அருள்செல்வன்
'தமிழர்கள் அதிகமாக குடியேறி வாழும் நாடு அமெரிக்கா. தமிழர்கள் மரபாக வாழும் நாடுகளில் தொடர்ந்து தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நவீனத் தமிழ் இலக்கியத்தை முன்வைக்க ஒரு மாநாடு அமெரிக்காவில்தான் இதுவரை நடக்கவில்லை என்பதால், அங்கு நடத்துகிறோம். அத்துடன் நியூயார்க், உலகப் பண்பாட்டின் மையம். இந்த மாநாடு நவீனத் தமிழ் இலக்கியத்தை முன்னிறுத்தும்.
தமிழ்ப் பண்பாடு என்பது தொன்மையானது. ஆனால், இங்கே நவீன இலக்கியம் சென்ற நூற்றாண்டுகளாக வலுவாக உருவாக்கியுள்ளது. இன்று உலக அளவில் எழுதப்படும் படைப்புகளுக்கு நிகரான சிறந்த படைப்புகள் தொடர்ந்து வெளிவருவது தமிழ் மொழியில்தான். இதை உலகச் சூழலில் முன்வைக்க விரும்புகிறோம். இதில் பங்கெடுக்கும் படைப்பாளிகளை அமெரிக்கச் சூழலுக்கு அறிமுகம் செய்கிறோம். நாளை அவர்கள் அங்கே பதிப்பாளர்களைத் தேடுவார்கள் என்றால், இந்த அறிமுகம் தொடக்கமாக இருக்கும்' என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
எப்போதும் பெரிதினும் பெரிதாக முயற்சி செய்பவர் ஜெயமோகன். சுமார் 25 ஆயிரம் பக்கங்கள் கொண்ட 'வெண்முரசு' நாவல், தினம் ஒன்று என சுமார் 150 சிறுகதைகள், அண்மையில் 800 பக்க 'காவியம்' நாவல் உள்ளிட்ட சுமார் 150 நூல்கள் என்று எப்போதும் பெரிதாகச் செய்பவர். இலக்கியச் செயல்பாடுகளாக விஷ்ணுபுரம் சார்பில் 3 விருது விழாக்கள், தனது முழுமையறிவு அமைப்பு சார்ந்து பல்வேறு பயிற்சிகள் என்று தொடர்பவர். 'வாழும் தமிழ்' என்று அமெரிக்காவின் நியூயார்க்கில் 2026 ஏப்ரல் 3, 4 -ஆம் தேதிகளில் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு நடத்தும் முயற்சியில் முன்நிற்கிறார்.
அவருடன் ஒரு சந்திப்பு:
'முழுமை அறிவு' பயிற்சித் திட்டம் தொடங்க எது முதல் புள்ளியாக இருந்தது?
நீண்ட காலமாகவே 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' சார்ந்து நாங்கள் தத்துவம், கலை, இலக்கியம், வரலாறு ஆகிய களங்களில் வெவ்வேறு தனிப்பட்ட நிகழ்ச்சிகள் வழியாகக் கற்பித்தலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு கற்பிக்கும் தகுதியுடைய ஆசிரியர்களும் பலர் எங்களிடம் உள்ளனர்.
கற்பவர்களின் எண்ணிக்கை பெருகியபோது, முறையான ஒரு கல்வி அமைப்பாக இதை ஆக்கலாம் என்ற எண்ணம் வந்தது. ஆகவே ஓர் இடத்தை உருவாக்கி, ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வகுப்புகளை வெவ்வேறு ஆசிரியர்களைக் கொண்டு நடத்தத் தொடங்கி இருக்கிறோம்.
இந்தியத் தத்துவம், மேலைத் தத்துவம், இந்திய இசை, மேலை இசை, இந்திய ஆலயக் கலை, மேலை ஓவியக் கலை, யோகம் , தியானம், இஸ்லாமிய, கிறிஸ்தவ மெய்யியல் எனப் பல தளங்களில் இந்த வகுப்புகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இந்த அனைத்து வகுப்புகளையும் ஒரே இடத்தில் கற்கும் வாய்ப்பு இந்தியாவில் இன்று வேறு எங்கும் கிடையாது.
குறிப்பாக, மெய்யியல் தத்துவங்கள் இன்று வெவ்வேறு மதங்களுடன் கலந்து அந்த நம்பிக்கைகள், ஆசாரங்களின் ஒரு பகுதியாகவே கற்பிக்கப்படுகின்றன. அவை முழுமையாகக் கற்பிக்கப்படுவதும் இல்லை. ஓர் இடத்தில் ஒரு மதநோக்கு மட்டுமே கற்பிக்கப்படும். அவையும் பழமையான முறையிலேயே கற்பிக்கப்படுகின்றன.
ஆனால், முற்றிலும் மதம் சாராத தளத்தில் எங்களுடைய கல்வி முறைகள் அமைந்துள்ளன. அத்துடன் இளைஞர்களுக்கான வகையில் நவீனக் கல்வி முறை சார்ந்து இந்த வகுப்புகள் நிகழ்கின்றன. மதம் சார்ந்த எந்தச் சடங்கும் இங்கே கிடையாது. சாதி, மதம் சார்ந்த எந்தப் பிரிவினையும் கிடையாது. இவை அனைவருக்கும் உரியவை. குறிப்பாக இளையத் தலைமுறையினருக்கான பல்வேறு பயிற்சிகள் நடக்கின்றன.
பெரிய வெற்றி பெற்றது எது? பெறாதது எது? காரணம் புரிபட்டதா?
மிகப் பெரிய வெற்றியை அடைந்து தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வகுப்புகள் ஆலயக் கலை வகுப்புகளும், மேலைக்கலை, மேலைத் தத்துவ வகுப்புகளும்தான். யோக, தியானப் பயிற்சிகளும் சிறப்புற நிகழ்கின்றன. எண்ணிய அளவுக்கு வரவேற்பு இல்லாமல் இருப்பவை சைவ, வைணவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய வகுப்புகள். இவற்றை நம்பி ஏற்பவர்கள் அவற்றைப் பற்றி எதுவுமே தெரியாமல் வெறும் நம்பிக்கையாகவே கொண்டிருக்கிறார்கள். அவற்றைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அவர்களிடம் இல்லை.
எஞ்சியவர்கள் அந்தப் பிற மதங்கள் மேல் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். மதங்கள் முன்வைக்கும் மெய்யியலை மத நம்பிக்கையாளர்களும் அல்லாதவர்களும் தத்துவமாகவும் பண்பாட்டு அறிவாகவும் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த எண்ணம் தமிழகத்தில் இன்னும் வேரூன்றவில்லை.
தொடர் பயிற்சிகள் எவ்வாறு திட்டமிடப்படுகின்றன?
ஒரு மாதம் முன்னரே www.jeyamohan.in, www.unifiedwisdom.guru ஆகிய இணையதளங்களில் அறிவிக்கிறோம். இதில் பங்கேற்க ஆர்வம் உடையவர்கள் தொடர்பு கொண்டால் விதிமுறைகளையும் வழிமுறைகளையும் தெரிவிக்கிறோம். வார இறுதி நாள்களிலும் வெவ்வேறு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மூன்று அடிப்படைகள்தான் எங்கள் வகுப்புகளுக்கு உள்ளன. ஒன்று, இவை பண்பாடு, தத்துவம் சார்ந்த வகுப்புகள் மட்டுமே. மதம், வழிபாடு சார்ந்தவை அல்ல. இரண்டு, எல்லா வகுப்புகளிலும் அனைவரும் கலந்து கொள்ள வாய்ப்பிருக்க வேண்டும். கட்டுப்பாடுகள் இருக்கலாகாது. மூன்று, நட்பார்ந்த இனிய சூழலில் நடக்கும் வகுப்புகளாக இருக்க வேண்டும். ஒரு வகுப்பு இன்னொரு வகுப்புக்கு எந்த வகையிலும் எதிராக இருக்கக்கூடாது.
வேறு எவ்விதமான பயிற்சிகளை அமைக்க விருப்பம் உள்ளது ?
சமண மதம் சார்ந்த வகுப்புகளை நடத்த ஆசிரியர் எவரும் எங்களிடம் இல்லை. அதைப் போன்று ஹிந்துஸ்தானி இசை, இந்திய ஓவியக் கலை ரசனை பற்றி எல்லாம் வகுப்பு நடத்தும் எண்ணம் உண்டு 'வாழும்தமிழ்' முயற்சி விதையாகி எப்படி வளர்ந்தது?
அமெரிக்காவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ராலே அருகே 'பூன்' என்ற குன்றிலே தொடர்ச்சியாக தமிழ் இலக்கியச் சந்திப்புகளையும், தத்துவ வகுப்புகளையும் நடத்தி வருகிறோம். அந்த நிகழ்ச்சிகளின் ஒட்டுமொத்தமாக இந்தப் பெரிய நிகழ்ச்சியைத் திட்டமிட்டோம் . இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய 'அறம்' கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'ஸ்டோரீஸ் ஆஃப் த ட்ரூ' வெளிவந்தது. அந்த நூலுக்கு அமெரிக்கன் லிட்ரரி ட்ரான்ஸ்லேட்டர்ஸ் அசோசியேஷன் விருது பரிந்துரை கிடைத்தது.
அந்த விருதுக்குச் சென்றிருந்த என்னுடைய மொழிபெயர்ப்பாளர் பிரியம்வதா ராம்குமார், அங்கு உள்ளவர்களுக்கு தமிழ் என்ற மொழி, பண்பாடு பற்றி எதுவுமே தெரியாது என்பதையும் அது அந்த நூலை அவர்கள் படிப்பதற்குத் தடையாக இருப்பதையும் தெரிந்து கொண்டார்.
அமெரிக்காவில் ஏறத்தாழ 10 லட்சம் தமிழர்கள் இருந்தபோதிலும், தமிழ் என்ற ஒரு மொழியோ, பண்பாடோ அங்குள்ளவர்களுக்குக் கொண்டு செல்லப்பட முடியாமல் போய்விட்டது என்பது ஒரு பெரிய தோல்வி என்று தோன்றியது. ஆகவே, அமெரிக்கப் பண்பாட்டை நோக்கி பேசுவதற்காகவும், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ் அறியாத குழந்தைகளை நோக்கிப் பேசுவதற்காகவும் ஒரு மாநாடு நடத்த வேண்டிய உறுதியை அடைந்தோம். அதுவே இவ்வாறு கைகூடியுள்ளது.
நவீனத் தமிழை உலகம் முன் நிறுத்தும் மாநாடு, முழுக்க ஆங்கிலத்திலா என்கிற விமர்சனம் பற்றி?
நம்முள் பேசுவதற்கே தமிழ் மொழி உதவும். அவ்வாறு உரையாட ஆண்டுக்கு எட்டு வெவ்வேறு பெரிய நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். இந்த நிகழ்வு நம்மைப் பற்றி அந்நியர்களிடம் சொல்வதற்காக நிகழ்வது. இது ஆங்கிலத்திலேயே நிகழ முடியும் என்பதை சாமானிய அறிவுடையோர் புரிந்துகொள்ள முடியும்
அமெரிக்காவில் நடைபெறும் மாநாட்டுக்கு அரசின் உதவியை நாடாதது ஏன்?
இது பெரும் செலவு கொண்ட ஒரு நிகழ்வுதான். ஆனால், அரசு உதவி பெற்று இதைச் செய்வதென்றால், அரசின் நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட வேண்டும். பொதுவாக, அரசுகள் இந்த வகையான நிதியுதவிகளைச் செய்யும்போது, அதில் கொள்கை ரீதியாகவும் வேறு வகையிலும் தலையிடக் கூடாது.
ஆனால், இந்தியாவில் அவ்வாறு நிகழ்வதில்லை. இங்கே எல்லா நிகழ்ச்சியையுமே அரசியல் தலைவர்களையே முன்நிறுத்தி நடத்த வேண்டும் என்பதும், ஆளும் அரசு கட்சியின் கொள்கைகளையும் அவர்களைச் சார்ந்திருக்கும் எழுத்தாளர்களையும் மட்டுமே முன்வைக்க வேண்டும் என்பதும் ஒரு வழக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் இது ஓர் அரசு விழாவாகிவிடும். எங்களுடைய தனித்தன்மை, எங்களுடைய இலக்கிய அளவு கோல்கள் மீதான நம்பிக்கை ஆகியவை சந்தேகத்துக்குள்ளாகிவிடும்.
தமிழ் நவீன இலக்கியம் என்பது சிற்றிதழ் சூழலில் தேர்ந்த இலக்கிய வாசகர்களுக்குள் மட்டுமே நிகழ்ந்து வந்த ஒன்று. இந்த இலக்கிய மாநாட்டை அந்த நூறாண்டு தொன்மை கொண்ட தமிழின் தீவிர இலக்கியச் சூழலின் ஒரு வெளிப்பாடாகவே நிகழ்த்துகிறோம்.
நூறாண்டுகளாகவே எந்த வகையான அரசு அல்லது கல்வி அமைப்புகளின் ஆதரவோ அவற்றின் செல்வாக்கோ இல்லாமல் தான் இது நடந்து வந்துள்ளது. அவ்வாறு அதே தனித்தன்மையுடன் மட்டுமே இது முன்னகரவேண்டும். நவீன இலக்கியம் தன் தனித்தன்மையை இழந்துவிடலாகாது.
இந்த முயற்சியில் பெரிதும் சவாலாக இருந்தது எது? நிதி திரட்டலா? விசா அனுமதிகளா? அரங்கு ஏற்பாடா?
அமெரிக்காவில் எங்களுக்குத் தீவிரமான வாசகர் வட்டம் உள்ளது. பெரும் சவாலாக நிதி இருந்தாலும்கூட நண்பர்கள் பலர் உதவியால் அது திரண்டு வந்தது. எங்களுக்கு இதுவரைக்கும் பெருநிறுவன உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை.
தமிழகப் பெரு நிறுவனங்கள் எவையும் இதுபோன்று மாற்று முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதில்லை. அவர்கள் திரைப்பட நிகழ்வுகளுக்கு மட்டுமே ஆதரவை அளிக்கின்றனர். இலக்கியம் அவர்களுக்குத் தெரியாது.
கேரள நிறுவனம் உதவி செய்யத் தயாராக இருந்தும், அதைப் பெறுவது சரியல்ல என்று தவிர்த்துவிட்டோம். விசா விதிகள் அண்மையில் மிகவும் கடினமாக்கப்பட்டிருப்பதுதான் எங்களுக்குப் பெரிய சவாலாக இருந்தது. தற்போது ஓரளவு நிறைவு அளிக்கும் அளவில் விசாக்கள் கிடைத்துள்ளன.
பங்கேற்பாளர் வருகை எந்த வகையில் நம்பிக்கை அளிக்கிறது?
பங்கேற்பாளர்கள் வருகை ஏறத்தாழ முன்பதிவு முடிந்து விட்ட நிலையில்தான் இருக்கிறது. விஷ்ணுபுரம் அமெரிக்க அமைப்பின் பங்கேற்பாளர்களே பாதிக்கு மேல் நிகழ்வைத் திட்டமிடும்போதே முன்பதிவு செய்துவிட்டார்கள். குறைவான இடங்களே உள்ளன. அவை மிக வேகமாக நிரம்பிக் கொண்டிருக்கின்றன. வெவ்வேறு களங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், மாணவர்கள் எனப் பலரைப் பங்கெடுக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தால், பங்கேற்பாளர்களைக் குறைவாகத்தான் அனுமதிக்கிறோம்.
'ஓர் ஆங்கில எழுத்தாளரின் புத்தகமானது அவரது 30 வயதிலேயே 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றான 'ஐஸ்லாண்டிக்' மொழியை உலகத்தில் மூன்று லட்சம் பேர்தான் பேசுகின்றனர். ஆனால், உலக மொழிகளில் 15-ஆவது இடம் பிடிக்கும் தமிழில் அதற்கான மொழிபெயர்ப்பு வரவில்லை' என்று அ.முத்துலிங்கம் வருத்தப்பட்டிருந்தார்.
மொழிபெயர்ப்புகள் சார்ந்து உங்களுக்கு எந்த அளவுக்கு ஆதங்கம் உள்ளது?
அந்த ஆதங்கம் உண்மையானது. அதற்கும் காரணங்கள் பல உண்டு. கொரியா, துருக்கி போன்ற பல நாடுகளின் படைப்புகள் அவர்களின் அரசாங்கம், கலாசார அமைப்புகளால் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் அந்தப் பண்பாடு உலக அளவில் சென்று சேருகிறது. இதை ஏன் செய்கிறார்கள் என்றால், அந்த நாடு உலகம் முழுக்க அறியப்படுகிறது. அதனால் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருளியல் லாபங்கள் உண்டு. வணிகத் திரைப்படங்களோ, அரசியல் நிகழ்வுகளோ அவ்வாறு வெளியே சென்று சேர்வதில்லை. தீவிர இலக்கியம், தீவிர திரைப்படம் மட்டுமே அப்படி உலகம் முழுக்கச் சென்று பரவலாகப் பாதிப்பை உருவாக்கும்.
இந்தியாவிலேயே அதைச் செய்வதில் இரண்டு தடைகள் நமக்கு உள்ளன. இந்திய நிர்வாக முறை என்பது பெரும்பாலும் அரசு அலுவலர்களைச் சார்ந்தது. இந்திய விளையாட்டு வீரர்களைக் கொட்டகையில் தங்கவைக்கப்பட, உடன் செல்லும் அரசு அலுவலர்களோ நட்சத்திர விடுதிகளில் தங்குகின்றனர். இரண்டாவதாக அரசுகள் இலக்கிய, கலை தளங்களில் தரத்தை முன்னிறுத்தாமல் தங்களுக்கு சார்பானவர்களையே முன்னிறுத்தும் போக்கைக் கொண்டுள்ளன. அவை வெளிநாடுகளில் எந்த மதிப்பையும் பெறுவதும் இல்லை.
பெரும்பாலும் இங்கிருந்து செல்பவை இந்திய - ஆங்கில படைப்புகள்தான். அவை மிகச் சரியாக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவன அல்ல. அவை மேலைநாட்டு வாசக ரசனைக்காக இந்தியாவில் இருந்து எழுதப்படுபவை.
மிக அண்மைக்காலமாகத்தான் என் படைப்புகள் அமெரிக்காவிலே வருகின்றன. 'ஸ்டோரீஸ் ஆஃப் த ட்ரூ' முன்னரே வெளிவந்துள்ளது. இந்த ஆண்டில் 'தி அபிஸ்' (ஏழாம் உலகம்), 'ஒயிட் எலிபன்ட்' (வெள்ளை யானை) ஆகிய இரண்டு நாவல்கள் வெளிவரவுள்ளன.
தொடர்ச்சியாகத் தமிழில் இருந்து ஓர் ஆசிரியரின் ஆக்கங்கள் அமெரிக்காவில் வெளியாவது இப்போதுதான். பிரெஞ்சு, இத்தாலிய மொழிகளிலும் வெளிவரவுள்ளன. இது ஒரு தொடக்கம். எனக்குக் கிடைக்கும் கவனத்தை நவீனத் தமிழ் இலக்கியத்தை நோக்கித் திருப்புவதே என் முயற்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.