சரித்திரமும் சமகாலமும் சந்திக்கும் வீட்டில் ஓர் ஓய்வறியா உழைப்பாளி நட்ட நடு வீட்டில் கிணறு! அதுவும் சமையலறையில்! அதிகாலையில் எழுந்து பெண்கள் அந்தக் கிணற்றில் நீர் சேந்திக் குளித்துவிட்டு ஈரப் புடவையுடன் 'மடி'யாக சமையலைத் தொடங்குவார்கள். அப்படி ஒரு காலம் இருந்தது. இன்று கிணறு மூடப்பட்டு சமையலறையின் மேடைகளில் ஒன்றாகிவிட்டது. ஆனால், அந்தக் கிணறு பாழ்பட்டுவிடவில்லை. வீட்டின் மொட்டை
மாடியில் விழும் மழைநீர் அனைத்தும் குழாய் மூலம் கிணற்றுக்குள் செலுத்தப்பட்டு, மழைநீர் சேகரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மழைநீர் சேகரிப்பு என்பது சமீப காலச் சிந்தனை. சமையலறைக் கிணறு என்பது பழங்காலத்து சமாசாரம். இரண்டும் ஒருங்கிணைந்திருக்கிறது அந்த வீட்டில். அங்கு வசிப்பவர்களை அடையாளப்படுத்துவது போல.
ஸ்ரீரங்கத்தின் தெற்குச் சித்திரை வீதியில் உள்ள அந்த வீட்டில் வசிப்பவர்கள் பிரேமா நந்தகுமாரும், அவரது கணவர் நந்தகுமாரும். பிரேமாவுக்கு வயது எண்பத்து ஆறு. நந்தகுமார் வைணவ அறிஞர்களான தாத்தாச்சாரியர் மரபில் வந்தவர். அவர் பொறியாளர் என்றாலும், வீட்டில் தன் குல மரபுகளைப் பின்பற்றி தினமும் பூஜை செய்கிறார். 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த வீட்டில் பூஜை அறை ஒரு சிறிய கோயிலைப் போல இருக்கிறது.
அவரது பூஜைக்கான நைவேத்தியம் தயார் செய்வது, வீட்டின் சமையல் எல்லாம் இந்த வயதிலும் பிரேமாதான் செய்கிறார். உதவிக்கு என்று யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு இலக்கியப் பணிகளையும் செய்கிறார்.
அவரது தந்தை எழுதிய புதுச்சேரி அரவிந்த ஆசிரம அன்னையின் வாழ்க்கை சரிதத்தை (இது 1980-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி பரிசு பெற்றது) அண்மையில் மொழிபெயர்த்திருக்கிறார். 'அன்னை' என்ற அந்த நூல் சுமார் 2,000 பக்கங்கள் கொண்டது! 2025 டிசம்பர் 11-ஆம் தேதி 'தினமணி' அவருக்கு பாரதி விருது அளித்து கௌரவித்தது.
பாரதியை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் பிரேமா நந்தகுமார். 'பாரதி இன் இங்கிலீஷ் வெர்ஸ்' என்ற அந்த நூல் 1958-ஆம் ஆண்டு வெளியானது. அப்போது அவருக்கு வயது 19!
அவருடன் ஒரு சந்திப்பு:
பாரதி குறித்து..?
சின்ன வயதிலிருந்தே அம்மா அவ்வப்போது பாரதி பாடல்களைச் சொல்லித் தருவார். ஒருமுறை அவருடன் மயிலாப்பூர் லஸ்லில் இருந்த புத்தகக் கடைக்குப் போயிருந்தபோது, அங்கு பாரதியார் கவிதைகள் மொத்தமும் கொண்ட ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். ஒன்றரை ரூபாய்தான் விலை. எனக்கு ஒரே ஆச்சரியம். இவ்வளவு பெரிய புத்தகத்தை ஒரு ரூபாய்க்குக் கொடுக்கிறார்களே, கட்டுப்படியாகுமா? எனத் தோன்றியது.
அம்மா அந்தப் புத்தகத்தை வாங்கித் தந்தார். புரட்டிப் பார்த்தேன். அம்மா சொல்லிக் கொடுத்த பாடல்கள் பலவும் அதில் இருந்தன. எனக்கு ஒரே சந்தோஷம். அந்தப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்தால் என்ன? என்று தோன்றியது. முதலில், 'என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்' என்ற பாடலை எடுத்துக் கொண்டு அதன் முதல் இரு வரிகளை மொழிபெயர்த்தேன். உற்சாகமாக ஓடிப் போய் அப்பாவிடம் காண்பித்தேன். என் அப்பா டாக்டர் கே.ஆர். ஸ்ரீநிவாசயங்கார் ஆங்கிலப் பேராசிரியர். அவர் அதைப் பார்த்ததும் 'அட! நன்னாயிருக்கே! எங்கிருந்து எடுத்தே?'என்றார்.
'இது நானே மொழிபெயர்த்தது' என்றேன்.
'நல்லது. தணியும் (சுதந்திர தாகம்) என்பதற்கு சரியாக 'ஸ்லேக்' என்று போட்டிருக்கிறாய். முழுவதையும் மொழிபெயர்த்துக் காட்டு. அப்புறம் என் அபிப்பிராயத்தைச் சொல்கிறேன்' என்றார்.
அதையும் இன்னும் இரண்டு மூன்று பாடல்களையும் மொழிபெயர்த்தேன். அச்சுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆசை வந்தது. அப்பாவிடம் சொன்னேன். 'உன் அண்ணனிடம் சொல்லு... அவன்தான் சென்னைக்குப் போய் வந்து கொண்டிருக்கிறான். அங்கே 'திரிவேணி' என்று ஒரு பத்திரிகை வருகிறது. அதில் கொண்டு போய்க் கொடுப்பான்' என்றார். திரிவேணியில் கவிதை வந்தது. கவிதையை ராஜாஜிக்கு அனுப்பினேன்.
'நீ ஆந்திரா பல்கலைக்கழக மாணவி என்று அறிகிறேன், மகிழ்ச்சி. மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது' என்று எழுதிய அவர், இன்னொன்றும் சொன்னார்.அதில் 'பாரதி 'மற்றொரு பாரதம் ஆக்க வந்தோனே' என்று எழுதியிருக்கிறார். அதை நீ
மகாபாரதம் என்று நினைத்து மொழிபெயர்த்திருக்கிறாய். அதில் தவறில்லை. ஆனால், பாரதி அங்கு பாரதம் என்று இந்தியாவைக் குறிப்பிடுவதாகவும் அது பொருள்படும். அந்த மாதிரி பாரதி கவிதையில் உள்ள நுட்பங்களையும் நீ புரிந்து கொள்ள வேண்டும்'என்று எழுதியிருந்தார்.
எவ்வளவு பெரிய தலைவர்! என்னைப் பொருட்படுத்தி பாராட்டி பதில் போட்டிருக்கிறாரே என்று எனக்கு ஒரே உற்சாகம். இன்னும் சில கவிதைகளை மொழி பெயர்க்க ஆரம்பித்தேன். புத்தகமாகப் போடலாம் என்று தோன்றியது. அப்பாவிடம் சொன்னேன்.
'போடலாம்மா. ஆனால் அதற்கு ஒரு பதிப்பகம் வேண்டுமே' என்று சொன்னார்.
உடனே அண்ணா, 'நான் ஒரு பதிப்பகம் ஆரம்பித்துவிட்டேன்' என்றான்.
'அப்படியா! அதன் பேர் என்ன?' என்றார் அப்பா.
'பொருநை பப்ளிகேஷன்ஸ்' என்றான் அண்ணா.
'அதற்கு 'ஏன் பொருநை பப்ளிகேஷன்' என்று பெயர்?'
'நாங்கள் தாமிரவருணி தீரத்தில்தான் வளர்ந்தோம். பள்ளிக்கு நானும் அண்ணாவும் சேர்ந்துதான் போவோம். நடந்துதான் போக வேண்டும். பள்ளியில் நான் ஒருத்தி மட்டும்தான் மாணவி. மற்றவர்கள் எல்லாம் ஆண் மாணவர்கள்'.
அந்தக் காலத்தில் பெண்கள் கல்வி கற்பதை குடும்பங்கள் ஊக்குவிக்கவில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் பி.எச்டி. வரை படித்திருக்கிறீர்கள். அது எப்படி சாத்தியமாயிற்று?
அப்பாதான் காரணம். அவர் நாங்கள் படிப்பதை ஊக்குவித்தார். 12 வயதில் மெட்ரிக்குலேஷன் பாஸ் செய்துவிட்டேன். அப்போதெல்லாம் பள்ளிப் படிப்பை முடித்து விட்டால் கல்யாணம் பேச ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், அப்பா 'அவள் படிக்கட்டும்' என்றார். முதலில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தேன். பின் பி.எச்டி.
அரவிந்தரின் சாவித்திரி பற்றியது உங்கள் முனைவர் பட்ட ஆய்வு. அரவிந்தரிடம் எப்படி ஈடுபாடு ஏற்பட்டது?
அப்பா கர்நாடகாவில் பெல்காமில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். அப்போது வெளிநாட்டுப் பதிப்பகம் ஒன்று இந்தியக் கவிஞர்கள் எழுதிய சிறந்த ஆங்கிலக் கவிதைகளைத் தொகுக்கும்படி கேட்டுக் கொண்டது. அதற்காகக் கவிதைகளைத் திரட்டிக் கொண்டிருந்தார். அப்பா அரவிந்தரின் கவிதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். ஆனால், படித்ததில்லை. அவற்றைத் தேடிக் கொண்டிருந்தார்.
அவர் பணி செய்து கொண்டிருந்த கல்லூரியின் தலைவர் மாதவ கௌடா அரவிந்தரது தீவிர பக்தர். வருடத்துக்கு நான்கு முறையாவது புதுச்சேரிக்கு வந்து அரவிந்தரை தரிசிப்பார். அவரிடம் அரவிந்தரது கவிதைகள் இருப்பதாக அறிந்து அவரை அணுகித் தயங்கித் தயங்கி கேட்டார். அவர் கொஞ்சம் இரு என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று இரண்டு தடி புத்தகங்களை எடுத்து வந்தார்.
'இந்தா பார்! இதில் அரவிந்தர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். நான் யாருக்கும் இரவல் கொடுப்பதில்லை. நீ நம் கல்லூரியில் வேலை செய்கிறாய். அதனால் உனக்குக் கொடுக்கிறேன். ஆனால், இரண்டுநாள்தான் அவகாசம். நாளை மறுநாள் மாலை கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும்.' என்று சொல்லி புத்தகங்களைக் கொடுத்தார்.
அப்பா இராத்திரி முழுவதும் அதைப் படித்து இரவோடு இரவாக டைப் செய்து காப்பி எடுத்து வைத்துக் கொண்டார். பின் மாதவ கௌடா அவரை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று அரவிந்தரிடம் அறிமுகப்படுத்தினார். அரவிந்தர் அந்த பிரதியைப் பார்த்துத் தன் கையால் சில திருத்தங்கள் செய்தார். அந்தப் பிரதிகள் இன்னமும் அரவிந்த ஆசிரம ஆவணக் காப்பகத்தில் இருக்கின்றன. அப்பா மூலம் அரவிந்தரது எழுத்துகள் எனக்கு அறிமுகமானது.
உங்களது மாமியார் குமுதினியும் ஓர் புகழ் பெற்ற எழுத்தாளர். அவர் ஒரு மாமியாராக எப்படி நடந்து கொண்டார்?
ரொம்ப அன்பான மனுஷி. ரொம்பப் பெரிய எழுத்தாளர். அவருக்கு பல மொழிகள் தெரியும். அந்தக் காலத்திலேயே 'திவான் மகள்' என்று கலப்பு மணம் பற்றி நாவல் எழுதியவர். காந்தி மீது அப்படி ஒரு பக்தி. அவரும், இவரும் (கணவர் நந்தகுமாரைச் சுட்டிக் காட்டுகிறார்) தினமும் சர்க்காவில் நூல் நூற்பார்கள். அந்த சர்க்கா இன்னும் மாடியில் இருக்கிறது. அப்படி நூற்ற நூலை -அதை சிட்டம் என்று சொல்வார்கள். கொண்டு போய் கதர் கடையில் கொடுத்து பணமோ, பஞ்சோ வாங்கிக் கொள்ளலாம். அவர் பஞ்சு வாங்கி நூல் நூற்பார்.
ஜமக்காளம் போன்ற கனமான கதர் புடவைதான் கட்டுவார். அதில் மடிசார் கட்டிக் கொள்வது கஷ்டம். ஆனால், மடிசார் போல் ஒன்றைக் கட்டிக் கொள்வார். எனது திருமணத்துக்கு அவருக்கு கனம் குறைந்த பட்டுப் புடவை கொடுக்க நினைத்தோம். அப்போது அந்த மாதிரி காதி சில்க் ஆந்திராவில் ஒரு இடத்தில்தான் கிடைக்கும். அதற்காக என் அப்பா இரண்டு பேரை அந்தக் கிராமத்திற்கு அனுப்பி வாங்கி வரச் செய்தார். என கல்யாணத்துக்குப் பின் வந்த முதல் வருட தீபாவளிக்கு அவரது கையால் தயாரிக்கப்பட்ட புடவை கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். ஆனால், அது அப்போது தயாராகவில்லை. அதனால் ஒரு பட்டுப்புடவை அனுப்பி, கூடவே ஒரு கடிதமும் அனுப்பினார்.
'என் புடவை தயாராகவில்லை. ஆனால் அடுத்த முறை நீ இங்கு வரும் போது உனக்கு அதை ரெடி பண்ணிக் கொடுப்பேன்' என்று. அப்படியே செய்தார். அவர்தான் திருச்சியில் சேவா சங்கம் ஆரம்பித்தார்.
அவர் உடல் நலம் குன்றி இறக்கும் தருவாயில் என்னிடம் சொன்னார்: 'நீ மருமகளாக வந்த பின்னர் நான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.'
இந்த வயதில் நீண்ட நேரம் உட்கார முடியாத உடல் நிலையிலும் இரண்டரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின் 'உனக்கு டீ போட்டுத் தரேன்' என்று சொல்லி சுவரைப் பிடித்துக் கொண்டே சமையலறைக்குச் சென்றார். என் கூட வந்திருந்த டாக்டர் பாரதி 'நானும் உதவுகிறேன்' என்று கூட எழுந்து போனார்.
ஆனால், அவரை வேலை செய்யவிடவில்லை. அதற்கு ஒரு காரணமும் சொன்னார், 'உன்னைப் போன்று இந்த கிச்சனுக்குப் பழக்கமில்லாதவர்கள் அடுப்படியில் வேலை செய்யும் போது, 'ஐயோ! கையைச் சுட்டுக்கப் போறாளே' என்று எனக்கு பதற்றமாக இருக்கும்.
இவ்வாறு பிரேமா நந்தகுமார் பேசினார். நெகிழ்ந்து போய் வெளியே வந்தோம். இன்னும் அவர் மீதான பிரமிப்பு அடங்கவில்லை! என்ன மாதிரியான வாழ்க்கை! என்ன மாதிரியான தம்பதியர்!
அரவிந்தரின் சாவித்திரி பற்றியது உங்கள் முனைவர் பட்ட ஆய்வு. அரவிந்தரிடம் எப்படி ஈடுபாடு ஏற்பட்டது?
அப்பா கர்நாடகாவில் பெல்காமில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். அப்போது வெளிநாட்டுப் பதிப்பகம் ஒன்று இந்தியக் கவிஞர்கள் எழுதிய சிறந்த ஆங்கிலக் கவிதைகளைத் தொகுக்கும்படி கேட்டுக் கொண்டது. அதற்காகக் கவிதைகளைத் திரட்டிக் கொண்டிருந்தார். அப்பா அரவிந்தரின் கவிதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். ஆனால், படித்ததில்லை. அவற்றைத் தேடிக் கொண்டிருந்தார்.
அவர் பணி செய்து கொண்டிருந்த கல்லூரியின் தலைவர் மாதவ கௌடா அரவிந்தரது தீவிர பக்தர். வருடத்துக்கு நான்கு முறையாவது புதுச்சேரிக்கு வந்து அரவிந்தரை தரிசிப்பார். அவரிடம் அரவிந்தரது கவிதைகள் இருப்பதாக அறிந்து அவரை அணுகித் தயங்கித் தயங்கி கேட்டார். அவர் கொஞ்சம் இரு என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று இரண்டு தடி புத்தகங்களை எடுத்து வந்தார்.
'இந்தா பார்! இதில் அரவிந்தர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். நான் யாருக்கும் இரவல் கொடுப்பதில்லை. நீ நம் கல்லூரியில் வேலை செய்கிறாய். அதனால் உனக்குக் கொடுக்கிறேன். ஆனால், இரண்டுநாள்தான் அவகாசம். நாளை மறுநாள் மாலை கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும்.' என்று சொல்லி புத்தகங்களைக் கொடுத்தார்.
அப்பா இராத்திரி முழுவதும் அதைப் படித்து இரவோடு இரவாக டைப் செய்து காப்பி எடுத்து வைத்துக் கொண்டார். பின் மாதவ கௌடா அவரை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று அரவிந்தரிடம் அறிமுகப்படுத்தினார். அரவிந்தர் அந்த பிரதியைப் பார்த்துத் தன் கையால் சில திருத்தங்கள் செய்தார். அந்தப் பிரதிகள் இன்னமும் அரவிந்த ஆசிரம ஆவணக் காப்பகத்தில் இருக்கின்றன. அப்பா மூலம் அரவிந்தரது எழுத்துகள் எனக்கு அறிமுகமானது.
உங்களது மாமியார் குமுதினியும் ஓர் புகழ் பெற்ற எழுத்தாளர். அவர் ஒரு மாமியாராக எப்படி நடந்து கொண்டார்?
ரொம்ப அன்பான மனுஷி. ரொம்பப் பெரிய எழுத்தாளர். அவருக்கு பல மொழிகள் தெரியும். அந்தக் காலத்திலேயே 'திவான் மகள்' என்று கலப்பு மணம் பற்றி நாவல் எழுதியவர். காந்தி மீது அப்படி ஒரு பக்தி. அவரும், இவரும் (கணவர் நந்தகுமாரைச் சுட்டிக் காட்டுகிறார்) தினமும் சர்க்காவில் நூல் நூற்பார்கள். அந்த சர்க்கா இன்னும் மாடியில் இருக்கிறது. அப்படி நூற்ற நூலை -அதை சிட்டம் என்று சொல்வார்கள். கொண்டு போய் கதர் கடையில் கொடுத்து பணமோ, பஞ்சோ வாங்கிக் கொள்ளலாம். அவர் பஞ்சு வாங்கி நூல் நூற்பார்.
ஜமக்காளம் போன்ற கனமான கதர் புடவைதான் கட்டுவார். அதில் மடிசார் கட்டிக் கொள்வது கஷ்டம். ஆனால், மடிசார் போல் ஒன்றைக் கட்டிக் கொள்வார். எனது திருமணத்துக்கு அவருக்கு கனம் குறைந்த பட்டுப் புடவை கொடுக்க நினைத்தோம். அப்போது அந்த மாதிரி காதி சில்க் ஆந்திராவில் ஒரு இடத்தில்தான் கிடைக்கும்.
அதற்காக என் அப்பா இரண்டு பேரை அந்தக் கிராமத்திற்கு அனுப்பி வாங்கி வரச் செய்தார். என கல்யாணத்துக்குப் பின் வந்த முதல் வருட தீபாவளிக்கு அவரது கையால் தயாரிக்கப்பட்ட புடவை கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். ஆனால், அது அப்போது தயாராகவில்லை. அதனால் ஒரு பட்டுப்புடவை அனுப்பி, கூடவே ஒரு கடிதமும் அனுப்பினார்.
'என் புடவை தயாராகவில்லை. ஆனால் அடுத்த முறை நீ இங்கு வரும் போது உனக்கு அதை ரெடி பண்ணிக் கொடுப்பேன்' என்று. அப்படியே செய்தார். அவர்தான் திருச்சியில் சேவா சங்கம் ஆரம்பித்தார்.
அவர் உடல் நலம் குன்றி இறக்கும் தருவாயில் என்னிடம் சொன்னார்: 'நீ மருமகளாக வந்த பின்னர் நான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.'
இந்த வயதில் நீண்ட நேரம் உட்கார முடியாத உடல் நிலையிலும் இரண்டரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின் 'உனக்கு டீ போட்டுத் தரேன்' என்று சொல்லி சுவரைப் பிடித்துக் கொண்டே சமையலறைக்குச் சென்றார். என் கூட வந்திருந்த டாக்டர் பாரதி 'நானும் உதவுகிறேன்' என்று கூட எழுந்து போனார். ஆனால், அவரை வேலை செய்யவிடவில்லை. அதற்கு ஒரு காரணமும் சொன்னார், 'உன்னைப் போன்று இந்த கிச்சனுக்குப் பழக்கமில்லாதவர்கள் அடுப்படியில் வேலை செய்யும் போது, 'ஐயோ! கையைச் சுட்டுக்கப் போறாளே' என்று எனக்கு பதற்றமாக இருக்கும்.
இவ்வாறு பிரேமா நந்தகுமார் பேசினார். நெகிழ்ந்து போய் வெளியே வந்தோம். இன்னும் அவர் மீதான பிரமிப்பு அடங்கவில்லை! என்ன மாதிரியான வாழ்க்கை! என்ன மாதிரியான தம்பதியர்!
படம்: எஸ். அருண்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.