கோலிவுட் ஸ்டூடியோ!

'தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். அதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'லீடர்' எனும் படத்தில் நடித்துள்ளார்.
கோலிவுட் ஸ்டூடியோ!
Updated on
3 min read

லீடர் இயக்குநர் கொடுத்த உறுதி!

'தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். அதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'லீடர்' எனும் படத்தில் நடித்துள்ளார். அவரே தயாரித்துள்ள இப்

படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் தூத்துக்குடியை மையமாக வைத்து ஒரு உண்மைச் சம்பவ அடிப்படையில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது. சமீபத்தில் டைட்டில் லுக்கை படக்குழு வெளியிட்டது. இதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றன. இந்த நிலையில் டைட்டில் லூக் விடியோவுக்குக் கிடைத்த வரவேற்புக்கு இயக்குநர் துரை செந்தில்குமார் நன்றி தெரித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், 'லீடர் படத்தின் டைட்டில் விடியோவுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு, ஆச்சரியமாகவும் உண்மையிலேயே மனதை நெகிழவும் செய்தது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இது முழு குழுவுக்கும் நிறைய அர்த்தத்தைக் கொடுக்கிறது. லீடர் படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் என்ற முறையில், வலுவான ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகளுடன் இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.

லெஜண்ட் சரவணனுக்கு ஒரு புதிய, துணிச்சலான அவதாரத்தை வடிவமைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது இயக்கத்தின் மூலம் அவரது திறமையின் புதிய பக்கங்களை வெளிப்படுத்துகிறேன். ரசிகர்களின் எதிர்பார்ப்பு எனக்கு மிகவும் முக்கியம். அதை இப்படம் பூர்த்தி செய்யும் என உறுதியளிக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை - விஜய் ஆண்டனி !

விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் 'பூக்கி'. அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களைக் கவரும் படைப்பாக 'பூக்கி' காதலர் தினக் கொண்டாட்டமாக திரைக்கு வந்துள்ளது. பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகை ஊடகத்தினரைச் சந்தித்து படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பேசியதாவது....

'ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்குப் பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை.

உங்கள் உழைப்பு திரையில் தெளிவாகத் தெரிகிறது. மீடியா, ரசிகர்கள் எல்லாரும் கண்டிப்பாகப் பாராட்டுவார்கள். மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வரவேண்டும். அந்த வகையில் புதிய பரதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் பெரிய இடத்துக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது.

அஜய் மிக நேர்மையான, உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்துக்கு வருவார். தனுஷா மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு எல்லாமே சிறப்பாக இருந்தது. இந்தப் படம் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளைக் கொண்டு வரும்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் குழு, எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்புக் குழு அனைவருக்கும் என் நன்றி. உங்கள் ஆதரவோடு இது பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன். இப்படத்தின் உரிமையை வாங்கிய ஜீ 5 நிறுவனத்துக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி' என்றார் விஜய் ஆண்டனி.

மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் - சூர்யா நெகிழ்ச்சி!

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா நடிப்பில் 2002 -ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மெளனம் பேசியதே'. காதலர் தினத்தையொட்டி இப்படம் தற்போது ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் 'மெளனம் பேசியதே' படம் குறித்து சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் பேசியிருக்கும் சூர்யா, 'நல்லாதானடா இருந்தீங்க... திடீர்னு எங்கிருந்துடா வருது இந்தக் காதல்?' , 'காதல் கண்ணிலிருந்து வரக்கூடாது... இதயத்திலிருந்து வரணும்', 'தனி மரம் தோப்பாகாது' என இந்த மாதிரி பல டயலாக்ஸை வாட்சப் ஸ்டேடஸ், இன்ஸ்டாகிராம் ரிலீஸ்னு எல்லாத்துலயும் பார்த்திட்டு வரேன்.

20 வருஷத்துக்கு முன்னாடி ரிலீஸ் ஆன 'மெளனம் பேசியதே' படம் இப்ப வரைக்கும் பலருக்கும் பிடிச்ச படமா இருக்குது. இயக்குநர் அமீரின் முதல் படம். என்னுடைய சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

த்ரிஷா, லைலா, நேஹா என 3 ஹீரோயின்ஸ் நடிச்சிருந்தாலும் யாரையும் கட்டிப்பிடிக்காமலேயே உருவான காதல் படம். ஒரு தலைமுறையே இந்தப் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பு இல்ல. 23 வருஷங்களுக்குப் பிறகு அமீர் இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் பண்றாரு. நானும் காத்திருக்கேன். சீக்கிரம் தியேட்டரில் சந்திப்போம்' என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com