'விசாகப்பட்டினம், தில்லி போன்ற நகரங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, ஈராக் நாட்டைச் சேர்ந்த நோயாளிக்கும்கூட நான் ரத்தத் தானம் செய்திருக்கிறேன். எனது அபூர்வமான ரத்த வகையான 'ஏ.பி. நெகடிவ்' யாருக்குத் தேவையோ, அவர்களுக்கு உடனடியாக அளித்து உதவிட வேண்டும் என்பதே எனது கொள்கை. எனது சேவையை முன்னாள் ஆளுநர் கே.ரோசையா, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பாராட்டி உள்ளனர்' என்கிறார் ஷேக் சதக்கத்துல்லா.
மலேசியா நாட்டின் 68-ஆவது சுதந்திரத் தினமான ஆகஸ்ட் 31-இல் சென்னையில் உள்ள மலேசிய நாட்டின் தூதரக அலுவலகத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட காயல்பட்டினத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஐம்பத்து ஆறு வயது ஷேக் சதக்கத்துல்லா பாராட்டப்பட்டார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரத்தத் தானச் சேவையில் ஈடுபட்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை ரத்தத் தானம் அளித்துள்ள அவர் ஹாம் ரேடியோ செயல்பாட்டாளரும்கூட. அவருடன் பேசியபோது:
'நட்பு, அறிவியல், வேடிக்கையை விரும்பும் உயர்தொழில்நுட்பப் பொழுதுபோக்கான அமெச்சூர் வானொலியில் பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட எவரும் ஆபரேட்டராக முடியும். இவர்கள் தங்கள் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நண்பர்களைப் பெற முடியும்.
அவர்கள் குரல், கணினிகள், மோர்ஸ் குறியீட்டைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பொழுதுபோக்குக்காகவும், அவசரக் காலங்களிலும் தொடர்பு கொள்கிறார்கள். அவசர நிலைகளுக்கும் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதற்கு உதவி புரிகின்றனர். இதையெல்லாம் அறிந்தபோது, 1994-ஆம் ஆண்டில் எனது இருபத்தொரு வயதில் முறைப்படி தகுதியைப் பெற்று, ஹாம் ரேடியோ செயல்பாடுகளைத் தொடங்கினேன்.
ஆரம்பத்தில் ஹாம் ரேடியோ நண்பர்களோடு தினமும் காலையில் பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வேன். ஒரு நாள் ஹாம் ரேடியோ தோழி ஹேமா, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு மிக அவசரமாக ரத்தம் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
அந்த நோயாளிக்கு முதல் முறையாக ரத்த தானம் செய்தேன். முதலில் சற்று பயமாக இருந்தாலும், ரத்த தானம் செய்த பிறகு, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. அந்த மருத்துவமனையில் எனது ரத்தம் மிகவும் அபூர்வமான ஏ.பி. நெகடிவ் வகையைச் சேர்ந்தது என்பதையும், உலகத்திலேயே சுமார் இரண்டு சதவீதம் பேருக்கே இந்த வகை ரத்தம் இருக்கும் என்றும் மருத்துவர் கூறினார்.
'முகாம்களில் பங்கேற்று நீங்கள் ரத்த தானம் செய்ய வேண்டாம். அவசர மருத்துவச் சிகிச்சையின்போது ஏ.பி. நெகடிவ் ரத்தப் பிரிவு நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும் நேரத்தில் நேராக மருத்துவமனைக்கே சென்று ரத்த தானம் செய்யுங்கள்' என்று மருத்துவர் சொன்னார்.
சராசரியாக ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நான் தொடர்ந்து ரத்த தானம் செய்து வருகிறேன். இவ்வாறாக, ஐம்பது முறைக்கு மேல் ரத்தத் தானம் செய்துள்ளேன்.
என் மகன் ஷேக் சம்சுதீனுக்கு ஏ.பி. நெகடிவ் ரத்தப் பிரிவு என்பதால், அவரையும் ரத்தத் தானம் செய்வதற்கு ஊக்குவித்து வருகிறேன். அவரும் சுமார் 25 முறை ரத்த தானம் செய்திருக்கிறார்.
ரத்த தானம், ஜாதி, மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்டு எனக்கு ஏராளமான புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவர்கள் நெகிழ்ச்சியோடு எழுதிய பல கடிதங்கள் என்னிடம் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.