அருள்செல்வன்
'பேச்சாளராக, எழுத்தாளராக, சமூகச் செயல்பாட்டாளராக, தொழிற்சங்கத் தலைவராக இருக்கிறேன். ஐந்து உதவியாளர்களுடன் வெற்றிகரமான வழக்குரைஞராக இருந்தேன். இயக்கப் பணிகளுக்குத் தடையாக இருக்கும் என்று அதையும் விட்டுவிட்டேன். என்னைப் பேச்சும் எழுத்தும் தெரிந்த செயல்பாட்டாளர் என்று அடையாளப்படுத்தலாம்.
இன்னும் ஏராளம் எழுதியிருக்க முடியும். ஆனால் செயல்களின் விளைவுகளை அறிந்தவன் நான். செயல்தான் சிறந்த மொழி என்பது என் கருத்து. பேச்சு, எழுத்தைவிட செயலுக்குத் தேவை அதிகம்'' என்கிறார் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன்.
பன்முகத் தன்மை கொண்ட இவர், அந்தப் பேரவையை மக்கள் இயக்கமாக மாற்றினார்.
'இந்திய கலாசார நட்புறவுக் கழகச் சாதனையாளர்', ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தின் 'பாரதி இலக்கியச் செல்வர்', திருவாவடுதுறை ஆதீனத்தின் 'பன்னூல் பரப்பும் பைந்தமிழ்ச் செல்வர்', சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்தின் 'நாடக நால்வர்', 'சாதனைச் செம்மல்' உள்பட பல விருதுகளைப் பெற்றவர்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்.சி.பி.எச்.) தலைவராகவும் இருக்கும் ஸ்டாலின் குணசேகரனிடம் பேசியபோது:
'ஈரோடு அருகே மாணிக்கம் பாளையம் எனது சொந்த ஊர். என் தந்தை தங்கமுத்து விவசாயி. ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர் என்றாலும், புத்தக வாசிப்பு உள்ளவர். எங்களின் வீட்டுக்கு 'சோவியத் நாடு' போன்ற ஏழு பத்திரிகைகள் வரும். பொதுவுடைமை இயக்கத்தில் இருந்த அவர், நெருக்கடியான நேரத்தில் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தவர்.
என்னுடைய சிறுவயதிலேயே 'தத்துவ தொடக்கப் பயிற்சி' எனும் புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, மாணவர் மன்றத்தைத் தொடங்கினேன். சனி, ஞாயிறுகளில் புத்தகப் பரிமாற்றங்கள் என்று முதலில் தொடங்கியது. பின்னர், 'பாரதி இளைஞர் மன்றம்', 'பகத்சிங் இளைஞர் மன்றம்' ஆகியவற்றை நடத்தி, நிகழ்ச்சிகளை நடத்தினேன்.
மாணவர் பருவத்திலேயே மேடைப்பேச்சு மீது ஆர்வம் வந்தது. கே.டி. ராஜு, தா.பாண்டியன், குமரி அனந்தன், கருணாநிதி, ம.பொ.சி., ஜெயகாந்தன், குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரின் பேச்சுகளை அரசியல் எல்லைகளைக் கடந்து ரசிப்பேன். படிப்படியாக நான் எனது பேச்சார்வத்தை ஆற்றலாக மாற்றிக் கொண்டேன்.
நான் படித்த சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பேரவைத் தலைவரானேன். எனக்கு எதிராகத் தேர்தலில் நின்றவர்கள் ஆடம்பரமாகச் செலவு செய்தார்கள். யானைகளில் எல்லாம் ஊர்வலம் வந்தனர். நான் வகுப்புகளுக்கு நேரடியாகச் சென்று பேசியே மாணவர்களைக் கவர்ந்து, வெற்றி பெற்றேன். ஓராண்டுக்குள் நான் செய்த காரியங்கள் இன்றும் பேசப்படுகின்றன. பின்னர், ஈரோடு மாவட்டக் கல்லூரிகளின் பேரவைத் தலைவராகவும் செயல்பட்டேன். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவரானேன்.
மாணவர் பருவத்தில் ரஷியா பயணம்
நான் ஆறாவது படித்தபோது என்.சி.பி. எச். சார்பில் நடத்தும் புத்தகக் கண்காட்சிக்கு உதவிகளைச் செய்வேன். ரஷியாவில் அச்சிடப்பட்டு தமிழ் நூல்கள் இங்கே வரும்.
'சோவியத் நாட்டில் ஒரு தமிழ் மாணவி', 'புதிய உலகம் புதிய பறவைகள்' போன்ற புத்தகங்களை 30 -50 என்று பிரதிகளை வாங்கி நண்பர்களுக்குக் கொடுப்பேன்.
1985-இல் அகில உலக இளைஞர் மாநாடு ரஷியாவில் நடைபெற்றபோது, தமிழ்நாட்டிலிருந்து நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மையம் சார்பாக து.ராஜா வந்திருந்தார். அங்கேகிரம்ளின் மாளிகையைச் சுற்றிப் பார்த்தோம். லெனின் உடலைக் கண்டோம். அதிபர் மிகைல் கோர்பசேவை அருகில் பார்த்தேன். ரஷியாவின் முன்னேற்றமும் வளர்ச்சியும் பெரிதும் வியப்பூட்டின. அங்கே அப்போதே மெட்ரோ ரயிலைக் கொண்டு வந்துவிட்டனர். இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் ரஷியர்கள் மதிப்புடனும் அன்புடனும் இருக்கின்றனர். இரு நாட்டு நட்புறவை விரும்புகிறார்கள். எங்கே சென்றாலும் கையில் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள். முதலில் அங்கு தான் எஸ்கலேட்டரைப் பார்த்தேன். அதில் செல்லும்போது கூட புத்தகங்களைப் படிக்கின்றனர்.
தமிழ்ப் பணி
ஆங்கில வழியில் படித்தேன். கணிதம், சட்டம் படித்தாலும் எனக்குத் தமிழ் மொழி மீது தனியான ஆர்வம் இருந்தது. அதுவே இன்று என்னை ஓர் ஆளுமையாக வளர்த்துள்ளது. ஆயிரக்கணக்கான மேடைகள், உலக நாடுகள் சுற்றுப்பயணம் போன்ற அனைத்தையும் வழங்கியிருப்பது தமிழ் தான்.
முதலில் மாணவர் மன்றமாக இருந்து இளைஞர் மன்றமாக வளர்ந்து செயல்பாடுகளைச் செய்தேன். 1000 பேர் பங்குபெற்ற இளம்பேச்சாளர் பயிற்சிப் பட்டறைகள் எல்லாம் பேரவை சார்பில் நடத்தினோம். ஜாதி, மதம் என்ற பாகுபாடின்றி சமூக, பொருளாதார பண்பாட்டு முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு அரசியல் கலவாத ஒரு மக்கள் இயக்கமாக 'மக்கள் சிந்தனைப் பேரவை'யை 1998-இல் நிறுவி, நடத்தி வருகிறேன். அதன் வெள்ளி விழாவையும் கொண்டாடி விட்டோம்.
'மழைநீர் போல தாய்ப்பால் போல எந்த சார்புக் கலப்பும் இல்லாத இயக்கம்' என்பதை அறிந்து கொண்டுதான் பலரும் ஆங்காங்கே கிளைகள் தொடங்கியுள்ளனர். ஜப்பானிலும் கிளை உண்டு.
எழுத்துப் பணி
நான் தொகுத்துப் பதிப்பித்த 'விடுதலை வேள்வியில் தமிழகம்' எனும் நூலின் இரண்டு பாகங்கள் ஆய்வு நோக்கில் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும்.
'தேச விடுதலையும் தியாகச் சுடர்களும்' எனும் நூலும் எனக்குப் பரவலான பெயரைப் பெற்றுத் தந்தது. 'ஜனசக்தி'யில் 128 நாள்கள் தினசரி எழுதிய 'வரலாற்றுப் பாதையில்' எனும் தொடர் நூலானது. 'தினமணி'யில் இந்திய சுதந்திரம் அடைந்ததன் 75-ஆவது ஆண்டை முன்னிட்டு எழுதிய 'தமிழக தியாக தீபங்கள்' கட்டுரை 175 நாள்கள் வெளியானது. நான் புத்தகக் காட்சிகளில் ஆற்றிய உரைகளே 'காகிதப் புரட்சி' எனும்நூல். இப்படியாக 20 நூல்களை எழுதியுள்ளேன்.
என்.சி.பி.எச். அனுபவம்
75 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் என்.சி.பி.எச். நிறுவனத்தில் சுமார் 250 பேர் பணிபுரிகின்றனர். ஆயிரக்கணக்கான நூல்கள் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு மட்டுமே 150 புத்தகங்களை வெளியிட்டோம். வெற்றிகரமான விற்பனையில் சுமார் 100 தலைப்புகளில் நூல்கள் உள்ளன. நூல்களை வெளியிடும்போது, தரத்தை மட்டுமே பார்க்கிறோம். கருத்தியலை மட்டுமே பார்க்கிறோம். தலைவராக இருந்த
ஆர். நல்லகண்ணு தனது உடல் நலனைக் கருத்தில் கொண்டு, பதவி விலகினார். தொடர்ந்து நான் பதவியேற்றேன்.
'உங்கள் நூலகம்' இதழின் ஆசிரியராகவும் இருக்கிறேன். இந்த இதழில் இடம்பெறும் கட்டுரைகள் தரம் கருதியே பிரசுரிக்கப்படுகின்றன. அதில் பிரசுரமானவை பல்கலைக்கழக ஆய்வாகப் பார்க்கப்படுகின்றன; மதிக்கப்படுகின்றன.
ஈரோடு புத்தகத் திருவிழா
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் பல்வேறு பணிகளையும் செய்து இருக்கிறோம். அதில் ஒரு பகுதியே புத்தகத் திருவிழா. முதன்முதலில் சென்னைப் புத்தகக் காட்சி மட்டும் பேசப்படும். பின்னர், நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி நடத்தினார்கள். ஆனால், முதன்முறையாக நாங்கள்தான் 'புத்தகத் திருவிழா' என்ற சொல்லைப் பயன்படுத்தினோம்.
இப்போதெல்லாம் மாவட்டம்தோறும் நடப்பதற்கு புத்தகத் திருவிழா என்று பெயர் வைப்பதற்கு நாங்கள் தான் முன்னோடி. கடந்த சில ஆண்டுகளாக அரசும் எங்களுக்கு உதவுகிறது. அதற்கு முன்பு நாங்கள் தான் திட்டமிட்டு நடத்தினோம்.
250 அரங்குகள் இருக்கும். தரமான பதிப்பகங்களுக்கு மட்டுமே இடம் கொடுத்து நடத்தினோம். எல்லா மதத்தைச் சேர்ந்த நூல்களும் கிடைக்கும். மதத்தைப் பரப்பவோ, அரசியல் செய்யவோ நாங்கள் அனுமதிப்பதில்லை. வட இந்தியாவில் இருந்து கூட தரமான பதிப்பகங்களைத் தேடி தேடி அழைத்து அறிமுகம் செய்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பதிப்பகங்கள், அரங்குகள் என்று இருப்பதால் தேவையற்ற பயனற்ற புத்தகங்கள் வந்து சேர்வதில்லை.
'உலகத் தமிழர் படைப்பரங்கம்' என்றோர் அரங்கம் அமைத்து, உலகத் தமிழரின் படைப்புகளுக்கு இடம் கொடுத்தோம். இதை நாங்கள் அறிமுகம் செய்தோம். இன்றுவரை ஈரோடு புத்தகத் திருவிழாவில் மட்டும்தான் இந்தச் சிறப்பரங்கம் உள்ளது.
மக்கள் சிந்தனைப் பேரவையைப் புரிந்துகொண்டதால், நாங்கள் அழைக்கிற விருந்தினர் அனைவரும் வருகிறார்கள். சரியான திட்டமிடலும் செயல்பாடுகளுமே அதன் வெற்றிக்குக் காரணம். நிகழ்ச்சிகளை வடிவமைப்பது ஒரு கலை. அதைச் சரியாக செய்து வந்திருக்கிறோம். திட்டம், மேடை நிர்வாகம், மக்கள் தொடர்பு என அனுபவத்தின் மூலம் கற்றவை உதவியாக இருப்பதால் வெற்றி பெற முடிகிறது.
வாழ்வில் கிடைத்த அரிய தருணங்கள்
சொல்வதற்கு ஏராளம் இருந்தாலும் இரண்டை மட்டும் சொல்கிறேன்.
ஈரோடு புத்தகத் திருவிழாவைப் போல, வாசிப்பு இயக்கத்தையும் மக்கள் மயப்படுத்துவது என்பதில் தீவிரமாக இருந்தோம். பெரிய விருந்தினர்களை அழைத்து விழாவை நடத்தி விட்டோம். அப்துல்கலாமை அழைக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. அவரை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு தில்லிக்குச் சென்று சந்தித்தேன். சந்திக்கும் நபர்கள் பட்டியலில் எனக்கு எட்டாம் இடம் கிடைத்தது. அப்போது நான் அவரிடம் எனது 'விடுதலை வேள்வியில் தமிழகம்' உள்ளிட்ட நூல்களை கொடுக்க முயன்றேன். அவர் அதை வாங்காமல், இதைப் படித்துவிட்டேன் என்றார்.
எனக்கு தேதியை வாங்கிக் கொடுத்தது என் புத்தகங்கள்தான். சொன்னபடியே அவர் 2009-இல் ஈரோடு வந்தார். வந்தது மட்டுமல்லாமல் புத்தகக் கண்காட்சி அரங்கினுள்ளும் வந்தார். 2014-இல் மீண்டும் அழைத்தபோதும் வருகை தந்து சிறப்பித்தார். இரண்டு முறையும் ஒரு லட்சம் பேர் கூடியிருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். இது பெருமைக்குரியது.
சேலத்தில் சில இளைஞர்கள் புத்தகக் காட்சிக்கு ஏற்பாடு செய்துவிட்டு என்னைப் பேச்சாளராக அழைத்தார்கள். நான் அங்கே சென்றபோது கூட்டமே இல்லை. ஐந்தரை மணி என்று சொல்லிவிட்டு ஏழரை மணி வரை என்னை காக்க வைத்திருந்தனர். அவர்கள் தயக்கத்தில் நெளிந்தனர். பேச அரங்குக்குச் சென்றபோது யாருமே இல்லை. விழா பற்றி அவர்கள் விளம்பரம் செய்யாததால் யாருக்குமே தெரியவில்லை. எனவே அவர்கள் மன்னிப்பு கேட்கும் தொனியில் என்னிடம் பேசினார்கள்.
நான் 'வந்து விட்டேன். சும்மா செல்லக் கூடாது, பேசுகிறேன்' என்றேன். அவர்கள் தயங்கினர். 'ஒலிப்பெருக்கியை வெளியே மக்களுக்குக் கேட்கும்படி வைத்து விடுங்கள்' என்று மட்டும் சொன்னேன். என்னுடன் வந்தவர், அவரது நண்பர்கள் இருவர் என மூன்று பேரை வைத்து நான் பேச ஆரம்பித்தேன். அரை மணி நேரத்தில் காலியாக இருந்த 200 இருக்கைகளும் நிரம்பின. மேலும் 50 பேர் நின்றிருந்தார்கள். ஒன்றரை மணி நேரம் பேசினேன். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாதது.
இப்படி ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் படிப்பினையைக் கற்றுக்கொள்கிறேன்'' என்கிறார் ஸ்டாலின் குணசேகரன்.
- அருள்செல்வன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.