புள்ளிகள்

மகாத்மா காந்தியை மாணவர்கள் சிலர் சந்தித்தபோது, 'மாணவர்களுக்கு ஏற்ற பாடப் புத்தகம் எது?'' என்று கேட்டனர்.
புள்ளிகள்
Updated on
3 min read

மகாத்மா காந்தியை மாணவர்கள் சிலர் சந்தித்தபோது, 'மாணவர்களுக்கு ஏற்ற பாடப் புத்தகம் எது?'' என்று கேட்டனர். அதற்கு அவர், 'ஒரு மாணவனுக்குச் சிறந்த பாடப் புத்தகம் அவனது ஆசிரியரே!'' என்றார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை மாணவர்கள் சிலர் சந்தித்தபோது, 'வெற்றி பெற எது வரையில் முயற்சி செய்ய வேண்டும்?'' என்ற வினாவை எழுப்பினர். அதற்கு அவர், 'முடியும் வரை முயற்சி செய்யுங்கள். உங்களால் முடிந்தவரை அல்ல; நீங்கள் நினைத்தவை முடியும் வரை!'' என்றார்.

மருத்துவப் புலமை படைத்த வள்ளலார் தனது அருட்பாவில் 464 மூலிகைகளின் குணங்களை விளக்கியுள்ளார். நாகபஸ்மம் உள்ளிட்ட ஏழு மருத்துவக் குறிப்புகளை அளித்துள்ளார். மனித உடல் அமைப்பின் செய்திகளை 'சத்திய பெருவிண்ணப்பம்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பலவற்றின் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 'சொர்க்கம்' படத்தில் ஜூலியர் சீசராகவும், 'ரத்த திலகம்' படத்தில் ஒத்தல்லோவாகவும், 'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தில் 'ஹேம்லெட்' ஆகவும் நடித்துள்ளார். இதுதவிர, தத்துவமேதை சாக்ரடீசாக 'ராஜாராணி' எனும் படத்தில் நடித்துள்ளார்.

-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

'உடைந்த கப்பலின் மாலுமி' என்ற சிறுகதையே உலகில் முதலில் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. எகிப்தின் நைல் நதிக்கரையில் வளர்ந்த பேப்ரஸ் என்ற மரத்தின் பட்டையில்தான் இந்தச் சிறுகதையானது கி.மு. 2000-ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.

'ஒரு கப்பலில் பாய்மரம் நடுக்கடலில் உடைந்துவிடுகிறது. கப்பலோடு மூழ்கப் போகிறோம் என்ற அந்த மாலுமி தனது துரதிஷ்டத்தை எண்ணி வருந்துகிறார். ஆனால், கப்பலை வேகமாக வீசிய காற்று தரைக்கு அடித்துச் செல்கிறது. எந்த மனிதனுக்கும் தனது கடைசி நேரத்திலும்கூட அதிர்ஷ்டம் அடிக்கலாம்' என்று கூறுவதே கதையின் நோக்கம்.

-முக்கிமலை நஞ்சன்

'மகத்தான ஒரு பெரிய காரியத்தை அவர் ஒருவரே 60 ஆண்டுகளில் செய்திருக்கிறார். இந்த மாதிரியான வேலையைப் பல்கலைக்கழகத்திடம் விட்டால், இரண்டு குழுவை அமைப்பார்கள். பத்துப் பேர் ஒரு குழுவில் இருப்பார்கள். இதற்காக, அலுவலகம், ஊழியர்கள், செலவுகள் நீளும். அப்போதும் வேலை ஒரு மாதிரியாகவே செய்து முடிக்கப்படும்.

ஆனால், அய்யரோ தாம் ஒருவராகவே காகிதம், வண்டிச் செலவு, இதரச் செலவுகளைத் தராமல் ஏடுகளைத் தாமே தலையில் சுமந்து வந்து வேலையைப் பூர்த்தி செய்துள்ளார். இந்தக் காரியத்தைச் செய்து முடித்ததற்காக, 'தமிழ் நூல்களின் உப பிரம்மா' என்று தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரை அழைக்கலாம்'' என்று மூதறிஞர் ராஜாஜி ஒருமுறை குறிப்பிட்டார்.

'நான் திரைத்துறையில் கால் வைத்தபோதே அவர் கதை, வசனகர்த்தாவாக பல சாதனைகளைப் படைத்தவர். திரையுலக மூம்மூர்த்திகளான எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றோருக்கெல்லாம் வசனம் எழுதியவர். சிறந்த உழைப்பாளி, சிறந்த பண்பாளர் என்றெல்லாம் சிறப்புடன் விளங்கும் அவர்தான் ஆரூர்தாஸ். அவர் தனது வாழ்க்கையை 'ஒரு கதை வசனகர்த்தாவின் கதை' என்ற பெயரில் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய விஷயங்களில் எனக்குப் பிடித்தவை இரண்டு:

'வாழ்க்கை என்பது ஒரு பாய்மரக் கப்பல். காலம் என்ற காற்று வீச்சுக்கு ஏற்றவாறு அந்தந்தத் திசையில் அந்தக் கப்பல் தானாகச் செல்லும். சுக்கான் கொண்டு இந்த வாழ்க்கைக் காலத்தை இந்த உலகப் பெருங்கடலில் எவரும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. சேரும் இடம் என்பதே குறிக்கோள். சேர வேண்டும் என்பது முயற்சி. சேர வைப்பதெல்லாம் காலம்.''

மலர்வது ஒரு நாள் உதிர்வது உறுதி. அது நல்ல மனதோடும், குணத்தோடும் உதிர வேண்டும். கசக்கும் எட்டிப் பழமாக இல்லாமல், இனிக்கும் ஈச்சம் பழமாகவும், இடுகாட்டில் எருக்கம்பூவாக வெடிக்காமல், ஓர் ஏழையின் சிறு குடிசை மீதுள்ள நித்திய மல்லிகை மாதிரியாகப் படர வேண்டும்'' என்று விழாவொன்றில் இயக்குநர் கே.பாலசந்தர் குறிப்பிட்டார்.

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.

நோபல் பரிசு பெற்ற நார்மன் போர்லாக்குக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில் விருது வழங்கும் விழா புதுதில்லி விஞ்ஞான் பவனில் 2005-ஆண்டில் நடைபெற்றது.

அப்போது அவருக்கு வயது 91. ஏராளமான விஞ்ஞானிகள் கலந்துகொண்ட இவ்விழாவில் அவர் எழுந்து நின்றவாறே பேசினார்.

நாட்டில் விவசாய விஞ்ஞானம், உற்பத்தித் திறன் மேம்பாடுகள் குறித்துப் பேசிய அவர், 'முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், எம்.எஸ்.சுவாமிநாதன், வர்கீஸ் குரியன் ஆகியோர் பசுமை, வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள். டாக்டர் ராஜாராம், எஸ்.கே.வருசல், பிஆர்.பர்வேஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வேளாண் விஞ்ஞான வளர்ச்சிக்குப் பெரும் பங்கை ஆற்றியவர்கள்'' என்றார். இதற்காக அவரை அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெரிதும் பாராட்டினார்.

ஒருமுறை பல்கலைக்கழகப் பணி தொடர்பாக ரொமிலா தாப்பர் திருப்பதிக்குச் செல்லநேர்ந்தது.

'அது அதிகாலை நேரம். சுப்ரபாதத்தோடு அர்ச்சனை ஆரம்பமானது. இருளும் இசையும் அமைதியும் ஒரு புள்ளியில் ஒன்றிணைகின்றன.

ஒவ்வொரு மலராகப் புறப்பட்டு வந்து விக்ரகத்தைத் தழுவிக்கொள்கிறது. அந்தத் தருணத்தில் நான் நெகிழ்ந்துபோனேன்'' என்றார் தாப்பர்.இங்கிலாந்திலுள்ள ஆவ்பரி மெகாலித்தில் கல்வட்டங்களைப் பார்வையிடும்போதும் இதேபோன்று விவரிக்கமுடியாத உணர்வு ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார் தாப்பர்.

'இந்தக் கல்வட்டங்கள் தொன்மை ஐரோப்பிய மத நம்பிக்கையை ஏற்பவர்களுக்கு முக்கியமானவை. அதிகாலையில் இங்கே நடந்துசென்றதும் மறக்கமுடியாத ஓர் அனுபவம்'' என்றார் தாப்பர்.

(மருதனின் 'ரொமிலா தாப்பர்' நூலிலிருந்து...)

எம்.எஸ்.வி. மீது வாணிஜெயராம் கொண்டிருக்கும் மதிப்பு அசாதாரணமானது.

'சிறுவயது முதல் அவரது இசையை ஆர்வத்துடன் கேட்டு வளர்ந்தேன். சென்னையில் என்னுடைய நிகழ்ச்சியில் (1973) எம்.எஸ்.வி. தலைமை தாங்கி என் இசையைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்.

பிறகு அவரது இசையிலேயே மகத்தான பாடல்களைப் பாடும் பெருமை அடைந்தபோது பெருமகிழ்ச்சி அடைந்தேன். அவர் ஓர் இசைக்கடல்.

பாடல் சொல்லிக்கொடுக்கும்போது சங்கதிகள் மேலும் மேலும் பொங்கிவரும். எங்களுக்கு மலைப்பாக இருக்கும். எதை எடுப்பது, எதை விடுவது என்ற மலைப்பு! ஏனென்றால், எல்லாமே அற்புதமாக இருக்கும்.

திரையிசைச் சரித்திரத்தில் அவர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியதொரு சகாப்தம். எந்த ஒலிப்பதிவுக்குக்குச் சென்றாலும் அவர் படத்தை மானசீகமாக வணங்கிவிட்டுத்தான் செல்வேன்'' என்று வாணிஜெயராமே சொல்லியுள்ளார்.

(ராணிமைந்தன் எழுதிய 'மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.' நூலிலிருந்து...)

தங்க.சங்கரபாண்டியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com