நாவல்கள் பிறந்த விதம்...

தமிழில் 12 நாவல்கள், ஏராளமான சிறுகதைகள், திரைத்துறையைச் சார்ந்து கட்டுரைத் தொகுதிகளை மூத்த எழுத்தாளர் விட்டல் ராவ் எழுதி வெளியிட்டுள்ளார்.
நாவல்கள் பிறந்த விதம்...
Updated on
4 min read

அருள்செல்வன்

தமிழில் 12 நாவல்கள், ஏராளமான சிறுகதைகள், திரைத்துறையைச் சார்ந்து கட்டுரைத் தொகுதிகளை மூத்த எழுத்தாளர் விட்டல் ராவ் எழுதி வெளியிட்டுள்ளார். தான் எழுதிய நாவல்களில் தனக்குப் பிடித்தவை குறித்து அவர் கூறியது:

போக்கிடம்

'கேத்துரெட்டிப்பட்டி எனும் குக்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 1961-ஆம் ஆண்டில் நான் வேலை பார்த்தேன். புட்டிரெட்டிபட்டி என்கிற ரயில்வே நிலையத்திலிருந்து 2 கி.மீ. நடந்து செல்லவேண்டும். பாதை மிகவும் மோசம். மாலை 6 மணியாகிவிட்டால் இருட்டிவிடும். சாரைப்பாம்பு , நல்ல பாம்பு, தண்ணீர்ப் பாம்பு உள்ளிட்டவை சாலையில் நடமாட ஆரம்பித்துவிடும்.

ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர்தான். ஆசிரியர் பயிற்சி பெறாதவர்களைப் போடுவார்கள். அது நிரந்தரப் பணியில்லை. ஆறு மாதங்கள், ஓராண்டு என்று வேலை பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட வேண்டும். எனக்கு முன்பிருந்த ஆசிரியை பிரசவ விடுப்பில் சென்றிருந்ததால், அந்த இடத்துக்கு நான் சென்றிருந்தேன். 'ஜில்லா போர்டு' நிர்வாகத்தில் இருந்த அந்தப் பள்ளியில் பணிபுரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து அனுப்பினார்கள்.

எனக்கு ஒரு குடிசை வீடு கொடுத்திருந்தார்கள். நான் தங்கிக் கொள்வேன். மண்ணெண்ணெய் அடுப்புடன் ஒரு வாரத்துக்கான அரிசி, பருப்பு, சமையல் பொருள்கள் எல்லாம் எடுத்துச் செல்வேன். நானே சமைத்துச் சாப்பிடுவேன்.

பள்ளி இல்லாத நேரங்களில் ஊர் நிகழ்வுகளைக் கவனிப்பேன். அப்போது பள்ளிக்கு ஆறு மாதத்துக்கு ஒருமுறை வரும் மானியத் தொகையை வாங்குவதற்கு நான் இருவர் துணையுடன் சேலம் செல்லவேண்டும்.

அப்படி நான் சென்றபோது என்னுடன் வந்தவர்களிடம், 'இந்தப் பணத்தை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டேன். 'நாங்கள் நாலு பேரும் பிரித்துக் கொள்வோம்' என்றார்கள். 'இதைக் கொண்டு பள்ளிக்கு உருப்படியாகச் செய்யலாம். மாடுகள் வந்து அலைகின்றன. வேலி வைக்கலாம். பாதுகாப்பாக இருக்கும். உள்ளே பப்பாளி மாதிரியான மரங்கள் வைக்கலாம்' என்றேன். அவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை.

'பள்ளிக்கு ரேடியோ வாங்கலாம்' என்றேன். அரைமனதாக இருவரும் என் வழிக்கு வந்தனர். பேட்டரி ரேடியோவை சேலத்துக்குச் சென்று வாங்கினோம். அது ஒலித்தபோது, ஆர்வமுடன் கேட்டார்கள்.

இந்தக் கிராமம் சேர்வராயன் மலையின் பின்பகுதியில் இருந்தது. இன்னொரு பக்கத்தில் ஏற்காடு, சேலம் உள்ளிட்ட நகரங்கள் இருக்கும். இந்த மலைப்பகுதியில் மேங்க்னசைடு தாது கிடைப்பதாக ஜப்பானிலிருந்து வந்து ஆய்வு செய்தனர். அதற்காக அங்குள்ள மக்களை இடம்பெயர வைக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. மறுசோதனையில் தாது சரியான தரத்தில் இல்லை என்பதால், திட்டம் கைவிடப்பட்டது.

அதேபோல், கஞ்சமலை பகுதி மக்களையும் வெளியேறச் செய்து , தரமான தாதுவாக இல்லை என்பதால் திட்டம் கைவிடப்பட்டது. பின்னர்தான், 'இரும்பு உற்பத்தி வேண்டாம். இரும்பு உருக்காலை போதும்' என்று சேலம் இரும்பு உருக்கு ஆலை வந்தது. நான் 'போக்கிடம்' நாவலில் அந்த கேத்துரெட்டிப் பட்டியை டேனிஷ்பேட்டையாக மாற்றி, கதையாக எழுதியிருப்பேன்.

ஒவ்வொருவரும் போக்கிடம் தேடி இடப்பெயர்ச்சி செய்வதைப் பற்றி அந்த நாவல் பேசும். இலக்கியச் சிந்தனைக்கு நாவலை கையெழுத்துப் பிரதியாகவே அனுப்பினேன். 'இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற முதல் நாவல்' என்ற பெயரும் கிடைத்தது. அந்த நாவலை வானதி பதிப்பகம் வெளியிட்டது. சென்னை ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், நீதிபதி சூரிய நாராயணன், எழுத்தாளர் சாண்டில்யன் , கல்கி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை சிறுவாணி வாசகர் மையம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இதை மறுபதிப்பாக வெளியிட்டது.

நதிமூலம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெயரோ, முகமோ அறியாத எத்தனையோ பேர் பாடுபட்டார்கள். அப்படிப்பட்ட வகையில், நாமக்கல்லைச் சேர்ந்த என் அம்மாவின் தாய் மாமாவும் ஒருவர். அவர் வழக்குரைஞரும் ஆவார். தனிநபர் சத்தியாகிரகம் செய்து கொடுமைகளை அனுபவித்தவர். என் அப்பாவும் சமபந்தி போஜனம் செய்ததற்காக ஜாதி விலக்கம் செய்யப்பட்டார் . இதனால் ஊருக்கு வெளியே தான் ஒரு வீடு கட்டி, குடியிருந்தோம். அவர் இறந்தபோதும் யாரும் வரவில்லை. இப்படி ஒரு கதையை 'போக்கிடம்' நூல் வெளியீட்டு விழாவில் பேசினேன். அப்போது சிட்டி , நா.பா. வந்திருந்தார்கள்.

'இதை நாவலாக எழுதுங்கள்' என்று கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி கூறினார். அந்த நாவலை 3 டைரிகளில் எழுதினேன். மிகப் பெரிய நாவல்.

அட்டைக்கு ஆதிமூலம் ஓவியம் வரைந்து கொடுத்திருந்தார். அது நவீன ஓவியமாக அழகாக அமைந்திருந்தது. அதன் பிறகு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 'ப்ராங்க்பர்ட்' சர்வதேச புத்தகத் திருவிழாவில், உலகத்தில் உள்ள முக்கியமான அட்டை ஓவியங்கள் தனியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதற்கு அனுப்பப்பட்ட சா.கந்தசாமியின் 'தொலைந்து போனவர்கள்' அட்டையும், எனது 'நதிமூலம்' அட்டையும் தேர்ந்தெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. க.நா. சுப்பிரமணியம் நல்லதொரு விமர்சனமும் எழுதியிருந்தார். அசோகமித்ரன் 'இந்தியன் எக்ஸ்பிரஸிலும்', சா.கந்தசாமி 'ஞானரதத்திலும்' விமர்சனம் எழுதியிருந்தனர்.

நதிமூலத்தின் கதை 1926- ஆம் ஆண்டு ஒரு சிலை உடைப்புப் போராட்டத்தில் தொடங்கி, 1964-ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தில் முடிகிறது.

சென்னை ஸ்பென்சர் எதிரில் உள்ள நீல் சிலை உடைப்புப் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர் சோமையாஜுலு. இவர் பாலகங்காத திலகரின் இயக்கத்தைச் சேர்ந்தவர். அவரை நான் நேரில் சந்தித்து இருக்கிறேன். இந்தப் போராட்டங்கள் இடையில் நாடகம், சினிமா மட்டுமல்ல; நடைபெற்ற பல்வேறு சமுதாய மாற்றங்களும் பதிவாகி இருக்கும். இந்த நாவலின் கதாநாயகன் கிட்டா அனைத்திலிருந்தும் விலகி இருப்பது போல் இருப்பார். ஆனால், அனைத்திலும் இருப்பார். மூன்று தலைமுறைகளைப் பேசுகிறது இந்த நாவல். ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தன. எதிர்மறையாகவும் இருந்தன. முதலில் அதை ஏற்க மறுத்த கோவை ஞானி, பின்னர் நல்ல நாவல் என ஒப்புக்கொண்டார்.

காலவெளி

காலவெளி என்பது ஓவியக் கலை சம்பந்தப்பட்ட இரண்டு வார்த்தைகளின் கூட்டு வார்த்தை. ஓவியக் கலையை விமர்சனம் செய்பவர்கள் ஆங்கிலத்தில் 'டைம் அண்ட் ஸ்பேஸ்' என்று எழுதுவார்கள். அதுதான் காலவெளி. இது நவீன ஓவியங்கள், ஓவியர்களைப் பற்றிய நாவல். நவீன ஓவியக் கலை வகைகளில் சென்னை வகை, பரோடா வகை, கல்கத்தா வகை, பாம்பே வகை என இருக்கின்றன. எல்லாவற்றையும்விட முந்தையது 'சென்னை வகை' தான். சென்னை கவின் கலைப்பள்ளிதான் முதலில் தோன்றியது. அதில்தான் நானும் படித்தேன்.

அதன் முதல்வராக இருந்த கே.சி.எஸ்.பணிக்கர் என்பவர் கேரளத்தவராக இருந்தாலும் தமிழ் மீது பற்றுள்ளவர். ஓவியத்தில் 'தென் இந்தியா' என்று அவர் எடுத்துக் கொண்டால், 'சென்னை வகை' என்று தான் சொல்ல வேண்டும். 'மெட்ராஸ் ஸ்கூல்' என்பது மற்றதிலிருந்து மாறுபட்டது. மொழியோடு சம்பந்தப்பட்டது. இதன்பின்னர் உள்ள கலாசாரம், பண்பாடு மற்றதிலிருந்து மாறுபட்டது. இதை உணர்ந்து அவர் தமிழக முதல்வராக இருந்த பக்தவத்சலத்திடம், ' ஓவியர்கள் வரைந்து வாழ்வதற்காக ஓரிடம் வேண்டும்' என்று கேட்டுள்ளார். திருவான்மியூரில் அப்படி ஒதுக்கப்பட்டதுதான் சோழமண்டல ஓவியர் கிராமம் .

இந்தக் கதையில் நான்கு நவீன ஓவியர்கள் இணைந்து செயல்படுகிறார்கள். ஓவியக் கண்காட்சியை வைக்கிறார்கள். அதை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? அதில் உள்ள பிரச்னைகள் என்ன? போன்றவற்றைப் பற்றி பேசுவது இந்த நாவல். ஓவியர்களின் பயிற்சிக் காலம் , ஓவியங்கள் உருவாவது எப்படி போன்ற அது சார்ந்த அனைத்தையும் விவரிக்கும்.

கடைசியில் குழுவாக இயங்கிய இந்த நாலு பேரும் கலைந்து போகிறார்கள். மீண்டும் சேர்வதற்கு முயற்சி செய்கிறது. தொலைந்து போன ஓவியத்தைத் தேடுவது இதில் வரும். நான் ஓவியம் கற்றது, பயிற்சி பெற்றது, கண்காட்சி வைத்த அனுபவங்கள் அனைத்தும் இதில் உண்டு.

நாவலைப் படித்து விட்டு அதற்கு ஆதிமூலமே முன்னுரையும் கொடுத்து, அட்டைப் படத்தையும் வரைந்து கொடுத்தார். இந்த நாவலைப் பதிப்பித்த பதிப்பாளர் மாசிலாமணி, 'இந்த நாவலை நான் அச்சுக்குச் செல்லும் முன்பு படிக்கவில்லை. எனவே எனக்கு திருப்தி தரவில்லை' என்றார். ஆனால், ஓராண்டுக்குப் பிறகு வெங்கட் சாமிநாதன், வாஸந்தி இருவரும் தில்லியிலிருந்து வரும் 'இந்தியன் புக் ரிவ்யூ' இதழில் பாராட்டி எழுதியிருந்தார்கள். எனது நண்பர் மொழிபெயர்ப்பாளர் ஆரணி ஜி.குப்புசாமி பிடிவாதமாக அதை மறுபதிப்பு கொண்டு வர வேண்டும் என்றார். அதன்படி ஜெய்ரிகி சாய்ரமணா தம்புராஜ் பதிப்பித்துள்ளார்.

வண்ண முகங்கள்

எனக்கு இரண்டாவது முறையாக இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றுத் தந்த நாவல் இது. நாடகங்களில் நடிக்கும்போது அந்தப் பாத்திரத்துக்கு ஏற்றவாறு வண்ணங்களைப் பூசிக் கொள்வார்கள். நடிக்கும்போது வண்ண முகம். நடிக்காதபோது அசல் முகம். நாடகக் குழுவின் பின்னணியில் இந்தக் கதையை எழுதி இருந்தேன். அசல் முகம் என்பது நமது வாழ்க்கை. வண்ண முகம் என்பது ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் வாழ்க்கை. இரண்டையும் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி இந்த நாவலை எழுதியிருப்பேன்.

கர்நாடகத்தில் உள்ள உலகப் புகழ்பெற்றது 'குப்பி வீரண்ணா நாடக நிறுவனம்' . எனது மூத்த அக்கா ஒரு நடிகை . அவர் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் 'செண்பகவல்லி', 'மாரியம்மன்', 'சுபத்ரா' என மூன்று படங்களில் நடித்தவர். சென்னைக்கு அவர் வந்து ஜூபிடர் பிக்சர்ஸில் நடித்தவர். திரைத்துறையில் நடனமும் ஆடியிருக்கிறார். இந்த நிறுவனத்தில் 30 ஆண்டுகள் இருந்தார். அவர் கணவரும் உடனிருந்தார். பள்ளி விடுமுறை விட்டதும், நாடக நிறுவனத்தில் சென்று தங்கி, அங்கு உள்ளவற்றையெல்லாம் பார்த்து ரசிப்பேன். அந்தப் பெரிய நாடக நிறுவனத்தின் வாழ்க்கையையும் பிரச்னையையும் என் கண்ணெதிரே பார்த்தேன். பிரமித்தேன். அவர்களது அழகிய முகங்களையும் பார்த்து இருக்கிறேன். இப்படி அக்காவின் கதையும் அந்த நாடகப் பின்னணியும் கலந்து உருவாக்கப்பட்டதே 'வண்ண முகங்கள்' நாவல்.

மற்றவர்கள்

ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை என்கிற ராஜா சர் ராமசாமி முதலியார் மகப்பேறு மருத்துவமனை. முதலியாருக்கு சென்ட்ரல் அருகே ஒரு பெரிய சத்திரமும் உள்ளது. முஸ்லிம்களுக்காக 'சித்திக்க்ஷரா' என்கிற சத்திரமும் உள்ளது. சென்னையைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் இதைக், கண்டு கொள்வதே இல்லை.

அந்த மருத்துவமனையில்தான் எனது மனைவி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆண்கள் கொஞ்ச நேரம்தான் இருக்க முடியும் . ஒரு பக்கம் மனைவியின் பிரசவக் காலம். இன்னொரு பக்கம் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம். ஒரு பெண் எப்படித் தனியாக இடர்ப்பாடுகளை தாங்கிக் கொண்டிருக்கிறாள். வேலைநிறுத்தத்தால் மருத்துவமனைக்கு நர்ஸ்கள், வார்டு பாய்கள், ஊழியர்கள் வரவில்லை. ஆண் மருத்துவர்கள் எவ்வளவுதான் செய்ய முடியும்? அறுவைச் சிகிச்சைகளை எல்லாம் ரத்து செய்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். 15 நாள்கள் தமிழ்நாடு ஸ்தம்பித்துப் போயிருந்தது. அதில் மருத்துவமனைகள் எவ்வளவு நெருக்கடிகளை எதிர்கொண்டது, சமாளித்தது பற்றி அந்த நாவலில் வருகிறது. இதை நர்மதா பதிப்பகம் வெளியிட்டது. வெங்கட் சாமிநாதன் 'இந்தியன் புக் ரிவ்யூ'வில் பாராட்டி எழுதினார்.

நிலநடுக்கோடு

பூமத்திய ரேகையின் தமிழ்ச்சொல்லே 'நிலநடுக்கோடு'. பூமியை வடக்கு, தெற்கு என்று சமமாகப் பிரிக்கும் கற்பனைக் கோடு. அட்சரேகை, தீர்க்க ரேகைகளும் உண்டு.

ஒரு மனிதன் எந்தப் பக்கமும் சேராமல் வடக்கிலும் இல்லை, தெற்கிலும் இல்லை என்று தனியாக நிற்கிறான். அப்படிப்பட்ட ஒரு கதைதான் நிலநடுக்கோடு. வாழ்ந்த இடத்திலும் அவர்களைச் சேர்க்கவில்லை. வந்து சேர்ந்த இடத்திலும் ஏற்கவில்லை. இப்படியாக இரண்டாம்கெட்டான் நிலையில் இருப்பவர்கள்தான் 'ஆங்கிலோ இந்தியர்கள்'.

அதேபோல் நமது பாத்திரம் வந்து உள்ளே செல்கிறான். அவனையும் இருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பிறந்த ஊரிலும் ஏற்றுக்கொள்வதில்லை; போய்ச் சேர்ந்த ஊரிலும் அவனைச் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். கடைசியில் அவனை அந்தப் புதிய ஊர் ஏற்றுக் கொள்கிறது . இதுதான் கதை. 40 சதவீதம் என்னுடைய சொந்தக் கதை. மீதி 60 சதவீதம் கற்பனை. விஜயா வாசகர் வட்டத்தின் ஜெயகாந்தன் விருதும் கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com