புள்ளிகள்

இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் ரஸ்கின் எழுதிய 'அன்டூ திஸ் லாஸ்ட்' (கடையனுக்கும் கடைத்தோற்றம்) என்ற நூல் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது.
புள்ளிகள்
Published on
Updated on
1 min read

இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் ரஸ்கின் எழுதிய 'அன்டூ திஸ் லாஸ்ட்' (கடையனுக்கும் கடைத்தோற்றம்) என்ற நூல் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது.

ஒருமுறை தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் இருந்து டர்பன் வரை ரயிலில் மகாத்மா காந்தி பயணித்தார். அப்போது அவரது நண்பர் போலக் என்பவர் 24 மணி நேர ரயில் பயணத்தில் வாசிப்பதற்காக, இந்தப் புத்தகத்தை வழங்கினார்.

இதுகுறித்து காந்தி எழுதிய 'சத்திய சோதனை' நூலில், 'ஒரு நூலின் மந்திரச் சக்தி' எனும் தலைப்பில் எழுதுகையில், 'இந்தப் புத்தகத்தை வாசித்தவுடன் அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. எல்லோருடைய நலனில்தான் தனிப்பட்ட நலன் இருக்கிறது. எந்த வேலையும் இழிவானது அல்ல. உழைத்து வாழும் மக்களின் வாழ்க்கை மேன்மையானது என்கிற கருத்துகள் நூலில் இடம்பெற்றுள்ளன. இதுவே என்னை எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று மாற்றியது' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதோடு, ஜான் ரஸ்கின் எழுதிய நூலை குஜராத்தியில் 'சர்வோதயம்' என்ற பெயரில் காந்தி வெளியிட்டார்.

-கோட்டாறு ஆ.கோலப்பன்

தூக்குக் கயிறு மாட்டப்படுவதற்கு முன்பு 'இன்குலாப்' என்று பகத் சிங் கூற, ராஜகுரு, சுகதேவ் ஆகிய இருவரும் 'ஜிந்தாபாத்' என்று சொன்னார்கள். அடுத்து சுகதேவுக்கு தூக்குக்கயிறு மாட்டப்படுவதற்கு முன்பு 'இன்குலாப்' என்று அவர் சொல்ல, 'ஜிந்தாபாத்' என்று ராஜகுரு சொன்னார். மூன்றாவதாக, ராஜகுருவைத் தூக்கிலிட்டபோது, 'இன்குலாப்' என்று ராஜகுரு சொல்கிறார். 'ஜிந்தாபாத்' என்று ஒரு குரல் ஒலிக்கிறது. அதை முழங்கியவர் தூக்கிலிட்ட சிறைப் பணியாளர்.

'நான் ஏழெட்டு சிறைகளில் வேலை செய்கிறேன். நூற்றுக்கணக்கானவர்களுக்குத் தூக்குக் கயிறை மாட்டியிருக்கிறேன். ஆனால், இந்த இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட தண்டனை அளிப்பதற்கு ஆளாகி விட்டேனே!' என்று அந்தச் சிறைப்பணியாளர் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதார்.

('காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்' என்ற நூல் வெளியீட்டு விழாவில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் பேசியது).

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அறிவியல் ஆசிரியராகத்தான் தமது வாழ்வைத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தமிழாசிரியரானார். சிற்ப சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சியில் தேர்ச்சி பெற்ற கவிமணி, அதுகுறித்து சில நூல்களும் வெளியிட்டுள்ளார்.

-தேனி பொன் கணேஷ்

திருவாசகத்தை மொழிபெயர்த்து வெளியிடுகிற வேளையில் டாக்டர் ஜி.யு.போப்பின் வயது எண்பது. முதுமையிலும் விடாமுயற்சியோடு இந்தப் பணியைத் தாகத்தோடும், வேகத்தோடும் செய்து தனது 80-ஆவது பிறந்த நாளான 1900 ஏப்ரல் 24-இல் வெளியிட்டார்.

'என் எண்பதாவது பிறந்த நாளில் இந்த நூலை வெளியிடுகிறேன். 1937-ஆம் ஆண்டில் தமிழ் மொழியைப் படிக்கத் தொடங்கினேன். நெடுங்காலம் உண்மையான பற்றோடு தமிழ் நூல்களைக் கற்றேன். ஆராய்ந்தேன். இந்த நூல் வெளியீட்டோடு என் தமிழ்ப் பணி முற்று பெறுகிறது' என திருவாசக மொழிபெயர்ப்பின் முன்னுரையில் ஜி.யு.போப் குறிப்பிட்டுள்ளார்.

-முக்கிமலை நஞ்சன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com