பொ.ஜெயச்சந்திரன்
நாட்டின் 79-ஆவது சுதந்திரத் தினத்தையொட்டி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை, சமூக உள்ளடக்க ஆய்வு மையம், மகிழ்ச்சி எஃப்.எம்., மகிழ்ச்சிப் பதிப்பகம் ஆகியவை இணைந்து 'இந்திய முகங்கள்' என்ற தலைப்பில் சர்வதேச மாநாடும், சாதனை நிகழ்வும் ஆகஸ்ட் 29-இல் நடத்தியது.
இந்த மாநாட்டில், 'இந்திய முகங்கள்' எனும் தலைப்பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள், சுதந்திரத்துக்குப் பிந்தைய தலைவர்கள், அரசியல் சிந்தனையாளர்கள், இலக்கிய முன்னோடிகள், கலைஞர்கள், அறிவியலாளர்கள், பாதுகாப்புத் துறை வீரர்கள் உள்ளிட்டோரைப் பற்றி 1,500-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், சிறப்புக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டன. இதுகுறித்து ஆராய்ச்சியாளரும், தொகுப்பாசிரியருமான ஜெ.மகேந்திரன் கூறியது:
'இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவராக எனது பயணம் தொடங்கியது. 'இன்றைய செய்தி நாளைய வரலாறு' என்பதே எனது ஒவ்வொரு முயற்சிக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. இதற்குப் பின்னால் கடுமையான உழைப்பு, சவால்கள், தூக்கமில்லாத இரவுகள் பல உள்ளன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் பெறுவது என்பது ஒரு சவாலான பணி. என்னுடைய இலக்கை அடைய நம்பிக்கையும் பின்வாங்காமல் உறுதியாக இருந்தேன். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்குச் சென்று, அங்குள்ள பேராசிரியர்களைச் சந்தித்துப் பேசினேன்.
இதன் நோக்கம், இதனால் இந்தியாவுக்கு நாம் சேர்க்கப் போகும் பெருமைகள் குறித்தும் விளக்கினேன். அவர்கள் எனது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு, ஆதரவுக்கரம் நீட்டினர். அமெரிக்கா, இலங்கை, துபை, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் இணைய வழியில் கட்டுரைகள் வந்திருந்தன.
அனைத்து கட்டுரைகளையும் சரிபார்த்து, பிழைகளைத் திருத்தி, ஒரு தொகுப்புக்கு ஏற்றவாறு பணிபுரிந்தோம். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,500 ஆய்வுக் கட்டுரைகள் 5,400 பக்கங்களில் உருவானது.
இந்த நூலைப் படிப்பதற்கு வசதியாக 15 தொகுதிகளாக 15நூல்களாகத் தயாரிக்கப்பட்டு 'இந்திய முகங்கள்' என்ற தலைப்பில் மிக பிரமாண்டமான நூலாகவும், மின்னூலாகவும் வெளியிடப்பட்டது. இதனை உருவாக்க நாங்கள் செலவிட்ட ஒவ்வொரு நிமிடமும், என் வாழ்நாளில் நான் செய்த முக்கியமான முதலீடு.
'ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் உலக சாதனை நிகழ்வாக இதனை அங்கீகரித்தபோது, என் உழைப்புக்கான பலன் கிடைத்ததாக உணர்ந்தேன். இது என்னுடன் இணைந்து உழைத்தவர்களின் வெற்றி.
நூலில் பல்கலை. பதிவாளர் ஜே.சாக்ரடீஸ் தனது முன்னுரையில், 'பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய இந்தியர்களின் பங்களிப்பை இந்த நூல் விரிவாகப் பதிவு செய்துள்ளது. இது தனித்துவமான முயற்சியாக இருப்பதுடன், வருங்கால சந்ததியினருக்கு தேசப் பற்றும் தேசிய உணர்வையும் விதைக்கும் கல்விச் செல்வமாகவும் திகழ்கிறது' என்று கூறியிருந்தது எங்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது.
நாட்டுக்குப் பெருமை சேர்த்த பல அரிய ஆளுமைகளை எதிர்வரும் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி உள்ளோம். வரலாறு, கல்வி, தேச முன்னோடிகளின் பங்களிப்பை ஒருங்கிணைத்த இந்த சர்வதேச மாநாடு, சாதனை நிகழ்வாக மட்டுமல்லாமல், இந்தியப் பாரம்பரியம், அதன் உலகளாவிய தாக்கத்தைக் கொண்டாடிய முக்கியமான கல்விசார் விழாவாகவும் அமைந்தது. இதற்காக, 'இந்தியன் ஐகான் விருது 2025', 'லெஜெண்ட் விருது 2025' உள்ளிட்ட விருதுகள் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டன'' என்கிறார் ஜெ.மகேந்திரன் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.