ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -33: "ஆடப்பிறந்தவளே' பாடல் வந்த கதை

பாடலைப் பற்றிச் சொல்வதற்கு முன் மூன்று வாரங்களுக்கு முன் நடந்த என் மகளின் திருமணம் பற்றிய
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -33: "ஆடப்பிறந்தவளே' பாடல் வந்த கதை

பாடலைப் பற்றிச் சொல்வதற்கு முன் மூன்று வாரங்களுக்கு முன் நடந்த என் மகளின் திருமணம் பற்றிய செய்தியைச் சொல்லிவிட்டுத் தொடர விரும்புகிறேன். ஆறாண்டுகளுக்கு முன்பு என் மகளுக்குத் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அந்தச் செய்தியை இசைஞானி இளையராஜாவிடம் சொல்வதற்காகச் சென்றிருந்தேன்.

செய்தியைச் சொன்னவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர் எழுந்து சென்று கைகழுவிவிட்டு வந்து ஒருலட்சம் ரூபாயைக் கொடுத்து திருமணத்தை சிறப்பாக நடத்துங்கள் என்றார். அதுபோல் அண்ணன் ஆர்.எம்.வீ வேண்டியவரும் காவியக் கவிஞர் அண்ணன் வாலியின் நெருங்கிய நண்பருமான தொழிலதிபர் கிருஷ்ணகுமார் இதைக் கேள்விப்பட்டு என்னை அழைத்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ""திருமணத்தைச் சீர்பெற நடத்துங்கள். மேலும் தேவைப்பட்டால் சொல்லுங்கள்'' என்றார். 

ஆனால் அந்தத் திருமணம் நடைபெறவில்லை. இப்போதுதான் அது 
நடந்திருக்கிறது. 

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி 
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த 
உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம் 
பருவத்தால் அன்றிப் பழா
என்ற ஒளவையார் பாடலும்
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று

என்ற கண்ணதாசனின் பாடலும் தான் அப்போது நினைவுக்கு வந்தது. ஏனென்றால் அன்றைக்குப் பார்த்த மாப்பிள்ளை வேறு. இன்றைக்குப் பார்த்து மணம் முடித்திருக்கும் மாப்பிள்ளை வேறு.

திருமண வரவேற்பு அழைப்பை கவிப்பேரரசு வைரமுத்துவிடம் கொடுத்த போது. இந்தத் திருமணத்தில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று சொல்லி, நான் கேட்காமலேயே ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தார்.

அதே போல் தொழில் அதிபர் கிருஷ்ணகுமாரிடம் அழைப்பைத் தந்த போது ""அந்தத் தேதியில் நான் ஊரில் இல்லை, இதை வைத்துக் கொள்ளுங்கள்'' என்று வலுக்கட்டாயமாக என் கையில் இருபத்தையாயிரம் ரூபாயைத் திணித்தார்.
இதற்கெல்லாம் கைம்மாறாக நான் என்ன செய்து விடப் போகிறேன்? 

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் 
வானகமும் ஆற்றல் அரிது 
-என்ற திருக்குறளைத்தான் நான் நினைவு கொள்ள வேண்டும்.

என் குலதெய்வ வழிபாட்டிற்காகச் சொந்த ஊருக்குச் சென்ற போது என் மகளின் முதல் திருமண அழைப்பை மதுரை ஆதீனத்திடம் தான் மதுரைக்குச் சென்று கொடுத்தேன். அவர் வாழ்த்துத் தெரிவித்ததுடன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்னைக்கு வருகிறேன் என்றும் சொன்னார். சொன்னது போல், வரவேற்பு நிகழ்ச்சிக்காகவே மதுரையில் இருந்து சென்னை வந்தார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை அரங்கிலேயே அமர்ந்திருந்தார். என் மனம் நெகிழ்ந்து விட்டது. வருகை தந்த திரைப்படக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், இலக்கிய விற்பன்னர்கள் எல்லாரும் அவருடன் அளவளாவினர்.

தெரிந்த நண்பர்கள், இலக்கியவாதிகள் பலருக்கு நான் அழைப்பு கொடுக்கவே இல்லை. காரணம் தனி ஒருவனாக என்னால் அலைய முடியவில்லை, ஆயினும் கூட இருந்து உதவிய திரைப்பட இயக்குநர் ஜே.பி. என்ற ஜெயப்பிரகாஷ், நடிகர் அருள்மணி, மணவை பொன். மாணிக்கம், கலைமாமணி ஏர்வாடி ராதா கிருஷ்ணன், கவிஞர் ரவி சுப்பிரமணியம், தொழில் அதிபர் சுந்தர், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நாஞ்சில் அன்பழகன் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அழைப்புக் கொடுக்காமலேயே பலர் வருகை தந்து வாழ்த்தினர்.

ஒருவர் செய்த உதவிக்கு ஈடாக உன்னால் எதுவும் செய்ய முடியாது என்றால் அவர்கள் செய்த உதவியை நான்கு பேர் அறியச் சொல்லிவிடு. அதுவே நீ காட்டும் நன்றிக்கு அடையாளம் என்று நபிகள் நாயகம் போன்ற ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில்தான் இதைச் சொல்கிறேன்.

2015-இல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் சென்னை நகரம் பாதிக்கப்பட்ட போது நிவாரணப் பணிகளுக்காக இசைஞானி இளையராஜா ஒருவர் மட்டுமே பெருந்தொகைக் கொடுத்து உதவினார். இது பலருக்குத் தெரியாது. 

இப்படிப்பட்ட பண்பாளர்களால் தான் இவ்வுலகம் வாழ்கின்றது. இதைத்தான் "பண்புடையார்ப் பட்டுண்டுலகம்' என்றார் வள்ளுவர்.

என் மகள் திருமணத்தின்போது காவியக் கவிஞர் அண்ணன் வாலி இல்லையே என்ற குறையைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை. என் மகளை சிறு குழந்தையிலிருந்தே நன்கறிவார். ""எப்போது திருமணம் எப்போது திருமணம்'' என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார். ஜாதகம் பொருந்தவில்லையென்று நான் சொன்ன போது ""ஜோதிடம் தனை இகழ்' என்று பாரதியாரே சொல்லியிருக்கிறார். ஆகவே ஜாதகத்தை நம்பாதே'' என்றும் சொல்வார். அப்படிப்பட்ட சிறப்புக்குரியவர் அண்ணன் வாலி.

அவர் திரைப்பாடல்கள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த போது, இலக்கியவாதிகள் கண்ணதாசனுக்குக் கொடுத்த அங்கீகாரத்தை அவருக்குக் கொடுக்கவில்லை. "அவதார புருஷன்' என்ற காவியத்தை எழுதிய பிறகு தான் இலக்கியவாதிகளும் தமிழறிஞர்களும் அவர் பக்கம் திரும்பினர்.

கம்பன் விழாக் கவியரங்கம் போன்ற இலக்கிய விழாக்கள் அனைத்திலும் அவரை அழைக்கத் தொடங்கினர். "பாண்டவர் பூமி', "கிருஷ்ணவிஜயம்', "இராமானுஜ காவியம்' போன்ற பல காவியங்களைப் படைத்திருந்தாலும் அதில் மாஸ்டர் பீஸ் என்று சொல்லும்படி இருப்பது "அவதார புருஷன்' தான். இயைபுத் தொடையை வைத்து எழுதுவதில் அவருக்கு நிகர் எவரும் இலர்.

இராமனுடைய அவதாரத்தைச் சொல்லும்போது,
அன்று சர்ப்பத்தில் படுத்தவன்
இன்று கோசலையின் கர்ப்பத்தில் படுத்தான்
என்பார்.
காகங்கள் கொத்தியா கற்பாறை பிளக்கும்
மேகங்கள் முட்டியா மேல்வானம் வெடிக்கும்
என்று ஓரிடத்தில் எழுதியிருப்பார்.
குழந்தை ராமன் அழுகிறான். கோசலை தாலாட்டுகிறாள்... எப்படி....?
பாலகர் என்றால் பாலுக் கழுவார்
பார்த்த(து) உண்டு நாட்டினிலே
பாற்கடல் மீதே படுத்துக் கிடந்தவன்
பாலுக் கழுவதேன் வீட்டினிலே
இப்படிப் பலவற்றைச் சொல்லலாம்.

""ஒருவன் ஆளாண்மை மிக்கவனாயினும், தோளாண்மை மிக்கவனாயினும் அவனிடம் தாளாண்மை இல்லையென்றால் வாழ்க்கை வயலில் அவனால் வேளாண்மை செய்ய முடியாது'' என்று ஓரிடத்தில் உரைப்பார். இதெல்லாம் மறக்க முடியாத கருத்துகள்.
ஆனாலும் இலக்கியப் பயிற்சி இல்லாதவர்களெல்லாம் அவரை விரும்பியது அவருடைய பாடல்களுக்காகத்தான். எம்.ஜி.ஆர். தான் அவர் வளர்ச்சிக்குப் பலமாக இருந்தார். இது அனைவரும் அறிந்த உண்மை, ஆனாலும் ஒரு படத்தில் பாடல் எழுதும் போது எம்.ஜி.ஆருக்கு மனக்கசப்பு ஏற்பட்டு ""இந்தப் படத்தில் இனி நீங்கள் பாடல் எழுத வேண்டாம்'' என்று சொன்ன நிகழ்ச்சியும் நடந்திருக்கிறது.

"அரச கட்டளை' படத்தில் ஒரு காட்சி.
அந்த நாட்டுமன்னன் ஒரு சர்வாதிகாரி. அவனுடைய ஆட்சியைக் கண்டித்தும் அவனுக்கு எதிராகவும் மக்கள் மனதில் புரட்சிக் கருத்துக்களை தன் பாடல் மூலம் விதைக்கிறாள் ஒரு நாட்டியக்காரி. இதைக் கேள்விப்பட்ட சர்வாதிகாரி, ""நீ ஆடல் பாடலை நிறுத்த வேண்டும். இல்லையேல் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று ஆணையிடுகிறான்.

அந்த அரசாணையை ஒரு படை வீரனிடம் கொடுத்தனுப்புகிறான். அந்த ஓலையைப் பறித்துக் கொண்ட கதாநாயகன், ""எல்லாருடைய கட்டளைக்கும் மேற்பட்ட ஒரு கட்டளை இருக்கிறது. அதுதான் இறைவன் கட்டளை. இறைவன் கட்டளைக்கு முன்னால் எந்த சர்வாதிகாரியின் கட்டளையும் நிற்காது. இதை உன் அரசனிடம் போய்ச் சொல்'' என்கிறான். இதுதான் காட்சி.

""இது நான் பாடுவது போல இருக்க வேண்டும். இங்கேயே பல்லவி எழுதுங்கள்'' என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். வாலியும் அதற்குத் தகுந்தாற்போல் பல்லவி எழுதிக் காட்டியிருக்கிறார். அதைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் ""என்னை இழிவுபடுத்த வேண்டும் என்று எத்தனை நாள் காத்திருந்தீர்கள் வாலி?'' என்று கோபமாகக் கேட்டிருக்கிறார்.

உடனே வாலி, உடல் வியர்த்து வெலவெலத்துப் போய், ""நீங்கள் சொன்ன காட்சிக்கு நான் சரியாகத் தானே எழுதியிருக்கிறேன். இதில் என்ன தவறு?'' என்று கேட்டிருக்கிறார்.

""காட்சிப்படி சரிதான். ஆனால் இதில் வேறொரு கருத்தும் வருகிறதே அது புரியவில்லையா உங்களுக்கு? பல்லவியை நீங்களே படியுங்கள்'' என்றார் எம்.ஜி.ஆர்.

ஆண்டவன் கட்டளை முன்னாலே - உன்
அரச கட்டளை என்னாகும் 

 என்று வாலி பல்லவியைப் படிக்கத் தொடங்கினார்.
""நிறுத்துங்கள். நம் படத்திற்குப் பெயர் என்ன?'' இது எம்.ஜி.ஆர். கேள்வி
""அரச கட்டளை'' - இது வாலியின் பதில்.
""சிவாஜி நடித்து நூறு நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படம் ஆண்டவன் கட்டளை. இது உங்களுக்குத் தெரியுமல்லவா?'' 
 ""ஆமாம். தெரியும்.''
""அப்ப, ஆண்டவன் கட்டளை முன்னாலே, உன் அரச கட்டளை என்னாகும் என்றால் சிவாஜி நடித்த "ஆண்டவன் கட்டளை' படத்திற்கு முன்னாலே நீ நடிக்கும் "அரச கட்டளை'ப் படம் நிற்க முடியுமா என்று கேட்பது போல் இல்லையா?''

""அண்ணே, நான் அப்படியெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை. காட்சிக்கு இது சரியென்று நினைத்து எழுதினேன், மன்னிக்க வேண்டும். வேறு பல்லவி எழுதுகிறேன்'' என்று வாலி சொல்லியிருக்கிறார்.

""வேண்டாம். இனிமேல் இந்தப் படத்திற்கு நீங்கள் எந்தப் பாட்டும் எழுத வேண்டாம்'' என்று சொல்லிவிட்டு கவிஞர் நா.மா.முத்துக்கூத்தனை அழைத்து, காட்சியை விளக்கிப் பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

உடனே முத்துக் கூத்தன்,
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
ஆடிவா ஆடிவா ஆடிவா 
ஆடப் பிறந்தவனே ஆடிவா

என்ற பல்லவியை எழுதினார். இந்தப் பாடல் அந்தப் படத்தில் மிகவும் பிரபலமான பாடலாக இன்றும் விளங்குகிறது.

கவிஞர்களை விட எம்.ஜி.ஆர். பாடல்களில் எவ்வளவு நுட்பமாகக் கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதை வாசகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com