

தமிழ்த் திரையுலகில் 1960-70-களில் நான்கு முனைப் போட்டி நடந்தது. இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு - மாருதிராவ், பீம்சிங் - விட்டல்ராவ், கே. சங்கர் - தம்பு, ஸ்ரீதர் - ஏ. வின்சென்ட். இதில் ஏ.வின்சென்ட் ஒளிப்பதிவை ஓவியமாக்கியவர். கருப்பு - வெள்ளையை வண்ணமாக்கி 'காதலிக்க நேரமில்லை' என்று சமூகப் படங்களுக்குச் சலங்கைக் கட்டியவர்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிப் படங்களில் பணிபுரிந்த அலோய்சியசு வின்சென்ட் 1928, ஜூன் 14-இல் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் பிறந்தார். தமிழ் 'வசந்த மாளிகை'யின் தெலுங்குப் படமான 'பிரேம் நகர்' என்ற படத்துக்கு ஃபிலிம் பேர் விருது வாங்கினார்.
என் நாடகம் 'அச்சாணி'யில் மேஜர் சுந்தர்ராஜன், சிவகுமார் நடித்து, 1971-இல் மாதம் இருபது நாள்கள் மேடையேறியபோது, ஒரு நாள் இவர் பிரபல மலையாள எழுத்தாளர் தோப்பில் பாசியுடன் வந்து நாடகத்தைப் பார்த்தார்.
அடுத்த நாள் 'ஜெனரல் பிக்சர்ஸ்' தயாரிப்பாளர் ரவியுடன் வந்து மலையாளம், தமிழ் உரிமையை என்னிடம் பெற்றார். என் முதல் ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திட்ட போது வானத்தில் மிதந்தேன். நான் அப்போது வின்சென்ட்டிடம், 'உங்கள் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிய வேண்டியவன்.
கதாசிரியராகப் பணிபுரியப்போவது என் அதிர்ஷ்டம். நீங்கள் ஜெமினி, பத்மினியுடன் 'எங்களுக்கும் காலம் வரும்' இயக்கிய பிறகு, என் குரு ஏ. பீம்சிங் தயாரிப்பில் 'பால் கடல்' என்ற நாடகத்தை இயக்க வந்த போது, தினமும் மாலை 'புத்தா பிக்சர்ஸ்' ஆபீசில் நான்தானே பிலஹரியின் திரைக்கதையைப் படிப்பேன்' என்றேன்.
அவர் சிறிது யோசித்து விட்டு, 'ஆமாம் நினைவு வருகிறது' என்றார். மேஜர் அந்த விவரத்தைக் கேட்டார்.
நான் மேஜரிடம் பீம்சிங் தயாரிப்பில் வின்சென்ட் டைரக்டராக ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, சத்யஜித்ரேயின் 'அபுர்சன்சார்' என்ற வங்காளப் படத்தைத் தழுவி ஒரு கதை விவாதிக்கப்பட்டது.
முதலில் கதையைக் கேட்ட வின்சென்ட் சம்மதித்து ஆபிசுக்கு வந்தார். முக்கோணக் காதல் வேண்டும் என்று பீம்சிங் சொன்னபடி மாற்றி எழுதி வின்சென்ட்டிடம் படித்த போது யாருக்கும் சொல்லாமல் ஆபிசிலிருந்து காரை எடுத்துக் கொண்டு போய்விட்டார். பீம்சிங் என்னை வின்சென்ட் வீட்டுக்கு அனுப்பிக் காரணம் கேட்டு வரச் சொன்னார்.
வின்சென்ட் என்னிடம், ' மலையாளப் படமாக இருந்த கதை வழக்கம் போல தமிழ்ப் படமாகி விட்டது' என்று கூறி, பீம்சிங் கொடுத்த அட்வான்ஸ் செக்கை என்னிடம் கொடுத்து அனுப்பி விட்டார் என்ற விவரத்தைச் சொன்னேன். 'அதற்குப் பரிகாரமாய் 'அச்சாணி' இருக்கும்' என்று வின்சென்ட் மலையாளம் கலந்த தமிழில் சொன்னார்.
எனக்கு ரூ.10,000 சம்பளம் பேசி, ரூ.6,000 முன் பணம் தந்தார்கள். அந்த ஒப்பந்தத்தில் சாட்சிக் கையெழுத்தை மேஜரும் வின்சென்ட்டும் போட்டார்கள். அப்போது மேஜர் 300 படங்கள் நடித்து முடித்த நிலையில் ஒரு படத்துக்குக் கூட அவர் 1000 ரூபாய்க்கு மேல் அட்வான்ஸ் வாங்கியதில்லை. 'காரைக்குடி நீங்கள் அதிர்ஷ்டசாலி' என்று எனக்குக் கை கொடுத்தார்.
அன்று இரவு மேஜர் வீட்டில் நாடகத்தில் நடித்த எல்லோருக்கும் இரவு விருந்து கொடுத்தேன். சிவகுமாரைத் தவிர எல்லோரும் கலந்துகொண்டார்கள்.
என்னை கேரளாவுக்கு அழைத்துச் சென்ற வின்சென்ட் , தோப்பில் பாசியுடன் கதை விவாதத்தில் ஒரு வாரம் தங்கியிருந்து பேச வைத்தார். என் முதல் படத்திலேயே கின்னஸ் சாதனையாளர் பிரேம் நசீர், ஆரம்பக் காலத்து சுஜாதா, கல்கத்தாவிலிருந்து நந்திதா போஸ் நடிக்க முடிவு செய்யப்பட்டது. அவர்களுடன் ஒரே ஒரு காட்சியில் ஜேசுதாஸ் பாடகராக நடித்தார்.
அப்போது தோப்பில் பாசி என்னிடம், 'இதுவரை மலையாளத்திலிருந்து தமிழுக்குத்தான் படங்கள், கதைகள் வந்திருக்கின்றன. தமிழிலிருந்து, அதுவும் நாடகத்திலிருந்து முதல் தடவையாக உங்கள் 'அச்சாணி' அதே பெயரில் வருவது பெருமையான விஷயம்' என்று பாராட்டினார். படம் வெற்றி அடைந்து கேரள அரசின் விருது பெற்றது. 'அச்சாணி' வெளியாகி கிடைத்த வசூலை, அதன் தயாரிப்பாளர் அரசாங்கத்துக்குப் பயன்பட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதன் பலன் 1972 முதல் இன்று வரை கொல்லம் நகரில் 'அச்சாணி நூலகம்' இயங்குவதையும், அதற்கு அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் வந்து பெருமைப்
படுத்தியதையும் ஒரு எழுத்தாளன் என்ற எத்தனையோ தேசிய விருதுகள் வாங்கியதற்குச் சமமாக எண்ணிப் பெருமைப்படுகிறேன்.
இவரை 2003-இல் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் பெருமைப்படுத்தியது. 'துலாபாரம்' என்ற காவியத்தை பல மொழிகளில் இயக்கி, சாரதாவுக்கு ஊர்வசி விருதைப் பெற்றுத் தந்தவர். வின்சென்ட் 2015, பிப்ரவரி 25-இல் காலமானார்.
அவருக்கு அஞ்சலி செய்ய அன்றைய முதல்வர் ஜெயலலிதா வருவதாக இருந்து, முடியாமல் போன நிலையில், தமிழ்நாடு அரசு மரியாதை செய்ய, அவர் மகன் ஒளிப்பதிவாளர் ஜெயனன் வின்சென்ட்டிடம் என் துக்கத்தைப் பகிர்ந்து வந்தேன்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.