மேஜர் சுந்தர்ராஜன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 25

மேஜர் சுந்தர்ராஜன் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
மேஜர் சுந்தர்ராஜன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 25
Published on
Updated on
2 min read

மேஜர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சுந்தர்ராஜன், பெரியகுளத்தில் மார்ச் 17 - 1935-இல் சீனுவாச அய்யங்காருக்கும், பத்மாசினி அம்மாவுக்கும் ஆறு சகோதரர்களில் இரண்டாவதாகப் பிறந்தார். சென்னை தொலைபேசியில் வேலை பார்த்து நாடகங்களில் நடித்தார். கே. சோமுவின் 'பட்டினத்தார்' படத்தில் அறிமுகமானார். இவர் மனைவி சியாமளா. மகன், நடிகர் கௌதம்.

பூரம் பிரகாஷ் ரோடு, ராயப்பேட்டையில் இருக்கும் பத்மம் வீடுதான் எனக்கு பிருந்தாவனமாக அமைந்தது. 'காரைக்குடி நாராயணன் என்ற ஒரு இளம் எழுத்தாளர் 'அச்சாணி' என்ற அருமையான நாடகத்தை எழுதியிருக்கிறார்'' என்று அவர் படப்பிடிப்புக்குப் போன இடங்களில் எல்லாம் மைக் இல்லாமல் பேசி என்னை விளம்பரப்படுத்தினார்.

ஒருவேளை நான் மேஜர் சுந்தர்ராஜனைச் சந்திக்காமல் போயிருந்தால் என் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகியிருக்கும். என்னைச் சந்தனமாக்கினார்.

அவரைச் சந்தித்து என் 'அச்சாணி' நாடகம் வெற்றி அடைந்த பிறகு, அவர் வீட்டிலே நினைத்த போதெல்லாம் டிபன், சாப்பாடு... ஏன் தூக்கமும் அவர் வீட்டில்தான். ஒரு கைலி எனக்கென்று அவர் தம்பி சம்பத் தருவார். அந்தக் குடும்பத்தில் எந்த நல்ல காரியம் நடந்தாலும் எனக்கும் டிக்கெட் போட்டு ரயிலில் கூட்டிச் செல்வார். அவருக்குத் தேவர் தந்த அம்பாசிடர் கார் 9221 நான் அதிகம் சவாரி செய்த கார்.

சிவாஜி, சாவித்திரி போன்ற கலை உலகின் காவல் தெய்வங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

கே. பாலசந்தர் தனது மனைவியுடன் நான்கு தடவைகள் என் 'அச்சாணி' நாடகத்தைப் பார்த்து விட்டு அதைப் படமாக்க மேஜரிடம் போனில் பேசினார். மேஜர் அவரிடம் 'பாலு நீங்கள் 'அச்சாணி' நாடகத்தைப் படமாக்குவது ரொம்ப சந்தோஷம். ஆனா காரைக்குடிதான் கதை, வசனம் என டைட்டில் கார்டுல போடுவீங்களா?''ன்னு கேட்டாரு. 'கதை அவர் பேர் போடுவேன். வசனம் என் பெயரில்தான்'' என்றார்.

உடனே மேஜர் 'பாலு தப்பா எடுத்துக்காதீங்க. 'அச்சாணி'யைப் பொருத்தவரை காரைக்குடி எழுதுன வசனமே அரங்கம் நிறைந்த கைத்தட்டல் வாங்கியது. அதனால் அவர் வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பவில்லை. அவர் உரிமை தரமாட்டார்'' என்று என்னைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே 'மேஜர் சந்திரகாந்த்' பட வாய்ப்பு தந்த பாலசந்தரிடமே என் உரிமைக்காக பேசினார்.

என் தாய் தந்தையை 'அச்சாணி' நாடகத்தைப் பார்க்க வைத்து, மதியம் மாடி அறையில் ஓய்வெடுக்கச் சொல்லி மாலை படப்பிடிப்பு முடிவடைந்து காரைக்குடியின் நாடகம் நூறாவது நாள், அதற்கு பரிசு என்று ஐந்து சவரனை என் பெற்றோரிடம் கொடுத்துக் கௌரவப்படுத்தினார்.

என் தாயாரை மாமல்லபுரம் கூட்டிச் செல்ல ஆசைப்படுவதாக நான் மேஜரிடம் சொன்னதும் 'அம்பாசிடர் வேண்டாம். பிளைமௌத் காரை எடுத்துப் போய் வாருங்கள். அதுதான் வசதியாக இருக்கும்'' என்றார்.

இன்னொரு நாள் தீபாவளி முதல் நாள். என்னிடம் பணமில்லை என்று தெரிந்ததும் 2000 ரூபாய் கொடுத்தார். அவர் மரணத்தை நோக்கி விஜயா மருத்துவமனையில் இருந்த போது அவரைப் பார்க்க வரச் சொன்னார். போனேன். அப்போதும் எனக்குக் கேண்டீனில் சாப்பாடு ஆர்டர் செய்தார். யார் வந்தாலும் காபி, டிபன், சாப்பாடு என்று மன்னி சியாமளாவுக்கு உத்தரவு போட்டபடியே இருப்பார்.

சிவாஜி மேஜருடன் பேசாத நாளே இருக்காது. அப்படி ஒரு நட்பு. நாங்கள் திருச்சியில் நாடகம் முடித்து இரவு 11 மணிக்கு பஸ்ஸில் சூரக்கோட்டைக்குப் போனோம். சிவாஜி அதுவரை எங்களுக்காக காத்திருந்து உணவு பரிமாறி வழியனுப்பினார்.

என் அடுத்த நாடகம் 'சொந்தம்' வெற்றி பெற்ற பின் பத்திரிகையாளர்களை அழைத்து விருந்து கொடுத்து அவர் வீட்டு மொட்டை மாடியில் என்னைப் பற்றி பத்திரிகைகளில் எழுதச் சொன்னார். 500 படங்களில் நடித்த, பீம்சிங் எடுத்த

'ஆலயம்' படத்திற்காக குடியரசுத் தலைவர் விருதைப் பெற்ற மேஜர், 'கல்தூண்' மூலமாக சிவாஜியின் படத்தில் இயக்குநராகிப் பல படங்கள் இயக்கித் தயாரித்த போதும், எங்கள் படங்களில் இல்லா விட்டாலும் படங்களைப் பற்றி விவாதித்து, மனதில் எதையும் ஒளித்து வைத்துப் பேசாமல் பாராட்டுவதைப் பாராட்டி விவாதிப்பதை விவாதிப்பார்.

அவர் தம்பி ரெங்கராஜன் மறைந்த அன்று அதிகாலை 4 மணிக்கு சிவாஜி வந்து துக்கம் விசாரித்துப் போனார். அப்போது என்னிடம் 'காரைக்குடி ரெங்கன் போய்ட்டான். பாலு போய்ட்டான். நான் எப்போன்னு தெரியலே'' என்றார். பிப்ரவரி 28, 2003-இல் அவரது மரணம் என்னை ஒரு உலுக்கு உலுக்கியது. அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா வருவதாக இருந்து வரமுடியவில்லை.

எனவே நான், நடிகர் சிவகுமார் உள்ளிட்ட எல்லோரும் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடலை தகனம் செய்தபின், ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்ல முடியாமல் கண்கலங்கிப் பிரிந்தோம். அவர் மனைவி சியாமளா மன்னி இறந்த போதும் எனக்குத் தகவல் வந்து அஞ்சலி செலுத்தி வந்தேன். அந்தக் குடும்பம் என்றும் என் இதயத்தில் துடித்துக் கொண்டே இருக்கும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com