புதுமுக இயக்குநர்களுக்கு ஆர்.கே. செல்வமணி அறிவுரை!
சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சாம் இயக்கி வரும் படம் 'யோலோ'. பூர்ணேஷ், தேவிகா, ஆகாஷ், படவா கோபி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எம்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றனர். சகிஷ்னா தேவி இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் 'யோலோ' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, 'தற்போதைய சூழலில் படங்கள் எடுப்பதைக் காட்டிலும், படங்களைத் திரையிட தியேட்டர்கள் கிடைப்பது தான் பெரிய கஷ்டமான விஷயமாக இருக்கிறது. நடிகர் படவா கோபி 7 வருடங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ஒரு படத்தை ஆரம்பித்தார். ஆனாலும் அந்தப் படத்தின் டைரக்டர் எல்லா லாபமும் தனக்கே வரவேண்டும் என்று நினைத்தார்.
இதனால் 7 ஆண்டுகளாக அந்தப் படைப்பு வெளிவராமலேயே இருக்கிறது. அதே வேளை புதிதாக வரும் இயக்குநர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். இயக்குநர்கள் முதல் படத்திலேயே லாபம் என்ற நோக்கில் யோசிக்கவோ, சிந்திக்கவோ கூடாது. உங்களை நம்பி பணம் போட வரும் தயாரிப்பாளர்களை மதித்து, அனுசரியுங்கள். அப்போது தான் உங்கள் 2-ஆவது படத்தில் இருந்து முன்னேற்றம் தொடங்கும்' என்று பேசியிருக்கிறார்.
காதலன் யார் ? புகைப்படம் பகிர்ந்த நிவேதா!
தனது காதலரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ். 'ஒருநாள் கூத்து' படம் மூலம் தமிழ்ச் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ்.
அதன்பின் 'டிக் டிக் டிக்', 'திமிரு புடிச்சவன்', 'சங்கத் தமிழன்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி, தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். நடிப்பு மட்டுமல்லாமல் பேட்மிண்டன், ஃபார்முலா ஒன் கார் பந்தயம் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்ட இவர், போட்டிகளிலும் பயிற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நிவேதா பெத்துராஜ். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நிவேதாவின் காதலர் ரஜித் இப்ரான். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர், தொழிலதிபராகவும் உள்ளார் என்று கூறப்படுகிறது.
இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், அது குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் இருவரும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி ரேஸ் - எந்தெந்தப் படங்கள்?
எப்போதுமே பண்டிகை தேதி பட ரிலீஸ் பட்டியலில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால், இந்தாண்டு தீபாவளி ரிலீஸூக்கு இப்போது வரை உச்ச நட்சத்திரங்களின் பட ரிலீஸ்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
ஆனால், பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் சில முக்கியமான திரைப்படங்கள் தீபாவளி ரிலீஸூக்கு இப்போதே தயாராகிவிட்டன. அப்படங்களின் உறுதியான ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துவிட்டனர். இந்தப் பட்டியலில் முதலாவதாக இருப்பது, மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் 'பைசன்' திரைப்படம். டிஜிட்டல் பிசினஸ் உள்ளிட்ட அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு தீபாவளி ரேஸில் முதல் படமாக இடம் பிடித்திருக்கிறது.
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் கபடி விளையாட்டை பின்னணியாகக் கொண்டது. இரண்டாவதாக, பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்'. சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த கீர்த்தீஸ்வரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
'லவ் டுடே', 'டிராகன்' படங்களின் பிளாக் பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு வெளியாகும் பிரதீப் ரங்கநாதன் படமிது. மலையாளத்திலிருந்து 'ப்ரேமலு' மமிதா பைஜுவை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார். சமீபத்தில் சாய் அபயங்கர் இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
அதுபோல, இந்தாண்டு பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட். ஒரே நாளில் ஒரு நடிகரின் இரு படங்களெல்லாம் வெளியாவது கோலிவுட்டில் அரிதிலும் அரிது. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பிரதீப் ரங்கநாதனின் 'எல். ஐ. கே' திரைப்படமும் ரிலீஸூக்கு ரெடியாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கீர்த்தி ஷெட்டி, கெளரி கிஷன், எஸ்.ஜே. சூர்யா எனப் பலரும் நடித்திருக்கிறார்கள்.
மேலும், அறிமுக இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி ஆகியோர் நடித்திருக்கும் 'டீசல்' படமும் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இருக்கிறது. திபு நினன் தாமஸ் இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பயங்கர வைரலாகியது.
இறுதியாக, சமுத்திரக்கனி - கெளதம் மேனன் நடித்திருக்கும் 'கார்மேகம் செல்வம்' திரைப்படமும் தீபாவளி ரேஸில் சமீபத்தில் வந்து கலந்துகொண்டது. கார் பயணத்தை மையப்படுத்திய இந்தத் திரைப்படமும் வெளிவர இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.