வாசிப்புப் பழக்கம் அதிகரித்ததா? குறைந்ததா?

வாசிப்புக்கு எதிரான சவாலாகத் தொழில்நுட்ப வளர்ச்சி உருவெடுத்து வருகிறது.
வாசிப்புப் பழக்கம் அதிகரித்ததா? குறைந்ததா?
Updated on
4 min read

அருள்செல்வன்

வாசிப்புக்கு எதிரான சவாலாகத் தொழில்நுட்ப வளர்ச்சி உருவெடுத்து வருகிறது. எனவே வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது என்கிற கவலை அதிகரித்து வருகிறது. 'இன்றுள்ள வாசிப்பு சவால்களிலிருந்து மீள என்ன வழி?' என்று இலக்கியவாதிகள் சிலரிடம் பேசினோம்.

நாஞ்சில் நாடன்

முன்பெல்லாம் பாடப் புத்தகங்களுக்கு வெளியே படிப்பதை ஆசிரியர்கள் ஊக்குவித்தனர். இன்று அது குறைந்துவிட்டது. பாடப் புத்தகத்துக்கு வெளியே படிக்கக் கூடாது என்ற மனோபாவத்துக்கு பெற்றோரும் வந்துவிட்டனர்.

1970-களில் எந்த அரசியல் கட்சிக் கூட்டத்துக்குப் போனாலும், அரசியல்வாதிகள் பேச்சில் தெளிவிருக்கும். புத்தகங்களில் இருந்து பாடல்கள், மேற்கோள்களைக் காட்டுவார்கள்.

அன்று வானொலியைத் தவிர எதுவும் இல்லாததால் நாங்கள் நூலகங்களுக்குச் சென்றோம். திரைப்படங்களும் இருந்தன. ஆனால், வசதி இல்லாததால் பார்க்கக் காசு இருக்காது. இப்போது மக்களிடம் வசதி பெருகியதால், திரைத்துறை முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ளது. மாணவர்கள் சராசரியாக மூன்று மணி நேரம் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர். இதெல்லாம் வாசிப்பின் தேவையைக் குறைத்துவிடுகிறது.

நூலகங்களில் தரமான இலக்கிய நூல்கள் வாங்கப்படுவதில்லை. தமிழர்களுக்குச் செய்தி என்றாலே, அது நடிகர்கள், நடிகைகள் பற்றியதுதான். இப்படி வாசிப்புப் பழக்கத்தைக் கொன்றுவிட்டோம். தமிழ்நாட்டின் மக்கள் தொகை 4 கோடி இருந்தபோது 50 பத்திரிகைகள் வந்தன. இன்று 8 கோடி ஆன பிறகு அது எப்படி இருக்கிறது? முக்கியமானவர்களின் வீடுகளிலேயே புத்தகங்களும், இதழ்களும் வாங்கப்படுவதில்லை.

பாரதியார், பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர் போன்றோரின் எழுத்துகளை நாம் படிப்பதால் அவர்களுக்கு என்ன லாபம்? ஆனாலும் எழுதி சமூகத்துக்கு விட்டுச் சென்றார்கள். அந்தக் காலத்து எழுத்தாளர்களின் நோக்கம் திரைத் துறையில் நுழைவதும் இல்லை. நாலு கோடி பேர் இருந்தபோது ஒரு நூல் 1,200 பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. இன்று இவ்வளவு வளர்ந்த நிலையில், அதைவிட குறைந்த அளவில் அச்சடித்து வெளியிட்டு விழா எடுக்கின்றனர்.

முக்கியமான எழுத்தாளர்கள், புத்தகங்கள் பெயர் கூட தெரிவதில்லை. இதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. மதிப்பெண்களும் பாடப் புத்தகங்களும் மட்டும் கல்வி அல்ல. வாசிப்புப் பழக்கத்தைப் பள்ளியில் தொடங்க வேண்டும். எந்தப் பாடப் புத்தகத்திலாவது பனைமரம், புளிய மரம் பற்றிப் பாடம் இருக்கிறதா? மாணவர்கள் எத்தனை பேர் பறவைகள், மரங்கள், விலங்குகள் பெயர்களை எழுதுவார்கள்.

வருமானத்தை மட்டும் குறி வைத்து இயங்கும் சமூகத்தில் என்ன செய்வது? பட்டிமன்றப் பேச்சுகளைத் தவிர எந்த இலக்கியம் இவர்களுக்குத் தெரிகிறது. உப்புமாவை ஒரு நகைச்சுவைப் பண்டமாகிவிட்டார்கள். எல்லார் கையிலும் கைப்பேசிகள் இருக்கின்றன. யார் கையில் புத்தகம் இருக்கிறது?

வெளிநாடுகளில் ரயில்கள், விமானங்களில் கூட புத்தகம் வாசிக்கிறார்கள். அப்படி இங்கே ஓர் ஆளைப் பார்க்க முடியுமா?ஆறு மணி நேரம் செல்போன் பார்க்கிறார்கள். திருவள்ளுவர், கம்பன் என்றெல்லாம் சொல்வார்கள். ஒரு பாடலைக் கேட்டால் சொல்ல மாட்டார்கள். இப்படி ஒரு சமுதாயமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

பாவண்ணன்

வாசிப்பு குறைந்துவிட்டது எனும் கூற்று புனைவுதான். உண்மையில் கடந்த நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் வாசிப்பு பெருகியுள்ளது. மக்கள்தொகையின் பெருக்கத்துக்கு இணையாக வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

முன்பெல்லாம் இலக்கியக் கூட்டங்கள் அபூர்வமாகவே நிகழ்ந்தன. இன்று ஒவ்வொரு ஊரிலும் மாதாந்திர, வாராந்திரக் கூட்டங்களை நடத்தி இலக்கியம் குறித்து விவாதிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இணையவழி நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. புத்தக அறிமுகமும் பெருகி வருகிறது.

பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடம் இலக்கியத்தை அறிமுகப்படுத்தி, ஊக்கப்படுத்தும் பல ஆசிரியர்களை நான் சந்தித்திருக்கிறேன். பவா.செல்லதுரை, ரம்யா வாசுதேவன் போன்ற கதைசொல்லிகளின் யூடியூப் காணொலிகள் ஆயிரக்கணக்கில் இணையத்தில் உள்ளன. ஒவ்வொரு காணொலியையும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் கேட்கின்றனர். நேரடி வாசிப்புக்குள் வாசகர்களை ஈர்த்து இலக்கியத்தைச் செழிப்பாக்கும் வேலையை இத்தகையோர் ஆர்வத்தின் காரணமாக இலவசமாகச் செய்கிறார்கள். நேரிடையாகப் புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்கு இணையாக இணையவழியில் வாங்கும் வாசகர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது.

ஆண்டுதோறும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அறுநூறுக்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெறுகின்றன என்பதோடு, வாசகர்கள் பெருகி வருகிறார்கள் என்பதற்கு இதைவிட பெரிய சாட்சி என்ன வேண்டும். காட்சி ஊடகங்கள் மக்களை வேறொரு திசையில் ஈர்க்கும் பெருவிசையாக இருப்பது உண்மைதான். காட்சி ஊடகம் அளிக்கும் இன்பத்தைவிட ஒரு புத்தக வாசிப்பு அளிக்கும் இன்பமும் மனநிறைவும் மகத்தானவை.

பாடப் புத்தக வாசிப்புக்கும் இலக்கியப் புத்தக வாசிப்புக்கும் இருக்கும் வேறுபாட்டையும் அவசியத்தையும் பெற்றோர்கள் புரிந்துகொண்டால், அவர்களே தம் பிள்ளைகளுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்வார்கள். பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது. மாற்றம் நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும்.

திரைப்படங்களை முன்வைத்து மணிக்கணக்கில் அரட்டை அடிப்பதில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் இருக்கிறது என நினைக்கிற நாம், ஓர் இலக்கியப்பிரதியை முன்வைத்து வெவ்வேறு கோணங்களில் உரையாடுவதிலும் அதே மகிழ்ச்சியும் நன்மையும் இருக்கிறது என்பதை உணர்வதுதான் எல்லா மாற்றங்களுக்கும் முதல் படி. இலக்கிய அரட்டை ஒரு ருசி.

டி.கே.சி., கல்கி, கி.ரா. போன்றோர் வாழ்ந்த காலத்தில் அத்தகு அரட்டைகளால் ஏற்பட்ட மாற்றங்களை அவர்களே பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அத்தகு உரையாடல்களைச் சாத்தியப்படுத்துவது அடுத்த படி. அதற்குப் பின் நிகழும் மாற்றத்தை நாமே மெல்ல மெல்ல உணரத் தொடங்குவோம்.

தேவி பாலா

வாசிப்புப் பழக்கம் குறையவில்லை. மக்கள்தொகை அதிகமான அளவுக்கு வாசிப்பு அதிகமாகவில்லை. வாசிப்பை இப்போது இரண்டு வகையாக மாறி உள்ளது. ஒன்று அச்சு ஊடகம். புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வாசிப்பது. மற்றொன்று இணையப் புத்தகங்கள் வாசித்தல். இரண்டுமே வாசித்தல்தான். பெரிய வித்தியாசம் இல்லை. நாற்பது வயதைக் கடந்தவர்கள் இன்னும் புத்தக வாசிப்பைத்தான் தொடர்கிறார்கள்.

முப்பது வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்குப் புத்தகம் சுமப்பது பிடிப்பதில்லை. ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், பயணம் செய்பவர்களுக்கு இணையப் புத்தகங்கள் படிப்பது சுலபமாக இருக்கிறது. இன்றைக்கு 'இ.புக்' நிறைய வெளியிடுகிறார்கள். எனது புத்தகங்கள் ஐந்நூற்றுக்கு மேல் இணையப் புத்தகங்கள் வடிவில் கிடைக்கின்றன.

தொழில்நுட்ப மாற்றத்தில் கதைகள், கட்டுரைகள் போன்றவற்றைப் பதிவு செய்து அனுப்புவது எளிதாகிவிட்டது. இந்த மாற்றங்களால் வாசிப்புப் பழக்கம் கூடி இருக்கிறதே தவிர குறையவில்லை. இளைஞர்கள் தரமானதைத் தேடிச் சென்று படிக்கின்றனர். திரைத்துறையில்கூட நல்ல திரைப்படங்கள்தான் ஓடுகின்றன.

வேல. ராமமூர்த்தி

கடந்த 20 ஆண்டுகளில் ஊதிப் பெருத்திருக்கும் ஊடக ஆதிக்கம், வாசிப்பை முற்றிலும் சிதைத்துவிட்டது. பிரான்ஸில் அண்மையில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் நான் கலந்துகொண்டேன். படப்பிடிப்பில் 40 பேருக்கு மேல் இருந்தார்கள். பெரும்பாலும் பெண்கள். ஆனால், யாரும் கைப்பேசியை எடுக்கவில்லை. பல மணி நேரம் இப்படி நடைபெற்றது. ஆனால் இங்கே கைப்பேசியும் கையுமாக அலைகின்றனர்.

தொழில்நுட்பம் மீது அவர்களுக்கு ஒரு உறுதிப்பாடு இருக்கிறது. எப்போது பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாக இருக்கிறார்கள். ஆனால், இங்கே அப்படி இல்லை. அதுதான் பெரிய சவாலாக இங்கே இருக்கிறது. ரயில் நிலையங்களில், விமான நிலையங்களில் எல்லார் கையிலும் புத்தகங்கள் அங்கே இருக்கின்றன. ஆனால் இங்கே அப்படிக் காண முடிவதில்லை. மாற்றம் என்ற பெயரில் நடக்கும் இந்த மனித குல பேரழிவைத் தடுக்கும் அதிகாரமும் பொறுப்பும் ஆளும் அரசுகளுக்குத் தான் உண்டு.

நூல்களை வெளியிட்டு விற்க முடியாமல் பதிப்பகத்தார் படும்பாட்டை கண்கூடாய்ப் பார்க்கிறோம். அதிகாரம் ஏதுமற்ற நாம் அரசுகளை நெருக்க வேண்டும்.

ராஜேஷ் குமார்

புத்தகம் படிப்பது குறைந்துவிட்டது என்றாலும், இணையவடிவில் புத்தகமாக நிறையப் பேர் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கைப்பேசிகள் இல்லாதபோது, எல்லோரும் புத்தகங்களைப் படித்துக்கொண்டு இருந்தனர். அது நம்முடைய கண்களுக்குத் தெரிந்தது. ஆனால், இன்றைக்கு இணையப் புத்தகங்களாக மாறிவிட்டன. பி.டி.எஃப். வடிவிலும் வந்துவிட்டது.

சென்னையிலேயே புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டுதானே இருக்கிறது. புத்தகங்களை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கோடிக்கணக்கில் விற்பனையும் ஆகிறது.

இப்போதிருக்கும் மக்கள்தொகைக்குப் புத்தகம் படிப்பது எண்ணிக்கை குறைவாகத் தெரிந்தாலும், நாளடைவில் இது அதிகரிக்கக்கூடும். கைப்பேசியில் படிப்பதில் உள்ள சிரமங்களைப் புரிந்துகொண்டு, அதனால் கண் பார்வை பாதிக்கப்படுவதாக எண்ணி, கொஞ்சம் கொஞ்சமாகப் புத்தகம் வாசிப்புக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது எப்படி இயற்கை உணவுகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகிறார்களோ, அதைப் போலவே இனி எதிர்காலத்திலும் கைப்பேசியைப் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டு புத்தகங்கள் வாசிப்பை கண்டிப்பாக வளர்த்துக்கொள்வார்கள்.

துபைக்கு அண்மையில் நான் சென்றிருந்தபோது கண்ட ஒரு காட்சி. அங்குள்ள மெட்ரோ ரயிலில் பயணிகளில் பாதிப் பேர் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர். துபையில் ஒரு 30% பேர் கைப்பேசியைப் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மற்றபடி புத்தகங்கள் அங்கு நல்ல முறையில் விற்பனையாகிக்கொண்டு இருக்கின்றன. அதே நிலைமை இங்கும் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்திரன்

'ரீல்ஸ்', 'ஷார்ட்ஸ்', 'மீம்ஸ்' என முப்பது விநாடிகள் ஓடும் காணொலிகளால் ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஆனாலும், இன்றைய இணையக் கலாசாரம் வாசிப்புக் கலாசாரத்துக்கு எதிரி அல்ல. அது, வாசிப்புக் கலாசாரத்தைப் புதிய முறையில் ஊக்கப்படுத்துவதற்குக் கிடைத்த மிகப்பெரிய கருவியாகும்.

எப்போதும் கைப்பேசியில் ஆழ்ந்துள்ள இளைய தலைமுறையினர், அதே கைப்பேசியில் மின் புத்தகங்களைப் படிக்குமாறு பழக்கப்படுத்தலாம். எழுத்து மொழியைப் படிக்கச் சிரமப்படுவோருக்கு இணைய வடிவில் கிடைக்கும் காணொலி புத்தகங்களைக் கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் புதிய வாசகத் தலைமுறை உருவாகும்.

அச்சிடப்பட்ட புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கவில்லை என்கிற கவலையை இணையக் கலாசாரம் தீர்த்து வைக்கிறது. மிகவும் அபூர்வமாகக் கிடைக்கும் ஏராளமான புத்தகங்கள் மின் புத்தகங்களாக இன்றைக்கு எளிதில் வாசிக்கக் கிடைக்கின்றன. கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் குறித்த அறிமுகங்களையும் விமர்சனங்களையும் 'யூடியூப்', 'ரீல்ஸ்' மூலமாகச் செய்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தலாம்.

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள், புத்தகங்கள் சொல்லும் சிந்தனைகள் பற்றிய விவாதங்கள் ஆகியவற்றை முகநூல் மூலமாக வெளிநாடுகளிலும் இருக்கும் வாசகர்களிடம் நாம் எடுத்துச் சென்று புதிய வாசகத் தலைமுறையை நாம் உருவாக்க முடியும். இன்றைக்கு யூ டியூபில் ஏராளமானவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களின் சுருக்கங்களைப் பகிர்ந்து புத்தகங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்குகின்றனர். எழுத்தாளர்களை நேர்காணல் செய்து, இணையத்தின் மூலமாகப் பகிர்ந்துகொள்வதால் புதிய வாசகர்களை உருவாக்கி வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கலாம்.

ஆபத்தான மின்சாரத்தை நாம் எப்படி கையாண்டு இருட்டை விரட்டும் விளக்குகளை எரிப்பதுபோல, இணையம் மூலமாக நமக்குக் கிடைக்கும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஆடியோ புத்தகங்கள், மின் புத்தகங்கள் ஆகியவை எளிதில் வாசகனுக்குக் கிடைக்குமாறு செய்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com