பராக் ஒபாமா  மிச்சேல் ஒபாமா  பிரிகிறார்களா?
Pete Souza

பராக் ஒபாமா மிச்சேல் ஒபாமா பிரிகிறார்களா?

அமெரிக்கப் பத்திரிகைகளில் சமீபகாலமாக பரபரப்பாக எழுப்பப்படுகிற ஒரு கேள்வி...
Published on

அமெரிக்கப் பத்திரிகைகளில் சமீபகாலமாக பரபரப்பாக எழுப்பப்படுகிற ஒரு கேள்வி... முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவும் விவாகரத்து செய்துகொள்ளப் போகிறார்களா?' என்பதுதான்.

காரணம், அவர் மிகவும் வெளிப்படையாகத் தெரிவித்துவரும் சில கருத்துகள்தான். நான் பறவைகளைப் போல சுதந்திரமாக வாழ விரும்புகிறேன். இது பல பெண்கள் அனுபவிக்கும் உணர்வு.

பல ஆண்டுகள் எனது கணவரின் வாழ்க்கையில் அவருக்குப் பக்க பலமாக இருந்து, பலவகையில் தியாகங்கள் செய்து, வாழ்க்கையில் பயணித்த பின், என்னை நான் மறுபடியும் தேடத் தொடங்கி இருக்கிறேன். எனது கணவர், அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தவர். அவரது ஆளுமை சர்வதேசப் புகழ் பெற்றது.

அதனுடன் நான் என்னைப் பிணைத்துக் கொள்ள விரும்பவில்லை' என்று கூறியுள்ளார் மிச்சேல்.

1964இல் பிறந்த மிச்சேலுக்கு தற்போது 61 வயது ஆகிறது. அவரது கணவர் பராக் ஒபாமாவுக்கு 65 வயதாகிறது. 1992 அக்டோபர் 3ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள். 1998இல் பிறந்தவர் மாலியா. 2001இல் பிறந்தவர் சாஷா.

டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக்கொள்ளும் விழாவில் ஒபாமா மட்டுமே கலந்துகொண்டார். வழக்கமாக பொது நிகழ்ச்சிகளுக்கு தன் மனைவி மிச்சேல் சகிதம் சென்று கலந்துகொள்வதே ஒபாமாவின் வழக்கம்.

இதுபோன்ற சம்பவத்தாலும், மிச்சேல் தெரிவிக்கும் சுதந்திரமான கருத்துகளின் அடிப்படையிலும் அமெரிக்காவில் ஒபாமா தம்பதியரைப் பற்றி வதந்திகள் அடிக்கடி பரவுகின்றன. மிச்சேல் சில நேர்காணல்களில் சொன்ன வார்த்தைகள் காரணமாக, பிரிவு' பற்றியும் ஊடகங்கள் அதிகம் பேசுகின்றன. இவ்வாறான வதந்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு எதிராக மிச்சேல் ஒபாமா மிகக் கடுமையாக எதிர்வினை ஆற்றி இருக்கிறார்.

எனக்குச் சரியென்று தோன்றிய முடிவுகளை நான் சுதந்திரமாக எடுக்கிறேன். அதற்காக என் திருமணம் உடைந்துவிட்டது என்று சொல்வதா?' என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இத்தகைய சுதந்திரமான உணர்வு இளம் வயதிலேயே எங்கள் இரண்டு மகள்கள் மாலியா, சாஷா இரண்டு பேருக்குமே இருக்கிறது. அவர்கள் வளர்ந்தவர்கள். எங்கள் ஆதரவு அவர்களுக்கு எப்போதும் உண்டு என்றாலும், அவர்கள் தங்களுக்கான உலகத்தை, தங்களின் தனி அடையாளத்துடன் உருவாக்க விரும்புகிறார்கள். மூத்த மகள் மாலியா தனது படைப்புகளை தனது குடும்பப்பெயரைப் பயன்படுத்தாமல் வெளியிட்டது கூட, அவர்களின் தனித்துவமான பாதை' தேடும் விருப்பத்தைக் காட்டுகிறது.

ஒபாமாவின் மனைவி என்ற அடையாளம் இருந்தபோதிலும், மிச்சேல் எப்போதுமே தனித்தன்மையோடு வாழ்ந்து வருகிறார். ஒபாமா பதவிக்காலம் முடிந்த பின்னர்தான் மிச்சேல் எழுதிய பிகமிங்' என்ற புத்தகம் வெளியானது. அது மாபெரும் வெற்றி பெற்று சர்வதேச அளவில் ஏராளமாக விற்பனையாகிறது.

மேலும், வரும் நவம்பரில் மிச்சேலின் புதிய புத்தகம் வெளியாகவிருக்கிறது. தலைப்பு: தி லுக். இந்தப் புத்தகத்தில் தன்னம்பிக்கை, சுய அடையாளம் மற்றும் உண்மைத்தன்மை குறித்து ஆழமான சிந்தனைகளை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா?' என்று கேட்டால், மீண்டும் வெள்ளை மாளிகைக்குச் செல்லும் விருப்பமில்லை!' என்கிறார், மிச்சேல் ஒபாமா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com