தேவதை

அம்மா... புலாவ் வாசன செமயா இருக்கு!' என்று மோப்பம் பிடித்துக் கொண்டே சமையல் மேடை அருகே வந்த ஆர்த்தி, கவிதாவின் புடவையில் தன் ஒழுகும் மூக்கைத் துடைத்துக் கொண்டாள்.
தேவதை
Published on
Updated on
5 min read

அம்மா... புலாவ் வாசன செமயா இருக்கு!' என்று மோப்பம் பிடித்துக் கொண்டே சமையல் மேடை அருகே வந்த ஆர்த்தி, கவிதாவின் புடவையில் தன் ஒழுகும் மூக்கைத் துடைத்துக் கொண்டாள்.

ஏய்... பொட்டேட்டோ ப்ரை கூட பண்ணி இருக்காங்கடி' என்று பின்னால் வந்த ஜெயா குட்டிக்கு வயது ஐந்துதான் என்றாலும், சரியான சாப்பாட்டு மூட்டை.

பெட்ரோல் ஏம்மா இவ்வளவு சீக்கிரம் சாப்பாடு ரெடி பண்ணிட்டே, இன்னிக்கி சண்டே தானே?'

பங்குக்கு போணும்டி... இதுவே ரொம்ப லேட்டாயிடிச்சி.'

கவிதாவின் பதிலைக் கேட்டு டி.வி.யில் சந்தானம் காமெடி பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய கணவன் முருகன் பட்டென்று டி.வி.யை அணைத்தான்.

பங்குக்கு போறியா? இன்னிக்கி சண்டே லீவு தானே?' என்று அதட்டிய புருஷனிடம், கெஞ்சும் தொனியில் சொன்னாள் கவிதா.

லீவுதான்யா. லீவு நாள்ல வேலை செஞ்சா டபுள் சம்பளம் தர்றதா முதலாளி சொல்லி இருக்காரு... அதான் கிளம்பறேன்.'

பணம் கொடுக்கறேன்னா தலைய ஆட்டிடுவியா ? வீட்டுல எவ்வளவு வேலை கிடக்கு?' என்ற வேலையில்லாத வீட்டுக்காரனின் அதிகாரத்தைத் தட்டிக் கேட்க இயலாத கவிதா மெல்ல பதில் சொன்னாள்.

அதெல்லாம் நான் பாத்துக்குறேன்யா. நீங்க வாங்கடீ... சாப்பிடலாம்' என்று மகள்களை சாப்பிடக் கூப்பிட்டாள்.

புலாவையும், உருளைக்கிழங்கையும் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அப்படியே மேடைக்கருகில் தரையில் உட்கார்ந்தாள் கவிதா.

சாப்பாட்டு வாசனைக்கு மயங்கி கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருந்த மூத்தவள் மீனு, ஆர்த்தி, ஜெயா மூன்று பெண்களும் அம்மாவைச் சுற்றி உட்கார்ந்தனர்.

அம்மா மூணு பேருக்கும் வாயிலேயே ஊட்டி விடுறேன், சரியா?' என்று கூறிக் கொண்டே ஆசையாய் மூன்று மகள்களையும் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு புலாவையும் பொட்டேட்டோ பொரியலையும் வைத்து மாறி மாறி ஊட்டினாள் கவிதா.

ஆறாவது படிக்கும் மீனுவின் கையில் ஒரு புத்தகம் இருந்தது. அதை பிரித்து வைத்துக் கொண்டு அதில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மீனு.

அப்புறம் படிக்கலாம். முதல்ல வாயத் திறடி' என்ற கவிதாவின் மிரட்டலுக்கு, எட்டு வயசு ஆர்த்தி இடையில் புகுந்து சொல்லியது.

அம்மா... அக்கா படிக்கிறது ஒரு தேவதை கதை. படிச்சிட்டு எங்களுக்கும் சொன்னாளே!'

அம்மா, அது சூப்பர் தேவதை தெரியுமா? பறந்து பறந்து வரும். நமக்கு சாக்லேட், ஜெம்ஸ் என்ன கேட்டாலும் தரும்' என்று ஜெயா குட்டி ஆர்வத்துடன் சொல்லியது.

அப்படியாடி செல்லம்!' என்று ஐந்து வயது மூன்றாவது பெண்ணை ஆசையாய் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள் கவிதா.

அப்படி என்னடி கதை அது?' என்று பெரிய பெண் மீனுவைப் பார்த்துக் கேட்டாள் கவிதா.

அம்மா சோனுன்னு ஒரு தேவதைம்மா. அதோட கதைதான் இது. அதுக்கு நிறைய சக்தி இருக்கு. நாம அந்த தேவதைய நெனச்சா உடனே அது நமக்கு முன்னாடி வந்துரும். நமக்கு உதவி செய்யும். ஜோக் எல்லாம் சொல்லும்.

நம்மகூட விளையாடும். யாராவது நமக்கு கஷ்டம் குடுத்தா சோனு'ன்னு மூணு தடவை கூப்பிட்டால், உடனே எதிர்ல வந்துரும். அந்த வீட்டு ரம்யாவிடம் ரொம்ப ரொம்ப ஃப்ரண்டா இருக்கும். ஆனா அவ எதிரி ஜானு அந்த தேவதையை கூப்பிட்டா அது வராது...' என்று மீனு ஆர்வமாகச் சொல்லிக் கொண்டே போனாள்.

கதை சுவாரசியத்தில் கிண்ணத்தில் இருந்த புலாவ் காலியாக, காலிப் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு எழுந்தாள் கவிதா.

என் கஷ்டத்துக்கு எந்தத் தேவதையும் வராதுடி' என்று அலுத்துக்கொண்டே அடுத்த வேலையைப் பார்க்கப் போனாள் கவிதா. பிரச்னைகள் முரட்டு சிங்கம் போல் எல்லோரையும் துரத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அவரவர்க்கு விதவிதமான பிரச்னைகள். எல்லோரையும் பிரச்னை சிங்கங்கள் துரத்திக் கொண்டுதான் இருக்கின்றன. நினைத்துக் கொண்டே அடுத்தடுத்த வேலைகளைப் பார்த்தாள் கவிதா.

அரை மணியில் கிளம்ப வேண்டும். பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடும் வேலை. லேட்டாகப் போனால் மேனேஜர் குலைப்பான். பாத்திரங்களைக் கழுவிவிட்டு, வீட்டை சுத்தம் செய்ய முனைந்தாள். வீடு ஒன்றும் பெரிய அரண்மனை இல்லை. ஓரத்தில் சமையல் மேடையுடன் இருந்த சற்றே பெரிய ஒரே அறை. உள்ளேயே பாத்ரூம், டாய்லெட். அது ஒன்றுதான் வசதி. அதற்கே ஆறாயிரம் ரூபாய் வாடகை. இருப்பது சென்னை ஆயிற்றே !

குழந்தைகள் படுத்திருந்த பாய், தலையணை, போர்வை எல்லாம் தரை முழுக்கப் பரவியிருந்தது. கால்களைத் தூக்கி ஜன்னலின் மேல் வைத்துக் கொண்டு போனை நோண்டிக் கொண்டிருந்தான் முருகன். படுக்கைகளைச் சுருட்டி வைத்து விட்டுத் தரையைக் கூட்ட ஆரம்பித்தாள் கவிதா.

ஏய். காசு குடுத்துட்டுப் போ. நீ பாட்டுக்கு ராணி மாதிரி கிளம்பிடாதே...' என்று மாசத்துக்கு பத்து நாள் கூட வேலைக்கு போகாத புருஷன், கொடுத்து வைத்தாற்போல் காசு கேட்க, மறுத்துப் பேசாமல் நூறு ரூபாயை பர்ஸிலிருந்து எடுத்து அவனிடம் நீட்டினாள் கவிதா.

என்னாது பிச்சை காசு நூறு ரூவா? 500 ரூபா வேணும். என் கூட வேல பாக்கற மாரி பொண்ணு பெரிசாயி விசேஷம் வச்சிருக்காங்க. மொய் எழுதணும்.'

500 ரூபாய் மொய் எழுதற மாதிரியா நாம இருக்கோம். உனக்கே பாதி நாள் வேலை இல்லை. எல்லாத்துக்கும் நான் ரத்தம் சிந்தி சாகறேண்டா...' என்றது கவிதாவின் மைண்ட் வாய்ஸ்தான். இப்படியெல்லாம் வாயைத் திறந்து கவிதா கேட்க முடியாது. கேட்டால் அவன் பண்ணும் ரகளை அடி உதையில் போய் முடியும். முடியைப் பிடித்து கவிதாவை வெளியில் தள்ளி, அக்கம்பக்கம் சிரிக்கிறாற் போல் ஆகும்.

நாம பொம்பளைங்க... பொறுமையா இருக்கணும். எதிர்த்துப் பேசக்கூடாது. பேசினா நமக்குதான் கஷ்டம்' என்று சின்ன வயதில் இருந்து அவளுடைய அம்மா சொல்லிச் சொல்லி கேட்டுக் கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ, எல்லாக் கொடுமைக்கும் வாயைத் திறக்காமல் இருக்க கவிதாவிற்கு பழகிவிட்டது.

முருகனின் ஆணவத்தையும் ஆண் என்கிற திமிரையும் பொறுத்துக் கொள்ளப் பழகி விட்டாள். அவனுக்குக் கொத்து வேலை மட்டும்தான் தெரியும். வேலை வந்தால் போவான். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது டி.வி.யும் மொபைலும். அவன் சம்பளம் என்று எதுவுமே கவிதாவின் கைக்கு வராது.

நீ பொம்பள... புருஷன்னு ஒருத்தன் பாதுகாப்புக்கு இருக்கானே, அதைப் பாரு...' என்று அக்கா தனம் சர்வசாதாரணமாகச் சொல்லும்போது, பொங்கும் கோபத்தையும் பொறுமையாக அடக்கிக்கொள்ளப் பழகிவிட்டாள் கவிதா.

கல்யாணமாகி 12 வருடங்கள் ஓடிவிட்டன. மீனு பிறந்து மூன்று வருடங்கள் கழித்து ஆர்த்தி பிறக்கும் வரைக்கும்கூட முருகனுக்கு ஒரு பில்டரிடம் வேலை இருந்தது. அவனுக்கு மாதம்தோறும் சம்பளம் வந்தாலும், போதாமல் கவிதா வீட்டு வேலைக்கும் ஆபீஸ் பெருக்கவும் போக ஆரம்பித்தாள். மூன்றாவதும் பெண்ணாக ஜெயா பிறந்ததில் கவிதாவுக்கு ஒன்றும் வருத்தமில்லை. இருந்தாலும் செலவுதான் கூடிக் கொண்டே போனது.

அந்த பில்டர் பிஸினஸை மூடிவிட்டு வெளிநாடு சென்றுவிட, முருகனுக்கு வேலையும் போய் , குடிப் பழக்கமும் தகாத நட்புகளும் வந்து சேர்ந்தது. அதற்குப் பிறகு அவனுக்கு நிரந்தர வேலையும் கிடைக்கவே இல்லை. தனியாக இவனைக் கூப்பிடுபவர்களும் குறைந்து போனார்கள். மூன்று குழந்தைகளுடன் குடும்பம் நடத்த திணறிய கவிதாவுக்கு ஒரு பெட்ரோல் பங்கில் வேலை கிடைத்தது. வீட்டுப் பொறுப்பைக் கவிதா கையில் எடுத்துக் கொள்ள முருகன் மேலும் சோம்பேறி ஆனான்.

படி இறங்கி ஒரு பெண் வேலைக்குப் போவதென்றால் சும்மாவா? அதுவும் கவிதா மாதிரி அடங்கிப் போகும் பெண்ணாகவும் இருந்துவிட்டால் எத்தனை கஷ்டம்? பார்ப்பதற்கு வளப்பமாய் இருக்கும் கவிதாவுக்கு எத்தனையோ சங்கடங்கள், சீண்டல், தீண்டல், அவமானம் எல்லாம்தான். கையாலாகாமல் எல்லாவற்றையும் பொறுமையோடு கடந்து கொண்டிருந்தாள் கவிதா.

மணி என்ன பாத்தியா? டபுள் சம்பளம் மட்டும் வேணும். உன் இஷ்டத்துக்கு வருவியா?' என்று மேனேஜர் மணி கோபப்படுவதுபோல் கவிதாவின் முதுகில் ஒரு தட்டு தட்டினான். துப்பட்டாவை எடுத்துவிட்டு மேலே யூனிஃபார்ம் கோட் போடும்போது, இவன் வழிசல் பார்வை தெரிந்தது கவிதாவுக்கு. இருந்தாலும் அதைக் கவனிக்காதவள் போல் பெட்ரோல் போடும் இடத்தை நோக்கி நடந்தாள். டாங்கில் இருந்த பெட்ரோல் ஹோசை கையில் எடுத்துக்கொண்டு வேலையை ஆரம்பித்தாள் கவிதா.

ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும் கார், ஆட்டோ, ஸ்கூட்டர்... என்று தொடர்ந்து வண்டிகள் வந்து கொண்டே இருந்தன. மாற்றி, மாற்றி பெட்ரோல் போடுவதும், காசு வாங்குவதும், பில் கொடுப்பதும் என்று அசந்து போனாள். லேட் ஆகிவிட்டது' என்று காலையில் சாப்பிடாமல் வந்து விட்டதில் உடலும் மனமும் சோர்ந்து இருந்தது கவிதாவுக்கு. பங்குக்கு வரும் வண்டிகளும் பல விதம், அவை தாங்கி வரும் மனிதர்களும் பலவிதம்.

ஏம்மா, சீக்கிரம் வா... பராக்கு பாக்காதே...'

ஒரு பில் போட எவ்வளோ நேரம்? படிக்காத ஜடத்தையெல்லாம் வேலைக்கு வெச்சிருக்காங்க...'

அந்த வண்டிய எடுக்கச் சொல்லும்மா. மரம் மாதிரி நிக்கிறே...'

மனிதர்களின் வசவுகள் கவிதாவை மரத்துப் போக வைத்திருந்தன.

பெட்ரோல் போட கவிதா திரும்பும்போது, பைக்கில் உட்கார்ந்தபடி வேண்டுமென்றே அவள் பின்பக்கம் காலால் தட்டுபவன், பெட்ரோல் ஹோசை தூக்கிப் பிடிக்கும்போது நேராக அவள் மார்பைப் பார்த்து, வெரி நைஸ்' என்று காரிலிருந்து தைரியமாக கமெண்ட் அடிக்கும் பெரிய மனுஷன், பத்து ரூபாய் டிப்ஸை கையில் தராமல் தூக்கிப் போடும் திமிர் பிடித்த பணக்காரி... என்றெல்லாம் அன்றாடம் சந்திக்கும் அற்பர்களால் வாழ்க்கையே வெறுத்துப் போனது கவிதாவுக்கு.

அடுத்து நுழைந்தது அந்த டிசையர் வண்டி. பின்னால் இருந்த ஓனரம்மா இரண்டாயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டவுடன் பணம் கொடுக்க ஒரு பிளாஸ்டிக்கார்டை நீட்டினாள். கவிதா அதை மெஷினில் சொருகி எண்களை அழுத்தியதும், ரிஜெக்டட்' என்று வந்தது. மறுபடியும் போடு' என்று அவள் அதட்ட, மீண்டும் அந்தக் கார்டை சொருகினாள். அதற்குள் இந்தப் பக்கம், வழக்கமாய் வரும் அந்த ஆட்டோ வந்து நின்றது. ஆட்டோவில் இருந்து இறங்கிய டிரைவர் தர்மா, ஏய் நான் என்னோட ஆயில ஊத்தறேன். பாத்துக்கோ' என்றபடி தன் ஆட்டோவின் பின்புறம் மூடியைத் திறந்து பிளாஸ்டிக் புனலை சொருகினான்.

கவிதா போட்ட கார்ட் மறுபடியும் அந்த மெஷினில், ரிஜெக்டட்' என்று வர, கார்டை எடுத்து அந்த அம்மாளின் கையில் கொடுத்துவிட்டு பணமாகவே கொடுங்கம்மா' என்று பவ்யமாகக் கேட்டாள் கவிதா.

எல்லாம் சரியான கார்டுதான். வேற மெஷினில் போடு' என்று கோபத்துடன் அந்தப் பெண்மணி சொல்ல, கையிலிருந்த ஸ்வைப்பிங் மெஷினை வைத்துவிட்டு இன்னொரு மெஷினை எடுத்தாள் கவிதா. அந்த பிளாஸ்டிக் கார்டை அதில் சொருகினாள்.

அதற்குள் அங்கிருந்து தர்மா, சீக்கிரம் வா... பெட்ரோல் போடு லேட் ஆச்சு... மினுக்கிக்கினு இருக்கே...' என்று கத்தினாள். இந்த தர்மா வந்தால் எப்போதும் இந்த மரியாதை கெட்ட கூப்பாடு தான். கவிதாவின் மனதுக்குள் பொங்கியது.

மறுபடியும் அந்த கார்டு ரிஜெக்ட்டாக கவிதாவின் மேல் கடுப்பானாள் அந்தப் பெண்மணி.

பின்னால வண்டிங்க நிக்குது. பணமாவே கொடுங்க மேடம்' என்று மென்மையாகத்தான் கவிதா கேட்டாள்.

சே... யூஸ்லெஸ் பீப்பிள்' என்று கோபமாக பணத்தை விட்டெறியாத குறையாக அந்தப் பெண்மணி கொடுக்க... மெல்ல நகர்ந்தது கார். பணத்தை பாக்கெட்டில் சொருகிக் கொண்டு பெட்ரோல் ஹோசை எடுத்துக்கொண்டு தர்மாவின் ஆட்டோ அருகில் ஓடி வந்தாள் கவிதா.

எவ்ளோ நேரம்? வர்றவங்களிடம் எல்லாம் ஆட்டிக்கிட்டே இருப்பியா?' என்ற தர்மாவின் அசிங்கமான கமென்டில் கவிதா தன் வாழ்க்கையின் மொத்த பொறுமையையும் இழந்தாள். கையில் இருந்த பெட்ரோல் ஹோசை டாங்கின் ஸ்டாண்டில் மாட்டினாள். ஆட்டோவில் இருந்த புனலைப் பிடுங்கி ஓங்கி தர்மாவின் முதுகில் அடித்தாள். தொடர்ந்து அவன் கையிலும் முகத்திலும் கவிதா மாற்றி மாற்றி ஆத்திரத்துடன் அடித்ததில் அந்தப் புனலே உடைந்துவிட்டது.

ஆட்டோ தர்மா மட்டுமல்ல; அதுவரை அவளை அசிங்கப்படுத்திய அத்தனை பேரும் கண்ணுக்கு முன்னால் தெரிய... வெறி பிடித்தவள் போல், சோனு... சோனு... சோனு...' என்று கத்திக்கொண்டே அடித்த கவிதாவைப் பிடித்து நிறுத்த பலர் அவளை சூழ்ந்து கொண்டனர். கதையில் மட்டுமே வரும் சோனு, அங்கே வரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com