

மோடிதான் பிடித்த தலைவர் - டாப்ஸி!
பாலிவுட் நடிகை டாப்ஸி நடிப்பில், அனுபவ் சின்கா இயக்கத்தில் உருவாகியுள்ள படமான 'அஸி' அண்மையில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் போது, அவரிடம் கேட்கப்பட்ட அரசியல் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த நேர்காணலில், 'உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? பிரதமர் நரேந்திர மோடியா அல்லது ராகுல் காந்தியா?'' என்ற கேள்விக்கு, டாப்ஸி சிறிதும் தயக்கமின்றி பிரதமர் மோடியைத் தேர்ந்தெடுத்தார்.
மற்றொரு விடியோ க்ளிப்பில் அவர் கூறுகையில், 'நான் படித்தவரையில் மகாத்மா என்றால், காந்திதான்'' எனக் குறிப்பிட்டார்.
இந்த விடியோ க்ளிப்கள் வைரலான நிலையில், இணையவாசிகள் பலரும் இதற்கு ஆதரவாகவும் எதிர்மறையாகவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பயனர், 'இது வெறும் கருத்து மட்டுமல்ல, இன்றைய காலத்தின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.
அதே நேர்காணலில், ' மம்தா பானர்ஜி, ஸ்மிருதி இரானி, மாயாவதி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரில் யாரைப் பிடிக்கும்?'' என்ற கேள்விக்கு, முதலில் சுஷ்மா ஸ்வராஜின் பெயரை டாப்ஸி குறிப்பிட்டார். பின்னர் கொடுக்கப்பட்ட விருப்பங்களில் ஸ்மிருதி இரானியைத் தேர்ந்தெடுத்தார்.
'வித் லவ்' வெற்றி குறித்து சௌந்தர்யா!
'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'வித் லவ்'. இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் இப் படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் 'டூரிஸ்ட்
ஃபேமிலி' படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.
பிப். 6 - ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, பெரும் வசூலையும் குவித்து வருகிறது. ரஜினிகாந்தும் 'வித் லவ்' படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டி இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசியிருக்கும் செளந்தர்யா ரஜினிகாந்த், 'ரொம்ப சந்தோஷமா இருக்கு. ப்ரிமியர் ஷோ முடிச்சிட்டு அப்பா- அம்மாவைப் பார்க்க போயஸ் வீட்டுக்குப் போனேன். உள்ளே போனதும் ரெண்டு பேரும் எனக்கு ஒரு ஹக் கொடுத்தாங்க. என்னைப் பார்த்துச் சிரிச்சாங்க. அப்பாவைப் பார்த்து, 'இதுதான் சக்ஸஸா?'ன்னு கேட்டேன்.
அப்பா மறுபடியும் சிரிச்சாரு. அந்தச் சிரிப்பை நான் வாழ்க்கையில மறக்க மாட்டேன். கிட்டத்தட்ட 16-18 வருஷமா வேலை பார்த்துட்டு இருக்கேன். இந்த வெற்றியால்தான் சக்ஸஸ்னா என்னென்னு தெரிஞ்சது. இதுதான் என் முதல் சக்ஸஸ் மீட். இதைத் தந்த 'வித் லவ்' டீம்முக்கு என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள்!'' என நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
கலை வடிவத்தை வெளிப்படுத்தும் ஆவணப்படம்!
இண்டிகஸ் பெயிண்ட்ஸ் நிறுவனம், தனது பண்பாட்டு முயற்சியான 'திருஷ்டி பொம்மை: பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி' என்ற வலுவான புதிய ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணப்படம், 'மெட்ராஸ் ஆர்ட் வீக் எண்ட் 2025' விழாவின், நான்காவது பதிப்பில் நடைபெற்ற குழு விவாதத்தின்போது சிறப்புத் திரையிடலைப் பெற்றது. பாரம்பரியத்தையும் நவீன வடிவமைப்பையும் இணைக்கும் முயற்சியில் இண்டிகஸ் பெயிண்ட்ஸ் முன்னணிப் பங்கு வகிப்பதை இந்த நிகழ்வு வலியுறுத்துகிறது.
இந்த ஆவணப்படம் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக விளங்கும் பழைமையான கைவினைக் கலையான திருஷ்டி பொம்மையின் கதையை பதிவு செய்கிறது. நகரமயமாதல், மாறிவரும் நம்பிக்கைகள் மற்றும் கைவினைஞர்களுக்கான நிலைத்த வாழ்வாதாரம் இல்லாத நிலை காரணமாக, தலைமுறைகளாக வந்த கைவினைத் திறன்கள் இன்று அழிவின் விளிம்பில் நிற்கும் நிலையை இந்தப் படம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
தென் இந்தியா முழுவதும் வீடுகளின் வாசற்படிகள், கூரைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாரம்பரியமாக வைக்கப்பட்டு வந்த திருஷ்டி பொம்மை, தீய சக்திகளைத் தடுக்கக்கூடிய காவலனாக நம்பப்பட்டதுடன், மக்களின் நம்பிக்கையையும், மரபு நினைவையும் தலைமுறைகள் தோறும் உறுதிப்படுத்தி வந்துள்ளது.
இந்தப் படம், மங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கைவினையும் மக்களின் வாழ்க்கை மற்றும் மரபின் பிரதிபலிப்பாக இருப்பதை நினைவூட்டும் ஒரு செயல் அழைப்பாகத் திகழ்கிறது. இந்தச் செழுமையான பண்பாட்டுப் பின்னணியை ஆராயும் வழியாக, பாரம்பரியக் கைவினைகள் இன்றைய காலத்தில் நவீன வடிவமைப்பு நடைமுறைகளுடன் எவ்வாறு இணைந்து தொடர்ச்சியாக வாழ்கின்றன என்பதை இந்தப் படம் எடுத்துக்காட்டுகிறது.
இந்த ஆவணப்படம், திருஷ்டி பொம்மையை கடந்த காலத்தின் நினைவுச் சின்னமாக அல்லாது, அதன் குறியீட்டு சக்தியை தக்கவைத்துக்கொண்டு தொடர்ந்து வளர்ந்து வரும் உயிருள்ள பண்பாட்டு வடிவமாக முன்னிறுத்துகிறது. கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் பாலமாக இருந்து, பாரம்பரியத்தை நவீன கதைகளில் இணைக்கும் இண்டிகஸ் நிறுவனத்தின் பார்வையை உறுதிப்படுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.