
'பூமியில் மனிதர்களைத் தவிர, வேற்று உலகவாசிகள் வசிக்கிறார்களா?, மனித ஆற்றலையும் விஞ்சிய அபரிதமான ஆற்றலுடன் மறைந்து வாழும் இனம் உள்ளதா?...' என்ற கேள்விகளுக்கெல்லாம் விசித்திரமான விடை கிடைத்துள்ளது ஐஸ்லாண்டில்..!
ஐரோப்பாவுக்கும், வட அமெரிக்காவுக்கும் இடையில் எரிமலைப் பகுதிகள் நிறைந்துள்ள குட்டி நாடான இதன் மொத்தப் பரப்பளவு 39,817 சதுர மைல். இங்கு நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள் நல்ல கல்வி அறிவை உடையவர்கள். இங்கு வாழ்கின்ற பலரும் பல மர்மமான குள்ளர்களைக் கண்டதாக அடிக்கடி கூறி வந்தபோதும், பகுத்தறிவுவாதிகள் நம்பவில்லை.
ஐஸ்லாண்ட் மக்கள் இவர்களை 'ஹுல்டு மக்கள்' என்று இனம் கண்டு கூறுகின்றனர். 'இவர்களின் மேல் உதடுக்கு மேலே ஒரு பிளவு இருக்கும். எப்போதும் சாம்பல் நிற ஆடைகளையே உடுத்தும் இவர்கள் கறுத்த முடியை உடையவர்கள். மறைந்து வாழ்பவர்கள். அவர்கள் நினைத்தால்தான் அவர்கள் உருவத்தைக் காண முடியும்' என்கின்றனர். இவர்களைப் பற்றிய ஏராளமான நாவல்கள் வந்துவிட்டன. இணையத்திலும் சுவையான விவரங்கள் உள்ளன.
'அகுரேய்ரி' என்பது ஐஸ்லாண்டில் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய நகரமாகும். இங்கு நேச்சுரல் ஹிஸ்டரி மியூஸியத்தின் மேலாளராகப் பணிபுரிந்த ஹெல்ஜி ஹால்கிரிமேஸன் என்பவர், 'பல நேர்மையான மனிதர்களும் அந்தக் குள்ள மனிதர்களைத் தாங்களே நேரில் காணும் வரை அதை நம்பவில்லை. அந்த மனிதர்கள் தாங்கள் வாழும் பகுதியை மிகவும் நேசிப்பவர்கள். 'தங்கள் நாட்டை வேறு ஒருவரும் ஆக்கிரமித்து விடக் கூடாது' என்பதில் தீவிரமாய் இருப்பவர்கள். யாரேனும் அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்தால் அதை அவர்கள் வழியில் எதிர்க்கின்றனர்' என்று கூறினார்.
1962-ஆம் ஆண்டில் அகுரேய்ரியில் புதிய துறைமுகம் கட்டும் பணி ஆரம்பமாயிற்று. வெடிபொருள்களை வைத்து உடைக்கப் பார்த்தவர்களே ஆச்சரியப்படும்படியாக பாறைகளை உடைக்கவே முடியவில்லை. எவ்வளவு முயற்சித்தாலும் வெடிபொருள் சாதனம் இயங்கவே இயங்காது. அங்கு வேலை பார்த்தோருக்குக் காயங்கள் ஏற்பட்டதோடு, நோய்களும் வர ஆரம்பித்தன. இவர்கள் பலர் அச்சப்பட்டே இறந்தனர்.
'இனி இங்கு தங்களால் வேலை பார்க்க முடியாது' என்ற நிலைக்கு அவர்கள் வந்தபோது, ஓலாஃபுர் பால்டர்ஸன் என்பவர், 'தங்கள் பிரதேசத்தை மனிதர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற எண்ணத்தில் மர்மக் குள்ளர்கள் செய்யும் வேலை' என்று கூறினார். பின்னர், அவர் சமரசம் பேசி விஷயத்தைச் சுமுகமாக முடிக்க வேண்டும் என்று நீதிமன்ற அனுமதியைக் கோரி, இந்தப் பிரச்னையை முடித்தார்.
1984-இல் ஐஸ்லாண்டின் சாலை அமைக்கும் பிரிவினர் அகுரேய்ரி அருகே ஒரு புதிய சாலையை அமைக்கத் தொடங்கியபோது மீண்டும் பிரச்னை தொடங்கியது. அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களுக்கும் பல்வேறு நோய்கள் வர ஆரம்பித்தன. 'எக்ஸ்கலேட்டர்கள்' திடீரென்று உடைந்தன.
இதுகுறித்து ஹெல்ஜி ஹால்கிரிமேஸன் என்பவர், 'விஞ்ஞானம் விளக்க முடியாத விஷயங்கள் ஏராளம் உலகில் உள்ளன' என்றார். இதற்குப் பதிலடி அளிக்கும் வகையில் தோர் மக்னூஸன் என்பவர், 'இப்படிச் சொல்பவர்கள் உடனடியாகத் தங்கள் கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்' என்று கூறினார்.
புத்தாண்டு தினம், ஜனவரி 6 (இது 13-ஆம் நாள் என்று அழைக்கப்படுகிறது) , மிட்ஸம்மர் இரவு, கிறிஸ்துமஸ் இரவு ஆகிய நான்கு தேசிய விடுமுறை தினங்கள் குள்ள மனிதர்களுக்குத் தொடர்புள்ளதாக இருக்கிறது.
2013-இல் அல்ஃடேனியஸிலிருந்து ரெய்க்ஜவிக் என்ற இடத்திற்கு ஒரு சாலை போடுவதாக ஐஸ்லாண்டில் ஒரு திட்டம் எழுந்தபோது, அங்கு பாறைகளில் மறைந்து வாழும் ஹுல்டு மக்களுக்குப் பாதகம் விளைவிக்கும் என்று கூறி சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸூக்கு முன்பாக அனைத்து வீடுகளையும் சுத்தம் செய்து சிறிது உணவை இந்த ஹுல்டுகளுக்காக ஐஸ்லாண்ட் மக்கள் வைக்கின்றனர். புத்தாண்டு தினத்தன்று இவர்கள் புது இடங்களுக்குப் போய் விடுவார்கள். அவர்களுக்கு வழி தெரிய வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே ஏராளமான மெழுகுவர்த்திகளை ஐஸ்லாண்ட் மக்கள் ஏற்றி வைப்பது இன்றும் நடைபெறுகிறது.
மிட்ஸம்மர் தினமான ஜூன் 24-இல் சாலை சந்திப்புகளில் உட்காரக் கூடாது என்பது ஐஸ்லாண்ட் மக்களின் நம்பிக்கை. உட்கார்ந்தால் அவர்களை ஹுல்டுகள் பிடித்துக் கொண்டு விடுவார்கள் என்கின்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.