
பொ.ஜெயச்சந்திரன்
மிருதங்கம், கொன்னக்கோல் போன்றவற்றில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நடத்தியவர், முற்றிலும் பார்வையிழந்தவர்; நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர், 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு சபாக்களில் 4 இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர்; 1999-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் மிருதங்க விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருபவர்; 2018-ஆம் ஆண்டு முதல் மதுரை சங்கீத சபாவில் கெளரவ ஆலோசகர்... இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் தான் வலங்கைமான் க.தியாகராஜன். இவரிடம் பேசியதிலிருந்து:
'எனது பூர்விகம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான். ஆனால், தற்போது மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கூடல் மலைத் தெருவில் வசித்துவருகிறேன். என் பெற்றோர் மாரியம்மாள்-கலியபெருமாள். குடும்பத்தில் நான் 7-ஆவது நபர். மூத்த அக்கா பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி.
நானும் அப்படிப் பிறந்ததால், என் அப்பாவுக்கு மனதளவில் பெரிய சிரமம் இருந்தது. எனக்கு 1993-ஆம் ஆண்டு, நவம்பர் 11-ஆம் தேதியன்று விஜயலெட்சுமி என்பவரோடு திருமணம் நடந்தது. மோகன் ராஜ், கற்பகம் ஆகிய இரண்டு பிள்ளைகள். அவர்களுக்கும் திருமணமாகி தற்போது எனக்குப் பேரப்பிள்ளைகளும் உண்டு.
பள்ளியில் படிக்கும்போது, சிறிய பிரச்னையால் என்னால் படிப்பைத் தொடர முடியவில்லை. மருத்துவம் பார்ப்பதற்கு வலங்கைமானில் உள்ள மருத்துவரை சந்திப்பதற்காக சென்றோம். அங்கு ஒரு மிருதங்கத்தை என் கையில் கொடுத்தனர். அதனை நான் ஆண்டவனின் முடிவாகத்தான் நினைக்கிறேன். காரைக்கால் அக்கா வீட்டில் வசித்தபோது, ஷர்மா என்ற மகாலிங்கம் என்பவரிடம் 1977-ஆம் ஆண்டுகளில் தொடக்கக் காலப் பயிற்சிக்குச் சென்றேன்.
அவர் நம்முடைய கைகள் எப்படி மிருதங்கத்தை வாசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, 1980-களில் மேற்பயிற்சிக்காக திருச்சி ஆர்.தாயுமானவனிடம் என்னை அனுப்பி வைத்தார். பாடங்கள் ரொம்ப சுலபமாக இருந்தது.
வாசிக்கிறதும் சரி, பாடம் கற்றுக் கொள்வதும் சரி, ஒரு முறை கேட்டவுடன் புரிந்து விடும். இதனால் மிருதங்கம் கற்றுக் கொள்வதில் என்னைப் பொருத்தவரைக்கும் சிரமங்கள் எதுவுமில்லை. இதனைக் கடவுள் எனக்குக் கொடுத்த வரமாகத்தான் நினைக்கிறேன். 1991-ஆம் ஆண்டு மத்திய அரசு மூலமாக மிருதங்கத்தில் மேம்பட்ட பயிற்சிக்கான உதவித்தொகை பெற்றேன்.
1982-ஆம் ஆண்டு முதல் வானொலி இளைய பாரத நிகழ்ச்சியிலிருந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது வானொலி, இசைக்கலைஞர்களுக்கு நிறைய வாய்ப்புக் கொடுத்தது. 1984-ஆம் ஆண்டு பி-கிரேடு, 1987-இல் பி- ஹை கிரேடு , 1992-ஆம் ஆண்டு முதல் ஏ-கிரேடு கிடைத்தது. தொடர்ந்து 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை மூலமாக விரிவுரையாளர் பணிக்கான விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். வேலையும் கிடைத்தது.
நான் விரிவுரையாளராகப் பணியாற்றிய போது, முதல்வர் பணியில் இருந்தவர்கள் நிறையப்பேர் உதவி செய்துள்ளனர். அந்த வகையில் முனைவர் பக்கிரிசாமி பாரதி, ராஜீ இருவரும் மாணவர்கள் வாசித்தவுடன் அன்புடன் அரவணைத்துச் செல்வர். அதுபோல எனது தொழிலுக்கு முழு அங்கீகாரம் கொடுத்தவர் எஸ்.ஆர்.டி.ஜீ. இராஜேந்திரன். அவரும் என்னை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றவர்.
புல்லாங்குழல் இசை ரமணி, பாட்டு சுகுணா புருஷோத்தம்மன், எஸ்.ராஜேஸ்வரி அப்படி அனைவருடனும் இணைந்து நம்மை மேடையேற்றி இருக்கிறார். 2007-ஆம் ஆண்டு மதுரையில் பணியாற்றிவிட்டு, அடுத்தாண்டு சென்னை அரசு இசைக் கல்லூரியில் பணியைத் தொடங்கி, 2018-ஆம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 10ஆண்டுகள் அங்கே பணியாற்றினேன். அப்போது சென்னை நடராஜன், வீணை காயத்ரி இருந்தனர். நிறைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து கொடுத்து வாசிக்க வைத்தனர். இதெல்லாம் மறக்க முடியாத காலங்கள் என்றுகூடச் சொல்லலாம்.
கொன்னக்கோல் குறித்து: எங்கள் ஆசிரியர் சொல்வார். திருப்புகழில் இருந்து தான் அந்த ஜதிகளெல்லாம் வந்திருக்கிறது என்று அருணகிரிநாதருடைய பாடல்கள் சந்தப்பாக்களில் பாடியதால் ஒரு பட்டமே இருக்கு. இந்த அகரமுகமாகிய 'ஜககென ஜெகூ தகுதிமி தோதி திமிய ஆடிய மயிலோனே' இப்படி வரும். பாடும் போதே ரொம்ப அழகாக இருக்கும்.
என் குரு அகில இந்திய வானொலியில் 'லயகோலம்' நிகழ்ச்சியில் அருமையாகத் தொகுத்து வழங்குவார். புதுக்கோட்டை பாரம்பரியத்தில் தாளம் போட்டு எதையெல்லாம் சொல்ல முடிகிறதோ அதை மட்டுமே தான் வாசிக்க அனுமதிப்பார்கள். அதனால் என் ஆசிரியர் சொல்வதைக் கேட்டு அந்தப் பாடங்களைச் சொல்லி சொல்லி பழகியதால் கொன்னக்கோல் மீது எனக்கு பெரிய ஆசை வந்தது.
வானொலி வாய்ப்புகள்: டாப் கிரேடு மிருதங்கக் கலைஞராக வாய்ப்புக் கிடைக்கப் பெற்றேன். புதுக்கோட்டை இராஜகோபாலன் பிள்ளை, மதுரை வெங்கடகிருஷ்ணன், என் குருவோடு சேர்ந்து அகில இந்திய வானொலியில் என்னுடைய முதல் நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். அதில் நான் மிருதங்கம், குரு 'கஞ்சிரா', கோவை மோகன் ராமசாமி 'கடம்' ஆகியோர் வாசித்தோம். கிட்டத்தட்ட 6 வருடங்கள் தாள வாத்யம் வாசிக்கும் வாய்ப்பு தொடர்ந்து வந்தது.
அதன் பின், 1990-ஆம் ஆண்டிலிருந்து ஒரு வருடத்திற்கு நான்கு நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இருக்கும். வானொலி நிலைய இயக்குநர் பி.ஆர்.குமார், அயூப், வேணுகோபால் ரெட்டி போன்றோர் பணியில் இருந்த காலத்தில் மாற்றுத்திறனாளிகளைத் தாண்டி திறமைகள் இருந்ததால், நிறைய கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தனர். முனைவர் பி.சிவக்குமார் அவர்களோடு வீணைக் கச்சேரி, புல்லாங்குழல் சரவணனுடன் இணைந்து தேசிய அளவில் கச்சேரி, வயலின் டிவி ராமானுஜிய சார்லூ, நாத சங்கமம் நிகழ்ச்சி சிவக்குமார் வீணை, மாதவ் வயலின், பிரணாவ் புல்லாங்குழல்... இந்த மாதிரி நிறைய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அப்போது வாய்ப்புக் கிடைத்தது.
முதன் முதலில் என்னுடைய மாணவர்கள் என்று சொன்னால் முத்து விநாயகம், புருஷோத்தம்மன் இரண்டு பேரும் நல்ல மாணவர்கள். அதன் பின் லட்சுமணன், திருமுருகன், பரத்வாஜ், அருள் தாஸ் . அக்குழுவில் 10 பேர் இருப்பார்கள். இன்று வரை நல்ல நிலையில் உள்ளனர். இவர்கள் மூலமாக எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. சென்னைக்குச் சென்ற பிறகும் நல்ல மாணவர்கள் நிறைய கிடைத்தார்கள். அதுபோல் ஏராளமான விருதுகளும் கிடைத்தன. 1996-இல் தேசிய அளவில் மிருதங்கம் வாசிப்பதில் தங்கப்பதக்கம் பெற்றது மறக்கமுடியாது.
மதுரை பாரதி யுவ கேந்திரா சார்பில் 'பாரதி புரஸ்கர்' என்ற பட்டம் பெற்றேன். 1996- ஆம் ஆண்டு சென்னை 'ஸ்ருதி லய சேவா சங்கம்' சார்பில் சிறந்த இசைக் கலைஞருக்கான 'பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர் விருது', 1996-ஆம் ஆண்டு நேரு யுவகேந்திரா நடத்திய தேசிய அளவிலான மிருதங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றேன்.
2021- ஆம் ஆண்டில் சாய் ஆர்ட்ஸ் வழங்கிய 'வாழ்நாள் சாதனையாளர் விருது', 2020-ஆம் ஆண்டில் கிராமிய கலை வளர்ச்சி மற்றும் நல அமைப்பு சார்பில் 'லயவாத்ய குருபீடம் விருது', மதுரை வேத மந்திரம் சார்பில் 'கலா நிதி விருது', 2023-ஆம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் 'சிறந்த கலைஞர் விருது', 2024-ஆம் ஆண்டில் 'இணை இசை விழா விருது' போன்ற 150-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன்'' என்கிறார் தியாகராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.