வானுக்கு வரம்...

கம்பரை படிப்பதால் , இலக்கியப் பணி செய்வதால் எப்பேர்ப்பட்ட ஆசியும் , பேறும் கிடைக்கும் என்பதற்கான அடையாளம்தான் தெ.ஞானசுந்தரம் ஐயாவோடு எனக்குக் கிடைத்த அறிமுகம்.
வானுக்கு வரம்...
Updated on
2 min read

பத்மா மோகன்

கம்பரை படிப்பதால் , இலக்கியப் பணி செய்வதால் எப்பேர்ப்பட்ட ஆசியும் , பேறும் கிடைக்கும் என்பதற்கான அடையாளம்தான் தெ.ஞானசுந்தரம் ஐயாவோடு எனக்குக் கிடைத்த அறிமுகம். 2007- இல் நடந்த கோவை கம்பர் விழாவில்தான் முதன் முதலில் ஐயாவைச் சந்தித்தேன்.

பின்னர், 2012- இல்தான் அவருடைய நேரடி அறிமுகம் கிடைத்தது. மாணவர் கம்பர் விழாவின் தொடக்க விழாவுக்கு விருந்தினராய் அழைக்க, அவரது இல்லத்துக்கு புரவலர்கள் வை. தா. ர. மூர்த்தி, என்.ஆர். வி.யுடன் சென்றோம். 'மாணவர் கம்பர் விழா' என்று பெயர் இட்டதற்காகப் பாராட்டினார். தனது படைப்புகளில் 'கம்பன்' என்று எழுதுவதில்லை என்றார்.

'நான் 'கம்பர்' என்று மரியாதையோடு எழுதுவேன். மாணவர்களும் அவ்வாறே 'கம்பர்' என்றே அழைக்க, நாம் பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கான ஒரு நல்ல தொடக்கம்'' என்றார். எங்களைப் பாராட்டினார்.

அடுத்த சந்திப்பு இன்னும் எங்கள் பணிக்குப் பெருமிதம் சேர்த்த நிகழ்வு. கம்பரில் தோய்ந்த , கம்பரில் யாரும் எட்ட முடியாத ஆய்வுப் புலமையோடு விளங்கும் அப்பெருமகனாருக்கு நாங்கள் ஒரு விருது வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். வை. தா.ர. மூர்த்தி, என்.ஆர். வி. , கோ. மணி உள்ளிட்ட எங்கள் மாணவர் கம்பர் கழகத்தின் நிர்வாகக் குழு அங்கத்தினர்களுடன் அவர் இல்லத்துக்குச் சென்றோம்.

அங்கு எனக்குத் தனிப்பெரும் ஆசி கிடைத்தது. அவர் என்னைப் பார்த்து, 'அம்மா அவர்கள் எல்லாம் விருந்தினர்கள்; ஆனால், நீ என் மகள் போல, என் சார்பில் காபி கொடுத்து விருந்தோம்பல் செய்'' என்றார்.

அந்தக் கணம், 'கம்பர் இந்த இளையவளுக்கு எத்தகைய கிடைத்தற்கரிய பேற்றை தந்திருக்கிறார்' என்று உளம் பூரித்தேன். சிறிது நேரம் அளவளாவிய பின், 'ஐயா, இம்முறை கம்பர் பணிச் செம்மல் விருதை தங்களுக்குத் தர ஆசை. நாங்கள் கம்பர் பணியில் இளையவர்கள் என்றாலும் , நீங்கள் இந்த விருதை ஏற்க வேண்டும்'' என்று வேண்டிய பொழுது, 'நீங்கள் எனக்கு விருது கொடுப்பது தான் மிகப் பொருத்தம்'' என்று கூறி, ஒரு விளக்கம் கொடுத்து எங்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். விருதை அவ்வாண்டு விழாவில் ஏற்றுக் கொண்டு எம்மை பெருமிதப்படுத்தினார்.

எம்முடைய பணி நிமித்தமாக ஒரு உரையாடல் நிகழ்ந்த போது, மனித வளப் பயிற்சிகள், பயிற்சியாளர்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது, புகழ் வாய்ந்த டேல் கார்னேகி எழுதிய தலைமைப் பண்பு குறித்த கருத்துகளை கோடிட்டுக் காட்டினார். எப்படி ஒருவரால் அனு தினமும் வள்ளுவர் முதல் டேல் கார்னகி வரை படித்துக்கொண்டு, தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, இன்றைக்கானவராய் தன்னைத் தகவமைத்துக் கொள்ள முடிகிறது என்று எண்ணி நான் வியக்காத நாட்களே இல்லை.

வள்ளுவர், கம்பர், ஆழ்வார், நாயன்மார்கள், தொல்காப்பியர் என்ற நம் தீந்தமிழ்ப் புலவர்களின் திருவுளம் உணர்ந்து அவர்களின் வரிகளின் உண்மைப் பொருளை உணர்த்தும் பேராசான், தமிழ் இலக்கியம் சார்ந்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கான 100 சதவீதம் சரியான பதிலை தன் புலமையாலும், தேர்ந்த நினைவாற்றலாலும், தன்னிடம் உள்ள குறிப்புகள் மற்றும் நூல்களை வைத்து தரக்கூடிய தமிழறிஞர் இன்று நம்மிடையே இல்லை என்பது... தமிழுலகில் ஒரு பெரிய இட்டு நிரப்பமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்ணா நகர் பூங்கா தெருவில் இருந்த தமிழ்க்கடல், பாற்கடலில் தமிழமுதம் சேர்க்க பயணித்தது, வானுக்கு வரம், வையத்துக்கு வருத்தம்.

(செயலர், மாணவர் கம்பர் கழகம், சென்னை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com