பண்டரிபாய் - நான் சந்தித்த பிரபலங்கள் - 46

பண்டரிபாய் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
பண்டரிபாய்
பண்டரிபாய்
Updated on
2 min read

பண்டரிபாய் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி'யில் (1952) காதலியாக, 'திரும்பிப்பார்' படத்தில் அக்காவாக, 'தெய்வமகன்' படத்தில் மனைவியாக, அம்மாவாக, எம்.ஜி.ஆருடன் 'மர்மயோகி', 'அடிமைப் பெண்' படத்திலும், 1949-இல் வைஜெயந்திமாலாவின் முதல் படமான 'வாழ்க்கை' படத்திலும், பாகவதர் நடித்து மூன்று தீபாவளி கண்ட 'ஹரிதாஸ்' படத்திலும், 'பஹார்' என்று ஹிந்தியிலும் , கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் 35 படங்களிலும், மொத்தமாக 400 படங்கள் நடித்து , பின்னாளில் டி.வி. தொடரிலும் நடித்தவர் நடிகை பண்டரிபாய்.

ரெங்கராவ் என்ற ஓவியக் கலை ஆசிரியருக்கும், காவேரிபாய்க்கும் 1928, செப்டம்பர் 18 -இல் கர்நாடகத்தில் பிறந்த இவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. இவர் தயாரித்த படத்துக்கு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பாடல் எழுதினார்.

'தானா எவனும் தர மாட்டான்

தடுக்கி விழாம எழ மாட்டான்

மேலே போனவன் வர மாட்டான் - இதைப்

புரிந்துகிட்டவன் அழ மாட்டான்'

இந்தப் பாட்டை எழுதியவருக்குப் பணம் கொடுப்பதற்குள் இறந்து விட்டார் என்ற செய்தி அறிந்து, அவருக்குச் சேர வேண்டிய பணத்தை அவர் காலில் வைத்து கண்ணீருடன் கும்பிட்டார். அந்தக் காலத்து நடிகர்கள் எந்தப் போலித்தனமும் இல்லாமல் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.

நான் எழுதிய 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு' படத்தில் சிவகுமாரின் அம்மாவாக நடித்தார். அதன் பிறகு சில மாதங்களில் ஊட்டியில் நான் தங்கியிருந்த தாஷபிரகாஷ் ஹோட்டலில் பண்டரிபாயும் தங்கியிருந்தார். வேறு படத்தின் படப்பிடிப்புக்காக வந்திருப்பதாகச் சொன்னார்.

இரண்டொரு நாள்களில் எனக்கும் அவருக்கும் படப்பிடிப்பு முடிந்த நிலையில், நான் சென்னைக்கும் அவர் மைசூருக்கும் போக வேண்டிய நிலையில், ரயில் டிக்கெட் என் பயணத்துக்குத் தயாராக இருந்தது. அப்போது பண்டரிபாய், அன்று மாலை காரில், தான் மட்டும் மைசூர் போவதாகச் சொன்னார்.

உடனே எனக்கு பசவராஜ் சாரைப் பார்த்து ஏதாவது கதை சொன்னால், ஒரு வேளை அவர் படம் எடுத்தால், நமக்கு இன்னொரு படம் வருமே என்று நினைத்து, சென்னை பயணத்தை ரத்து செய்து, பண்டரிபாயுடன் அவர் காரில் மைசூர் பயணித்தேன்.

வழியில் உள்ள மலைப்பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் பயணிக்க அனுமதிக்காத காலம். காரணம், மிருகங்கள் குறுக்கிடலாம் என்ற பாதுகாப்புக்கான நிலைமை இருந்தது. அவருடன் காரில் போனபோது பல விஷயங்களைச் சொன்னார்.

அப்போது என்னிடம், ' பசவராஜை தெரியுமா?'' என்று கேட்டார்.

பசவராஜ் ஏவி.எம். நிறுவனத்துடன் இணைந்து எடுத்த படம்தான் 'சகோதரி', 'பார்த்தால் பசி தீரும்', நான் முதன் முதலில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த 'பட்டத்து ராணி'. 'அவரை 1967 முதல் தெரியும்' என்று சொன்னேன். நான் அவரிடம் சொல்லப் போகும் கதை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்று சொல்லி, அந்தக் கதையைச் சொன்னேன்.

உடனே அவர் சிவாஜியின் மனைவியாக நடித்து சிவாஜியை படத்தின் முதல் காட்சியிலேயே சுட்டுக் கொன்றபோது என் கை நடுக்கம் இரண்டு நாள் இருந்தது என்று 'அந்த நாள்' படப்பிடிப்பில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டு வந்தார்.

அந்தப் படத்தை எழுதிய ஜாவர் சீதாராமன்தான் என்னை எழுத வைத்த குரு என்று அவரிடம் சொன்னேன். பண்டரிபாய் அவ்வப்போது 'பண்டரிநாதா' என்று சொல்லிக் கொண்டு வந்தார்.

திடீரென டிரைவர் ஓரிடத்தில் காரை நிறுத்தி, கார் ஹெட்லைட்டை அணைத்தார். மலைப்பகுதியில் காட்டு வழியில் ஒரே இருட்டு. எதிரே இரண்டு டார்ச் லைட் எரிவது போல் தெரிந்தது. 'அம்மா பேசாம இருங்க... வழியில் ஒரு சிறுத்தை படுத்திருக்கிறது. அது போன பின் நாம் போகலாம்'' என்றார்.

எனக்குக் கொஞ்சம் உதறலெடுத்தது. பண்டரிபாய், 'பண்டரிநாதா... பண்டரிநாதா'' என்பதைத் தவிர வேறு எதுவுமே சொல்லவில்லை.

நான் டிரைவரிடம் எனக்கு இந்த மாதிரி முன் அனுபவம் இல்லாததால், 'ஏம்பா டிரைவர்... அது எப்போ போகும்?'' என்று மெல்ல கேட்டேன்.

'அது போற போது போகும்... யாருக்குத் தெரியும்?'' என்றார்.

அவருக்குப் பழக்கப்பட்டது. எனக்குப் புதிது. எனக்குக் கொடுத்த சென்னை டிக்கெட்டுல சென்னை போய்ச் சேராமல், ஓசியில் மைசூருக்கு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை சொல்ல வந்த எனக்கு, கிட்டத்தட்ட அரை மணி நேரம் பெரிய சஸ்பென்ஸ் ஆகிவிட்டது. அந்த சிறுத்தை போனதும் கார் புறப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு பண்டரிபாய் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

இவர் 1965-இல் கலைமாமணி விருது, 2001-இல் கர்நாடக விருது, ராஜ்குமாரின் வாழ்நாள் சாதனை விருது பெற்றார். 1994-இல் ஒரு விபத்தில் இடது கையை இழந்து, வடபழனியில் பண்டரிநாதன் கோயிலைக் கட்டி, அந்தப் பண்டரிநாதனிடமே 2003, ஜனவரி 29 -இல் அடைக்கலமானார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com