காலம் என்பது இருளுக்கும், ஒளிக்கும் நடுவில் உள்ள இடைவெளி என்பர். அப்படிப்பட்ட காலம், மணிமாறனுக்கு இருள் முடிந்தவுடன் ஒளியைத் துவக்குமா? அல்லது இருளிலேயே தொடர வைக்குமா? என்பதை அறிய இந்தக் கதை முடியும்வரை நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.
நள்ளிரவு பன்னிரண்டரை மணிக்கு வேளச்சேரியிலிருந்து ஏர்போர்ட் டிரிப் முடித்து, விமான நிலைய மேம்பாலம் அருகில் வரிசையாகக் காத்திருந்த வாகனங்களுக்கு இடையே டாக்ஸியை செருகி தன் இருக்கையை, படுக்கையாக்கி, அடுத்த சவாரிக்காகச் சாய்ந்திருந்தான் மணிமாறன். இரண்டரை மணிவாக்கில் வளைகுடா, மேற்கத்திய விமானங்கள் வந்து குவியத் துவங்கும். நல்ல சவாரி கிடைத்தால் அதை முடித்துவிட்டு வீட்டுக்குப் போய்விடலாம். பிறகு, மதியம் எழுந்தால் போதும் என்பது அவன் எண்ணம்.
'இணைய ஆப்'பில் 'டிங்' என்று சத்தம் கேட்க, நந்தம்பாக்கம் சவாரி ஒன்று வந்தது. அதை ஓடுமீனாக விட்டு உறுமீனுக்குக் காத்திருந்தான். சில நிமிடங்கள் கழித்து, செங்கல்பட்டுக்கு அருகே புதிய குடியிருப்பு ஒன்றுக்கான அழைப்பை ஏற்றுக் கொண்டான். காருக்கு வெளியே வந்து தண்ணீர் பாட்டிலைத் திறந்து முகத்தில் நீர் சிதறி, அந்த நபருக்கு போன் செய்தான். இன்டர்நேஷனல் வளாகத்தில், முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காத்திருந்தார். பின்னால் பொருள்கள் வைக்கும் பகுதியைத் திறந்துவிட்டான். சூட்கேஸ் பெட்டிகளை ஏற்ற சிரமப்பட்டார். அவர் காலில் ஏதோ ஒரு வலி போல. பொதுவாக அவன் கீழே இறங்கி பெட்டியை ஏற்றுவதில்லை. சிலர் என்ன சார்ஜ் வருகிறதோ? அதை மட்டும் கொடுத்துவிட்டு, நகர்ந்து விடுவார்கள். முதுகுவலி மட்டுமே மிச்சமாகும். அவர் தடுமாறியதைப் பார்த்ததும், கீழே இறங்கி ஒரு கைப்பிடித்து உள்ளே வைத்தான். தாம்பரம் திசையை நோக்கி வண்டியை முடுக்கினான்.
'ஏ.சி.யை அதிகப்படுத்தட்டுமா, சார்?''
'வேண்டாம்''
'துபை ஃப்ளைட்டுங்களா?''
'ஃபிராங்பார்ட்''
பின்புறமுள்ள கண்ணாடி வழியே நோக்கினான். அவரை எங்கேயோ பார்த்ததுபோல இருந்தது. டாக்ஸியில் பயணிக்கும் சிலரைப் பார்க்கும்பொழுது, முன்னமே பார்த்ததுபோலத் தோன்றுவது சகஜம்தான்.
'தூக்கம் வராமல் வண்டி ஓட்ட, வேற ஏதாவது பேச்சு கொடுக்கலாமா?' என்று நினைக்க, அவர் கண்களை மூடிக்கொண்டு இருந்தார். பயண அசதி போல.
சில கஸ்டமர்கள்தான் அரிசி விலையில் ஆரம்பித்து அரசியல்வரை, விடாமல் கேட்பார்கள். அப்படிப்பட்ட நபர்கள் பயணித்தால் வண்டி ஓட்ட அலுப்பாக இருக்காது.
சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள், அதிகம் தனிப்பட்ட விஷயங்களைப் பேச மாட்டார்கள். நாம் வெளியூர் என்பதையும் உச்சரிப்பை வைத்துக் கண்டுகொள்வார்கள்.
சென்னை பரப்பளவில் விரிந்துகொண்டே இருந்தாலும், மனதளவில் சுருங்கிக் கொண்டே வருகிறது. தினசரி நடக்கும் எலிப்பந்தயத்தில், வெற்றி பெறுபவர்களை மட்டுமே கொண்டாடும் மாநகரம் இது. மற்றவர்களை மிதித்துதான் ஓடி வெற்றி பெற வேண்டியிருக்கிறது. சென்னை வந்து நாமும்தான் எப்படி மாறி விட்டோம்? அவன் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
மயிலாடுதுறையில் வாடகைக் கார் ஓட்டிக்கொண்டிருந்த 'மணி' இல்லை, இப்போது இவன். இத்தனை சுயநலம் அப்போது இருந்ததில்லை. துலாஸ்நானம், திருக்கடையூர், சீர்காழி, சிதம்பரம், நவகிரகக் கோயில்கள் எனப் பெரும்பாலும் லோக்கல் ஏரியாவைத்தான் சுற்றி வருவான். நண்பன் முத்துச்செல்வன்தான் சென்னைக்கு அழைத்தான்.
'மச்சான் மூணு மடங்கு அதிகம் சம்பாதிக்கலாம். நாலு மாசம் ஓட்டிப்பாரு. செட்டாகலைன்னா திரும்ப ஊருக்குப் போயிடு!'' என்றான் நட்புடன்.
ஓனர், நல்லவராக இருந்தார். பேட்டா கணிசமாகக் கொடுத்தார். ஒருமுறை முன்னால் சென்று கொண்டிருந்த விலையுயர்ந்த கார், திடீரென பிரேக் போட, இவன் டாக்ஸி லேசாக உரசிவிட்டது. அந்த வாகனத்தை ஓட்டியவர் இறங்கி பெரிதாக சண்டையிட, ஓர் ஆட்டோ டிரைவர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
'தம்பி ஊருக்குப் புதுசா? தில் இருந்தா இறங்கி மோதணும், இல்லன்னா விட்டுட்டு ஓடணும். இப்படிக் கையைப் பிசைஞ்சிகிட்டு நிக்கக் கூடாது...'
ஆறுமாத திணறலுக்குப் பிறகு, மாநகரம் பிடிபட்டது. இங்கேயே ஒட்டிக் கொண்டான்.
'டிரைவர்'' என்று பின்சீட்டிலிருந்து குரல் கேட்க, நினைவலைகளிலிருந்து மீண்டான்.
'போகிற வழியில மறைமலைநகர் அருகே ஒரு மருந்து பார்சல் கொடுத்துட்டுப் போகணும்''
'சரி சார், அட்ரஸ் சொல்லுங்க...''
டேஷ்போர்டில் விடியற்காலை நேரம் 3:20 என்றது. சாலையில், சென்னையை நோக்கிவரும் ஆம்னி பஸ்கள், சரக்கு லாரிகள் என ஒளி விளக்குகளின் அலைவரிசை தெரிந்தது.
'சார் மறைமலை நகர்...''
'சர்வீஸ் லைன் வழியாகப் போங்க, அங்கிருந்து மூணாவது லெஃப்ட்''
அரை தூக்கத்திலிருந்த தெருநாய்கள் எழுந்து குரைத்தபடி, டாக்ஸியை சிறிது தூரம் துரத்தின. சில குறுகலான சந்துகளைக் கடந்து, அவர் குறிப்பிட்டிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பை வாகனம் அடைந்தது.
'டிக்கியைக் கொஞ்சம் திறக்கறீங்களா?''
ஒரு சிறிய பார்சலை எடுத்துக் கொண்ட அவர், 'சீக்கிரம் வந்துடறேன்''
'பரவாயில்லை, சார்!''
காரை திருப்பி, ஓரத்தில் பார்க் செய்துவிட்டு வெளியே வந்தான் மணிமாறன். லேசான குளிர் இருந்தது. ஒதுக்குப்புறமாகச் சென்றார். அவர் சென்ற, இரண்டாவது மாடியில் விளக்கு எரிந்தது. சிறிதுநேரத்தில் அவர் கீழே இறங்கி வரும் சப்தம் கேட்டதும், மணிமாறன் காரின் பின் கதவை திறந்து வைத்துவிட்டு, ஓட்டுநர் இருக்கைக்குச் சென்று அமர்ந்து வாகனத்தை ஸ்டார்ட் செய்தார்.
'கிளம்பலாமா சார்?'' என்று கண்ணாடி வழியே பார்த்துக் கேட்டபோதுதான் கவனித்தார். அவர் பக்கத்தில், ஓர் இளம்பெண்ணும் இருந்தாள்.
'இவங்க எப்ப ஏறினாங்க? யார் என்று கேட்கலாமா?'' என்று மணிமாறன் யோசித்து, ஏதும் பேசாமல் வாகனத்தை நகர்த்தினார். பின்னால் இருந்த இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மகேந்திரா சிட்டியைக் கடந்து பரனூர் டோல் தாண்டி புதிதாகக் கட்டப்பட்டிருந்த பல அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை கார் அடைந்தது. 'ஏ பிளாக்' சென்று வாகனத்தை நிறுத்திவிட்டுப் பின்னால் திறந்து பெட்டிகளை எடுத்து வெளியே வைத்தார்.
'இதை தயவுசெய்து லிஃப்ட் பக்கம் கொண்டு வச்சிடறீங்களா? முடியுமா?'' என்று கேட்டார். இரண்டு பெட்டிகளின் சக்கரத்தை உருட்டியபடி லிஃப்ட் அருகே சென்று வைத்துவிட்டு வாகனத்துக்கு வந்து அமர்ந்தான். அவர் தன் பர்ஸை திறந்து 500 ரூபாய் நோட்டுகள் சிலவற்றை எடுத்தார். 'சில்லரை இல்லையே சார், ஜீ.பே செய்யறீங்களா?''
' இல்ல, வச்சுக்கோங்க!''
'கிளம்புறேன் சார்!''
'தேங்க்ஸ், ஜாக்கிரதையா போங்க, அதிகாலை டிராபிக்.''
மணிமாறன் வளாகத்தை விட்டு வெளியே வந்து மெயின் ரோட்டை விரைவாகத் தொட்டார். வீட்டில் மனைவி மல்லிகா உறங்கிக் கொண்டிருப்பாள். கடந்த ஒருவாரமாக இரவு டூட்டி நிறைய பார்க்க வேண்டியதாகிவிட்டது. இன்னும் இரவு மிச்சமிருக்கிறது. அவள் எழுவதற்குள் விரைவாக மிதித்தால் சிட்லபாக்கத்தை அடைந்து விட முடியும்.
வண்டியின் வேகத்தைக் கூட்டினான். பின்னால் ஒரு பெட்ரோல் டேங்கர் லாரி ஹை பீம் வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி தொடர்ந்து கொண்டிருந்தது. ரியர் வியூ கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்தவன், திடுக்கிட்டான். அவர் கூட வந்த அந்தப் பெண் வண்டியின் பின் இருக்கையில் இன்னும் இருந்தாள்! கண்கள் மூடிய நிலையில் இருந்தாள்.
'நீங்க... நீங்க அவர் கூட இறங்கலையா?''
பின்னால் வந்த ட்ரக் பெருத்த ஒலியை எழுப்பியது.
அவள் மெதுவாக 'இல்லை'' என்றாள்.
சூட்கேஸ்களை கொண்டு போய் லிஃப்ட் அருகே வைத்துவிட்டு வந்ததை நினைவுப்படுத்திக் கொண்டார். கிளம்புவதற்கு முன்பாக அந்த நபர்தான் பின் இருக்கை கதவை சாத்திவிட்டுப் பணம் கொடுத்தார்.
'நீங்க எங்க போகணும்?''
'போக வேண்டாம், பேசணும்''
'பேசணுமா? எங்கே இறங்கணும்னு சொல்லுங்க...''
'என்னை ஞாபகமிருக்கிறதா?''
அந்த இளமையான முகத்தைப் பின் கண்ணாடி வழியே பார்த்த மணிமாறனின் உடம்பு பதறியது,
'யார் இவள்?'
'எப்படி உன்னால் மறக்க முடியும்? எங்களை அந்தரத்தில் விட்டுவிட்டு ஓடினாயே நினைவில்லையா?
இன்றிலிருந்து சரியாக மூன்று வருடங்களுக்கு முன், நானும் சற்றுமுன் இறங்கிச் சென்றாரே சரண், எங்கள் இருவரையும் கதற விட்டு ஓடினாயே... அந்தச் சம்பவத்தை மறந்து விட்டாயா?''
அவளே தொடர்ந்தாள்:
'அப்போது அவருக்கும் எனக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. அந்தச் சமயத்தில்தான் எதிர்பாராமல், லண்டனில் உள்ள யூனிவர்சிட்டியில் எனக்கு உயர் கல்விக்கு அட்மிஷன் கிடைத்தது. அவருக்கு என்னை வெளிநாட்டுக்கு அனுப்பி, இரண்டு ஆண்டுகள் காத்திருக்க விருப்பமில்லை. ஏற்கெனவே நாங்கள் நான்கு வருடங்கள் காதலித்து வந்தோம். எனக்கோ, அந்தப் புகழ் பெற்ற எகனாமிக்ஸ் யுனிவர்சிட்டியில் படிப்பது பெரிய கனவாக இருந்தது. அடுத்த நாள் விடியற்காலை அவர் அலுவலக விஷயமாக கொல்கத்தா செல்ல வேண்டி இருந்தது.
அடுத்த 10 நாள்கள், அவர் திரும்ப வாய்ப்பில்லை. அதற்குள் நான் யூனிவர்சிட்டி அழைப்புக்கு பதில் தர வேண்டியிருந்தது. அந்த இறுதி முடிவை எடுக்க, தனிமை தேவைப்பட்டது.
அன்று இரவு 9:30 மணிக்குதான் அவர் அலுவலகத்தில் இருந்து வந்தார். என்னிடம் 'வழக்கமாகச் சந்திக்கும் பூங்காவுக்குச் சென்று அரைமணி நேரம் பேசி ஒரு முடிவுக்கு வருவோம்' என்றார்.
அந்த பார்க் எங்களுக்கு மிகவும் பிடித்த, மரங்கள் நிறைந்த அழகான பிரதேசம். நடுவில், பரந்த மைதானம். தினசரி ஜாகிங் செய்யும்பொழுதுதான் அவர் பழக்கமானார். இரவு என்பதால் பைக்கை எடுக்கவில்லை. உங்களுடைய டாக்ஸியில்தான் பயணித்தோம். காத்திருக்க வேண்டும் என்று சொன்னதால், நீங்கள் மொபைல் ஆப் உபயோகிக்கவில்லை. பார்க் வாசலில் இறங்கி, உங்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்றோம்.
தனிமையான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து பெஞ்சில் அமர்ந்தோம். சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென மரங்களின் மறைவிலிருந்து ஐந்து பேர் வெளிப்பட்டார்கள். மது அருந்திய நிலையிலிருந்த அவர்கள் எங்களை வேகமாக நெருங்கினார்கள்.
என்னைப் பார்த்து, தவறான வார்த்தைகளை உச்சரிக்க, சரண் அவர்களை எதிர்க்க முற்பட, நிலைமையை உணர்ந்து உடனே அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினோம்.
அவர்கள் துரத்த, இருவரும் ஓட ஆரம்பித்தோம். அவர்களில் ஒருவன் உருட்டுக் கட்டையை வீச, சரண் காலில் வந்து விழுந்தது. ஒருவன் என் கையைப் பிடிக்க, என் கையிலிருந்த செல்போன் பறிபோனது. நாங்கள் இருவரும் தட்டுத்தடுமாறி வெளிகேட்டுக்கு ஓடி வந்தோம். அவர்கள் விடாமல் துரத்தினார்கள்.
'டாக்ஸி, டாக்ஸி' என்று உங்களை உரத்தக் குரலில் கூப்பிட்டோம். நீங்கள் ஹெட்லைட் போட்டுக் கொண்டு எங்களை நோக்கி வந்தீர்கள். அதற்குள் உருட்டுக் கட்டைகளுடன் சூழ்ந்து கொள்ள, மிக அருகில் வந்த நீங்கள் திடீரென விலகி, வாகனத்தை ஓட்டிக் கொண்டு போய்விட்டீர்கள்.
நாங்கள் கதறியும், நீங்கள் வண்டியை நிறுத்தவில்லை. சரண் பிடிபட்டு, எழு முடியாதபடி கடுமையாகத் தாக்கப்பட்டார். நான், என்னை இழந்தேன். நீங்கள் குறைந்தபட்சம் போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்குக் கூடத் தகவல் கொடுக்கவில்லை. நீங்கள் வந்த சுவடு தெரியாமல், சம்பவத்திலிருந்து வெளியேறிவிட்டீர்கள்''
என்று நீண்ட நேரம் பேசிய அந்தப் பெண் முகத்தை மூடிக் கொண்டு விசும்பி அழுதாள். பின்னர், அவளே தொடர்ந்தாள்:
'சரண், இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் தன் வருமானம் முழுவதையும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்து வருகிறார். என் பெற்றோரையும், அவர் அடிக்கடி சென்று கவனித்துக் கொள்கிறார். மருந்து பார்சல் கொண்டுபோய்க் கொடுத்தது அவர்களுக்குத்தான். ஒரு பெண் பரிதவிப்பின் விளிம்பில் இருக்கும்பொழுது, அதைத் தடுக்க முடியாவிட்டாலும், மற்றவர்களைத் துணைக்கு அழைத்து, அவளைக் காக்கும் ஒரு சிறு முயற்சியைக் கூட நீங்கள் செய்யாமல், மெளனமாக அகன்று விட்டீர்கள்...'' என்று அவள் குரல் கரகரத்தது.
'அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, வெறும் நான்கு நாள்கள் மட்டுமே நான் உயிர் வாழ்ந்தேன்'' என்று முடித்தாள்.
மணிமாறன் திடுக்கிட்டார். பின்புறம், அவசரமாகத் திரும்பிப் பார்த்தபோது, பின்சீட்டில் யாரையும் காணவில்லை. உடம்பு பதறியபடி, முன்னே சாலையைப் பார்க்க, கழுத்தைத் திருப்பினார். முடியவில்லை; கால்களும் இயங்கவில்லை. வாகனம், தன் இருளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்.இ.டி. வரலாற்றில் மறக்கக் கூடாத லோசெவ்
பச்சைப்பட்டு பரிவட்டம்

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!
கழுத்தில் விழாத மாலை!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

