கங்கா சாகர் மேளா!

கும்பமேளாவுக்கு அடுத்து நாட்டில் நடத்தப்படும் மிகப் பெரிய மேளாவான கங்கா சாகர் மேளா, மேற்கு வங்கத்தில் உள்ள கங்கா சாகரில் ஐனவரி 10 முதல் 16 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கங்கா சாகர் மேளா!
Updated on
1 min read

கும்பமேளாவுக்கு அடுத்து நாட்டில் நடத்தப்படும் மிகப் பெரிய மேளாவான கங்கா சாகர் மேளா, மேற்கு வங்கத்தில் உள்ள கங்கா சாகரில் ஐனவரி 10 முதல் 16 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை வங்க மொழியில் 'பெளஷ் சங்கராந்தி' என அழைக்கின்றனர்.

மகர சங்கராந்தி ஸ்நானம் நடைபெறும் ஜனவரி 14- இல் வங்காள விரிகுடாவில் கங்கை சங்கமம் ஆகும் இடத்தில் நீராடும் பக்தர்கள் கபில முனிவரை தரிசிப்பர். இந்த மேளா கபிலர் கோயிலுக்கு எதிரே நடத்தப்படுகிறது. 2024-இல் நடைபெற்ற கங்கா சாகர் மேளாவில் 1.10 கோடி பக்தர்கள் பங்கேற்றனர்.

'சபா தீர்த்த பாரா பாரா பாரா கங்கா சாகரா ஏக பாரா' என்ற வங்க மொழி வரிக்கு, 'மீண்டும் மீண்டும் அனைத்துத் தீர்த்தங்களுக்கும் சென்று நீராடுங்கள்.ஆனால், கங்கா சாகர் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே...' என்பதே பொருள்.

மகாபாரதத்தின் வனப்பருவத்தில் கங்கா சாகர் குறித்துக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, பாண்டவர்கள் கெளசிக் நதிக் கரையிலிருந்து பயணித்து கங்கை, கடல் (சாகரம்) சங்கமித்த கங்காசாகரை அடைந்தனர் என்று வருகிறது. இதில் குறிப்பிட்டுள்ள இடம், பாகிரதி-ஹுக்னி நதிகளின் கழிமுகத்தில் அமைந்துள்ள சாகர்த்வீப்பில் உள்ள கங்கா சாகர் ஆகும்.

கொடிய விலங்குகள், கொள்ளையர்களின் இடையூறுகளை மீறி பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். 'மொக்ரஹீத்' என்ற பகுதியில் இருந்த மோக் மக்களும் பல்வேறு தொல்லைகளை அளித்துள்ளனர்.

1336-ஆம் ஆண்டிலேயே இங்கு ஐந்து நாள்கள் திருவிழா நடைபெற்று, மூன்று நாள்கள் மக்கள் புனித நீராடியுள்ளனர்.

1914-இல் வெளியான மாவட்ட வர்த்தமானில் எழுதிய ஒரு தகவலின்படி, இங்குள்ள கபிலர் கோயில் ஒரு மூங்கில் வேலியால் சூழப்பட்ட ஒரு தற்காலிக அமைப்பினுள் இருந்துள்ளது. கோயிலுக்கு வெளியே உள்ள பெரிய ஆலமரத்தின் கீழ் ராமர், அனுமன் சிலைகள் இருந்தன எனக் கூறப்படுகிறது.

தற்போதைய கட்டுமானம் 1974-இல் கட்டி முடிக்கப்பட்டது. இங்குள்ள மூன்று சந்நிதிகளில் கங்கையம்மன், கபில முனிவர், சாகர் ராஜா ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

கொல்கத்தாவிலிருந்து 118 கி.மீ. தொலைவில் உள்ள கங்கா சாகருக்கு பயணிப்பது வித்தியாசமான அனுபவம். கொல்கத்தாவிலிருந்து லாட் நம்பர் -8 என்ற இடத்துக்கு முதலில் பேருந்தில் செல்லவேண்டும்.

அடுத்து அங்கிருந்து கச்சுப் பேரியா பகுதிக்கு படகில் செல்ல வேண்டும். கச்சுப் பேரியாவிலிருந்து கங்கா சாகருக்கு மீண்டும் பேருந்திலும், கடைசியாக அங்கிருந்து இறங்கி கடலுக்கு அரை கிலோ மீட்டர் நடந்தும் செல்லவேண்டும். இங்குள்ள பிரம்மாண்டமான படகில் முந்நூறுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் கார், ஜீப்புகளும் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com