இறைவழிபாட்டில் பூக்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ஆனால், இறைவனுக்கே உரிய பூக்கள் சில உண்டு. அவை அதிசயமாக, குறிப்பிட்ட ஆண்டு, மாத, நாள் இடைவெளியில் பூக்கும். ஆனால், 'விஷ்ணு கமலம்' என்ற அதிசயப் பூ விழா நாள்களிலேயே பூக்கும் என்றால் ஆச்சரியம் அளிக்கிறது.
வேலூர்- திருப்பத்தூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ள நரியம்பட்டு கிராமத்தில், தென்னை மரங்கள் நிறைந்த இயற்கைச் சூழலில் அமைந்த, வழக்குரைஞர்கள் ஏ.என்.பத்மநாபன், சி.ஜெயந்தி பத்மநாபன் தம்பதியின் வீட்டில் மகாளய அமாவாசையன்று இந்தப் பூ பூத்தது.
எம்.எல்.ஏவாக இருந்துள்ள சி.ஜெயந்தி பத்மநாபன் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர். அவரிடம் பேசியபோது:
'ஹைதராபாத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் 'விஷ்ணு கமலம்' செடியை வாங்கி வந்து, எங்கள் வீட்டில் நட்டேன். நன்கு வளர்ந்துள்ளது. இந்தச் செடி வளர்வதே இறைநம்பிக்கையில்தான்! மண்வளமோ, நீர்வளமோ காரணம் கிடையாது. இந்தச் செடியில் ஒற்றைப் பூவே பூக்கும். அதிலும், விழா நாள்களிலேயே பூக்கும். வரலட்சுமி விரத நாளன்று பூ பூத்தது. தற்போது மகாளய அமாவாசையன்று பூத்தது. இந்தப் பூவில் சிவலிங்கமும் இடம்பெற்றிருக்கும்.
சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒருசேர அமைந்துள்ளதே இந்தப் பூவின் மகிமை.
பவளமல்லி, மனோரஞ்சிதம், பாரிஜாதம், பச்சை சம்பங்கி, முல்லை, ஜாதிமல்லி, காஞ்சிபுரம் மல்லி, எட்டடுக்கு மல்லி, ஐந்து நிறங்களில் செம்பருத்தி, நந்தியாவட்டை, இட்லி பூ, தொட்டிப் பூ, நாட்டு ரக ரோஜா, மருதாணி, மலேயா ஆப்பிள், சப்போட்டா, கொய்யா, மாம்பழம், வாழைக்காய், ரஸ்தாலி பழம், கற்பூரவள்ளி, வாழைக்காய், நாட்டு அத்திப்பழம், நாட்டு மஞ்சனத்தி, ஆடாதொடா மூலிகை, ஆடுதீண்டாப்பாளை, கன்னி என்கின்ற கற்றாழை, புனிதத்துவம் வாய்ந்த துளசி, நாட்டு பாதாம், அனைத்து வகையான முருங்கை, நாட்டு பப்பாளி, சிறு மூலிகைகள் போன்றவை எனது இல்லத்தில் வைத்து, வளர்த்து வருகிறேன்.
இயற்கை முறையில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பழங்களை இங்கேயே விளைவித்துக் கொள்கிறோம்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழியில், எங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டு அடுத்தவர்களுக்கும் கொடுத்து இன்பமான சூழ்நிலையை அமைத்து வாழ்கிறோம்'' என்கிறார் ஜெயந்தி பத்மநாபன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.