ரஜினி-கமல் இணைந்து நடிப்பது உறுதி!
'தமிழ் சினிமாவின் இரு மகா நட்சத்திரங்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் மீண்டும் இணைந்து நடிப்பார்களா?', என்ற ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு சமீபத்தில் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். இருவரும் ஆரம்ப காலத்தில் 'அபூர்வ ராகங்கள்', 'மூன்று முடிச்சு', 'அவர்கள்', 'பதினாறு வயதினிலே' என பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
கால ஓட்டத்தில் இருவரும் எதிரெதிர் துருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டனர். ஆனால், எங்களுக்குள் எந்தப் போட்டி மனப்பான்மையும் இல்லை என, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தெரிவித்து வந்துள்ளனர். கடந்த சில வருடங்களாக இருவரும் அடிக்கடி ஒரே மேடையையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில்தான், இருவரும் திரையையும் பகிர்ந்து கொள்ளப் போவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
'கல்கி 2898 ஏடி' படத்திற்காக சைமா விருது பெற்ற நடிகர் கமல்ஹாசனிடம், 'ரஜினிகாந்துடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பீர்களா?', என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், 'இது தரமான சம்பவமா என்று தெரியாது. ஆனால், ரசிகர்களுக்குப் பிடித்தால் நல்லது. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் எங்களுக்கும் பிடிக்கும்.
இல்லையென்றால் தொடர்ந்து முயற்சி செய்வோம். இது நீண்ட காலமாக பலரும் கேட்கும் விஷயம். இருவருக்கும் ஒரே பிஸ்கட்டைக் கொடுத்ததால், ஒவ்வொருவருக்கும் பாதி பாதிதான் கிடைத்தது. அதனால் நாங்கள் முழு பிஸ்கட்டுக்காகப் பிரிந்தோம். இப்போது அந்த அரை பிஸ்கட்டே போதும். இருவருக்கும் அதுவே மகிழ்ச்சி அளிக்கிறது.
அதனால் இணைந்து வருகிறோம். எங்களுக்குள் போட்டி இருப்பதாக நீங்கள்தான் நினைத்தீர்கள், உருவாக்கினீர்கள். எங்களுக்கிடையே எந்தப் போட்டியும் இல்லை. இந்த வாய்ப்புக் கிடைத்ததே பெரிய விஷயம். அப்போதே நாங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். அப்படித்தான் அவர் இருக்கிறார், நானும் இருக்கிறேன். வியாபார ரீதியாகத்தான் இப்போது இணைகிறோமே தவிர, எங்களுக்கு இது எப்போதோ நடக்க வேண்டியது.
இப்போதாவது நடக்கிறதே, நடக்கட்டும் என்பது போலத்தான் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் ஒருவர் படத்தை ஒருவர் தயாரிக்க எப்போதும் விரும்பியிருக்கிறோம். ஆனால், இப்போது வேண்டாம், அப்போது வேண்டாம் என்று நாங்களே எங்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம்,' என்றார்.
'கூலி' படத்துக்குப் பிறகு 'கைதி 2' படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால், அந்தப் படத்துக்கு முன்னதாக ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். இதனை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல்!
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கி தீவிர காயங்கள் அடைந்திருப்பதாக வதந்திகள் பரவின. இதனால் அவரது ரசிகர்கள் ஆன்லைனில் தங்கள் வருத்தங்களையும் பிரார்த்தனைகளையும் வெளிப்படுத்தினர். இறுதியில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மூலம் காஜல் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
'நான் விபத்தில் சிக்கிவிட்டதாக (இறந்துவிட்டதாகவும்) சில ஆதாரமற்ற செய்திகள் பரவின. ஆனால் அதில் ஒரு துளியும் உண்மை இல்லை. கடவுள் கருணையால், நான் மிகவும் பாதுகாப்பாகவும், நலமுடனும் இருக்கிறேன் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். எனவே, பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். பாசிட்டிவான, உண்மையான விஷயங்களில் கவனம் செலுத்துவோம்' என காஜல் அகர்வால் விளக்கமளித்துள்ளார்.
காஜல் அகர்வால் இந்த ஆண்டு சிக்கந்தர் மற்றும் கண்ணப்பா படங்களில் நடித்திருந்தார். தொடர்ச்சியாக, அவரது நடிப்பில் கமல்ஹாசனின் 'இந்தியன் 3' படம் வெளி வரும் நிலையில் உள்ளது. மேலும், நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் 'ராமாயணா' படத்தில் ராவணனின் மனைவி மண்டோதரி பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
சினிமாவில் இன்பநிதி!
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது. நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் உருவான 'என்ன சுகம்', 'எஞ்சாமி தந்தானே' என்ற இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளிவந்திருந்தன.
அந்த இரண்டு பாடல்களையும் தனுஷே எழுதிப் பாடியிருக்கிறார். படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து வர, படக்குழுவும் அடுத்தடுத்து ப்ரோமோஷன் பணிகளுக்கான திட்டங்களை கையில் வைத்திருக்கிறது. 'இட்லி கடை' திரைப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் 'டான் பிக்சர்ஸ்' நிறுவனமும், தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனமும் தயாரித்திருக்கின்றன. படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கலைஞர் டி.வி. பெற்றிருக்கிறது.
தற்போது படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது. 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனத்தின் சார்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பேரனும், தமிழக துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி படத்தை வழங்குவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
உதயநிதி சினிமாவிலிருந்து விலகிய பிறகு, அவருடைய மகன் இன்பநிதி இப்போது 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனத்தின் பொறுப்பிற்கு வந்திருக்கிறார். சமீபத்தில்கூட இன்பநிதிக்கு கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகத்திலும் பொறுப்புக் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வந்திருந்தது. இப்போது 'இட்லி கடை' படத்தின் மூலம் சினிமாவுக்குள் வந்திருக்கிறார் இன்பநிதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.