாரிஷ்டம்-கருப்பைச் சுருக்கத்தைச் சரிசெய்து, இரத்தப் போக்கைக் குறைக்கும்.

லோத்ராசூரணம்: கப, பித்தம் சமப்படுத்தி, இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும்.

சதாவரீக்ஷீரபாகம்: சதாவரியின் கிழங்கை நறுக்கி, பாலில் வேக வைத்துக் குடித்தல். இதனால் ஹார்மோன் சமநிலை, கருப்பை ஆரோக்கியம் மேம்படும்.

காமதுகாரஸம்/ பிரவாளபிஷ்டி: இரத்தப் போக்கை நிறுத்தும்.

மருந்துகள் மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே எடுத்துக் கொள்ளவும். உத்தரவஸ்தி எனப் புறவழிச் சிகிச்சையும் இதில் நன்கு பயன்படும். பஞ்சகர்மா சிகிச்சை முறையில், விரேசனம் எனும் பேதி மருந்து கொடுத்து, பித்த நீரை வெளியேற்றுவதன் மூலம் அதிக பித்த ஊறலைக் கட்டுப்படுத்தலாம்.

வஸ்தி எனும் எனிமா சிகிச்சை மூலம் வாத, பித்தங்களைச் சமப்படுத்தி, உதிரப் போக்கைக் கட்டுப்படுத்தலாம்.

உணவுப் பரிந்துரைகள்

குளிர்ச்சியான உணவுகள்: வெள்ளரிக்காய், முருங்கைக்கீரை, சுரைக்காய், கரிசலாங்கண்ணி, கருவேப்பிலை.

மாதுளை, சேமியா கஞ்சி, பசும்பால்.

தவிர்க்க வேண்டியது

காரம், புளிப்பு, அதிக எண்ணெய், மாமிசம்.

யோகா மற்றும் வாழ்க்கை முறை

சப்தத்திரிகோணாசனம், சவாசனம் (இதனால் மனம், உடல் சமநிலை பெறலாம்)

போதிய தூக்கம், மன அழுத்தக் கட்டுப்பாடு.

குறிப்பு: உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த உபாதையானது கருப்பைக்கு வெளியே வளரும் ஒரு கட்டி உபாதையாகும். அது நேரடியாக அதிக இரத்தப்போக்கைத் தருவது அரிது. ஆனால், அளவு பெரியதாக இருந்தால், கருப்பைச் சுருக்கம், ரத்த நாள ஒழுக்கு பாதித்து இரத்தப்போக்கை அதிகரிக்கக் கூடும்.

மாதவிடாய் நிறைவுப் பருவம் என்பதால் ஹார்மோன் மாற்றம் இரத்தப் போக்கை அதிகப்படுத்தும்.

ஆயுர்வேதச் சிகிச்சை மற்றும் நவீன பரிசோதனை இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

ரத்த அணுக்கள் (ஹீமோகுளோபின்) குறைவாக இருந்தால், இரும்புச் சத்து மாத்திரைகளை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com