

தமிழ்த் திரையுலகின் காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கும் நடிகை புஷ்பவல்லிக்கும் 1954, அக்டோபர் 10 -இல் பானு ரேகா என்ற ரேகா பிறந்தார். பாலிவுட்டின் பளிங்குச் சிலையாகத் தோன்றி 40 ஆண்டுகளில் 180 படங்களுக்கு மேல் நடித்தார். ஹிந்தியில் சிறுமியாக நடித்தது முதல் - பெண்களுக்கு முக்கியம் தரும் பல படங்களில் நடித்தார்.
பல தரப்பட்ட விமர்சனங்களையும் மீறி 'உம்ராஜான்', 'காமசூத்ரா', 'யாத்திரா' போன்ற படங்களில் தேவதாசியாகவும் நடித்து ஃபிலிம் பேர் விருதும் , 2010-இல் பத்ம விருதும் பெற்றார். பல மொழிகள் தெரிந்திருந்தாலும் வீட்டில் தமிழிலேயே பேசினார்.
1990-இல் முகேஷ் அகர்வால் என்ற தொழில் அதிபரை மணந்து, துரதிர்ஷட வசமாக 1991-இல் அவர் மரணமடைந்ததால் தனி மரமானார்.
நான் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்த 'பிளாக் மெயில்' என்ற கதையில் முழுக்க ஒரே நடிகைதான் இருப்பார். அந்தக் கதையை அமிதாப், ரஜினி, கமல் மூவரும் சேர்ந்து நடித்த 'கிரப்தார்' என்ற படத்தை எடுத்தவரும், 'இரு துருவம்', 'பொண்ணு மாப்ளே' போன்ற படங்களின் இயக்குநருமான எஸ். ராமநாதன் ஹிந்தியில் எடுக்க முயற்சித்தபோது மாநிலங்களவையில் இருந்த ரேகா போனிலே என் கதையைக் கேட்டு அன்று பிரபலமாக இருந்த வித்யாபாலனிடம் சொல்லி, அவர் நடிக்கச் சம்மதம் வாங்கித் தந்தார். ஆனால், எஸ். ராமநாதனோ யாரும் எதிர்பாராத நிலையில் மரணமடைந்தார்.
நான் எழுதிய சில படங்கள் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று ரீமேக் செய்யப்பட்டிருந்தாலும், என்னை நேரடியாக ஹிந்திக்கு கதை கேட்டு 'ஹத்கடி' என்ற பெயரில் ரஜனியை 'அந்தாகானுன்' என்ற படத்தில் அறிமுகம் செய்த டி. ராமாராவ் நான் நினைக்காத சம்பளத்தை லட்சங்களில் கொடுத்து அறிமுகம் செய்தார். இந்தக் கதையைக் கேட்க அன்றைய பிரபலமான ஹீரோ கோவிந்தா எம்.பி. சென்னைக்கு வந்து என் கால்களைத் தொட்டுக் கும்பிட்டுக் கதையைக் கேட்ட பின், நான் எழுதிய கதையில் இரட்டை வேடம் கோவிந்தாவுக்கு. அதில் ஒரு வேடம் ரௌடி. அந்த கேரக்டர் ரஜினியின் விசிறியாக நடிக்க ஆசை என்று கூறினார்.
அவர் விருப்பப்படியே மா குரு ரஜினி என்ற வசனத்துடனும் அவர் போட்டிருந்த பனியனில் ரஜினி படமும் இருப்பதாக எழுதினேன். இந்தப் படத்தைப் பார்க்க வந்த எஸ். பி. முத்துராமன் டைட்டிலில் 'கதை, திரைக்கதை காரைக்குடி நாராயணன்' என்று வந்ததும், பின்னாலிருந்து வந்து எனக்குக் கை கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
என் 'ஹத்கடி' முடிந்து வெளியான நிலையில், தமிழில் வந்த 'நாட்டாமை'யை ஹிந்தியில் எடுத்த போது, அதில் அனில்கபூர், ரேகா, ரஜினி நடித்தார்கள். 'புலந்தி' என்ற பெயரில் எடுக்கப்பட்ட போது, நான் திரைக்கதைக்குச் சில மாற்றங்களை ராமாராவிடம் சொன்ன போது, ரேகா அதைப் பாராட்டினார்.
இப்போது என் 'நாணயம்' கதையை ரேகாவிடம் சொல்ல முடிவு செய்து, அவர் தங்கியிருந்த தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்கு நானும் டி. ராமாராவும் போனோம். ரேகா எங்கள் இருவரையும் வரவேற்று, அவர் தரையில் அமர்ந்து கதை கேட்டார். அந்த அறையில் எல்லா வசதிகளும் இருந்த நிலையில், 'ஏன் தரையில் உட்காருகிறீர்கள்?' என்று கேட்டேன்.
'ஐயம் கம்ஃபர்டபுள். முதல் முறையாக உங்களிடம் கதை கேட்கிறேன். ஆனால், நீங்கள் எழுதிய 'தீர்க்கசுமங்கலி'யில் கே.ஆர். விஜயாம்மா நடித்த அதே கேரக்டரில் நான்தான் பண்ணினேன். உங்கள் டி.ராமாராவ்தான் டைரக்ட் செய்தார். அந்தப் படத்தை நான் பல தடவை பார்த்துப் பார்த்து நடித்தேன். இதில் நடிக்கும் போதெல்லாம் கே.ஆர். விஜயாவுடன் தொடர்பு கொண்டு பேசுவேன்' என்று கூறிவிட்டு என் கதையைக் கேட்டார்.
'நாணயம்' கதையில் என்னோடு நடிக்க நானா படேகரிடம் நானே பேசுகிறேன் என்று உற்சாகமாகச் சொன்னார். ஆனால், அந்தக் கதையை ஏவி.எம் வாங்கி முதல் தடவையாக என் அபிமான நடிகை விஜயாம்மாவையும், என்னை அறிமுகம் செய்த ஏ.சி. திருலோகசந்தரை சீரியலை எடுக்க வைத்து வெற்றி பெற்று அந்த ஆண்டின் சிறந்த சீரியல் எழுத்தாளர் என்று மயிலாப்பூர் அகாதெமியின் விருதைப் பெற்றேன்.
அவரை நான் சந்தித்தபோது, ' நான் உதவி இயக்குநராக வாழ்க்கையைத் தொடங்கிய போது என்னிடம் அன்பு பாராட்டியவர் தங்கள் தந்தை ஜெமினி கணேசன்' என்று கூறினேன். 'அப்படியா' என்ற ஒரு வார்த்தையோ, ஆச்சரியமான ஒரு பார்வையோ இல்லாமலிருந்ததை உணர்ந்தேன். அவர், ஜெமினிகணேசனின் மரணத்துக்குக் கூட வரவில்லை என்று தெரிந்து கொண்டேன்.
தென்றல் வீசும் பூங்காவில் புயலும் அடிக்கத்தானே செய்கிறது. 1981-இல் 'மீண்டும் கோகிலாவில்' கமலுடன் நடித்து பாதியிலேயே அவர் விலகாமலிருந்தால் இந்நேரம் தமிழ்ப்படங்களில் எத்தனையோ வெற்றிப் படங்களின் அடையாளமாகி இருப்பார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.