மேடைப் பேச்சு எளிதல்ல...
ஆயிரக்கணக்கான மேடைகள், உலகம் முழுக்க சுற்றுப்பயணங்கள் என்று ஓய்வு இல்லாமல் இயங்கி வரும் மேடைப் பேச்சாளுமை பாரதி பாஸ்கர்.


ஆயிரக்கணக்கான மேடைகள், உலகம் முழுக்க சுற்றுப்பயணங்கள் என்று ஓய்வு இல்லாமல் இயங்கி வரும் மேடைப் பேச்சாளுமை பாரதி பாஸ்கர். சுமார் பத்து நூல்களை எழுதியவர். தமிழ்நாடு அரசின் கம்பன் விருது , திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீன விருதுகள் போன்ற பல விருதுகளைப் பெற்றவர். அவருடன் ஒரு சந்திப்பு:
உங்களுக்குள் இருந்த பேச்சாளரை இனம் கண்டு கொண்டது எப்போது?
நான் ஐந்தாம், ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளிப் பருவத்தில் தமிழாசிரியர்கள் பேச்சுப் போட்டிகளுக்குத் திரும்பத் திரும்ப என்னைப் பேசச் சொல்வார்கள். மேடை ஏறி நான் தயங்கிப் பேச மறந்து நின்றாலும் கூட ஏன் என்னைத் தொடர்ந்து பேச வைக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றும். பிறகுதான் தெரிந்தது, என்னிடம் சிறு அளவு திறமை இருப்பதை அவர்கள் கண்டு கொண்டார்கள் என்று. வெளியில் நடக்கும் போட்டிகளுக்கும் என்னைத் தயார் செய்து அனுப்புவார்கள்.
என் அக்கா, நீதிபதி வெ.ராமசுப்பிரமணியம் போன்றவர்கள் குழு போல ஒன்றாகப் பேச்சுப் போட்டிக்குச் செல்வார்கள். அப்போது நானும் உடன் செல்வதுண்டு. அப்படிச் செல்லும்போது திருவிழா போல் நடக்கும் விழாவில் பேசும் பெரிய பேச்சாளுமைகளைக் கண்டு வியந்திருக்கிறேன்.
நான் பதினொன்றாவது படித்தபோது, காரைக்குடி கம்பன் விழாவில் என் அக்கா பேசப் போயிருந்தபோது, நான் துணையாகச் சென்றேன். அங்கே அ. ச. ஞானசம்பந்தன், புலவர் காந்திமதி, ராதாகிருஷ்ணன் ஆகியோரின் உரையைக் கேட்டேன். அ.ச.ஞா. பெரிய தமிழ்க் கடல்.
அறிவியலையும் தமிழையும் இணைத்து அவர் பேசியது வியப்பூட்டியது. 'தமிழை இவ்வளவு சுவாரசியமாக சலிப்பு இல்லாமல் பேச முடியுமா?' என்று வியப்பாக இருந்தது. அந்தப் பாணி பிடித்தது. அது முதல் எனக்கு பேச்சின் மீது ஆர்வம் வந்தது.
பள்ளிக்காலத்திலேயே பல போட்டிகளுக்கு வெளியே சென்று கொண்டிருந்தேன். கல்லூரிக் காலத்தில் சென்னை கம்பன் கழகத்தில் பேசி ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றேன். அது அப்போது பெரிய தொகை. பொறியியல் கல்லூரியில் தமிழுக்குப் பெரிய இடம் கொடுக்க மாட்டார்கள். இப்போது நிலை மாறியிருக்கிறது.
அந்தப் பேச்சுப் போட்டியில் கலந்து பரிசை வாங்கினால் சென்னை கம்பன் விழாவில் பேச வைப்பார்கள். ஆனாலும், அப்போது நான் பேச்சாளராவேன் என்கிற கனவு இருந்ததில்லை. வங்கிப் பணி தான் அப்போது எனக்கு விருப்பமாக இருந்தது.
சாலமன் பாப்பையாவின் குழுவில் இருந்து அழைப்பு வரும் வரை நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. இதை ஒரு பொழுதுபோக்கு என்றே நினைத்தேன். அவர் அணியில் பேசிய பிறகு அதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த பிறகு அதுதான் எனக்குப் பிரதானமாகத் தோன்றியது.

பாரதி பாஸ்கர்
பி.டெக்., எம்.பி.ஏ. படிப்புகள், வங்கிப் பணி இணைந்தது இயற்கை. இந்த வரிசையில் தமிழார்வமும் மேடைப்பேச்சும் இணைந்தது எப்படி?
எனது கொள்ளுத் தாத்தா அனந்தராம ஐயர் உ.வே.சா.வுடன் பணியாற்றியவர். கலித்தொகை உரையைப் பதிப்பித்தவர். அப்படி எங்களுக்கும் தமிழுக்கும் நல்ல தொடர்பு உண்டு. எனது அம்மாவுக்கும் தமிழார்வம் அதிகம். பாரதி, திருவள்ளுவர் பிடிக்கும்.
நாங்கள் சகோதரிகள் சண்டை போட்டுத் திட்டிக் கொண்டால் கூட 'இனிய உளவாக இன்னாத கூறல்' குறள் சொல்வார். அம்மா முன்பு யாரும் மொழியைப் பிழையாகப் பயன்படுத்தினால் பிடிக்காது. இப்படிப்பட்ட குடும்பப் பின்புலம் எனக்குத் தமிழ் மீது பற்றுதல் வர காரணமாக இருந்தது. எனவே படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் எனது தமிழார்வமும் என்னை அறியாமல் எனக்குள் வளர்ந்து கொண்டே இருந்தது.
தமிழில் பேசுவோரின் பண்டித மனநிலையைத் தாண்டி நீங்கள் கம்பன் தமிழையும் பேசுகிறீர்கள், கலாப்ரியா கவிதைகளையும் பேசுகிறீர்கள். மரபிலிருந்து நவீனம் நோக்கி எப்படிச் சென்றீர்கள்?
எனக்கு மரபு தான் ஆரம்பம். நான் கம்பனிலிருந்து தொடங்கினேன். எதேச்சையாக ஜெயகாந்தன், தி. ஜானகிராமன் போன்றவர்களைப் படிக்க ஆரம்பித்தபோது எனது பார்வை நவீன இலக்கியம் பக்கம் சென்றது.ஜெயமோகனைப் படித்த பிறகு நவீன இலக்கியம் பற்றிய பல அறிமுகங்கள் எனக்குக் கிடைத்தன. மரபு , நவீனம் இரண்டுக்கும் இடையில் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத இணைப்புப் பாலம் இருக்கிறது.
சங்க இலக்கியத்தில் இல்லாத நவீனக் கூறு இன்று புதுக்கவிதையில் இருக்கிறது என்று சொல்ல முடியுமா?
சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் தலைவன், தலைவி என்று மனிதர்களைப் பற்றி இருக்காது. காட்சியைப் பற்றி விவரங்கள் இருக்கும். இயற்கைக் காட்சி பேசுகிறபோது, அதில் ஊடாடி இருக்கிற மானுட உணர்வைப் பேசும். நவீன கவிதையின் கூறும் இதுதான். நேரே சொல்லி விளக்காமல் படிமங்களால் பேசுவது. மரபிலிருந்து நவீனம் என்பது ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குச் செல்லும் பயணம். ஒன்றை விலக்கி இன்னொன்றுக்குச் செல்வதல்ல.
மரபிலுள்ள பல்வேறு கூறுகள் நவீன கவிதைகளில் உள்ளன. எனவே இயல்பாகவே மரபில் இருந்து நான் நவீனத்தை நோக்கிச் சென்றேன். வாசிக்கிறேன்; இரண்டில் உள்ள நுட்பங்களையும் நான் ரசிக்கிறேன். இரண்டுக்குமான இணைப்புப் பாலமாக இருக்க விரும்புகிறேன்.
உங்களிடமிருந்த எழுத்தாளர் எப்போது வெளியே வந்தார்?
ஒருமுறை சிலம்பொலி செல்லப்பன், 'இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் எல்லாம் காற்றில் பறந்து போய்விடும். எப்போது எழுதப் போகிறாய்' என்றார். எனக்குத் தயக்கமாக இருந்தது. சுகிசிவம், 'அவள் விகடனி'ல் என்னை எழுதச் சொன்னார். அப்படி வந்த தொடர் தான் 'நதி போல ஓடிக் கொண்டிரு'.
இப்போது கூட ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் திருக்குறள் பற்றிய ஆங்கிலத் தொடர் எழுதுகிறேன். சில வாரங்களில் முடித்து விடலாம் என்றால் 13 வாரம், 26 என்று தொடர்ந்து இப்போது 160 வாரம் சென்று கொண்டிருக்கிறது. அந்த நெருக்கடி அழுத்தம் இருப்பதால் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் எழுத்தாளராக இன்னும் போகவேண்டிய தூரம் இருக்கிறது.
இப்போது எழுத்தாளர்களைவிட பேசுபவர்களே நட்சத்திரங்களாக இருக்கிறார்கள்; அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்கிற அபிப்பிராயம் குறித்து?
இது தவறான கருத்து. எழுத்தாளர்கள் காலத்தில் வாழ்வார்கள். பேச்சாளர்கள் காலத்தில் வாழ்வது அரிதிலும் அரிது. எழுத்தாளர்களுக்குப் பேச்சாளர்கள் மீது இப்படி ஓர் எண்ணம் இருப்பதை நான் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். பேச்சாளர்களுக்கு உடனடியாக அங்கீகாரம் கிடைப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. எத்தனையோ பேச்சாளர்கள் இருக்கிறார்கள். வெற்றி பெறுபவர்கள் 10% கூட இருக்காது.
பேச்சாளர்களின் பயணங்கள் பிற துறையினர் கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. பேச்சாளர்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல. பேசுவதும் சுலபமல்ல. அதற்கான பயணங்கள், முன் தயாரிப்பு, உழைப்பு என்பதும் சாதாரணமல்ல. சில நேரம் வெளியூர்ப் பயணம் சென்று வந்து இறங்கிய உடனே புறப்பட்டுச் செல்ல வேண்டி இருக்கும். அதற்கான தயாரிப்புக்கான மன அழுத்தம் அதிகம். பேசுகிற பேச்சாளர் எல்லோரும் மேலே வந்து விடுவதில்லை. அவர்களெல்லாம் தொடர்ந்து நீடிக்க முடியாது. பேச்சாளர்களில் 10% பேருக்குத்தான் மக்களின் ஏற்பு கிடைக்கிறது. எத்தனை தலைமுறை தாண்டியும் எழுத்தாளர் வாழ முடியும்.
பேச்சாளராக உங்கள் வாழ்வில் அரிய தருணங்கள் என்று எதைக் கூறுவீர்கள்?
2015-இல் இலங்கை யாழ்ப்பாணம் சென்றிருந்தோம். அதற்கு முன்பாக போக முடியாத சூழல் இருந்தது. அதற்கு முன்பு, எஸ்.பி.பி. மட்டுமே அங்கு சென்று இருந்தார். இறுதிப் போர் முடிந்து பட்டிமன்றத்திற்காக நாங்கள் அப்போது சென்றிருந்தோம். யாழ் இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
சங்கிலியான் தோப்பு என்ற ஒரு பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தது. நெருக்கடிகளில் இருந்து மக்கள் மீண்டு வந்த காலமது. அப்போது 800 நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. ஆனால் அங்கே மக்கள் ஆர்வமாக வந்து கூடி, பெரும் கூட்டம் கூடி விட்டது. 4,500 பேர் கூடி விட்டார்கள். இதுபோக நின்று கொண்டும் ஆங்காங்கே சுற்றியுள்ள கட்டடங்களில் மாடிகளில் நின்றுகொண்டும் எங்கள் பேச்சைக் கேட்டார்கள். அவர்கள் எங்களைச் சந்தித்தபோது, மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகப் பகிர்ந்து கொண்டது வேறு அனுபவமாக இருந்தது.
உடல் நலக்குறைவு நெருக்கடி மூலம் உணர்ந்தது என்ன ?அந்தக் காலத்தில் உங்களுக்கான பிரார்த்தனைகள் வேண்டுதல்கள் உணர்த்தியது என்ன?
நான் மருத்துவமனையில் இருந்த 24 நாள்கள் உலகில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் வீடு வந்து பார்த்தபோது, எனக்காக வெளியில் பிரார்த்தனை செய்து அனுப்பிய பிரசாதங்கள் அனைத்தும் சாக்குப் பைகளில் மூட்டை, மூட்டையாக வீட்டில் குவிந்து இருந்தது. அதைப் பார்த்தபோது, எனக்கு வியப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
நூற்றுக்கணக்கான பேர் என்னிடம் பேசினார்கள். அதன் பிறகு நானோ குடும்பத்தினரோ வெளியில் செல்லும்போதெல்லாம் என் பெயரில் அர்ச்சனைகள் செய்திருப்பது தெரிய வந்தது. மக்கள் என் மீது கொண்ட அன்பை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நினைத்துப் பார்க்காத எத்தனையோ கோயில்களில் இருந்து பிரசாதங்கள் வந்திருந்தன.
நான் ஒரு பட்டிமன்றப் பேச்சாளர். இந்த மக்களுக்காக நான் என்ன செய்திருக்கிறேன்? ஆனால், அத்தனை அன்பைக் காட்டி இருக்கிறார்கள். இது பற்றிப் பேசும் போது இது தமிழுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று என் நடுவர் சொன்னார்.
பட்டிமன்றங்கள் இப்போது காலாவதியாகி விட்டனவா?
உண்மையில் பட்டிமன்றங்களுக்கான வரவேற்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறதே தவிர குறையவே இல்லை. தொலைக்காட்சியில் வருகிற பட்டிமன்றம் மட்டும்தான் இந்த உலகத்தில் நடப்பதாக நினைக்கிறார்கள். சன் டி.வி.யை எடுத்துக் கொண்டால் ஆண்டுக்கு நான்கு பட்டிமன்றங்கள்தான் வரும். நாங்கள் ஆண்டுக்கு நான்கு நிகழ்ச்சிகள்தான் நடத்துகிறோமா? இல்லையே. ஏராளமான தலைப்புகளில் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இலக்கியத் தலைப்புகள், அறிவியல் தலைப்புகள், ஆன்மிகத் தலைப்புகள் இப்படி நிறைய உண்டு. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இருந்து பொருளாதார பிரச்னை வரை பேசுகிறோம். இவை எல்லாம் தொலைக்காட்சிகளில் வராது. நாங்கள் பேசும் சில வாசகங்களைச் சின்ன பிள்ளைகளை வைத்து 'டப்ஸ்மாஷ்' செய்து பிரபலமாகியுள்ளன. அதை லட்சக்கணக்கான பேர் பார்க்கிறார்கள்.
இன்றும் பட்டிமன்றத்திற்கான ஈர்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது .
எழுத்தாளர்கள் படித்துக் கொண்டே இருப்பது, போல் பேச்சாளர்கள் என்ன செய்து பயிற்சி பெற வேண்டும்?
ஒரு பேச்சாளர் செய்யக் கூடாதது என்னவென்றால் பேச ஆரம்பித்த தலைப்பை யூடியூப்-இல் போட்டுப் பார்த்து பிறர் என்ன பேசி இருக்கிறார்கள் என்று பார்த்து அப்படிப் பேசுவது தான் ஒரு பேச்சாளரின் அழிவு என்று சொல்ல வேண்டும். அதைச் செய்யக்கூடாது. ஆனால், அதைத்தான் இன்று பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பாணி என்ன என்பது பேசப் பேசவே தெரிந்து கொள்ள வேண்டும். வாசிப்பு மிக முக்கியம். அது இல்லாமல் பேசினால் சாயம் வெளுத்து விடும்.
எப்போதும் பெண்மையை உயர்த்திப் பிடிக்கிறீர்களே?
நான் பேச வந்த 2000 காலகட்டத்தில் , 8 ஆண்டுகள் முன்பு வேலைக்குச் சென்றேன். இந்த 25 ஆண்டு காலகட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் தொகை அதிகரித்துள்ளது. பெரிய மாற்றம் நடந்த காலகட்டம் அது. அதையெல்லாம் பார்த்துத்தான் நான் இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். என் கண்ணெதிரே அந்த பெரிய மாற்றத்தைக் காண்கிறேன்.
வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள், அவர்கள் பற்றிய பேச்சு என குடும்பம் பெரிய மாற்றத்தைக் கண்ட காலகட்டத்தை என் கண்முன்னே பார்த்திருக்கிறேன். அவர்கள் பல்வேறு போராட்டங்களையும் தடைகளையும் தாண்டித் தான் மேலே வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் அவர்களுக்காகப் பேச வேண்டும்தானே? பட்டிமன்றத் தலைப்பு எதுவாக இருந்தாலும் பெண்களைப் பற்றி நான் குரல் கொடுக்கிறேன். எந்த இடத்திலும் பெண்களை வளர விடமாட்டார்கள், வளர்ந்தாலும் தோளுக்கு மேல் வளர அனுமதிக்க மாட்டார்கள். ஊடகங்களிலும் அப்படித்தான், எல்லா இடங்களிலும் அப்படித்தான்.அவர்களுக்கான ஒரு குரல் வேண்டும் தானே? அந்த குரலாக நான் இருக்கிறேன்.
யூடியூப்-இல் கதை சொல்வது எந்த மாதிரியான விளைவைக் கொடுத்து இருக்கிறது?
அமெரிக்காவில் இருக்கும் எனது அக்காவின் மகள் தமிழ் படிப்பதில் கொஞ்சம் பின்தங்கி விட்டாள். வேகமாகப் படிக்க முடியவில்லை. ஏதாவது பேசி அனுப்பச் சொன்னாள். அவளுக்காக நான் சில கதைகளை வாசித்து அதைக் குரல் பதிவு செய்து அனுப்பினேன். அதைக் கேட்டு விட்டு நன்றாக இருக்கிறது என்று யூடியூபில் பேசச் சொன்னாள்.
நாலரை ஆண்டு காலம் 350 விடியோக்கள் என்று பேசிப் பதிவிட்டு இருக்கிறோம். நம்ப முடியாத அளவுக்கு அதற்கான வரவேற்பு இருக்கிறது. இதில் தமிழில் வெளியே தெரியாத ஆர். சூடாமணி போன்ற எழுத்தாளர்களை அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...