எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். பெரியவன் ஏழாம் வகுப்பிலும், சிறியவன் ஐந்தாம் வகுப்பிலுமாக படிக்கின்றனர். இருவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்திக் குறைவினால் அடிக்கடி இருமல், சளி, ஆஸ்துமா உபாதைகள் ஏற்படுகின்றன. படிப்பில் போதிய கவனமில்லாமல் உணவும் சரிவர உண்ணாமலும் எதிலும் விருப்பமின்றி உள்ளனர். அவர்களை எப்படிக் குணப்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ வைக்கலாம்?
பெரியசாமி, கரூர்.
குழந்தைகளுக்காகவே எழுதப்பட்ட ஆயுர்வேத நூலாகிய காஸ்யப ஸம்ஹிதை'யில் நோய் எதிர்ப்புச் சக்தி வளர்வதற்காகவும், அதன் மூலம் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காகவும் ஸ்வர்ணபிராசனம்' என்ற ஒரு வைத்திய முறை விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. அது உங்களுடைய பிள்ளைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதற்கான வயது வரம்பு, பிறந்த குழந்தை முதல் பதினாறு வயது வரை என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பிறந்த நாள் முதல் இரண்டு வயது முடியும் வரை மஹா ஸ்வர்ணயோகம்' என்ற பெயரில் மாத்திரையாக தற்சமயம் விற்பனையிலுள்ளது. இதில், தங்கபஸ்பம் இரண்டு மில்லி அளவிலும், சோம்பு ஐந்து மில்லி அளவிலும் சேர்க்கப்படுகிறது.
ஒரே தேக்கரண்டியில் மாத்திரையை வைத்து, அதில் சில துளிகள் தேன், உருக்கிய பசு நெய்யை விட்டவுடன் மாத்திரை கரைந்து போய் நிற்கும். அதைக் குழந்தையின் வாயில் வைத்து புகட்டிவிடுவார்கள். நல்ல ருசியாக இருக்கும் என்பதால், குழந்தையும் அதை மகிழ்ச்சியுடன் சாப்பிடும்.
இதை ஒரு மாதம் தொடர்ந்து கொடுத்து வந்தால், மாஸாத்பரமேதாவி' அதாவது பெரும் புத்திசாலியாகக் குழந்தை வளரும் என்றும், ஆறு மாதம் தொடர்ந்து கொடுத்து வந்தால் ஷன்மாஸாத் ஸ்ருததரா' அதாவது ஒருமுறை கேட்டாலே மூளையில் பதிந்துவிடும் திறனும் உண்டாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு வயது முடிந்து, மூன்று வயது தொடங்கி, பதினாறு வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு மஹாஸ்வர்ண ப்ரம்மயோகம்' என்ற பெயரில் ஆயுர்வேத மாத்திரை விற்பனையிலுள்ளது. முன்குறிப்பிட்டதுபோல், தேக்கரண்டியில் வைத்துச் சாப்பிட வேண்டும்.
இதில், தங்க பஸ்மம் 2.3 மில்லி, ப்ரம்மீ 55 மில்லி, சங்கபுஷ்பி 105 மில்லி மற்றும் சோம்பு 5 மில்லி அளவிலும் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. முன்குறிப்பிட்ட அத்தனை பலன்களும், ஆறு மாதம் தொடர்ந்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்குக் கிடைக்கும். தொடர்ந்து கொடுத்து வர முடியாத நிலையில், பூச நட்சத்திரம் எந்த நாளில் தோன்றுகிறதோ, அந்த நாளில் இம் மருந்தை குழந்தைகள் சாப்பிடப் பயன்படுத்தலாம்.
இதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் நன்மைகள்:
அடிக்கடி வரக் கூடிய கீழ் சுவாசஸக் குழாய்த் தொற்று உபாதைகள் குறைகின்றன. சளி, இருமல், தும்மல், ஆஸ்துமா, காய்ச்சல் நன்கு குணமாகின்றன.
பசி நன்றாகவும், சீராகவும் எடுக்கத் தொடங்குகிறது.
அடிக்கடி பிள்ளைகளுக்கு ஆண்டிபயாடிக் மருந்துக் கொடுப்பதும், ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்வதும் குறைகின்றன.
படிப்பிலும், பிற செயல்களிலும் கவனச் சிதறல் ஏற்படுவதைத் தவிர்த்துக் கவனம் செலுத்துவது கூடுகிறது. டியூஷன் அனுப்புவதைக் குறைக்கலாம். செலவும் மிச்சப்படும்.
முழு ஈடுபாட்டுடன் செயல்களில் ஈடுபடுவது உறக்கத்தின் தரம் உயர்கிறது.
மலம், சிறுநீர் தடையின்றி வெளியேறுகிறது.
பெற்றோர் பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்.
டான்சில் உபாதை, அடினாய்டு உபாதைகளுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகின்றன.
இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பல மருத்துவ முகாம்களை பள்ளி வளாகத்திலேயே ஆயுர்வேத ஆஸ்பத்திரிகளே நடத்தி வருகின்றன.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.