ஒரே வீடு... நான்கு தலைமுறை... இரு குடும்பம்!

சுற்றமும் நட்புமுமே சேராத நிலை. இணைய உலகில் மூழ்கி, வீட்டுக்குள்ளே உறவினர்கள் பேசுவதும் குறைந்துவிட்டது.
ஒரே வீடு... நான்கு தலைமுறை... இரு குடும்பம்!
Published on
Updated on
2 min read

சுற்றமும் நட்புமுமே சேராத நிலை. இணைய உலகில் மூழ்கி, வீட்டுக்குள்ளே உறவினர்கள் பேசுவதும் குறைந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் 85 ஆண்டுகளாக நான்கு தலைமுறை இதுதான் நட்பு என்று வாழ்ந்து வருகின்றனர். இத்தனைக்கும் இவர்களுக்கு இடையில் சொந்தம் எதுவும் கிடையாது. இரு குடும்பங்களுக்கு இடையில் நிலவும் நீண்ட ஆரோக்கியமான நட்பு குறித்து மூத்தவரும், குண்வந்த் தேசாயின் மகனுமான பரிமள் தேசாய் கூறியது:

'1940-களில் பள்ளி மாணவர்களான பிபின் தேசாய் - குண்வந்த் தேசாய் இருவரும் நண்பர்களாயினர். புணே வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயப் படிப்பைத் தொடர்ந்து, சூரத்தில் விவசாயம், பால் மேலாண்மைத் தொழில்களை மேற்கொண்டனர். சாதாரண வீடு ஒன்றைக் கட்டி அதில் இருவரும் குடும்பத்துடன் வசித்தனர். இருவரும் சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டுச் சிறை சென்றனர். தனித்தனியாக வாழ்வது பற்றி இருவரும் யோசிக்கவில்லை.

1970-இல் சூரத் நகரின் படார் பகுதியில் 'மைத்ரி' (நட்பு) என்ற பண்ணை வீட்டைக் கட்டி குடிபுகுந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி அறைகள் இருந்தன. ஆனால் வரவேற்பறை பொதுவாக இருந்தது. வரவேற்பறையானது விருந்தினர்கள் மட்டுமல்ல, 'மைத்ரி'யில் வசிப்பவர்கள் அமர்ந்து பேசவும், நாளிதழ்களை வாசிக்கவும், வானொலியைக் கேட்பதற்கான இடமாக இருந்தது.

பிபின், குண்வந்த் இருவரையும் சகோதரர்கள் என்றே பலரும் நினைத்து வந்தனர். நண்பர்கள் இருவருக்கிடையில் இருக்கும் நட்பைப் புரிந்துகொண்டு, எனது தாயும், பெரியம்மாவும் (பிபின் மனைவி) இன்னமும் நெருக்கமானார்கள்.

எனது தாய் எனது பத்தாவது வயதில் காலமானார். என்னை வளர்த்தது பெரியம்மாதான். பெரியப்பாவுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள். மகள்கள் திருமணம் முடித்து புகுந்த வீட்டுக்குச் சென்று விட்டார்கள். எனக்கு ஒரு சகோதரி. அவரும் திருமணம் முடிந்து சென்றுவிட்டார்.

பெரியப்பா பிபினின் மகன் கெளதமும் நானும் சகோதர்களாகவே வாழ்ந்துவருகிறோம். நான் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றபோது, எனது குடும்பத்தை கெளதம்தான் பார்த்துக் கொண்டார். எனது மகனும், கெளதம் மகனும் எங்களது நட்பை அவர்களுக்குள்ளும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

எனக்கு மூன்றரை வயதில் ஒரு பேத்தி மட்டும். கெளதமின் பேரனுக்கு 11 வயது. 1940-இல் பூத்த நட்பு 85 ஆண்டுகளாகியும் ஆரோக்கியமாகத் தொடருகிறது. நாங்கள் 'மைத்ரி'யை தேவைக்கு ஏற்றவாறு விரிவு செய்தோம்.

மாற்றங்களைச் செய்தோம். பெரியப்பா காலமாகி ஒன்பது மாதத்துக்குப் பிறகு காலமான எனது தந்தையின் உடலை மருத்துவமனைக்கு தானம் செய்யச் சென்றபோது, பெரியப்பாவின் உடல் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டிருந்தது.

அவருக்கு அருகிலேயே எனது தந்தையின் உடலும் உறைபனி பெட்டகத்தில் வைக்கப்பட்டது. எனது தந்தையின் வரவுக்காக பெரியப்பா காத்திருந்தது போல எங்களுக்குத் தோன்றியது.

நானும் கெளதமும், 1990-இல் எங்கள் தந்தையர்களால் நிறுவப்பட்ட 'மைத்ரி அறக்கட்டளை' பொறுப்பை ஏற்றோம். எங்கள் சொத்துகளையும் இந்த அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்துவிட்டோம்.

நான் குடும்பத்துடன் ஐரோப்பா சுற்றுப்பயணம் சென்றபோது, கெளதமின் மகளையும் அழைத்துச் சென்றேன். கெளதமுடன் எனது மகன் ஹார்திக் நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொள்கிறார். அதேபோல் கெளதமின் மகன் ராகுல் என்னிடம் நெருக்கமாக இருக்கிறார். எதிர்பார்த்தபடி நான்காவது தலைமுறையும் இந்த நேர்த்தியான நட்பு பாரம்பரியத்தைத் பேணி வருகிறது' என்கிறார் பரிமள் தேசாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com