தெரிந்த பெயர், தெரியாத விவரம்: ஜவ்வாதுமலை

கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை ஆகியவற்றை அடுத்து வரும் மலைத்தொடரே ஜவ்வாதுமலை.
தெரிந்த பெயர், தெரியாத விவரம்: ஜவ்வாதுமலை

* கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை ஆகியவற்றை அடுத்து வரும் மலைத்தொடரே ஜவ்வாதுமலை.

* வேலூர்-திருவண்ணமலை ஆகிய இரு மாவட்டங்களில் 262 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த மலைத்தொடரின் சராசரி உயரம் சுமார் 1060 அடி முதல் 1160 அடி வரை.

* பீமன் நீர்வீழ்ச்சி, காவனூர் வானியல் ஆய்வகம், அமிர்தி நீர்வீழ்ச்சி, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, கோமுட்டேரி படகு குழாம் போன்றவை இங்குள்ள சுற்றுலாத் தலங்கள்.

* ஜமுனாமரத்தூருக்குச் செல்ல நான்கு வழிகள் உள்ளன. போளூரில் இருந்தும், செங்கத்தில் இருந்து மேல்பட்டு வழியாகவும், வேலூரில் இருந்து அமிர்தி வழியாகவும் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம், காவனூர் வழியாகவும் ஜமுனாமரத்தூர் செல்லலாம்.

* இங்குள்ள காவனூர் வானியல் ஆராய்ச்சி மையம், ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி மையம். மத்திய வானியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மையத்தில் வெளிநாட்டு ஆய்வாளர்களும், வானியல் துறை மாணவர்களும் வந்து ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர்.

* பட்டறைக்காடு என்ற ஊரில் உள்ள இரண்டு குன்றுகளில் கருங்கற்களால் அமைக்கப்பட்ட அறைகளை நூற்றுக்கணக்கில் காணலாம். இங்கு 3 அடி உயரம் கொண்ட மனிதர்கள் சில நூற்றாண்டுகள் முன்பு வசித்ததாகக் கூறப்படுகிறது.

* செங்கம், கலசப்பாக்கம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய நான்கு தாலுகாக்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் இந்த மலைத்தொடரில் தான் அமைந்துள்ளன.

* இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் "மலையாளி' (கேளரத்தவர் அல்ல) என்ற பிரிவைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் ஆவர். தங்களை "மலை கவுண்டர்' என்றும் சொல்கின்றனர். (இவர்களுக்கும் கவுண்டர் என்ற சாதியினருக்கும் சம்பந்தம் இல்லை)

* மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை. சாமை, கொள்ளு போன்றவை பெரும்பாலான இடங்களில் பயிரிடப்படுகின்றன. பள்ளமான இடங்களில் நெற்பயிர்கள் அறுவடை செய்யப்படுகின்றன. சீதாப்பழம், கொய்யா, பலா போன்ற பழங்களும் மலை வாழையும் கூட இங்கே கிடைக்கின்றன.

* ஆண்டுதோறும் ஜூன் மாதம் கோடை விழா மூன்று நாள்கள் நடைபெறும். அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த விழா, இந்தப் பகுதியின் முக்கியமான திருவிழா.

* வேந்தியப்பன், காளியம்மா ஆகிய கிராம தேவதைகள் இங்கே வழிபடப்படுகின்றன. இங்குள்ள மக்களிடம் ஒரு விசித்திரப் பழக்கமுண்டு. திருமணம் செய்ய பேச்சு முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டுக்கு பெண்ணை அழைத்துச் சென்றுவிடுவார்கள். சில மாதங்களுக்குப் பிறகே திருமணம் நடைபெறும்.

* இங்குள்ள குனியமுத்தூர் என்ற ஊரில் மத்திய அரசின் நிதியுதவியுடன் பழங்குடியின மக்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 500 மாணவர்கள் தங்கி பயில மானியம் வழங்கப்படுகிறது. ஜமுனாமரத்தூரில் வனத்துறை மூலமும் 1960 முதல் பள்ளி நடத்தப்படுகிறது. அத்திப்பட்டில் உள்ள கிறிஸ்தவ மிஷினரி பள்ளியும் புகழ்பெற்றது.

* செய்யாறு, ஆரணியாறு, கமண்டல நதி, மிருகண்டா நதி ஆகிய நதிகள் இந்த மலையில் உற்பத்தியாகின்றன.

* போளூரில் இருந்து மலையேறும் வழியில் மேல்செலம்படி, கீழ்செலம்படி ஆகிய ஊர்கள் இருக்கின்றன. இந்த ஊர்களுக்கு வாகனங்களில் செல்ல வழியில்லை; நடந்து மட்டுமே செல்ல முடியும். இங்குள்ள குள்ளர் குகைகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

* காவல்துறையின் ஒயர்லெஸ் கண்காணிப்பு டவர் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய இடங்களில் மட்டுமே உள்ளது. ஜவ்வாதுமலையிலும் ஒரு டவர் நிறுவப்பட்டுள்ளது. 

* ஜமுனாமரத்தூரில் இருந்து பரமனந்தல் செல்லும் வழியில் மேல்பட்டு என்ற கிராமத்தில் 1890-இல் கட்டப்பட்ட "கண்ணாடி மாளிகை' என்ற பயணியர் விடுதி உள்ளது. இங்கு தங்க திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் அனுமதி வாங்கி செல்ல வேண்டும்.
- சி.பி.குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com