காத்திருப்புகள்

ஒருவருக்கு வயசாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
காத்திருப்புகள்
Updated on
5 min read

ஒருவருக்கு வயசாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

அட... ரொம்ப சுலபம் ஸார் அது. வேளை நேரம் இல்லாமல் தூக்கம் வரும். அதுதான் வயசாகிவிட்டதற்கான ஒரே அடையாளம். சந்தேகமே வேண்டாம்.

என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன். ராத்திரி பூராவும் கொட்டக் கொட்ட விழித்திருந்து விடிகாலையில் நான்கு மணிக்குக் குறட்டை பிறக்கும். இன்னும் சிலநாள் ஏடாகூடமாகக் காலை பதினொரு மணிக்குமேல் தூங்கிவிட்டு அந்திவேளையில் விழிப்பு வந்து காலையா, மாலையா என்று புரிபடாமல் புத்திதடுமாறும்.

இது எல்லாவற்றையும்விட முக்கியம், எப்பொழுது நாம் தூங்கக்கூடாதோ அந்தச் சமயத்தில்தான் நித்திராதேவி 'ஹலோ டார்லிங்' என்று நமக்கு வாட்ஸப் அனுப்புவாள்.

இன்றைக்கு மதியம் இரண்டு மணிவாக்கில் எனக்கும் அந்த வாட்ஸப் செய்தி வந்தது.

'ம்ஹூம். அதெல்லாம் வேண்டாம். இந்த நேரத்தில் தூங்கினால் காரியம் எல்லாம் கெட்டுவிடும்' என்று நினைத்தபடியே நான் தூங்கிப்போனேன்.

எழுந்து பார்த்தால் மணி நாலு இருபத்து மூன்று.

ஓ மைகாட்.

'கெளஷிக்கை ஏற்றி வரும் ஸ்கூல் பஸ் இந்நேரம் அவனை சக்தி மெடிக்கல்ஸ் ஸ்டாப்பிங்கில் இறக்கிவிட்டுக் கிளம்பியிருக்குமே.'

பரபரப்புடன் எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டேன்.

நான்... சண்முகம். வயது எழுபது. சுமார் நாற்பத்தைந்து வருடம் முன்பு தாலுகாஆபீஸில் கிளார்க்காக சேர்ந்து, ரெவினியூ இன்ஸ்பெக்டர், டெபுடி தாசில்தார், தாசில்தார் பதவி வரையில் தொட்டுவிட்டுப் பணி ஓய்வு பெற்றவன். பணி ஓய்வு என்பது ஆஃபீஸூக்கு மட்டும்தான். வீட்டுப்பணி என்பதற்கு ஓய்வு ஏது? வீட்டு வாசலில் தொங்கும் 'சண்முகம், ஓய்வு பெற்ற தாசில்தார்' என்ற பெயர்ப்பலகை ஒன்றுதான் என்னுடைய ஒரே ஆறுதல்.

ஓய்வு பெறும் நாள் வரையில் அலுவலகத்தில் உள்ள கீழ்நிலைப் பணியாளர்களும், மனு கொடுக்க வரும் பொதுமக்களும் தெரிவிக்கும் வணக்கங்களையும், ஸலாம்களையும் தலையசைப்பில் ஏற்று மரத்துப்போன மனசு வீட்டிலும் அதே மரியாதையை எதிர்பார்த்தால் முடிகிறதா? அதிலும் என் மகனும் மருமகளும் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் அவர்களுடைய ஏழுவயதுக் குழந்தைக்குச் சம்பளம் இல்லாத ஆயாவாக இருப்பவனுக்கு என்ன மரியாதை கிடைத்துவிடும்?

என்ன கேட்கிறீங்க, ஓர் ஆம்பிளை எப்படி ஆயாவாக முடியும் என்றா? ஆயா வேலையை அந்த ஆம்பிளை செய்தால் அவனும் ஒரு ஆயாதானே? ஆயாவுக்குத் தமிழில் ஆண்பால் வார்த்தை என்ன என்று யாராவது சொன்னால் தேவலை. 'பேபி ஸிட்டர்' என்ற ஆங்கில வார்த்தை கொஞ்சம் கெளரவமாக இருக்கும்.

எல்லாம் சரி. பெயரில் என்ன இருக்கிறது. ஆயா வேலை பார்த்தால் ஆயாதான். ஆக, நான் ஓர் எழுபது வயது ஆயா. அது மட்டுமா? இந்த ஆயாவின் கடமை என்பது வீட்டோடு முடிந்துவிடும் வேலையில்லையே.

ஏழு வயதுப் பேரன் கெளஷிக்கைக் காலையில் எட்டு மணிக்கெல்லாம் அழைத்துச் சென்று சக்தி மெடிக்கல்ஸ் ஸ்டாப்பிங்கில் காத்திருந்து பள்ளிப்பேருந்தில் ஏற்றிவிடவேண்டும். மீண்டும் மாலை நாலேகால் மணிக்குத் திரும்ப அழைத்து வரவேண்டும்.

இத்தனை பெரிய பொறுப்பு வகிக்கும் எனக்கு, மதியம் சரியாக இரண்டரை மணிக்குத் தூக்கம் வருவதை என்னவென்று சொல்வது?

மனைவி ஜீவிதமாக இருந்தவரையில் 'ஜானு, இன்னிக்கு ஒரு நாள் நீ போய் கெளஷிக்கை அழைச்சுக்கிட்டு வாயேன்' என்று கொட்டாவி விட்டபடி சொல்லுவேன்..

ஜானகியும், 'ஆமாம், இன்றைக்கு ஒரு நாள்தானா, முக்கால்வாசி நாள் நான்தான் போய்ட்டு வர்றேன். நீங்க நல்லா வீட்டுலயே குறட்டை விட்டுக்கிட்டிருங்க. இன்னிக்கு ஈவினிங் காபியைக் கட் பண்ணினால், அப்புறம் நாளையிலேர்ந்து எப்பிடித் தூக்கம் வருதுன்னு பார்க்கிறேன்' என்றபடி டாண் என்று மூணரைக்கெல்லாம் கதவை வெளிப்பக்கம் பூட்டிக்கொண்டு கிளம்பிவிடுவாள். கிழவிக்கு நைட்டியைக் கழற்றிவிட்டுப் புடவை கட்டிக்கொள்ளச் சோம்பேறித்தனம்.

'சரிதான் ஜானு, தெருவுல இறங்குறதுனாலே புடவைதானா, நைட்டி மேலே சும்மா ஒரு டவலைப் போட்டுக்கிட்டுதான் போயேன். யார் உன்னைக் கேட்கப் போறா?' அனுசரணையாகத்தான் கேட்பேன்.

கிழவி 'வள்' என்று விழுவாள்.

'நான் நைட்டியில கிளம்பினால் என்ன, புடவை கட்டிக்கிட்டுக் கிளம்பினால் உங்களுக்கென்ன... உங்களுக்குத் தேவை பகல் தூக்கம். கும்பகர்ணனுக்கு அண்ணன் பகல் தூக்கம் போட்டால் காபி கிடையாது' என்று சொன்னாலும், கொஞ்ச நேரத்தில் ஜானு அதை மறந்துவிடுவாள். பேரனையும் அழைத்து வந்துவிட்டு, என்னையும் 'இந்தாங்க காபி' என்று ஆவி பறக்கும் தம்ளரோடு உலுக்கி எழுப்பும்பொழுது, ஹால் கடிகாரத்தில் மணி ஐந்தைத் தொட்டிருக்கும்.

தூக்கம் கலைந்து எழுந்து 'கெளஷிக்!' என்று நான் குரல் கொடுக்கவும், 'ஹாய் தாத்தா, இன்னிக்கு நீங்க ஏன் வரலை?' என்று சின்னதாய்க் கோபக்குரல் கொடுக்கும் பேரன் கெளஷிக் சோபாவின் மேல் அமர்ந்து ஹோம் ஒர்க் நோட்டுகளில் தீவிரமாக எழுதிக்கொண்டிருப்பான்.

தாத்தா அழைத்துவந்தால் சிப்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம் என்று ஏதாவது தனக்குக் கிடைக்கும். பாட்டியிடம் ஒன்றும் வேலைக்கு ஆகாது என்ற பரிதவிப்பு அவனுக்கு.

'ஸாரிடா கண்ணு! நாளைக்கு நான் நிச்சயமா உன்னை பிக்கப் பண்ணிக்க வர்றேண்டா செல்லம்' என்றபடியே முகம் கழுவிக்கொண்டு காபியின் சூடு ஆறுவதற்கு முன்பாக அதன் மணத்தை ஒருதரம் உள்ளிழுத்துவிட்டுப் பிறகு ருசித்து உறிஞ்சிக் குடித்து விட்டுக் கோயிலுக்குச் செல்ல ஆயத்தமாவேன்.

இதெல்லாம் போன வருஷத்துக் கதை. புண்ணியவதி ஜானு முந்திக் கொண்டாள். ஜானு சுவர்க்கம் புகுந்த பிறகு குட்டிப்பையன் கெளஷிக்கைக் காலையில் எட்டு மணிக்கு முன்பாகவே அழைத்துச் சென்று ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றுவதும், மாலையில் நாலேகாலுக்கு அழைத்துவருவதும், இரவு ஏழு மணிவாக்கில் மகனும் மருமகளும் ஒன்றாக வீடுதிரும்பும் வரையில் அவனை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியதும் எனக்கு மட்டுமேயான பொறுப்பாகிவிட்டது.

எனக்கான சாயந்திர காபி போடுவதும், கெளஷிக்கிற்கு பூஸ்ட்டோ, ஹார்லிக்úஸா கலந்து மிதமான சூடு வரும்வரையில் ஆற்றிக்கொடுப்பதும் அடியேன்தான் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

மாலை நேர நொறுக்குத்தீனியாக முறுக்கு, அது இதுவென்று மருமகள் மாலதி வாங்கிவைத்திருப்பதை பேரனுக்குக் கொடுத்துவிட்டு நான் என் காபியை மட்டும் குடிப்பேன். எழுபதை எட்டிவிட்ட நிலையில், 'கொஞ்சம் ரெஸ்ட்தான் கொடுங்களேன்' என்று கெஞ்சும் எனது வயிற்றுக்கு அதெல்லாம் ஒத்துக்கொள்ளாது.

ஜானு இருக்கும்பொழுது என் வயிற்றுக்கு உபத்திரவமில்லாத ஐட்டங்கள் ஏதாவது செய்து கொடுத்துவிடுவாள். பேரனுக்கும் வெரைட்டிநொறுக்குத்தீனிகள் கிடைத்துவிடும். கடையில் வாங்கும் அவசியமே இருந்ததில்லை.

ஹூம். அதையெல்லாம் இனிமேல் நினைத்து பிரயோஜனம் இல்லை. கையில் பென்ஷன் காசு இருக்கிறது. மகனோ, மருமகளோ அதை எதிர்பார்ப்பதில்லை. ஓட்டலில் ஏதாவது வாங்கிச் சாப்பிட்டால் என்னை யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. ஏதோ அன்றாட நடவடிக்கைகளை ஓட்டுவதற்கு ஒத்துழைக்கின்ற இந்த உடம்பை ஓட்டல் பண்டங்கள் சாப்பிட்டுக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்று என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டிருக்கின்றேன்.

சட்டென்று எனக்கு ஏதாவது உடம்பு சரியில்லை என்று படுத்துக்கொண்டால் யாரும் பதறிப்போய் டாக்டரிடம் அழைத்துச் செல்லப் போவதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை.

'இத்தனை வயசு ஆச்சு. இன்னும் தன் உடம்பை ஒழுங்காகப் பார்த்துக்கொள்ளத் தெரியலை. அப்படியே சின்னக் குழந்தைன்னு நினைப்பு. ஹூம். இன்னிக்கு எங்க ரெண்டு பேருல ஒருத்தர் லீவு போட்டால்தான் கெளஷிக்கை கவனிச்சுக்க முடியும். லீவு கேட்டால் ஆபீஸூல எப்படி எரிஞ்சு விழறாங்க தெரியுமா?'

மகனும் மருமகளும் போடும் சத்தத்தில் வந்த நோய் பின்னங்கால் பிடரியில்பட அப்படியே வாசல் வழியாக ஓடிவிடும்.

அது சரி. தலைவலி, ஜுரம், வயிற்றுப்போக்கு அது இதுவென்று எந்த நோய் வந்தாலும் அதையெல்லாம் ஒரு மாதிரி சமாளித்துவிடலாம். பாழாய்ப்போன இந்தப் பகல் நேரத் தூக்கத்தை என்னால் ஜெயிக்க முடியவில்லையே. குறைந்தது இரண்டு வாரத்துக்கு ஒரு முறையாவது மதியச் சாப்பாடு முடிந்த கையோடு யார் தயவும் இல்லாமல் கொட்டாவி கிளம்புவதும், கொஞ்ச நேரத்தில் என் கண்கள் தானாகச் சொருகிக்கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

செல்போனில் மூணு மணிக்கு செட் பண்ணும் அலாரத்தினுடைய நளினமான ஓசை என்னை எழுப்பப் போதுமானதல்ல. சில சமயங்களில் மணி நாலு அடிக்க இருப்பதைத் தெரிந்து கொண்டது போன்று ஏதாவதொரு திடுக் கனவு வந்து என்னைத் தூக்கிப்போடுவதில் நான் எழுந்திருக்கவும், எனது செல்போனில் பலகீனமான ரிப்பீட் அலாரம் அடிக்கவும் சரியாக இருக்கும்.

பகல்கனவு கொடுக்கும் பலமான உதைப்பில் விழிப்பு வந்து எழுந்துகொள்ளும் அதே வேகத்தில் ஆணியில் தொங்கும் எனது சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்புகின்ற நான் மெடிக்கல்ஸை சமீபிக்கவும், கெளஷிக்கின் பள்ளிப் பேருந்து வந்து நிற்கவும் சரியாக இருக்கும். ஒரு சில நாட்களில் நான் செல்வதற்கு முன்பாகவே கெளஷிக்கின் பள்ளிப்பேருந்து வந்துவிடும் தருணங்களில் அவனுடைய சகமாணவன் சித்தார்த்தின் அம்மா நான் செல்லும்வரை காத்திருந்து என் பேரனை என்னிடம் ஒப்படைப்பாள்.

'ரொம்ப தேங்க்ஸ்மா!' என்பவனிடம், 'பரவாயில்லை அங்கிள், பஸ் இப்போதான் வந்துச்சு!' என்று புன்சிரித்துவிட்டுக் கிளம்பும் சித்தார்த்தின் அம்மா என் மருமகளின் நண்பியும் கூட. கெளஷிக்கை அழைத்துவருவதற்கு நான் லேட்டாகப் போய் நின்ற விவரத்தை கர்மசிரத்தையுடன் என் மருமகளுக்கு போன் செய்து சொல்லி விடுவாள்.

'சேச்சே, உங்களை நம்பி இந்தக் குழந்தையை ஸ்கூல் அனுப்பறோம் பாருங்க. அது எப்படிப் பகல் வேளையில் தூக்கம் வரும்? ஏதோ எங்க அதிர்ஷ்டம், கெளஷிக் படிக்கிற அதே ஸ்கூல்ல என் ஃபிரெண்டோட பையன் சித்தார்த்தும் படிக்கிறதால பிழைக்கிறோம்' இத்யாதி வார்த்தைகளைக் கொட்டிவிட்டு இரவுச் சப்பாதிக்கு மாவு பிசையத் தொடங்குவாள் என் மருமகள்.

கால் மணி நேரம் கழிந்த பிறகு வீடுவந்து சேரும் என் மகன் ஷியாம் ஓர் அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, 'வாட் ஹேப்பண்டு மாலதி, எனி பிராப்ளம்?' என்று கேட்க, முழுதாக சார்ஜ் ஏறிய செல்போனை போன்று மீண்டும் ஒருதரம் முழங்கி முடிப்பாள் என் மருமகள்.

'டாட், ப்ளீஸ் ட்ரை டு பீ மோர் ரெஸ்பான்சிபிள்' என்று என்னை நோக்கி ஓர் அறிவுரையை வீசிவிட்டுச் சமையலறைக்குள் நுழைவான்.

பேரன் கெளஷிக்கை அழைத்து வருவதற்குத் தாமதம் ஆனால் மட்டும்தான் வசவுகள் வரும் என்றில்லை. கஷ்டப்பட்டு, எனது வாய்க்குள்ளேயே கொட்டாவியை அமுக்கிவைத்துப் பகல் தூக்கத்தை ஜெயித்து, டாண் என்று மூன்றரைக்கெல்லாம் வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பிச் சென்று பேரனை அழைத்து வந்து விட்டால் மட்டும் என்ன கிடைக்கப் போகிறது?

'ப்ளீஸ் தாத்தா, கொஞ்ச நேரம் கார்ட்டூன் பார்த்துவிட்டு அப்புறம் ஹோம் வொர்க் செய்யறேனே தாத்தா' என்று கெஞ்சும் குழந்தையை தாஜா செய்து, ஆறு ஆறரைக்குள் ஹோம் வோர்க்கை முடிக்கச் செய்யவேண்டும்.

ஒருவேளை என் மகனும் மருமகளும் வீடுதிரும்புவதற்குள் கெளஷிக் தனது ஹோம் வொர்க்கை முடிக்காத பட்சத்தில், 'ஏம்பா, கெளஷிக்கை ஹோம்வொர்க்கையாவது செய்யச் சொல்லியிருக்கலாமேப்பா. ஆஃப் லேட் யூ ஆர் úஸா லெதார்ஜிக்டாட்' என்று என் மகன் என்னிடம் ஆங்கிலம் கலந்து படபடத்துவிட்டு, 'எப்படி நான் விட்ட டோஸ்?' என்பது போன்று தன் மனைவியின் முகத்தைப் பெருமிதத்துடன் பார்ப்பான்.

'எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கப்போகிறாய்? உன் பேரனைப் போய் அழைத்துவருகிற எண்ணமே இல்லையா?'என்றுதானே கேட்கிறீர்கள்.

என் பேரனின் நினைப்பு இல்லாமல் இருக்குமா என்ன? பேச்சின் நடுவில் சட்டையை மாட்டிக்கொண்டபடியே வீட்டைப் பூட்டிக்கொண்டு தெருவில் இறங்கி என் வயசுக்கு மீறின வேகத்துடன் இதோ நடந்து கொண்டிருக்கிறேன். இன்னும் ஐந்தே நிமிஷத்தில் மெடிக்கல்ஸை நெருங்கிவிடுவேன்.

இதோ வலதுபக்கம் செட்டியார் மளிகைக்கடை, அதன் பக்கத்தில் இருபது ரூபாய் டாக்டர் தயாளனின் கிளினிக், சலூன், லாண்டரி, லோக்கல் கேபிள் டிவி ஆபீஸ் எல்லாம் ராணுவ அணிவகுப்பு மாதிரி வரிசைகட்டி நிற்க, சாலையின் இடப்புறம் கைலாஷ் அபார்ட்மெண்டின் நீளமான மதில் சுவரைத் தாண்டி கிழக்கு மேற்காகச் செல்லும் நெடுஞ்சாலையை ஏறிப்பிடிக்கும் உத்தேசத்தில் சுமார் முப்பது டிகிரி கோணத்தில் உயருகின்ற சாலையில் லேசான மூச்சு வாங்கலுடன் ஏறி இடப்பக்கம் சக்தி மெடிக்கல்ஸை நோக்கித் திரும்பினால்...

சித்தார்த்தின் அம்மா தனியாக நின்றுகொண்டிருந்த காட்சி என் வயிற்றில் பாலை வார்த்தது. மணி நாலு ஐம்பது.

டென்ஷனெல்லாம் சரேலென்று நீங்கிய நிம்மதியுடன் 'என்னம்மா, இன்னும் பஸ் வரலியா?' என்றேன்.

திரும்பிப் பார்த்தவள், 'ஆமாம் அங்கிள். இப்போதான் ஸ்கூலுக்கு போன் செய்தேன். இன்னிக்கு எல்லா வகுப்புக்குமே ஸ்பெஷல் கிளாஸாம். ஸ்கூல் பஸ்ஸூங்க ஒவ்வொண்ணா இப்போதான் கிளம்பிட்டிருக்குதாம்.'

மனசு பாரம் குறைந்தது. 'அப்பாடா, இன்றைக்கு விசேஷ அர்ச்சனை இருக்காது. நான் இத்தனை லேட்டாக வந்ததற்கு என் பேரன் மட்டும் அரை மணிநேரம் முந்தியே வந்து காத்திருக்கவேண்டியிருந்தால்...'

மகன், மருமகளின் அர்ச்சனை ஒருபுறம் கிடக்கட்டும். குழந்தை கெளஷிக் தனியே இங்கு அரைமணி நேரம் நின்றுகொண்டிருப்பது எத்தனை ரிஸ்க்கான விஷயம். எப்படியோ இன்றைய தினம் ஒரு கவலை விட்டது.

மணி ஐந்தைத் தொடும் பொழுது, தூரத்தில் மேம்பாலத்திலிருந்து ஜாக்கிரதையாகக் கீழிறங்கிய ஸ்கூல் பஸ்ஸின் முன்பக்கம் தெரிந்தது. ஆயுதபூஜையின் சமீபத்திய அலங்காரங்களின் மினுக்கலுடன் மிதந்துவந்த மஞ்சள்நிறப் பேருந்திலிருந்து கெளஷிக்கும், சித்தார்த்தும் அடுத்தடுத்து இறங்கியதைப் பார்த்த பின்புதான் மனசில் நிம்மதி பிறந்தது.

'தாத்தா' என்று ஓடிவந்து கட்டிக்கொண்டான் கெளஷிக். அவனை ஒரு கையால் என் வயிற்றுடன் அணைத்தபடியே, 'ஹாய் ஸ்வீட் பாய்!' என்று சித்தார்த்தின் கன்னத்தைத் தட்டினேன்.

நாணத்துடன் புன்னகைத்த சித்தார்த்தன், அம்மாவைக் கட்டிக்கொண்டான்.

'நல்ல வேளை... இன்றைக்கு ஸ்கூல் பஸ் லேட் ஆனது நல்லதாப் போச்சும்மா. நான் வேறு மதியம் நல்லாத் தூங்கிட்டு நாலரைக்கு மேலேதான் கிளம்பிவந்தேன்.'

பையனுடன் நகர்ந்த சித்தார்த்தின் அம்மா, 'அங்கிள், டோண்ட் வொர்ரி. இனிமேல் நான் முதல்ல வந்தால் நீங்க வர்ற வரைக்கும் கெளஷிக், சித்தார்த் இரண்டு குழந்தைகளோடும் வெயிட் பண்ணறேன். ஒருவேளை, நீங்க முதல்ல வந்தால் வைஸ் வெர்ஸா...' என்று வாய்மொழி ஷரத்து ஒன்றை பிரகடனம் செய்தாள்.

'மை டியர் ப்ரியா, யூ ஆர் மோஸ்ட் வெல்கம். நான் சரியான கும்பகர்ணன். எனக்குத் தெரிஞ்சு நீதான்மா அதிகநாள் எனக்காக வெயிட் பண்ணும்படி இருக்கும்...'

'இட்ஸ் ஆல்ரைட் அங்கிள். என் ஃப்ரெண்டு மாலதிக்காக நான் இதைக் கூட செய்ய மாட்டேனா?' என்று புன்னகைத்த ப்ரியா தன் பையனுடன் ஸ்கூட்டரை உயிர்ப்பித்தாள்.

'என்ன ஒரு இனிமையான பெண்!' என்று ப்ரியாவை என் மனசுக்குள் வியந்துகொண்டிருக்கும்பொழுதே, 'தாத்தா' என்று என்னை உலுக்கினான் கெளஷிக்.

'சொல்லுடா செல்லம்!' என்றேன்.

'பசிக்குது தாத்தா. ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப் போங்க தாத்தா, ப்ளீஸ்!'

'ஓ ஷ்யூர்...' என்று சொல்லி குழந்தை கெளஷிக்கின் புத்தக மூட்டையை வாங்கிக்கொண்டு, சாலையில் விரைந்த ஆட்டோ ஒன்றைக் கைதட்டி அழைத்து, 'நேராக ஏ2பிக்கு விடுப்பா' என்றேன்.

'இனிமேல் பிற்பகலில் ஒரு குட்டித் தூக்கம் போட்டால் கவலையில்லை, ப்ரியா இருக்கிறாள்' என்ற நினைப்பே பரவசமாக இருந்தது.

சட்டென்று கெளஷிக்கின் முகவாய்க்கட்டையைப் பிடித்துக்கொண்டு கேட்டேன், 'குட்டிப்பையா, ஏ2பியில் டிபனோடு உனக்கு என்ன வேணும், ஸ்வீட்டா, ஐஸ் கிரீமா?'

'ரெண்டும் வேணும் தாத்தா...'

'ரெண்டுமா, ஒகே எஞ்ஜாய்!' என்றேன், உற்சாகம் ததும்பும் குரலுடன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com