நாணயங்கள் மூலமும் வரலாற்றை அறியலாம்!

நாணயவியல் ஆய்வில் தன்னார்வலராக இயங்கி வருபவர் ஆறுமுக சீதாராமன்.
நாணயங்கள் மூலமும் வரலாற்றை அறியலாம்!
Published on
Updated on
5 min read

அருள்செல்வன்

நாணயவியல் ஆய்வில் தன்னார்வலராக இயங்கி வருபவர் ஆறுமுக சீதாராமன். நாணயங்கள் சேகரிப்பு தொடர்பாக இந்தியாவையும் தாண்டி உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளவர். தஞ்சையில் நாணயவியல் ஆய்வு மையத்தை நிறுவியவர். தனது நாணய ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் சம்பந்தமாக 45 நூல்களை எழுதி இருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு:

குடும்பம் பற்றி...

சொந்த ஊர் சிதம்பரம் அருகே உள்ள அளக்குடி கிராமம். நான் பிறந்தது மயிலாடுதுறையில். என் தந்தையார் சோம. ஆறுமுகம். தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கல்வி பற்றி?

அப்பா அரசுப் பணியில் இருந்ததால் பல ஊர்களுக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டியிருந்தது. எனவே திண்டிவனம், ஊட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வேலூர், தஞ்சாவூர் போன்ற 16 ஊர்களில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்று மாறி மாறிப் படித்தேன். கல்லூரி வரை தமிழ் வழிக்கல்வியிலேயே படித்தேன்.

நான் நினைத்த மாதிரி படிக்க முடியவில்லை என்கிற ஏக்கம் எனக்குள் உண்டு. கல்லூரிக் கல்வியை கோவை அரசு கலைக் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்று படித்து எம்.ஏ. வரலாறு முடித்தேன்.

எப்போது முதல் நாணய ஆய்வைத் தொடங்கினீர்கள்? தூண்டுதல் எப்படி ஏற்பட்டது?

தபால் தலை சேகரிப்பு போல் எனது 12 வயதிலேயே நாணய சேகரிப்பிலும் ஈடுபாடு வந்தது. நான் 1985 முதல் தமிழகமெங்கும் நாணயங்களைத் தேடி அலைய ஆரம்பித்தேன். என் கல்லூரிக் காலத்தில் ஆங்கிலேயர் காலத் தமிழ்க் காசுகள்' என்கிற தலைப்பில் என்னுடைய முதல் ஆய்வுக் கட்டுரையை 1989 இல் ஈரோட்டில் நடந்த அருங்காட்சியகத் துறை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் வாசித்தேன்.

என்னுடைய முதல் நாணய ஆய்வு என்று சொல்வதை விட முதல் கண்டுபிடிப்பு என்றால் சங்க காலச் சேரன் இரும்புறை காசைத்தான் சொல்ல வேண்டும். இந்தக் காசு பற்றி நான் எழுதிய கட்டுரை முதன் முதலில் தினமணியில் வந்தது. அதுவே பெரிய தூண்டுதலாக இருந்தது.

ஐராவதம் மகாதேவன் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது பற்றி?

தமிழ் பிராமியில் அவர் மகத்தான ஆய்வுகளைச் செய்து பெரிய அடையாளமாக விளங்குபவர். நான் இரும்புறை காசு கண்டுபிடித்தேன். அவரோ சங்க காலச் சேரர் கல்வெட்டைக் கண்டுபிடித்தார்.

நான் சங்க கால சேரர் காசுகளை கண்டுபிடித்ததை அறிந்து ஆர்வமாகி, சென்னை தினமணி அலுவலகம் வந்து சந்திக்கச் சொன்னார். அப்படி நான் சென்ற போது என் வயதைப் பார்த்து முதலில் ஆச்சரியப்பட்டார். பிறகு உனக்கு மட்டும் எப்படி அரிய காசுகள் கிடைக்கிறது?' என்று கேட்டார். அதற்கு நான் சொன்ன பதில், உ.வே. சா. வுக்கு மட்டும் எப்படி ஐயா அரிய ஓலைச் சுவடிகள் கிடைக்கின்றன? அதே போலத்தான் எனக்கும் கிடைக்கிறது' என்றேன்.

பிறகு அவர் தனது மாணவனைப் போல் என்னையும் சேர்த்துக் கொண்டார். நான் அம்பத்தூரில் தங்கி இருந்தேன். அடிக்கடி அவரது திருவான்மியூர் வீட்டுக்குச் செல்வேன். சில நாள்கள் அவர் வீட்டிலேயே தங்கி இருப்பேன். என்னை தனது மாணவனைப் போல் அல்லாமல் பிள்ளையைப் போல் பார்த்துக் கொள்வார்.

அவருடன் பல ஊர்களுக்கு ஆய்வுக்குச் சென்றிருக்கிறேன். அவர் நேர மேலாண்மையில் கண்டிப்பானவர். அவருடன் ஆய்வுக்குக் களப்பணிக்குச் செல்வதென்றால் சரியாகக் காலை ஐந்து மணிக்குக் கிளம்பி விட வேண்டும். ஐந்து நிமிடம் நேரம் தவறினாலும் விட்டுச் சென்று விடுவார். அந்தளவுக்கு கறாரானவர். தென்னிந்தியா முழுவதும் அவருடன் ஆய்வு மாணவனாகச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

அவருடன் சென்றபோது தான் கேரளாவில் உள்ள எடக்கல் குகையில் புதிதாக தமிழ் பிராமி கல்வெட்டு கண்டுபிடித்தோம். பிராமி கல்வெட்டுகள் மீது அவருக்கு அபார ஆர்வமும் அனுபவமும் உண்டு. அவர் எழுதுவதை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். பலமுறை அடித்துத் திருத்தி எழுதுவார். சரியானது வரும் வரை சளைக்க மாட்டார். அவருக்கு எந்த பேதங்களும் கிடையாது. அனைவரையும் சமமாக நடத்துவார்.

அவர் தனது வாழ்நாளில் இறுதிவரை எழுதிக் கொண்டே இருந்தார். அச்சு வடிவில் எனது நூல்கள் வந்த போது அவர் தான் அதை அடித்துத் திருத்தி முறைப்படுத்தித் தந்தார். எழுதுவதற்கு அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். எனக்கு அவர் வழிகாட்டி , ஆசிரியர், நலம் விரும்பி... இப்படிப் பல வகையில் உதவியவர். எனக்கும் அவருக்கும் 30 ஆண்டுகாலமாகத் தொடர்பு நீடித்தது.

நாணயங்கள் கிடைக்கும் இடங்களை எப்படித் தேர்வு செய்வீர்கள்?

ஒவ்வொரு ஆற்றங்கரை ஓரத்திலும் மணல் அரிப்பு தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள். அங்கே உள்ள மணல்களை அரித்துச் சலித்து அலசி அதில் உள்ள தங்கத்தின் தாதுக்களை எடுத்துப் பிழைப்பு நடத்துபவர்கள். அப்படி நான் அவர்களிடம் சென்று விலை கொடுத்துக் கேட்டுப் பல நாணயங்களைப் பெற்றுள்ளேன். சிலர் பழைய நாணயங்களைக் காசுக்காக விற்பார்கள். அப்படி வாங்குவதும் உண்டு.

சேர, சோழ, பாண்டியரது நாணயங்களில் உள்ள வேறுபாட்டை எப்படிக் கண்டறிவது?

சேரர் காசுகளில் இலச்சினை மற்றும் மன்னர் பெயர் இருக்கும். உதாரணமாகவில், அம்பு, பனைமரம் இருக்கும். சோழர் காசுகளில் புலி, இலச்சினை மற்றும் மன்னர் பெயர் இருக்கும். சில காசுகளில் தமிழ் எண்களில் ஆட்சியாண்டு காணப்படும். பாண்டியர் காசுகளில் இரட்டை மீன் சின்னம் மற்றும் கொக்கி வடிவில் நடுவில் செண்டு காணப்படும். சில காசுகளில் தமிழ் எண்கள் காணப்படும்.

தமிழ் பிராமி காசுகள் பற்றி?

தமிழகத்தில் இதுவரைக்கும் ஐந்து பிராமி காசுகள்தான் கிடைத்துள்ளன. சங்க கால பாண்டியர் பெருவழுதி கி.மு. 2 ஆம் நூற்றாண்டு, சங்க கால சேரர்களில் இரும்புறை கி .பி முதலாம் நூற்றாண்டு, மாக்கோதை கி.பி. 2 ஆம் நூற்றாண்டு, குட்டுவன் கோதை கி.பி. 3 ஆம் நூற்றாண்டு, குறுநில மன்னன் அதின்னன் எதிரான் சேந்தன் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு எனக் காசுகள் கிடைத்துள்ளன. தமிழ்பிராமியில் இதுவரை சோழர்களது காசு எதுவும் கிடைக்கவில்லை.

45 நூல்கள் எழுதிய அனுபவம் பற்றி?

நாணயவியல் சார்ந்த சிறந்த வரலாற்று ஆய்வு நூலகம் என் வீட்டில் இருந்ததால் நூல்கள் எழுதுவதற்கு உதவியாக இருந்தது. அதனால்தான் கரோனா காலத்தில் மட்டும் ஏழு நூல்கள் என்னால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.

வரலாற்றை அறியும் பாதையில், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் போல் நாணயத்திற்கு உரிய இடம் இருக்கிறதா?

நூறு சதவிகிதம் இடம் உண்டு. திருச்சியில் கிடைத்த ஒரு காசு, நஹிகிகாமுத்ரிக' என்ற பெயருடன் கிடைத்தது. இந்தக் காசை ஆய்வு செய்து பார்த்ததில், பல்லவர் கால கிரந்த எழுத்துகளில், முதலாம் மகேந்திரவர்மனின் விருதுப் பெயருடன் இந்தக் காசு கண்டறியப்பட்டது.

பிறகு திருச்சி மலைக்கோட்டை தூணிலுள்ள கல்வெட்டில் இதே பெயர், நைஹிகாமுத்திரிகஹ' என்று பல்லவ கிரந்த எழுத்துகளில் உள்ளதை அறிந்தோம். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, காசில் உள்ள மன்னரும், கல்வெட்டில் உள்ள மன்னரும் ஒருவரே என்று அறிய முடிந்தது. இதிலிருந்து வரலாற்றுக்கும் நாணயத்திற்கும் உள்ள தொடர்பை அறிய முடியும்.

ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பழங்காசுகள் குறித்து சொல்லித் தருவது என்பது மிக, மிக அரிதாகவே உள்ளது. பள்ளியிலும், கல்லூரியிலும், மாணவர்களுக்கு ஆய்வு ஆர்வத்தை ஏற்படுத்தும் முகமாக கல்வி முறையில் ஏதாவது செய்ய வேண்டும். அதற்கு முன்பாக, முதலில், வரலாற்றாசிரியர்களுக்கு பழங்காசுகள் குறித்த செய்திகள் தெரிய வேண்டும். தெரிந்தால்தானே அவர்கள் மாணவர்களுக்குச் சொல்லித் தர முடியும்?

நாணயங்கள் வெளியிடக்கூடிய உரிமை யாருக்கெல்லாம் உள்ளது?

உரிமை அரசாங்கத்திற்கே இருந்தது. குறிப்பாக மெளரியர் ஆட்சிக் காலத்தில், வணிகர்களும் காசுகளை வெளியிட்டதாகச் சான்றுகள் உள்ளன. இலங்கையில், சங்க காலத்தில் வணிகர்களும் (மகாசாதன்) காசுகளை வெளியிட்டுள்ளனர். குறுநில மன்னர்களும் , பாளையக்காரர்களும், ஜமீன்தார்களும் காசுகளை வெளியிட்டுள்ளனர்.

நாணயங்களில் பொறிக்கப்படும் சின்னம் எந்த அடிப்படையில் தேர்வாகிறது?

சங்க காலத்தில் வெளியிடப்பட்ட காசுகள் இயற்கை வழிபாட்டை உணர்த்துகின்றன. உதாரணமாக சூரியன், மலைமுகடு, மரம் போன்றவை. மன்னர்களுடைய வெற்றியைக் குறிப்பதற்கும் பல காசுகளை வெளியிட்டனர்.

பாண்டியர் வெற்றி என்றால் காசில் மீனைப் போடுவது, சாளுக்கியர் வெற்றி என்றால் பன்றியைப் போடுவது. இதே மாதிரி மன்னர்கள் வெற்றியைக் குறிப்பதற்கும் பல காசுகளை வெளியிட்டனர். பல மன்னர்கள் குல தெய்வங்களையும், விலங்குகளையும் காசுகளில் பொறித்து வெளியிட்டனர்.

உங்களுக்கான அங்கீகாரங்கள், அடையாளங்கள் என்ன?

செம்மொழி மாநாடு, ராஜராஜன் ஆயிரமாண்டு விழாவில் நாணயவியல் அரங்கில் அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் பொறுப்பேற்றுப் பணியாற்றினேன். இது ஓர் அங்கீகாரம்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2023 முதல் இந்த 2025 வரை மூன்று ஆண்டுகள் அரசு தகைசால் பேராசிரியராக என்னை நியமித்துள்ளது. தமிழக அரசின் சார்பில் நாணயவியல் நூலுக்காக எனக்கு தமிழ்ச்செம்மல்' விருது கிடைத்தது.

தஞ்சை சோழமண்டல நாணயவியல் கழகம் சார்பில் காசு இயல் செம்மல்', மும்பை காயின்ஸ் சொசைட்டி மூலம் முத்ரா ரத்னா புரஸ்கார்' விருது, வா.செ. குழந்தைசாமி டிரஸ்ட் சார்பில் தமிழ் மேம்பாட்டு விருது', புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகம் வழங்கிய நாணயமாமணி' போன்ற விருதுகள் கிடைத்தன.

இந்தப் பயணத்தில் நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சி, வருத்தம், வேதனை என்ன?

நான் 45 ஆண்டுகளாக நாணயவியல் ஆராய்ச்சியில் இருப்பதால் எந்தவித கெட்ட பழக்கமும் நான் கற்றுக் கொள்ளவில்லை. இது ஒரு மகிழ்ச்சி.

2017-இல் தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு தமிழக காசுகளின் 500 அரிய புகைப்படங்களை வழங்கினேன். அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசுடன் இணைந்து உருவாக்கிய வரலாறு கூறும் தமிழ் நாட்டுக் காசுகள்' நூல் 2 தொகுதிகள் வெளியிடப்பட்டன. இது நாணயவியல் உலகின் மாபெரும் ஆவணம். இது மகிழ்ச்சி.

தமிழகமெங்கும் ஏராளமான நாணயவியல் கண்காட்சிகள் நடத்தியுள்ளேன்.

சங்க கால முத்திரை கொண்ட நாணயங்கள் முதல் சேர, சோழ, பாண்டியர், பல்லவர், மதுரை, தஞ்சாவூர், செஞ்சி நாயக்க மன்னர்கள், சேதுபதி, ஆற்காடு நவாப், சம்புவராயர், மதுரை சுல்தானியர், பாளையக்காரர்கள், ஜமீன்தார், மறவர் என பல்வேறு ஆட்சிக்காலத்து நாணயங்களைக் கண்டுபிடித்துள்ளேன்.

நாணயவியலுக்காக ஆய்வு நூலகம் ஒன்றை தஞ்சையில் அமைத்துள்ளேன். ஆய்வாளர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் அது உதவி வருகிறது.

வரலாற்று ஆசிரியர்கள், தொல்லியலாய்வாளர்கள் நாணயவியலுக்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை. தொல்லியல் துறையில் கல்வெட்டுத் துறையில் இருப்பது போல் விரிவான பாடத்திட்டம் இல்லை. இருந்தாலும், சரியாக நடத்தாமல் குறிப்புகள் மட்டும் கொடுத்து விடுகிறார்கள்.

இதில் வருத்தம் தான், என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் தொல்லியல் பயிற்சியில் 2000 வரலாற்று ஆசிரியர்களுக்கு நாணயவியல் பயிற்சி அளித்திருக்கிறேன்.

உலகின் பல்வேறு நாடுகளில் நாணயவியல் கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருக்கிறேன்; ஆய்வுக் கட்டுரை வாசித்திருக்கிறேன். என் பயணத்தில் இவை மன நிறைவு அளிப்பவை. உழைப்பும் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com