கோலிவுட் ஸ்டூடியோ!

விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள 'புக்கிட் ஜலீல்' ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
கோலிவுட் ஸ்டூடியோ!
Updated on
3 min read

விஜய் சொன்ன குட்டிக் கதை!

விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள 'புக்கிட் ஜலீல்' ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படக்குழுவினர் பலரும் மலேசியா சென்றனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்து வந்திருந்தார் விஜய்.

மேடையில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், 'ஒரு ஆட்டோக்காரர், கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக்கொண்டு போறார். அப்போ பெரிய மழை பெய்திட்டு இருக்கு. அந்த ஆட்டோக்காரர் அவர்கிட்ட இருந்து குடையைக் கொடுத்து எடுத்துட்டுப் போகச் சொல்றாரு. 'இதை நான் யார்கிட்ட திருப்பிக் கொடுக்கிறது?'ன்னு அந்தப் பெண் கேட்கிறாங்க. அதுக்கு அந்த ஆட்டோக்காரர், 'தேவைப்படுகிற யாருக்காவது அதைக் கொடுங்க'னு சொல்லிட்டுப் போயிடுறாரு.

அந்தக் கர்ப்பிணிப் பெண், ஹாஸ்பிடல் வாசல்ல மழைக்கு பயந்து நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவருக்கு அந்தக் குடையைக் கொடுத்து எடுத்துட்டுப் போகச் சொல்றாங்க. அதுக்கு அந்தப் பெரியவர், 'நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. இதை யார்கிட்ட திரும்பக் கொடுக்கிறது?'ன்னு கேட்கிறாரு. 'தேவைப்படுபவர்களுக்கு அதைக் கொடுத்துட்டுப் போயிடுங்க'ன்னு கர்ப்பிணிப் பெண் சொல்றாங்க.

அந்தப் பெரியவர் குடையை வாங்கிட்டு பஸ் ஸ்டாப் பக்கம் போறாரு. அங்க பூ விக்கிற அம்மாகிட்ட அந்தக் குடையை அவர் கொடுக்கிறார். அந்த அம்மா மற்றொரு குழந்தைகிட்ட குடையைக் கொடுத்து, 'மழையில நனையாத, குடையை வச்சுக்கோ'ன்னு சொல்றாங்க. அந்தக் குழந்தை குடையோட வீட்டுக்குப் போறாங்க. வீட்ல அந்தக் குழந்தையோட அப்பா 'குடையில்லாமல் குழந்தை மழையில நனைஞ்சிட்டு வரும்'ன்னு யோசிச்சுட்டு இருக்காரு.

அந்த அப்பா வேற யாருமில்லை, அவர்தான் ஆட்டோக்காரர். அந்தக் குடை அவர் கொடுத்த குடைதான். முடிஞ்ச வரைக்கும் சின்ன சின்ன உதவிகள் செஞ்சுப் பாருங்க, லைஃப் சுவாரசியமா இருக்கும்!' என்றார்.

வைரலாகும் ராயின் பழைய பேட்டி!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக இரு தரப்பினரும் கருத்துத் தெரிவிக்காமல் இருந்தனர்.

கடந்த ஆண்டு நடந்த முகேஷ் அம்பானி மகன் திருமணத்துக்கு ஐஸ்வர்யா ராய் தனியாகத்தான் வந்தார். அதே சமயம் அமிதாப்பச்சன் குடும்பம் தனியாக வந்தது. அதோடு ஐஸ்வர்யா ராய் அமிதாப் பச்சன் குடும்பத்திலிருந்து பிரிந்து, தனது மகளுடன் தனியாக வசிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், தற்போது ஐஸ்வர்யாராயும், அபிஷேக் பச்சனும் நிகழ்ச்சிகளில் சேர்ந்தே கலந்துகொள்கின்றனர். இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியது இப்போது வைரலாகி இருக்கிறது. இதில் பேசிய இருவரும் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை நடத்தியவர் விவாகரத்து குறித்து ஐஸ்வர்யாராயிடம் பேசியபோது, அது குறித்து கருத்துத் தெரிவித்த ஐஸ்வர்யாராய், 'விவாகரத்து போன்ற விஷயங்கள் குறித்து நாங்கள் நினைத்துக்கூட பார்த்ததில்லை' என்று குறிப்பிட்டார்.

அதேசமயம் அபிஷேக்பச்சன் தனது மனைவியிடம் முதன் முதலில் எப்படி தனது காதலைத் தெரிவித்தேன் என்பது குறித்த தகவல்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். 'அமெரிக்கப் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது ஹோட்டல் அறையில் பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது ஐஸ்வர்யாராயிடம், 'என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா?' என்று கேட்டேன்' என்று தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி ஏன்? - ஜான்வி விளக்கம் !

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், எப்போதும் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் தனது காதலனை அழைத்துச் செல்வது வழக்கம். ஜான்வி கபூர் தனது அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இது குறித்து நடிகை காஜோல் மற்றும் டிவிங்கிளின் டி.வி. ஷோவில் கலந்துகொண்டு பேசும்போது, ஜான்வி கபூர் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஜான்வி கபூர் கூறுகையில், 'எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. ஆனால், இந்த ஆலோசனையை இளம்பெண்கள் ஏற்கவேண்டும் என்று நான் விரும்பவில்லை. 'உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எதையும் செய்' என்பதில் நான் பெரிய அளவில் நம்பிக்கை கொண்டவள்.

நான் மிகவும் புத்திசாலி, பழமைவாதி. மேலும் நான் செய்வது சரியானது என்று நினைப்பவள். நிச்சயமாக, எனக்கு என் அம்மாவின் வழிகாட்டுதல் இருந்தது. அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மேலும் ஓர் இளம் பெண் இது போன்ற விடியோவைப் பார்த்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால், அதில் ஏதாவது தவறு நடந்தால் அது மோசமாகிவிடும். இவ்விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

எனது அம்மா தான் நடிக்க வேண்டும் என்று ஒருபோதும் விரும்பவில்லை; என் மீதான பாதுகாப்பைப் பற்றி சிந்தித்தார். நான் நடிகையாகக் கூடாது என்பதில் என் அம்மா கண்டிப்பாக இருந்தார். மக்கள் என்னை உடலில் முடி, இரட்டை சடை மற்றும் மீசையுடன் பார்த்தாலும் பரவாயில்லை என்பது போல் இருந்தார்.

இது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. ஏனென்றால், என் டீனேஜ் பருவத்தில் சமூக ஊடகங்களில் இது பெரிதாக விவாதிக்கப்பட்டது. எனவே தான் அறுவை சிகிச்சை செய்தேன்' என்று தெரிவித்தார்.

தன் காதலரைப் பற்றியும் ஜான்வி கபூர் பேசினார். காதலர் சிகர் பஹாரியா நன்றாக குதிரை சவாரி செய்யக்கூடியவர் என்று கூறினார். ஜான்வி கபூர் தனது உதட்டை சரிசெய்ய பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com