காதல் காலாகாலமாக செய்கிற தவறு!

"காதலுக்கும் காமத்துக்குமான இடைவெளி என்னவென்று பல பேருக்கு தெரியவில்லை. பல பேருக்கு காதலிக்கவே தெரியவில்லை.
காதல் காலாகாலமாக செய்கிற தவறு!

"காதலுக்கும் காமத்துக்குமான இடைவெளி என்னவென்று பல பேருக்கு தெரியவில்லை. பல பேருக்கு காதலிக்கவே தெரியவில்லை. உடம்புக்கும் மனசுக்கும் நடக்கிற போராட்டத்தை வர்ணிக்கிற வார்த்தைகள் எந்த மொழியிலும் துல்லியமாக இல்லை. மனிதனாக பிறந்த நம் ஒவ்வொருத்தர் உள்ளேயும் இந்த மாதிரி காதலும் காமமும் மாறி மாறி ராட்டினம் சுற்றுகிறது. சிலர் மயங்கி விடுகிறார்கள். சிலர் தலை சுற்றலோடு இறங்கி விடுகிறார்கள். சிலர் யாருக்கும் தெரியாமல் அழுது, சிரித்து சமாளித்து விடுகிறார்கள், காதலோ, காமமோ அது மனசுல இருக்கிற வரைக்கும்தான் கௌரவம். அதுவே மூளைக்கு ஏறி விட்டால் எல்லோருமே ராவணன்தான். இப்படி ஒரு லைன்தான் இந்த "ஏமாலி'. படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு. அடுத்து பாட்டு, டிரெய்லர், படம் எல்லாமே உங்கள் கவனம் கலைக்கும் என்று நம்புகிறேன்''. நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் வி.இசட். துரையுடன் நடந்தது உரையாடல்.... 

"ஏமாளி'தான் சரியான வார்த்தை. ஆனால் நீங்கள் சொல்லுகிற "ஏமாலி'க்கு என்ன அர்த்தம்...?
காதலிக்கிறவர்கள், காதலித்தவர்கள், காதலிக்கப் போகிறவர்கள், காதலிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருக்கும் ஒரு பாதிப்பை கொடுக்கிற படம்தான் இந்த "ஏமாலி'. எல்லா அவனும், எல்லா அவளும் கடந்து வரக் கூடிய விஷயம்தான் காதல். காதலோ, காமமோ அதில் எனக்கு எப்போதுமே குழப்பம் வந்ததில்லை. ஆனால், அது இரண்டுமே வெறும் அனுபவங்களாக மாறி நிற்பதில்தான் எனக்கு கோபம். ஒரு பூ காயாகி, காய் கனியாகிற விநாடியை உலகத்தில் எவனாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், நம் கண்ணுக்கு முன்னாலேயே அந்த மாற்றம் நடந்திருக்கும். காதல் அப்படி எல்லோருக்குள்ளும் வரும். எனக்குள்ளேயும் வந்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், காதலில் காலம் காலமாக நம்மவர்கள் செய்துக் கொண்டிருக்கிற ஒரு தவறை இதில் அழுத்தமாக சுட்டிக் காட்டி, அந்த தொடர்ச்சிக்கு முற்றிப்புள்ளி வைக்க முயற்சி செய்திருக்கிறேன். அது உங்களைத் தாக்கும். காதலித்தவர், காதலிக்க போகிறவர், காதலித்து முடித்தவர்கள் எல்லோரையும் அழுத்தும். பெரிய சம்மட்டி அடியாக மன ஆழத்தில் விழும். நான்கு அடுக்கு கதை. இது தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிது. "ஏமாளி'யை ஏன் "ஏமாலி'னு வைத்திருக்கிறேன் என்று கதையில் ஒரு முடிச்சு இருக்கும். அது அவிழும் போது அத்தனை அபூர்வம் திரையில் நடக்கும். 

சமுத்திரக்கனி அழுத்தமான நடிப்பை தருகிறவர். ஆனால், நீங்க சொல்கிற கதை வேறு மாதிரியான மன ஓட்டத்தை ஏற்படுத்துகிறதே? 
அரவிந்த்சாமி - கௌதம் கார்த்திக் எனறு ஒரு திட்டம் முதலில் இருந்தது. ஆனால், நான்தான் சமுத்திரக்கனிதான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். காரணம், சமுத்திரக்கனியின் உடல் வாகும், வசன மொழியும் எனக்கு பிடிக்கும். அதை இதில் சரியாக பொருத்தி பார்த்துதான் இந்தக் கதையை எழுதினேன். அதனால், சமுத்திரக்கனி தவிர்த்து வேறு யாரையும் நான் யோசித்துப் பார்க்கவில்லை. முதல் அடுக்கில் சமுத்திரக்கனி சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வருகிறார். இரண்டாவது அடுக்கில், "லிவிங் டு கெதர்' பகுதி. தமிழ் சினிமாவில் இதுவரை "லிவிங் டு கெதர்' உறவை இது போன்று யாரும் பதிவு செய்திருக்க மாட்டார்கள். இது அப்படி ஒரு முன் உதாரணமாக இருக்கும். மூன்றாவது அடுக்கில் போலீஸ் அதிகாரி, நான்காவது அடுக்கில் சி.ஐ.டி அதிகாரியாக வருகிறார் சமுத்திரக்கனி. ஒவ்வொரு கட்டமாக இப்படி கதை வளர்ந்துக் கொண்டே போகும். நடிப்பிலும் சமுத்திரக்கனி சிகரம் அடைந்தது மாதிரி உணர்கிறேன். 

ஜெயமோகனின் வசனங்கள், பெரிய அழுத்தத்தை கொடுக்குமோ?
இதை வெறும் கமர்ஷியல் சினிமாவாக மட்டுமே எடுக்காமல், ஓட்டுமொத்த சமூகத்துக்கும் ஒரு அழுத்தம் கொடுக்க வேண்டும் என யோசித்தேன். அதற்குதான் ஜெயமோகன் என்ற எழுத்து ஆளுமை தேவைப்பட்டார். அவரை சந்தித்து கதை சொல்ல சொல்ல அவருக்கு ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. முழுக் கதையை கூட கேட்காமல், கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என ஆர்வமாகி விட்டார். இந்த ஆர்வம் எனக்கு அவ்வளவு சந்தோஷம். ஜெயமோகன் சாரின் வசனங்கள் பெரும் துணிச்சலாக வந்து சேர்ந்திருக்கிறது. ஏனென்றால், கதைக்கும் அதுதான் தேவையாக இருந்தது. சுருக்கமாக, "பீப்' சவுண்ட் படத்தின் இன்னொரு முக்கியமான கேரக்டர் என்று கூட சொல்லலாம். அதுக்காக ஆபாச வசனங்கள் அதிகமா இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். "பல பொண்ணுங்க, ஒருத்தனோட லவ் புரபோஸலை "முடியாது'னு சொல்ல முடியாமத்தான், "ஓகே' சொல்றாங்க....'' என்று ஒரு வசனம் வரும். இப்படிப் பல உண்மையான வசனங்கள் படம் முழுக்க இருக்கும். அதனால்தான் இந்தப் படம் எல்லோரையும் அழுத்தும் என்று சொன்னேன். 

அதிகமாக உழைத்தும், "6 மெழுகுவர்த்திகள்' படம் சரியாக போகாமல் போனதால்தான் இவ்வளவு இடைவெளியா?
சினிமாவை ரசித்து ஏற்றுக் கொண்டவன் நான். அதனால் இறக்கும் வரை சினிமாவில் எங்கேனும் இயங்கிக் கொண்டேதான் இருப்பேன். அதேசமயம், ஒரு படம் இயக்கினால், அதை ரசித்து செய்ய வேண்டும் என்று நினைப்பேன். பெரிய நடிகரோ, சின்ன நடிகரோ... பட்ஜெட் பற்றி கூட கவலை இல்லை. நான் எடுக்கிற படங்களில் ஏதாவது ஒரு படம் காலம் கடந்தும் நிற்க வேண்டும். ரசிகர்கள் அந்தப் படத்தை கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பேன். "ஏமாலி' படம் பார்த்தவர்கள் எல்லாம், அப்படி பாராட்டுகிறார்கள். இந்த 17 வருடங்களில் 6 படங்கள்தான் இயக்கியிருக்கிறேன். ஆனாலும், ரசிகர்கள் என்னை ஞாபகத்தில் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அது போதும்.
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com