ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அலுவலகத்தில் நல்ல பெயர் பெற வழி என்ன?

என் வயது 25, தனியார் கம்பெனியில் வேலை. சென்னையில் இருந்து புணேவுக்கு மாற்றலாகிப் போகப் போகிறேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அலுவலகத்தில் நல்ல பெயர் பெற வழி என்ன?
Published on
Updated on
2 min read

என் வயது 25, தனியார் கம்பெனியில் வேலை. சென்னையில் இருந்து புணேவுக்கு மாற்றலாகிப் போகப் போகிறேன். அங்கே போனால், பாஷை பிரச்சனை. புதிய அலுவலகம். பயமாக இருக்கிறது. அங்கு அலுவலகத்தில் நல்ல பெயர் பெறவும், எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கும், பயமில்லாமல் வாழ்வதற்கும் ஆயுர்வேத மாத்திரை, மருந்துகள் என்ன சாப்பிடலாம்?

-கமல், சென்னை.

'உடல், மனம், ஆத்மா என்ற மூன்றும் தூய்மை பெறவும், மனிதன் நல்வாழ்வு பெறவும் எட்டு ஆத்மக் குணங்கள் அவசியம் தேவை' என்று கௌதம ஸþத்திரம் கூறுகிறது. அவை உங்களுக்குப் பேருதவியாக இருக்கும். அலுவலகத்தில் இவற்றை நடைமுறைப்படுத்த முயற்சி செய்தால், பிறருடைய அன்பையும் நட்பையும் பெறலாம்.

1. தயா- தயை: அலுவலகத்தில் அனைவரிடத்திலும் பயனை எதிர்பாராமல் காட்டும் மெய்யன்பு.

2. க்ஷாந்தி-க்ஷமா- பொறுமை. வேலை செய்யுமிடத்தில் உடலாலும், மனதாலும் பதிலடி கொடுப்பதற்கான பூரணத் தெம்பிருந்தாலும் பிறர் தம்மைக் கோபித்தபோதும், நிந்தித்தபோதும் திரும்பக் கோபப்படாமலும் பதிலுக்கு அவர்களைத் துன்புறுத்தாமலும் உணர்ச்சிகளை அடக்கி வாக்கு, மனம், உடல் ஆகிய மூன்றாலும் பொறுத்துக் கொள்வது.

3. அநஸூயா - பொறாமையின்மை - பிறர் பெற்றுள்ள ஸூயா ஸþகஸாதனமான பணம் வசதிகள்

முதலியவைகளிலோ, பிறர் அனுபவிக்கும் சுகத்திலோ தான் அவைகளைப் பெறாததன் காரணமாகப் பொறாமை கொள்ளாதிருத்தல்.

4. சௌசம்- சுத்தி- உடல், மனம், வாக்கு ஆகிய மூன்றிலும் தூய்மையைக் கடைப்பிடித்தல்.

5. அநாயாஸம்- உடலிற்கோ, மனதிற்கோ அவைகளின் தகுதிக்கு மீறி கஷ்டமேற்படாதவாறு அலுவலக வேலைகளில் ஈடுபடுதல். உடலிற்கும் மனதிற்கும் மிதமிஞ்சிய துன்பமளிக்கும் காரியங்களில் ஈடுபடாதிருத்தல்.

6.அகார்ப்பண்யம்- ஈகை, உலோபித்தனமின்றி சக்திக்கேற்ப தன்னிடமுள்ள பொருள், உணவு முதலியவைகளைத் தேவைப்படுவோருக்கும் அன்புடன் அளித்தல்.

7.அஸ்ப்ருஹா- ஆசையின்மை, தனது உழைப்பிற்கோ, தகுதிக்கோ கிடைக்காத பொருளை விரும்பாமல் தன்னுழைப்பைக் கொண்டு கிடைத்த பொருளை ஏற்று மன அமைதியுடனிருத்தல்.

8.மங்களம்- நற்செய்கை. தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும், சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும் நல்ல பணிகளைச் செய்தல், நல்ல நினைவுடன் நல்ல பேச்சு களையே பேசுதல்.

இந்தக் குணங்களைக் கடைப்பிடிக்க உடலையும் மனத்தையும் துன்புறுத்தும் பல நோய்கள் விலகும். இந்தக் குணங்களிருந்தால்தான் நற்பெயரும் இறைவன் வழிபாடு ஜபதபங்கள் முதலியவைகூட நன்மை தர இயலும்.

இவற்றுடன் ஆயுர்வேதம் மேலும் சில அறிவுரைகளை உங்களைப் போன்ற இளைஞர்களுக்காக கீழ்க்காணும் வகையில் கூறுகிறது:

யாரையும் அவன் எனக்கு எதிரி என வெளிப்படையாகக் குறிப்பிடாதே. அல்லது அவனுக்கு நான் எதிரி எனவும் கூறாதே. தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தானே வெளிப்படுத்தாதே. தனக்கு எஜமானன் தன்னிடம் அபிமானத்துடன் இல்லை என்பதையும் வெளியாக்காதே.

அலுவலக நண்பர்களைப் பார்த்து தானும் சக்திக்கு மீறிய உடற்பயிற்சி செய்தல், அவர்களுடன்இரவு கண் விழித்து வேலை செய்தல், விடுமுறை நாள்களில் மால் போன்ற இடங்களுக்குச் சென்று அதிகமாக நடத்தல், அதிக சிரிப்பு, பேச்சு இவைகளை சக்திக்கு மீறி ஈடுபடாதே. யானையை இழுக்கத் துணியும் சிங்கம் வலுவிழந்து மடிவதுபோல், இவைகளில் சக்திக்கு மீறி ஈடுபடுபவன் கேடுறுவான் என்ற அறிவுரைகளையும் நீங்கள் ஏற்கத்தான் வேண்டும்.

மானஸமித்ரம் மாத்திரை, மஹா கல்யாணகக் கிருதம், ஸாரஸ்வதசூரணம், பிரமதைலம் போன்ற ஆயுர்வேத மருந்துகளால் உடல் மற்றும் மனம் வலுப் பெறலாம். மருத்துவர் ஆலோசனைப்படி, சாப்பிடவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com