வானொலிக்கு இன்றும் மவுசு!

'தொலைக்காட்சிப் பெட்டிகள் 1976- இல் வந்தது முதலே வானொலியின் எதிர்காலம் தொடர்பான கேள்வி எழுந்தது.
வானொலிக்கு இன்றும் மவுசு!
Updated on
2 min read

'தொலைக்காட்சிப் பெட்டிகள் 1976- இல் வந்தது முதலே வானொலியின் எதிர்காலம் தொடர்பான கேள்வி எழுந்தது. தற்போது நாட்டில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் வானொலி நிலையங்கள் உள்ளன. வானொலிக்கான ரசிகர்கள் இன்றும் இருக்கின்றனர். வானொலி தன்னைத் தானே மாற்றிக் கொண்டு, காட்சி வானொலியாக மாறவேண்டும்.

அதற்கு 4ஜி, 5ஜி இணையச் சேவைகள் துணை புரியவேண்டும். இளைஞர்கள் மனசாட்சிப்படி, தான் சார்ந்த துறைக்கு நன்மை செய்ய வேண்டும் என நினைத்தால், அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும். எந்தத் துறையில் செயல்பட்டாலும், அதில் ஆர்வத்துடன் செயல்பட்டால் பலன் நிச்சயம் கிடைக்கும்' என்கிறார் 'சமுதாய வானொலியின் தந்தை' எனப் போற்றப்படும் ஆர். ஸ்ரீதர்.

சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த எழுபத்தெட்டு வயதான ஸ்ரீதர், கடந்த எட்டாண்டுகளாக தனது மனைவி மீனாட்சியுடன் கோவை பேரூர் அருகே பச்சாபாளையத்தில் வசித்து வருகிறார். அவரிடம் பேசியபோது:

'சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றேன். பார்வையில்லாத மாற்றுத் திறனாளியான எனது மாமா, கதைகளைச் சொல்லச் சொல்ல நான் எழுதிக் கொடுப்பேன். அவருக்கு பல பரிசுகள் கிடைத்ததால், எனக்கும் எழுத்தின் மீது ஆர்வம் இருந்தது. பத்திரிகைகளில் அறிவியல் கட்டுரைகளை எழுதினேன்.

தேர்வு எழுதி, 1976- இல் அகில இந்திய வானொலியில் அறிவியல் நிருபராகப் பணியில் இணைந்தேன். மக்களை நேரடியாகச் சந்தித்து நிகழ்ச்சிகளை நடத்தினேன். இதற்கு அகில இந்திய வானொலியின் உயர் அலுவலர் தி.ஜானகிராமன் உறுதுணையாக இருந்தார். அவசர நிலைப் பிரகடனம் அமலில் இருந்தபோது, நான் வானொலியில் சேர்ந்தேன். அப்போது நான் செய்த எந்த நிகழ்ச்சிகளுக்கும் எந்தவித இடையூறும் இல்லை.

சென்னை, கோவை, தஞ்சை உள்ளிட்ட 6 இடங்களில் அறிவியல் பேரரங்குகளைத் தொடங்கி, மக்கள் முன்னிலையில் அறிஞர்களைப் பேச வைத்தோம். அறிவியல் நாடகங்கள் நடத்தப்பட்டன. வானொலி அறிவியல் கழகங்களை 1982- ஆம் ஆண்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தொடங்கி வைத்தார்.

என் அறிவியல் ஆர்வத்தைக் கண்டு மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு என்னை அழைக்க, அங்கு ஓராண்டு பணிபுரிந்தேன். பின்னர், மீண்டும் அகில இந்திய வானொலியின் இயக்குநரானேன்.

1991-ஆம் ஆண்டு முதல் 1993 வரை ' மானுடம் வென்றது' என்ற பெயரில் உலகிலேயே நீண்ட குழந்தைகளுக்கான அறிவியல் தொடர் வெளியானது. இந்தத் தொடர் 18 மொழிகளில் 140 எபிசோடுகளாக 200 வானொலியில் ஒலிபரப்பானது. இந்திரா காந்தி தேசியப் பல்கலைக்கழகத்தில் 'ஞானவாணி' என்ற பெயரில் 5 வானொலிகளைத் தொடங்கினோம்.

விரைவில் ஏ.ஐ.வானொலி:

2012-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றாலும் கூட, வானொலி ஆர்வம் எனக்குக் குறையவில்லை. கரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருந்த முதியவர்களின் பாடல்கள், கதைகளைப் பதிவு செய்து தரும்படி கேட்டு, 'அனுபவ்' என்ற இணைய வானொலியை உருவாக்கினேன். தற்போது, 'அனுபவ் 3.0' என்ற பெயரில் முதியவர்களுக்கான ஏ.ஐ. வானொலி தொடங்கும் இலக்கில் பயணித்து வருகிறேன். தாத்தா, பாட்டி, பேரக் குழந்தைகளுக்கு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக ஏ.ஐ. வானொலியைத் தொடங்கவும் உள்ளேன்.

சமுதாய வானொலி:

2004- ஆம் ஆண்டு பிப்ரவரி 1-இல் அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் முதல் 'சமுதாய வளாக வானொலி' தொடங்கப்பட்டது. அந்த மாடலில் இன்றைக்கு நாட்டில் 550 வானொலிகள் உள்ளன. இதற்காகவே 'சமுதாய வானொலியின் தந்தை' என்ற சாதனைக்காகவே பத்மஸ்ரீ வழங்கப்பட்டுள்ளது.

ஒலிபரப்புத் துறையில் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பு, பாடல், நடனம் நாடகத்துக்கு விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஒலிபரப்புத் துறை மேலாண்மைக்கு இதுவே முதல் விருது. 55 ஆண்டுகளாக இடைவிடாது பணியாற்றி ஓய்வு பெற்றும் ஊடகத் துறையுடன் தொடர்பு வைத்துள்ளதால், எழுபத்தெட்டு வயதிலும் எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது' என்கிறார் ஆர்.ஸ்ரீதர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com