'ஓட்டத்துக்கு உடல் வலிமையைப் போலவே மன வலிமையும் முக்கியம். வாழ்க்கையின் சிரமங்களைப் பற்றி எப்போதும் எனக்கு நேர்மறையான அணுகுமுறை உண்டு. அதுவே எனக்கு மிகவும் சக்தி வாய்ந்த சொத்து. இது வாழ்க்கையிலோ அல்லது விளையாட்டிலோ எப்போதும் என்னை ஒருபோதும் கைவிடாது. பலவீனங்கள் இருந்தபோதிலும், என்னை மேம்படுத்திக் கொள்வேன்' என்கிறார் முப்பத்தெட்டு வயதான அதிவேக ஓட்ட வீராங்கனை ஸூஃபியா ஸூஃபி.
பனி மூடி, ஆக்சிஜன் குறைவாக இருக்கும் சவாலான 'மணாலி - லே' சாலை தரைமட்டத்திலிருந்து 8,500 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. 480 கி.மீ. தொலைவிலான ஐந்து இமயமலைப் பாதைகளை 98 மணி நேரம் 27 நிமிடங்களில் ஓடி கடந்துள்ளார் ஸூஃபியா ஸூஃபி. இவர் தனது 2021-ஆம் ஆண்டின் சாதனையை முறியடித்து, புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனை 2023-இல் நடைபெற்றிருந்தாலும், கின்னஸ் சான்றிதழ் அண்மையில்தான் கிடைக்கப் பெற்றது.
நான்கு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்திய அவர் கூறியது:
'ராஜஸ்தானின் அஜ்மீரில் பிறந்து, வளர்ந்தேன். எனது 16 வயதில் தனது தந்தையை இழந்தேன். தந்தை இறந்தவுடன் என்னையும் எனது மூன்று உடன்பிறப்புகளையும் வளர்க்க தாய் மிகவும் கஷ்டப்பட்டார்.
கல்லூரிப் படிப்பை முடித்து, பைலட் பயிற்சியைப் பெற்றேன். விமானப் போக்குவரத்துத் துறையில் பத்தாண்டுகள் பணியாற்றினேன். நேரம் காலம் இல்லாமல் வேலை செய்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடல்நலம், உடல் தகுதியை மேம்படுத்துவதற்கு ஓட்டத்தை நான் தேர்ந்தெடுத்தேன்.
தொடக்கத்தில் பூங்காவில் ஓட ஆரம்பித்தேன். மராத்தான்களில் பங்கேற்றேன். ஓராண்டு கழித்து தில்லியிலிருந்து ஜெய்ப்பூர் வரை ஓடி, மீண்டும் தில்லிக்குத் திரும்புவது என 700 கி.மீ. ஓடினேன். கத்தாரின் வடக்கு முதல் தெற்கு வரை 200 கி.மீ. தொலைவை 30 மணி நேரம் 31 நிமிடங்களில் கடந்தேன்.
2018-இல் ஓராண்டில் அதிக மாரத்தான் போட்டிகளில் ஓடிய பெண், மணாலி-லே வரையிலான 480 கி.மீ. தொலைவை 6 நாள்கள், 12 மணி நேரம், 6 நிமிடங்களில் கடந்தது, 2019-இல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 4,000 கி.மீ. தொலைவை 87 நாள்கள், 2 மணி நேரம், 17 நிமிடங்களில் கடந்தது, 2021-இல் தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய மாநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளின் வலையமைப்பான 6,002 கி.மீ. தொலைவை 110 நாள்கள், 23 மணி நேரம், 24 நிமிடங்களில் கடந்தது என்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன்.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை டிரான்ஸ்ரன் சவால் ஓட்டம்தான் என்னை உடற்பயிற்சி அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட முகமாக மாற்றியது. இதுபோன்ற அல்ட்ரா-டிஸ்டன்ஸ் ஓட்டத்தில் ஈடுபடும் பெண்கள் அதிகம் இல்லை. எனது வாழ்க்கைத் துணைவரும் ஆட்டக்காரர் என்பதால், அவர் எனது முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்.
கரோனா காலத்தில் எனது ஓட்டம் தடைபட்டது. 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 150 நாள்களில் இந்திய தங்க நாற்கர சாலையில் 6, 000 கி.மீ ஓடுவது சவாலாக அமைந்தது. பிப்ரவரியில் தில்லியில் இருந்து ஓட்டத்தைத் தொடங்கி ஆந்திரம் வரை வந்துவிட்டேன். மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, 2,200 கி.மீ. ஓட்டத்தை முடித்திருந்தேன். கரோனா கட்டுப்பாடுகளால், ஓட்டத்தை நிறுத்தினேன். மகாராஷ்டிராவை அடைந்து, நண்பரின் கிராமத்தில் மூன்று மாதங்கள் கழித்தேன். அந்த ஓட்டத்தால் எனக்கு பெருத்த பண நஷ்டம். நான் உடைந்து போனேன்.
2020 டிசம்பரில் தில்லியில் இருந்து ஓட்டத்தை மீண்டும் புதிதாகத் தொடங்கி, புதிய உலக சாதனையை 82 நாள்களில் உருவாக்கினேன்.
எனக்கு வந்த விருதுகளும் பாராட்டுகளும் அநேகம். சரியாகச் சாப்பிடுவது, உடலில் நீரேற்றத்தைத் தேவையான அளவு வைத்துக் கொள்வது, தொடர் உடற்பயிற்சி போன்றவை அவசியமானவை' என்கிறார் ஸூஃபியா ஸூஃபி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.