தமிழானவன்
'பயபக்தியோடு பணி செய்வதுதான் உண்மையான யோகா. 'கர்ம யோகா' என்று சொல்லப்படும் ஒருங்கிணைந்த யோகா. உலகுக்கு ஸ்ரீ அரவிந்தர் அறிமுகப்படுத்திய யோகா' என்கிறார் ஆரோவில் சர்வதேச நகரத்துக்கு சுமார் 2,350 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடம் பேசி அனைத்து நடைமுறைகளையும் சுமுகமாக மேற்கொண்ட தொண்ணூற்று இரண்டு வயதான கர்மயோகி ஜெ. தயானந்த்.
அரவிந்தரின் ஆன்மிகப் பணிகளுக்குத் துணை நின்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிர்ரா அல்பசா என்ற ஸ்ரீஅன்னையின் கனவுத் திட்டம்தான் ஆரோவில் சர்வதேச நகரம். 'ஸ்ரீ அரவிந்தோ சொசைட்டி'க்கு ஸ்ரீஅன்னையின் தீவிர பக்தரான தயானந்த் நிலங்களை வாங்கினார். இவருடைய உள்ளார்ந்த உணர்வு, பணி செய்வதுதான் உண்மையான யோகா என்பதை மனதில் வைத்துச் செயலாற்றியதுதான் பெரும் நிலத்தை ஆரோவில் பெற முடிந்தது. இவரது மனைவி அஞ்சனி தயானந்த், புதுவை அரசின் தலைமைச் செயலராகப் பணியாற்றியவர்.
'வாழ்வதற்கு வயது முக்கியமில்லை; அறியாமைதான் இறப்பு' என்று சொல்லும் தயானந்திடம் பேசியபோது:
'மாணவராக இருக்கும்போதே புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்துக்கு ஸ்ரீ அன்னையின் நேரடி தரிசனத்துக்கு அடிக்கடி வருவேன். இப்போதெல்லாம் புதுச்சேரிக்கு இளம்தலை
முறையினர் அதிகம் பேர் வருகை தருகின்றனர். யார் எதைத் தேடி வருகிறார்கள் என்பது அவரவர் விருப்பம். அதில் தவறு ஒன்றுமில்லை. இருப்பினும் என்னுடைய அனுபவத்தில், 'பொருள்சார்ந்த வாழ்க்கை' என்பது சுயநலமிக்கது. வீணானது.
தமிழக முதல்வராக அண்ணா இருந்தபோது, மத்திய தேர்வாணையம் வாயிலாக மண்டல வனத் துறை அலுவலராகத் தேர்வாகி ஓசூரில் பணியாற்றினேன். பின்னர், சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களிலும் பணியாற்றினேன்.
முழு நேரமும் ஆரோவில் நிறுவனத்துக்கு நான் பணியாற்ற வேண்டும் என்று ஸ்ரீ அன்னை பணித்தார். என்னைப் போல், ஏராளமானோரை அடையாளம் கண்டு அவர்களுக்குக் குறிப்பிட்ட பணியைச் சுதந்திரமாகச் செயல்படுத்த அனுமதி அளித்தவர்தான் ஸ்ரீ அன்னை.
சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை தாவரவியல் படிப்பையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை தாவரவியல் படிப்பையும், சென்னை மாநிலக் கல்லூரியில் தாவரங்கள் குறித்து முனைவர் பட்டமும் பெற்றவன். இதனால் தாவரங்கள், நிலம் சர்வே செய்வது உள்ளிட்ட எல்லாப் பணிகளையும் எனது தலைமையின் கீழ் 15 பேர் விவசாயிகளிடம் பேசுவது, நிலத்தை வாங்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டோம்.
தற்போதுள்ள ஆரோவில் சர்வதேச நகரம், அப்போதைய ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்ட நிர்வாகத்தின் கீழ்தான் இருந்தது. இப்போதுதான் விழுப்புரம் மாவட்டம்.
அந்தப் பகுதி முழுவதும் மானாவரி பூமி. ஆறு மாதங்கள்தான் விவசாயம் செய்ய முடியும். மீதமுள்ள ஆறு மாதங்கள் விவசாயிகள் சும்மாதான் இருப்பார்கள். அப்போதெல்லாம் வங்கி வசதியில்லை. பணத்தை எண்ணியே விவசாயிகளிடம் கொடுக்க வேண்டும். 1965 முதல் 1976 வரை சுமார் 11 ஆண்டுகள் நிலத்தை வாங்கினோம். இதற்கெல்லாம் பொறுமைதான் முக்கியம். பலமுறை நடையாய் நடந்துதான் விவசாயிகளிடம் நிலத்தை வாங்கினோம்.
ஆரோவில் சுற்றியுள்ள குயிலாப்பாளையம், இரும்பை, பொம்மையார்பாளையம் மக்களை ஒருங்கிணைத்து விவசாயம் செய்தோம். அவர்களுக்கு வேலை கொடுத்தோம். அதனால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் எழவில்லை.
இதுதான் ஆரோவில்லின் கொள்கையும்கூட! 'மணிலா' என்று சொல்லப்படும் நிலக்கடலையைச் சாகுபடி செய்தோம். முந்திரியைப் பராமரித்தோம். நாங்களும் தொழிலாளியைப் போன்று வேலை செய்தோம். இந்த அணுகு முறைதான் சாத்தியமாக்கியது.
ஸ்ரீஅன்னை இருக்கும்போதே அவருடைய கனவுத் திட்டம் நிறைவேறியது. பசுமை நிறைந்த அழகிய நகரமாக மாறியது. தற்போது ஆரோவில் பவுண்டேஷன் செயலராகப் பணியாற்றி வரும் ஜெயந்தி எஸ்.ரவி என்பவர்தான் ஆரோவில்லில் முதலில் தங்கிப் பணியாற்றும் அரசு செயலராக இருக்கிறார்.
இவரது தலைமையின் கீழ் ஆரோவில் தற்போது சாலை வசதி, விடுதிகள் உள்ளிட்ட நிறைய வளர்ச்சியைக் கண்டு வருவது பெருமையாக இருக்கிறது' என்கிறார் தயானந்த்.
படங்கள் கி. ரமேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.