
சென்னை செளகார்பேட்டையில் வசிக்கும் நிர்மல்குமாருக்கு பூர்விகம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீர். இவரது பெற்றோர் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த சமயத்தில் இவர் சென்னையில் பிறந்தார். இப்போது எழுபது வயதாகும் அவருக்கு, இரண்டு மகன்கள், ஒரு பேரக் குழந்தை இருக்கிறார்கள்.
வழக்கமாக இந்த வயதில் அப்பாக்கள், தங்களுடைய வியாபாரத்தை பிள்ளைகள் கையில் ஒப்படைத்துவிட்டு, ஓய்வு எடுப்பார்கள். ஆனால், நிர்மல்குமார் ஒரு வித்தியாசமான மனிதர். இந்த வயதில் அவர் பிளஸ் 2 தேர்வு எழுதி, 67% மதிப்பெண்கள் பெற்று பாஸ் ஆகியிருக்கிறார். அவரோடு பேசியபோது:
'நான் அந்தக் காலத்தில் 11 வருடப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் பரீட்டையில் தேர்ச்சி பெறாததால், குடும்ப வியாபாரத்தை கவனிக்க அப்பாவுக்கு உதவியாகப் போய்விட்டேன். அப்புறம் வியாபாரத்தில் மும்முரமாக இறங்கிவிட்டதால், படிப்பை மறந்துவிட்டேன்.
கடந்த பல ஆண்டுகளில் வியாபாரத்தில் வாடகை, வராக்கடன், திரும்பி வந்த காசோலைகள் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்காக நான் பல தடவை வழக்குகள் போட்டிருக்கிறேன். அவை குறித்து வக்கீல்களுடனான ஆலோசனைகளின் அடிப்படையில் பல சட்ட நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டேன்.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, திடீரென்று ஒருநாள், 'நாம் பட்டப்படிப்புகூட முடிக்கவில்லையே!' என்ற எண்ணம் தோன்றியது. அடுத்து, 'எழுபது வயதானால் என்ன? இப்போது நம்மால் படித்து பட்டம் வாங்க முடியாதா என்ன?' என்று நினைத்தேன்.
பட்டப்படிப்பில் சேரவேண்டுமெனில், முதலில் தற்போதைய கல்விமுறையில் பிளஸ் 2 பாஸ் பண்ணவேண்டுமே! எனவே, தேசிய திறந்தநிலைப் பள்ளியின் மூலமாக பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பிக்கும்போது, என்னுடைய 11-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தேவைப்பட்டது.
நான் 11-ஆம் வகுப்பு பள்ளி இறுதித்தேர்வு எழுதி, சுமார் 50 ஆண்டுகள்ஆகிவிட்டபடியால், என்னுடைய எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியலைத் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, நான்படித்த பள்ளியை அணுகி, என் மதிப்பெண் பட்டியலின் பிரதியை அளிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர்கள் நான் இந்த வயதில் பிளஸ் 2 தேர்வு எழுதப் போகிறேன் என்றுஅறிந்ததும், என்னை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளியின் பழைய ஆவணங்களைத் தேடி, என் மதிப்பெண் பட்டியலின் பிரதியைக் கொடுத்து வாழ்த்துச் சொன்னார்கள்.
தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கவும், தேர்வுக்கான பாடத்திட்டம், பாடப்புத்தகங்கள் போன்ற விஷயங்களில் எனக்குத் தெரிந்த புஷ்மா என்ற வக்கீல் எனக்கு உதவினார். கடந்த தேர்வுகளின் கேள்வித்தாள்களை அடிப்படையாகக் கொண்டு, பாடங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.
நான் பிளஸ் 2 தேர்வு எழுதப்போகிறேன் என்று எங்கள் குடும்பத்தில் கூட யாரிடமும் நான் சொல்லவில்லை. ஆங்கிலம், அரசியல் அறிவியல், சமூகவியல், சட்டஅறிமுகம், வணிகம் உள்ளிட்ட மொத்தம் ஏழுதேர்வுகளை நான் எழுத வேண்டி இருந்தது. எனது அனுபவம், பொதுஅறிவு காரணமாக பாடங்களைப் படித்துப் புரிந்துகொள்வதில் எனக்கு எந்தச் சிரமமும் ஏற்படவில்லை.
அண்ணா நகரில் ஆதர்ஷ் பள்ளியில் தேர்வு எழுதினேன். பரீட்சை குறித்த பயமும் எனக்கு இல்லை. ஒவ்வொரு தேர்வையும் எழுதிமுடித்ததும், இந்தப் பாடத்தில் நான்தேர்ச்சி பெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியானபோது, எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. நாற்பது, நாற்பத்தைந்து சதவீதம் மதிப்பெண்கள் வெற்று தேர்த்தி பெறுவேன் என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால். நான்பெற்றது 67%. ஆகவே உற்சாகத்துடன் அடுத்து பி.ஏ. பட்டப் படிப்பில் சேரப்போகிறேன். அதன்பின் சட்டம் படிக்கப்போகிறேன்.
ஒரு வக்கீலாக மூத்த குடிமக்களின் பிரச்னைகளுக்காக ஆஜராகவேண்டும் என்பதே எனது லட்சியம்!'' என்று கூறுகிறார் மூத்தகுடிமகனான நிர்மல்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.