
தேவிகா, தெலுங்குத் திரையுலகில் பிரபலமாக இருந்த ரகுபதி வெங்கய்யாவின் பேத்தி. இவரின் முதல் படம் 'முதலாளி'. முக்தா சீனிவாசன் இயக்கிய இப்படத்தில் எஸ்.எஸ்.ஆர். ஜோடியாக நடித்தார். முதல் படமே தேசிய விருது பெற்றது. 1957-இல் இப்படம் வெளிவந்தது.
அதன் பிறகு ஜெமினி, சிவாஜி, எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர் படங்களில் நடித்தார். 'சுமைதாங்கி', 'நெஞ்சில் ஓர் ஆலயம்', 'கர்ணன்', 'பாவ மன்னிப்பு', 'குலமகள் ராதை', 'அன்புகரங்கள்', 'நீலவானம்', 'ஆனந்த ஜோதி' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்த இவர் பிரமிளா தேவியாக இருந்து தேவிகா என்று பெயர் மாறி, பீம்சிங்கிடம் உதவி இயக்குநராக இருந்த தேவதாஸை காதலித்து மணம் புரிந்தார். பின்னாளில் கதாநாயகியாக வலம் வந்த கனகா, தேவிகாவின் பெயர் சொல்லும் மகளாக விளங்கினார்.
1964-இல் திரையுலகுக்கு வந்தே தீர வேண்டும் என்ற முடிவில் இருந்த நான், என் தந்தையார் ஊரில் இல்லாத போது எதுவும் தெரியாத தாயிடம் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு 'பாட்டெழுதச் சென்னைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள்', என்று ஒரு பெரிய பொய்யைச் சொல்லிக் கிளம்பி விட்டேன்.
கல்லூரிப் படிப்பையும் தொடராமல் ரயிலில் சென்னைக்கு வந்த போது டிக்கெட் 7 ரூபாய் போக மீதி 3 ரூபாயில் அங்குச் சுற்றி இங்குச் சுற்றி தங்க ஒரு இடமில்லாமல் அலைந்தபோது, 'அவனுக்கென்ன அழகிய மனம்...' என்ற பாடலுக்கு நாகேஷுடன் ஆடிப்பாடிய சாந்தாவை நுங்கம்பாக்கம் ஐயப்பன் கோயிலருகே இருந்த வீட்டில் சந்தித்தேன்.
அவரது அண்ணன் கண்ணன் ஜெமினியில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார். அவரின் சிபாரிசில் அன்று எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களுக்கு நடன ஆசிரியராக பிரபலமாக இருந்த தங்கப்பன் மாஸ்டரிடம் 1964-இல் என்னை தயாரிப்பு உதவியாளராக சம்பளம் எதுவுமில்லாமல் சேர்த்து விட்டார். இவரின் உதவியாளர்கள்தான் பிரபல நடன இயக்குநர் ஆர்.சி.சக்தியும் கமலஹாசனும்.
இவர் 'காட்டுப் பூக்கள்' என்ற மலையாளப் படத்தை தயாரித்து இயக்கினார். இதில் மதுவுடன் முதன் முறையாக தேவிகா மலையாளத்தில் ஹீரோயினாக நடித்தார். படப்பிடிப்பு கீழ்ப்பாக்கத்தில் இருந்த சிட்டாடல் ஸ்டூடியோவில் நடந்தது. நான் தயாரிப்பு உதவி. மேக்கப் அறையில் இருந்த தேவிகா என்னை அழைத்து 'தாச பிரகாஷ் ஹோட்டலில் சான்ட்விட்ச் வாங்கி வரச் சொல்லுங்க' என்றார்.
எனக்கு சான்ட்விட்ச் என்றால் அப்போது என்னவென்று தெரியாது. 'சரி' என்று சொல்லி விட்டு தேவிகா கண்களில் படாமல் இருந்தேன்.
தனக்கு சான்ட்விட்ச் இரண்டு மணி நேரமாகியும் வரவில்லை என்று தேவிகா கோபப்பட, விவரம் தெரிந்து தங்கப்பன் மாஸ்டர் என்னிடம் கோபப்பட்டார். 'வேலைக்கு வர வேண்டாம்' என்றார்.
நான் தனியாக தேவிகாவைச் சந்தித்து 'எனக்குச் சான்ட்விட்ச் என்றால் என்னவென்று தெரியாது' என்று கூறியதும் என்னிடம் 'சாரி' சொல்லிவிட்டு அவரது காரை அனுப்பி தாசபிரகாஷ் ஹோட்டலில் சான்ட்விட்ச் வாங்கி வரச் சொல்லி எனக்கும் தரச் சொன்னார்.
'இதுதான் சான்ட்விட்ச்... தெரிஞ்சுக்குங்க' என்றார். அடுத்த நாளிலிருந்து தேவிகா வரும் முன்னே சான்ட்விட்ச் வாங்கி வைத்து விட்டு அவரிடம் சொல்லுவேன்.
'காட்டுப் பூக்கள்' மலையாளப் படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் நடந்து முடிந்ததும் எனக்கு வேலை இல்லாத நிலையில் தேவிகாவை அண்ணாமலைபுரத்தில் அவரது வீட்டில் சந்தித்து இயக்குநர் பி. மாதவனிடம் உதவியாளராகச் சேர்த்து விட சிபாரிசு செய்யச் சொன்னேன். பி.மாதவனிடம் உதவியாளராக இருந்து பிற்காலத்தில் 'அன்னக்கிளி' என்ற காதல் இசைக் காவியத்தைத் தந்த தேவராஜ் - மோகனிடம் அவர் அனுப்பி வைத்தார்.
தேவராஜ் அப்போது 'கல்யாண ஊர்வலம்' என்ற நாடகத்தைத் தயாரித்து ஒத்திகை நடத்திய போது, அந்த நாடகத்தை கார்பன் பேப்பர் வைத்து மூன்று காப்பி எடுக்கச் சொல்லிப் பயிற்சி தந்தார். அந்த நாடகம் ஒரே நாடகத்துடன் நின்று போனதால் மீண்டும் தடுமாறினேன்.
எப்படியோ பீம்சிங்கிடம் நான் உதவியாளராக இருந்த போது, அவரிடம் ஏற்கெனவே இருந்த தேவதாஸூடன் பழகினேன். இவர் தேவிகாவின் கணவர். கவிதா ஹோட்டலில், இவர் இயக்கி தயாரித்து கலைஞானம் கதை எழுதிய 'வெகுளிப் பெண்' படப்பிடிப்பில் சந்தித்த போது தேவதாஸ் 'காரைக்குடி நாராயணன் எங்க டைரக்டர்கிட்ட அசிஸ்டெண்ட்' என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
பையனை அழைத்து தேவிகா எனக்கு டீ கொடுக்கச் சொன்னார். உடனே 'டீ மட்டும்தானா சான்ட்விட்ச் கிடையாதா?' என்ற நான், 'காட்டுப்பூக்கள்' மலையாளப் படப் பிடிப்பில் நடந்ததை நினைவுபடுத்தினேன். 'ஆமாம், மறந்திட்டேன்' என்று கூறி விட்டு 'ஷாட் ரெடி' என்றதும் என்னை உட்காரச் சொல்லி விட்டுப் போனார். ஏப்ரல் 25, 1943-இல் பிறந்த தேவிகா மே 2, 2002-இல் காலமானார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.