உலகக் கோப்பையில் பெண் நடுவர்கள்

உலகக் கோப்பையில் பெண் நடுவர்கள்

ஆண்களுக்கு நிகராக விண்வெளி, ராணுவம், கல்வி, ஆராய்ச்சி, விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சிறப்புடன் செயலாற்றி வருகின்றனர்.
Published on

ஆண்களுக்கு நிகராக விண்வெளி, ராணுவம், கல்வி, ஆராய்ச்சி, விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சிறப்புடன் செயலாற்றி வருகின்றனர். பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க பல்வேறு வகைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக விளையாட்டு நிர்வாகத்திலும் பெண்களுக்கு உரிய பங்கு அளிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆடவர், பெண்கள் என சம அளவில் பங்கேற்றனர். மேலும் ஒலிம்பிக் நிர்வாகத்திலும் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபலமான கிரிக்கெட்டிலும் மகளிருக்கு அதிக பங்கு தரப்பட்டு வருகிறது.

முதன்முறையாக...:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முதன்முறையாக மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அனைத்து ஆட்ட நடுவர்களும் பெண்களாக இருப்பர் எனத் தெரிவித்துள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் இது முதன்முறையாகும்.

2022ஆம் ஆண்டு பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள், 2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் அனைத்து பெண் நடுவர்கள் செயலாற்றினர்.

14 பெண் நடுவர்கள்:

இதற்காக 14 பெண் நடுவர்கள் கொண்ட பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. குறிப்பாக கிளேயர் போலோஸாக், ஜாக்குலின் வில்லியம்ஸ், சூ ரெட்பெர்ன் ஆகியோர் தங்களது மூன்றாவது உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கின்றனர். நியூஸிலாந்தில் 2022இல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதியில் லாரன்கிம் காட்டன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

ஆடவர் நடுவர்கள் பட்டியலில் ட்ருடி ஆண்டர்ஸன், ஷான்ட்ரெ ப்ரிட்ஸ், இந்தியாவின் ஜி.எஸ். லட்சுமி, மைக்கேல் பெரைரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

நடுவர்கள்:

லாரன் அகென்பேக், கான்டேஸ் லா போர்டே, கிம் காட்டன், சாரா டம்பநேவனா, சாதிரா ஜாகீர், கெர்ரின் க்ளாஸ்ட், ஜனனி என், நிமலி பெரைரா, கிளேயர் போலோஸாக், விருந்தா ரதி, சூ ரெட்பெர்ன், எலாய்ஸ் ஷெரிடன், காயத்ரி வேணுகோபாலன், ஜாக்குலின் வில்லியம்ஸ்.

செப். 30இல் உலகக் கோப்பை தொடக்கம்:

இந்தியா, இலங்கையில் வரும் செப்.30இல் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி தொடங்கு

கிறது. குவாஹாட்டி, இந்தூர், விசாகப்பட்டினம், நவி மும்பை, கொழும்புவில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் நவ. 2இல் நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துடன் அக். 1இல் மோதுகிறது. ஒவ்வொரு அணியும் இதர 7 அணிகளுடன் ஒருமுறை ஆடும். இதில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

ஐசிசி தலைவர் ஜெய்ஷா இதுதொடர்பாக கூறுகையில், ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அனைத்து பெண் நடுவர்கள் இடம் பெறுவது மகளிர் கிரிக்கெட்டுக்கு புதிய உத்வேகம் தரும். கிரிக்கெட்டில் ஆண், பெண் சமத்துவத்தை நிலைநாட்டுவதில்

ஐசிசிக்கு உள்ள அக்கறையை இது வெளிப்படுத்துகிறது. வருங்கால தலைமுறையினருக்கும் இது சிறந்த ஊக்கத்தை தரும். கிரிக்கெட்டில் பெண்களுக்கும் அதிகாரம் உள்ளது என்பதை நிலைநாட்டும்!' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com