மதுரையில் பூத்த ஆப்பிரிக்க அதிசய மரம்!

மதுரையில் பூத்த ஆப்பிரிக்க அதிசய மரம்!

ஆப்பிக்காவின் 'பாவாப்' என்ற ராட்சத மரத்தின் 'போன்சாய் கன்று' மதுரையில் பூத்திருக்கிறது.
Published on

ஆப்பிக்காவின் 'பாவாப்' என்ற ராட்சத மரத்தின் 'போன்சாய் கன்று' மதுரையில் பூத்திருக்கிறது. உலகின் மிகப் பழமையான மரங்களில் ஒன்று, பாவாப். 'வாழ்க்கை மரம்' என்றும் அழைக்கப்படுகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி தண்டுப் பகுதியில் சேமிக்கும் திறன் கொண்டது. பல நூற்றாண்டுகள் பட்டுப்போகாமல் வாழும் ஆற்றல் கொ ண்டது. இதன் காய்கள் சுரைக்காய் வடிவத்தில், பழுப்பு நிறத்தில் இருக்கும்.

சுவை சிறிது புளிப்பாக இருக்கும். ஆப்பிரிக்க, மடகாஸ்கர் தீவு மக்கள் உணவில் புளிப்பு சுவைக்காக இதைச் சேர்த்துக்கொள்கிறார்கள். வைட்டமின் சி இந்தக் காயில் அதிகம்.

யானைகள் உணவாகச் சாப்பிடுகின்றன. இதன் மரத்தடியின் சுற்றளவு பெரிய ஆலமரத்தைவிடப் பெரியது. வளர்ந்து பெரிதான பாவாப் மரம் பல ஆலமரங்களைச் சேர்த்து வைத்தது மாதிரி மிக அகலமாக இருக்கும்.

ராஜபாளையம் மற்றும் மதுரை நகரில், மதுரை பல்கலைக் கழகம், அமெரிக்கன் கல்லூரி போன்ற இடங்களில் ஆப்பிரிக்க 'பாவாப்' மரங்கள் வளர்ந்திருக்கின்றன. 110 வயதாகும் அமெரிக்கன் கல்லூரி தொடங்கப்படும் போதே அந்த வளாகத்தில் ஒரு 'பாவாப்' மரம் இருந்ததாம்.

அதன் இப்போதைய வயது குறைந்தபட்சம் 110 ஆண்டுகள். அநேகமாக ஆங்கிலேயர்கள் நட்டிருக்கவேண்டும். மதுரை பல்கலைக்கழகத்தில் வளர்ந்திருக்கும் 'பாவாப்' மரத்தின் வயது சுமார் 40 ஆண்டுகள். மழையில் 'பாவாப்' மரம் நனைந்தால் தனது இலைகளை உதிர்த்துவி ட்டு குச்சிகளுடன் அல்லது இலையில்லாத கிளைகளுடன் நிற்குமாம்.

மிரட்டும் வடிவத்தில் பிரமாண்டமாக இருக்கும் பாவாப், போன்சாய் மரமாக கடந்த 9 ஆண்டுகளாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராகப் பணிபுரியும் ரமேஷ் பாண்டியன் என்பவரால் வளர்க்கப்படுகிறது.

பொதுவாக பாவாப் மரம் 25 ஆண்டுகள் கழித்துத்தான் பூக்கத் தொடங்குமாம். ஆனால், மதுரையில் பாவாப் போன்சாய் மரம் 9 ஆண்டுகளில் பூக்கத் தொடங்கியிருப்பது இன்னும் ஆச்சரியம்!

நறுமணத்துடன் வெண்ணிறத்தில் பரந்த இதழ்களுடன் உள்ள பூக்கள் மாலை நேரத்தில் மலரும். அடுத்த நாள் காலையில் வாடி உதிர்ந்துவிடும். பூவின் ஆயுள் சுமார் 12 மணி நேரம் மட்டுமே .

போன்சாய் கன்றில் மலர்தல் என்பது அந்தக் கன்று பருவம் அடை ந்துவிட்டது என்பதைச் சொல்கிறது. பல நூறு ஆண்டுகள் வாழும் இந்த மரம், போன்சாய் வளர்ப்பில் வெறும் 9 ஆண்டுகளில் பருவம் அடைந்திருப்பதும் தாவரவியல் விந்தைதான். ஒருவர் கரிசனமாக வளர்ப்பதால் அவரது பராமரிப்பு, அருகாமை, மரம் பருவம் அடைவதை விரைவுபடுத்தியிருக்கலாம். மாறுபட்ட சூழலில் கட்டுப்பாடு, கண்காணிப்புடன் வளர்க்கப்படும் 'பாவாப்' போன்சாய்க் கன்று, மதுரைச் சூழலுக்குத் தன்னைத் தானே மாற்றிக் கொண்டிருப்பதுடன் விரைவில் பூக்கவும் தொடங்கியிருக்கிறது.

பாவாப் மரத்தின் இலைகள், மரத்தின் சோறு, பட்டை ஆகியவை ரத்தசோகை, வயிற்றுப்போக்கு, மலேரியா காய்ச்சலுக்கு மருந்தாகிறது. மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க ஆப்பிரிக்க பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பாவாப் மரத்தின் இலைக் கஷாயம், ஆஸ்துமாவைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com