பறக்கும் ரயில்... புதிய பாதை

சென்னையில் 'பறக்கும் ரயில்' என்பது நிலத்திலிருந்து உயரே கட்டப்பட்ட பாலத்தில் இயங்கும் புறநகர் ரயில் சேவையைக் குறிக்கும். மெட்ரோ ரயிலும் உண்டு.
பறக்கும் ரயில்... புதிய பாதை
Updated on
2 min read

சென்னையில் 'பறக்கும் ரயில்' என்பது நிலத்திலிருந்து உயரே கட்டப்பட்ட பாலத்தில் இயங்கும் புறநகர் ரயில் சேவையைக் குறிக்கும். மெட்ரோ ரயிலும் உண்டு. இது தனக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இரண்டு இணை தண்டவாளங்கள் மீது சக்கரத்தின் உதவியால் பயணிக்கும் வழக்கமான ரயில் போன்றதாகும். இதில், சக்கரத்துக்கும் பாதைக்கும் இடையே உராய்வு உண்டு. அதனால் அதிர்வுகள், ஒலி ஏற்படும்.

உண்மையில் பறப்பது என்பது நிலத்துக்கும், ஆகாயத்துக்கும் கண்ணால் காணக்கூடிய இணைப்புத் தொடர்பின்றி இயங்குவதாகும். அப்படி இயங்கும் ரயில்தான் 'மெக்லெவ் ரயில்' என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த ரயில்களை அமைக்க சில நாடுகளோடு கூட்டு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும், கனவுத் திட்டமாகவே உள்ளது.

1933- ஆம் ஆண்டு ஜெர்மன் விஞ்ஞானிகள் வால்தர் மெய்ஸ்னர், ராபர்ட் ஓக்சென்ஃபெல்ட் ஆகியோர் இணைந்து கண்டறிந்த ஓர்அற்புத செயல்பாடு 'மெய்ஸ்னர் விளைவு' என்று அழைக்கப்படுகிறது. ஒரு கடத்தும் பொருளை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்குக் கீழே குளிர்விக்கும்போது, அதன் மின்தடை முற்றிலும் சுழியாகிறது, இதைத்தான் 'மீக்கடத்தி' என்கின்றனர்.

அப்படி ஒரு மீக்கடத்தியை ஒரு காந்தப்புலத்துக்கு இடையில் வைக்கும்போது, காந்த விசைக்கோடுகள் தன்னுள் புகுந்து செல்லாதவாறு அவற்றை வெளிநோக்கி விலக்கி வைக்கும் அற்புதத்தை மீக்கடத்திகள் செய்கின்றன. இது ஒரு எதிர்காந்தச் செயலாகும். காந்தப்புல விலக்கும் தன்மையைப் பயன்படுத்தி, மீக்கடத்தி காந்தங்களைப் பொருத்தி மெக்லெவ் (மேக்னெட்டிக் லெவிடேடட்) ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சாதாரண ரயில் செல்ல இரண்டு (இணை) தண்டவாளங்கள் தேவைப்படும். ஆனால், மெக்லெவ் ரயில் செல்ல பாதையின் மத்தியில் ஒரு தண்டவாளம்தான். அதனால்தான் இதை 'மோனோ ரயில்' என்றும் அழைக்கின்றனர். 'மோனோ' என்றால் கிரேக்க மொழியில் 'ஒன்று' எனப் பொருள். இந்த ஒரு தண்டவாளம் நடைமேடையில் பயணிகளை ஏற்றும்போதும், இறக்கிவிடும்போதும் அதன் மீது ரயில் அமரப் பயன்படுகிறது.

எட்டு வடிவத்தில் உள்ள மின்காந்தச் சுற்றுகளில் மீக்கடத்திகள் பயன்பாடு காரணமாக மின்புலம், காந்தப்புலம் தூண்டப் பெற்று ஒரு மின்காந்த இயக்கத்தை, தள்ளலைத் தொடர்ந்து வழங்குவதால் மின் இழப்பு ஏதும் இன்றி, உராய்வின்றி அதிவேகத்தில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பாதையில் பறப்பது போல குறிப்பிட்ட இடை

வெளியில் 'மெய்ஸ்னர்' எனும் தத்துவப்படி மிதந்து சென்று பயணிக்கிறது. இந்த ரயில் செல்வதற்கான பாதை பிரத்யேகமாக உருவாக்க வேண்டியிருப்பதால், ஆரம்பத்தில் ஒரு முறை செய்யும் முதலீட்டுச் செலவு அதிகம். ஒருமுறை செலவு செய்துவிட்டால், இந்த ரயிலை இயக்கும் செலவு சாதாரண ரயிலை இயக்கும் செலவில் பாதிக்கும் குறைவுதான்.

விரைவுப் பயணத்துக்கு உள்நாட்டு விமானத்தை நாடுபவர்கள்கூட பயணத்துக்கு ஒரு மணி

நேரம் முன்கூட்டியே விமான நிலையம் சென்று காத்திருக்க வேண்டும். பின்பு விமானம் தரை இறங்கியவுடன் விமான நிலையத்தில் இருந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியேற குறைந்தது அரைமணி நேரம் ஆகும். அதன்படி, சுமார் 1,200 கி. மீ. தூரம் பயணிக்க சுமார் 4 மணி நேரமாகும். இதே பயணத்தை 'மெக்லெவ்' ரயிலில் மேற்கொள்ளும்போது மொத்த நேரம் பாதியாகக் குறைகிறது.

சீனாவின் புதிய சாதனை:

சீனாவின் மெக்லெவ் ரயில் 700 கி.மீ./ மணி வேகத்தை அடைந்து, புதிய உலகச் சாதனையை அண்மையில் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தேசியப் பாதுகாப்பு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சோதனையின் போது, 400 மீட்டர் மின் காந்தப்புலப் பாதையில் இந்த மிக முக்கியமான சாதனை நிகழ்த்தப்பட்டது.

சுமார் 1,000 கிலோ எடையுள்ள மெக்லெவ் ரயில், சூப்பர்கண்டக்டிங் (மீக்கடத்தி) காந்தங்களைப் பயன்படுத்தி பாதையின் மேல் மிதந்து செல்கிறது. இது சுற்றும் இயக்கத்தை நீக்கி ரயில்களை தொடாது மிக வேகமான இயக்கத்தைச் சாத்தியமாக்குகிறது. இந்தச் சோதனை, மிக வேகமான, துல்லியமான, பாதுகாப்பான பிரேக்கிங் செயல்பாடுகளையும் காட்டியது. இதனால் இதுவரை சோதிக்கப்பட்ட மிக வேகமான 'சூப்பர்கண்டக்டிங் மெக்லெவ்' ரயில் ஆகிறது. இது சீனாவின் மிக உயர்வேகத் தரைப் போக்குவரத்து குறிக்கோள்களுக்கு முக்கிய முன்னேற்றத்தை குறிக்கிறது. அடுத்தத் தலைமுறை போக்குவரத்துக் கருத்துகளையும் விண்வெளிப் பயன்பாடுகளையும் ஆதரவளிக்கக் கூடும்.

மணிக்கு 603 கி. மீ. வேகம் செல்லும் ஜப்பானின் ஜே.ஆர். சென்ட்ரல் எல் 0 சீரிஸ் மெக்லெவ் ரயிலும், மணிக்கு 600 கி. மீ. வேகம் செல்லும் சீனாவின் சி.ஆர். ஆர். சி. மெக்லெவ் ரயிலும் உலகின் அதிவேக ரயில்களாக உள்ளன.

உலகில் எரிபொருள் இருப்பு, எரிபொருள் தேவை, மக்கள்தொகைப் பெருக்கம், காற்று, சுற்றுச்சூழல் மாசுபாடு, வாகன நெரிசல் ஆகிய காரணங்களால் பொதுப்போக்குவரத்து அமைப்பைக் கட்டமைத்துத் திறம்பட கையாள வேண்டியது அவசியம். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்படுத்துதலும் ஒவ்வொரு நாட்டுக்கும் பெரிதும் சவாலாக உருவெடுத்துள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியர்களின் மெக்லெவ் ரயில் பயணக் கனவு நிறைவேறும் நாள் எப்போது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com