எல்லாவற்றையும் வாசியுங்கள்! பேராசிரியர் இரா.காமராசு நேர்காணல்

சாகித்திய அகாதெமியின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரா.காமராசு நேர்காணல்.
இரா.காமராசு.
இரா.காமராசு.
Updated on
3 min read

"தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும். அதனால்தான் தற்போது அரசுப் பணித் தேர்வுகளில் 'அடிப்படைத் தமிழ்' தேர்விலும் கூட ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெற முடியாத நிலை. பள்ளி இறுதித் தேர்வுகளிலும்கூட மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற நிலைதான். எந்தப் பணிக்கும் மொழி ஆளுமை முக்கியம். பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஒரு பாடமாக இணைக்கப்பட்டுள்ளதைப் போல், மருத்துவப் படிப்பிலும் கற்பிக்க வேண்டும். இணையம், சமூக ஊடகங்களின் பெருக்கத்தால் அச்சு ஊடகங்களில் மட்டுமல்ல; மொழிப் பயன்பாட்டிலும் பாதிப்புகள் உருவாகி உள்ளன. தமிழ் வரி வடிவத்தை அறியாமலேயே ஆங்கில எழுத்துகளைக் கொண்டே தமிழை இளைய தலைமுறையினர் புழங்குகின்றனர். இயந்திர மொழிபெயர்ப்பால் தமிழ் மரபு பாதிக்கப்படுகிறது. மொழிக்கு அடிப்படையான பால், திணை, எண், காலம், இடம் போன்றவற்றைக்கூட பேச்சுமொழியில் தவறு செய்கின்றனர்.'' என்கிறார் சாகித்திய அகாதெமியின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரா.காமராசு.

திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசல் கிராமத்தில் பிறந்த இவர், ஆய்வுத் தமிழ்ப் பணியில் ஈடுபட்டதற்காக தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருதை அண்மையில் பெற்றிருக்கிறார். இலக்கியம், கல்வி, வரலாறு, பண்பாடு, மார்க்சியம், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட துறைகளில் பங்களித்து வரும் இவர், 45 நூல்களை வெளியிட்டுள்ளார். கவிதை, சிறுகதை, திறனாய்வு, பேச்சு, பயணம்... எனத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வருகிறார்.

அவரிடம் பேசியபோது:

' மேலவாசல் கிராமத்தில்தான் 1931- ஆம் ஆண்டில் தென் இந்தியாவின் முதல் நடமாடும் மாட்டுவண்டி நூல் நிலையத்தை எஸ்.வி.கனகசபைப் பிள்ளையின் முயற்சியால், நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் தொடங்கிவைத்தார்.

எளிய குடும்பப் பின்புலத்தில் பிறந்த நான் முதல் தலைமுறையாக, கற்க வந்தவன். ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். மேடைப் பேச்சில் ஆர்வம் உண்டு. சமூக இயக்கங்களில் பங்கேற்றேன். கலை, இலக்கியப் பெருமன்றத்தில் செயல்பட்டேன்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பெ.மாதையனிடம் முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்தேன். அறிவியல் தமிழ் அறிஞர் இராம. சுந்தரம் என்னை ஆற்றுப்படுத்தினார். மார்க்சிய சமூகவியல் அறிஞரும் தமிழ்நாட்டு நாட்டார் வழக்காற்றியல் தந்தையுமான பேராசிரியர் நா. வானமாமலை குறித்து என் ஆய்வு அமைந்தது. மார்க்சியத் தத்துவத்தை சமூகவியல் கண்ணோட்டத்தில் கலை, இலக்கிய ஆய்வுகளுக்குப் பயன்படுத்திய முன்னோடி அவர்.

அவரின் ஒட்டுமொத்தப் படைப்புகளில் வரலாறு, பண்பாடு, நாட்டார் வழக்காற்றியல், கலை, இலக்கியம் சார்ந்த ஆய்வு முறைகளைக் கண்டறியும் முயற்சிகள் பெரும் பணி. நா.வா.வின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த அறிஞர்களின் ஆய்வுகளைப் பின்தொடர்ந்து மதிப்பிட்டதும் இதில் அடங்கும்.

பேராசிரியர்கள் ஆ. சிவசுப்பிரமணியன், எஸ். தோத்தாத்ரி, மே.து. ராசுகுமார், தி.சு. நடராசன், பொன்னீலன், சி. சொக்கலிங்கம், ந .முத்துமோகன், நா. இராமச்சந்திரன், கா. சிவத்தம்பி, வீ. அரசு உள்ளிட்ட பலர் என்னுள் தாக்கங்களை உருவாக்கினர். 'நா. வானமாமலை ஆராய்ச்சி தடம்' எனக்கு ஆய்வு முகவரியைத் தந்தது.

பள்ளியில் சில ஆண்டுகள் பணியாற்றியவுடன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தேன். இலக்கியம் கற்பித்தலைப் பெரு விருப்போடு செய்தேன். நவீன இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, இலக்கிய வரலாறு சார்ந்து தொடர்ந்து இயங்கினேன். தமிழில் சிற்றிதழ்களும், இலக்கியவாணர்களும் உருவாக்கியிருந்த திறனாய்வு மரபும், கல்விப் புலத் திறனாய்வு மரபும் முக்கியமானவை. கல்விப் புலத் திறனாய்வில் செயல்பட்ட பல முன்னோடிகளுக்குப் பின்னர் நான் வந்து சேர்ந்தேன். ஆனால் சூழல் சோர்வாக இருந்தது. திறனாய்வில் கவனம் குறைவாக இருந்தது. படைப்பும், வாசிப்பும், திறனாய்வுத் தேடலும் என்னுள் திறனாய்வுத் திசையைத் தேர்ந்தெடுக்க வைத்தது.

நூல்கள் வழி ஆசிரியத்துவம் ஆனவர்கள் பலர். நேரடித் தொடர்பில் இலக்கியத் தடத்தில் கவிஞர்கள் சிற்பி, கே.சி.எஸ். அருணாசலம், எழுத்தாளர்கள் பொன்னீலன், தனுஷ்கோடிராமசாமி, ஆய்வுத்தளத்தில் தொ.மு.சி.ரகுநாதன், கா.சிவத்தம்பி, ஆ.சிவசுப்பிரமணியன், ந.முத்துமோகன் என்று பலரைச் சுட்ட முடியும். ஆய்வு முறையியலை என் பேராசிரியர் பெ.மாதையனிடமே கற்றேன்.

கவிதை, சிறுகதை, நாவல் சார்ந்த திறனாய்வுகளுடன் திறனாய்வாளர்களின் திறனாய்வுகள் குறித்த மதிப்பீட்டையும் உருவாக்க முயன்றேன். புதிய இலக்கியக் கோட்பாடுகள், அணுகுமுறைகள் ஒவ்வொரு பத்தாண்டு பரப்பிலும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இலக்கிய நாட்டுப்புறவியல், இனவரைவியல், இலக்கியப் பண்பாட்டு மானிடவியல் போன்ற பல போக்குகளில் இலக்கிய வழக்காறுகளை அணுகும் முறை முன்னெடுக்கப்படுகிறது. தமிழ் நாவல்கள்: பண்பாட்டு எழுத்து எனும் என்னுடைய நூல் இவ்வகையில் முக்கியமானது.

புழங்கு பொருள்கள் வழி வரலாற்றையும் பண்பாட்டையும் கட்டமைக்கும் முயற்சிகளும் நடைபெறுகிறது. இதில் தாவர வழக்காறுகள் பகுப்பில் நான் எழுதிய 'புகையிலை வரலாறும் வழக்காறும்' நூல் குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சிற்றிதழ்கள் வழி உருவான திறனாய்வுப் போக்குகள் பற்றியும், ஆராய்ச்சி, நிகழ் ஆய்விதழ்கள் குறித்தும் நூல்களை எழுதி உள்ளேன்.

இலக்கிய வரலாறு முழுமையாக உருவாக்கப்படவில்லை. சமூக வரலாறு, இலக்கிய வரலாறு ஆகிய இரண்டுக்குமே தனி நபர்களின் பங்களிப்பு முக்கியமானது. அந்த வகையில் பல ஆளுமைகள் குறித்த மதிப்பீட்டைத் தனியாகவும், தொகுப்பாகவும் உருவாக்கி உள்ளேன். கால்டுவெல், தனிநாயகம் அடிகள், வ. சுப. மாணிக்கம், சுப்புரெட்டியார், நா. வானமாமலை, தி.க. சிவசங்கரன், சு.சமுத்திரம், தனுஷ்கோடி ராமசாமி, கே. ஏ. குணசேகரன் ஆகியோர் குறித்த நூல்கள் இலக்கிய வரலாற்று எழுத்தியலுக்கு உதவக் கூடியவை.

இன்றைய எழுத்தாளர்களில் அதிக அளவில் எழுதி உள்ளவர்கள் பற்றிகூட முறையான, முழுமையான திறனாய்வுகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பட்டியல் படுத்துதல், மதிப்புரைகள் எழுதுதல் மட்டும் திறனாய்வுகள் ஆகா.

கவிதை, சிறுகதை, நாவல் எழுதுகிறவர்கள் எழுத்தாளர்கள் எனக் கொண்டாடப்படுகிறார்கள். ஒரே ஒரு படைப்பை எழுதி ஒரு பரிசை வென்று விட்டால் வரலாற்றில் இடம் பிடித்து விடலாம். ஆனால், திறனாய்வுப் பணி கடினமானது. நீண்ட காலம் செய்ய வேண்டியது. இன்றைய நிலையில் படைப்புக்கு ஈடாக அதிக உழைப்பைக் கோருவது. அதேசமயம் அதற்கு உரிய அங்கீகாரம் இல்லை. ஆய்வும், திறனாய்வும் அறிவுசார் கருத்தியல் கட்டமைக்க அடிப்படையானவை. இவற்றின் முக்கியத்துவத்தை நாம் இன்னும் உணரவில்லை.

இலக்கியப் படைப்புகளின் உருவாக்கத்தில் 'அழகியல்' முக்கியப் பங்கு வகிக்கிறது. இலக்கியத் திறனாய்வுப் போக்கைத் தீர்மானிப்பது இந்த 'அழகியலை' இனம் காண்பது தான். மார்க்சிய அழகியல் தொடங்கி மாற்று அழகியல் வரை ஏராளம் வகைப்படுத்துதல்கள் உருவாகி உள்ளன. நவீனக் கோட்பாடுகள், அணுகுமுறைகள் ஆகியவற்றைத் திறனாய்வுக் கருவிகளாகப் பயன்படுத்தும் நோக்கும் போக்கும் அதிகரித்துள்ளது. எழுபது, எண்பதுகளில் இருந்த சிற்றிதழ் சூழல் தற்போது இணைய ஊடகத்தில் நிகழ்கிறது. அழகியல், கருத்தியல் இரண்டையும் கவனப்படுத்தும் திறனாய்வுகளின் தேவை அதிகரித்திருக்கிறது.

தஞ்சை வட்டாரத்தில் அதிகம் உள்ள தாவரங்கள் குறித்த வரலாற்றையும் வழக்காறுகளையும் ஆய்வு செய்திட முனைகிறோம். அந்த வகையில் 'வெற்றிலை' பற்றிய ஆய்வைத் தொடங்கி உள்ளேன். நாட்டார் தெய்வங்களையும் உள்ளடக்கி வழிபாட்டு, சடங்குகள், வழக்காறுகள் குறித்த ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருகிறேன். ஒன்றுபட்ட தஞ்சையின் சமூக வரலாற்றுக்கு வாய்மொழி வரலாற்றுத் தரவுகளைத் திரட்ட வேண்டும் என்பதும் ஆவல். நாட்டார் நிகழ்த்துக் கலைகளையும், கலைஞர்களையும் ஆவணப்படுத்திடவும் முயல்கிறேன்.

தமிழ்நாட்டில் ஊர்கள்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடக்கின்றன. பெரிய நகரங்களில் பிரம்மாண்ட நூலகங்கள் அமைக்கப்படுகின்றன. பள்ளிகள், கல்லூரிகள் வாசிப்பை மையமிட்டு பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனாலும் புத்தக வாசிப்பு குறைவாகவே உள்ளது. குழந்தைப் பருவத்திலிருந்தே வாசிப்பை ஒரு பண்பாடாக உருவாக்கிட வேண்டும். நூல்களையும், படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்த வேண்டும். எழுத்து, இலக்கியம் என்பது பண்பாட்டின் அடித்தளம். வாழும் சமூகத்தின் அடையாளம் என்பதை எல்லா மட்டங்களிலும் உணர, உணர்த்த வேண்டும்.

திறந்த மனதுடன் எல்லாவற்றையும் வாசியுங்கள். தமிழுடன் பிற மொழி அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான சமூகக் கருத்தியலை உருவாக்கிக் கொள்ளுங்கள். நவீனக் கோட்பாடுகள், அணுகுமுறைகளைக் கற்பதுடன் மரபையும் கவனம் கொள்ளுங்கள். பல்துறை கூட்டாய்வைக் கைக்கொள்ளுங்கள். நீங்கள் ஈடுபடும் துறையின் முன் சாதனைகளையும், விடுபடல்களையும் தெளிந்து அறிந்து கொள்ளுங்கள்.

என்னுடைய நூல்கள் பள்ளி, கல்லூரிகளில் பாடநூல்களாக உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, திருப்பூர் தமிழ்ச் சங்கம், பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், கலை இலக்கியப் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் இலக்கியப் பரிசுகளை அளித்துள்ளன. நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் சிறந்த எழுத்தாளர் விருது, திருக்குறள் பேரவை வழங்கிய குறள் நெறிச் செம்மல் விருது, சிறந்த பேராசிரியர் விருது, சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை இலக்கிய விருது உள்ளிட்டவற்றை என் இலக்கிய, ஆய்வுப் பங்களிப்புக்காகப் பெற்றுள்ளேன். தமிழ்நாடு அரசின் அளித்த விருதானது என் ஆய்வுக்கும், உழைப்புக்குமான அங்கீகாரம் என்பதோடு, மேலும் ஆய்வுத்துறையில் பயணிக்க உந்துசக்தியாக அமையும்.'' என்றார்.

-சி.சித்தார்த்தன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com