ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க?

என் வயது 42. உடல் வலு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக உள்ளது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க?
Published on
Updated on
2 min read

என் வயது 42. உடல் வலு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக உள்ளது. இதனால் ஏற்படும் உடல் சோர்வை எப்படி அகற்றிக் கொள்வது என்பதை ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறதா?

- மாசிலாமணி, நாகை.

நாம் உண்ணும் உணவு, செரிமானத்தில் சத்தான பகுதியாகவும், சக்கையான பகுதியாகவும் பிரிக்கப்படுகிறது. சக்கையானது மலமாக வெளியேற்றப்படுகிறது. சத்தான பகுதி உட்புற தாதுக்களில் பொதிந்துள்ள நெருப்பினால் வேக வைக்கப்பட்டு, ஊட்டத்திற்கான செயலைச் செய்கிறது. ஒவ்வொரு தாதுவிலும் வெந்த உணவின் சத்தானது, இறுதியாக விந்தணுவின் உற்பத்திக்காகவும், சினை முட்டை உற்பத்திக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

அதிலிருந்து வெளிப்படும் உணவு சாரமானது இறுதிக் கட்டமாக 'ஓஜஸ்' எனும் வலுவூட்டும் பொருளாகவும், நோயை எதிர்த்துப் போராடும் சக்தியாகவும் உருவாகிறது. அதன் இரு துளிகள் இதயத்திலும், எட்டுத் துளிகள் உடலெங்கும் பயணிக்கும் விதமாக செயல்படுகின்றன.

நெய்ப்பு, குளிர்ச்சி, பரிசுத்தம் மற்றும் சிவப்பும் மஞ்சள் நிறமும் கூடிய பொருளான அதற்கு, அழிவு ஏற்பட்டால், உடல் அழிவதாகவும், அதன் பாதுகாப்பானது உறுதியானால் உடலின் ஆரோக்கிய நிலைப்பாடானது நிச்சயமானது என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடானது இந்த ஓஜஸ் எனும் பொருளிலிருந்துதான் தீர்மானிக்கப்படுகின்றன.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஓஜஸானது, அதிக கோபம், பசி, தொடர் சிந்தனை, வருத்தம், தன் பலத்திற்கு மீறிய உடல் உழைப்பு போன்றவற்றால் வலுவிழந்து, எதிலும் அச்சம், பலமின்மை, வேண்டத்தகாத சிந்தனை, புலன்களுக்கு வேதனை, உடல் நலம் குன்றுதல், குழப்பம், தோல் வறட்சி மற்றும் உடல் வாட்டம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. உங்களுடைய விஷயத்திலும் இந்த ஓஜஸ் சரியாக உற்பத்தியாகவில்லை என்றே கணிக்க வேண்டியிருக்கிறது.

பத்து மூலிகைப் பொருள்களாகிய ஜீவகம், ரிஷபகம், அதிமதுரம், காகோலி, க்ஷீரகாகோலி, காட்டு உளுந்து, காட்டுப் பயறு, ஜீவந்தீ எனும் ஊசிப்பாலை, தாமரைத்தண்டு மற்றும் பால் பூண்டு ஆகியவற்றின் தொகுப்பாகிய ஜீவனிய கனம் எனும் கூட்டு மருந்தை பாலுடன் வேக வைத்து வடிகட்டிச் சாப்பிடும் படி ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

இதனால் ஏற்றம் பெறும் ஓ ஜஸ் உடல் சோர்வு, வலுவற்ற தன்மை போன்றவை மாறுவதற்கு உதவிடும். மேலும் பசும்பால், மாமிச சூப்பு போன்றவையும் ஓஜஸ் வளர்வதற்கான சிறந்த உணவு வகைகளாக ஆயுர்வேதம் உபதேசிக்கிறது. இவற்றால் ஏற்றமடையும் ஓஜஸினால் மனமகிழ்ச்சி, உடல் போஷணை மற்றும் உடல் வலு ஆகியவை அதிகரிக்க வழி வகுக்கிறது.

உடற்பயிற்சி - நெய்ப்புடன் கூடிய உணவு - சீரான பதி - இளமையைத் தக்க வைத்தல் மற்றும் வலுவான உடல் உள்ளவர்களுக்கு, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியானது நல்ல நிலையில் இருக்கும். மேலும் ஒவ்வாமை உணவுகளால் சந்திக்க வேண்டிய பல வகைப்பட்ட தோல் உபாதைகள், குடல் உபாதைகள் போன்றவையும் இவைகளால் எளிதில் சமாளிக்க முடியும்.

உங்களைப் பொருத்தவரை உட்புறச் செரிமானம், குழாய்களின் சீரான செயல்பாடு, உணவின் சாராம்சம் அணுக்களில் சேரும் தன்மை, மலக்கழிவுகளின் வெளியேற்றம், கல்லீரல் மற்றும் மண்ணீரல் செயல்பாடு போன்றவை கண்டு அறியப்பட வேண்டும்.

அவற்றில் குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை எண்ணெய்த் தேய்ப்பு, வியர்வை சிகிச்சை மூலம் உருக்கி, குடலுக்குக் கொண்டு வந்த பின்னர், வாந்தி, பேதி, எனிமா மூலம் வெளியேற்ற வேண்டும். இதனால் ஏற்படும் உட்புறச் சுத்தம், பின்னர் வரக் கூடிய மருந்துகளின் சத்தை நன்கு உடலில் சேருவதற்கு உதவிடும்.

உடலை வலுவூட்டும் ஆயுர்வேத மருந்துகளாகிய சியவனப்ராசம், தசமூலாரிஷ்டம், அஸ்வகந்தா சூரணம், மஹா மாஷதைலம் போன்றவை மூலம் உங்களுடைய நோய் எதிர்ப்புச் சக்தியை நன்றாக வளர்த்துக் கொள்ள முடியும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com