

எனக்கு வயது 39. புதுதில்லியில் வசிக்கிறேன். நீண்ட காலமாக காற்று மாசு சூழலில் வசிக்க நேர்வதால், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மருந்துகள் சாப்பிடுகிறேன். இதை எப்படிக் குணப்படுத்தலாம்? மறதி நோயும் பாடாய்ப்படுத்துகிறது. அதற்கும் மருந்து உண்டா?
- பா.பாஸ்கர், புது தில்லி.
தலைநகர் தில்லியில் காற்று மாசின் அளவு சமீப ஆண்டுகளாக மோசமடைந்து வருகிறது. குறிப்பாக, குளிர்காலமான அக்டோபர் - பிப்ரவரி மாதங்களில் காற்று மாசு பனித்துளிகளுடன் ஒட்டிக் கொள்வதாலும், அவற்றைச் சுவாசிக்க நேர்வதாலும், அவை நுரையீரலில் தஞ்சமடைவதால் மூச்சிரைப்பு, கடும் இருமல் போன்றவை ஏற்படுகின்றன.
தற்சமயம் உளவியல் நிபுணர்கள் இந்தக் காற்று மாசு உடல் நலனை மட்டுமன்றி மனநலனையும் பாதிக்கிறது என்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள் அறிவுத்திறன் மற்றும் நினைவாற்றல் குறைபாடு, அரியவகை நோயான ஏ.டி.எச்.டி. எனப்படும் கவனச் சிதறல் நோய் ஆகியவற்றுக்கும் ஆளாகின்றனர் என்கிறார்கள். 'எமோநீட்ஸ்' என்ற உளவியல் ஆலோசனை வழங்கும் நிறுவனம், மாசு அதிகம் உள்ள நாள்களில் பலர் எரிச்சல், அமைதியின்மை, மனச்சோர்வு, மன இறுக்கத்தை அடைகின்றனர். உடல் நலப் பிரச்னைக்கு இணையாக மனநலப் பாதிப்பும் அச்சுறுத்தலாக உள்ளது.
காற்று மாசுக்கும் அறிவுத்திறன் குறைவது, நரம்பியல் கோளாறுக்கும் தொடர்பு உள்ளதை அவர்களின் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதனால் குழந்தைகள், முதியோர், ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
நீங்கள் காற்று மாசு சூழலில் நீண்ட காலமாக வசிப்பதால், 'அல்சைமர்' எனும் மறதி நோயும் உங்களைப் பாதித்திருக்கிறது. 'பார்கின்சன்' எனும் நடுக்கம் போன்ற நரம்பியல் நோய்களுக்கும் வழிவகுக்கும். காற்று மாசு உடலில் 'கார்ட்டிசால்' எனும் ரசாயன அளவை உயர்த்தி மனநிலையைப் பாதிக்கும். தொடர்ந்து இது நிகழும் போது நாள்பட்ட மன அழுத்தம் ஏற்படும். அதனால் தூசி நிறைந்த இடங்களுக்கு முகக் கவசம் அணிந்து செல்லவும்.
வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் படுக்கையில் படுப்பதையோ, சோபாவில் அமர்வதையோ தவிர்க்கவும். உடுத்தி இருக்கும் துணிகளை துவைப்பதற்காகப் போட்டுவிட்டு, சுத்தமாகக் குளித்த பின் தான் படுக்கவோ உட்காரவோ செய்ய வேண்டும். போர்வை, படுக்கை விரிப்பு, திரைச்சீலைகளை மிகவும் சுத்தமாகப் பராமரிக்கவும்.
நீங்கள் தற்சமயம் விற்பனையில் உள்ள 'நாசல் வாஷ்கிட்' பயன்படுத்தி மூக்கின் உட்புற ஜவ்வுகளின் சுகாதாரத்தைப் பாதுகாக்கலாம். அல்லது 50 எம்.எல். சிரஞ்சில் ஊசியை அகற்றிவிட்டு, மருத்துவமனையில் பயன்படுத்தும் சலைன் வாட்டரை நிரப்பி, மூக்கின் உள்ளே செலுத்தி சுத்தம் செய்யலாம்.
மூக்கின் வழியே உள்புற சவ்வுகளிலும், மூச்சுக் குழாய் மற்றும் நுரையீரல் காற்றுப் பைகளில் படியும் தூசியையும் வெளியேற்ற, இயற்கையே நுரையீரல் மற்றும் பிற பகுதிகளில் கெட்டிச் சளியை உற்பத்தி செய்து, தூசியை ஒட்ட வைத்து, இருமலை ஏற்படுத்தி வெளியேற்ற முயற்சிக்கிறது. இதில் ஏற்படும் தோல்வியால், சளி அண்டி விடுகிறது. அது ஏற்படுத்தும் அடைப்பே பெரும் உபாதைகளுக்கு வித்திடுகிறது.
'நஸ்யம்' எனும் மூலிகைத் தைலங்களை மூக்கினுள் செலுத்தி, சளியை உருக்கி வெளியேற்றுதல், தூசியுடன் அடைபட்டுள்ள கபதோஷத்தை வாந்தி சிகிச்சை மூலம் வெளிக் கொணறுதல்; திரிகடுகம், அதிமதுரம், திரிபலை ஆகியவற்றின் சூரணக் கலவையுடன் தேன் குழைத்து காலை, இரவு உணவுக்குப் பிறகு நோய் அடக்குமுறை சிகிச்சை மேற்கொள்ளுதல், உணவில் அலர்ஜியை துரிதப்படுத்தும் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையை வெகுவாகக் குறைத்தல், பகல் தூக்கம், குளிர்பானங்களைத் தவிர்த்தல் போன்றவை நல்லது.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் தாளீச பத்ராதி சூரணம், ஹரித்ரா கண்டம், அகஸ்திய ரசாயனம் லேஹியம், தலைக்கு அஸன வில்வாதி தைலம், மூக்கினுள் மூலிகைப் புகை விடுதல், மூலிகைத் தைலங்களால் வாய் கொப்பளித்தல் போன்றவற்றால் நல்லதொரு உடல் பாதுகாப்பை வளர்த்துக் கொள்ளலாம். சுக்கும், கோரைக்கிழங்கும் சேர்த்துக் கொதிக்க விட்ட வெந்நீரையே உணவுக்குப் பிறகு குடிப்பதற்காகப் பயன்படுத்துதல் உங்களுக்கு நன்மை தரும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.