அம்புஜம் கிருஷ்ணா 100

தமிழில் ஏராளமான இசைப் பாடல்கள் இயற்றியிருக்கும் அம்புஜம் கிருஷ்ணாவின் நூற்றாண்டை, இரண்டு வகைகளில் கொண்டாடியது டி.வி.எஸ். குடும்பம். கடந்த மாதம், அருணா சாயிராம் அம்புஜம் கிருஷ்ணாவின்
அம்புஜம் கிருஷ்ணா 100

தமிழில் ஏராளமான இசைப் பாடல்கள் இயற்றியிருக்கும் அம்புஜம் கிருஷ்ணாவின் நூற்றாண்டை, இரண்டு வகைகளில் கொண்டாடியது டி.வி.எஸ். குடும்பம். கடந்த மாதம், அருணா சாயிராம் அம்புஜம் கிருஷ்ணாவின் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். சென்ற வாரம் நடனக் கலைஞர் அனிதா குஹா, தன் குழுவினரின் நடன நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க அம்புஜம் கிருஷ்ணா பாடல்களையே நாட்டியத்துக்கு எடுத்துக்கொண்டார். அதாவது கிருஷ்ணரின் பிறப்பிலிருந்து அவருடைய லீலைகளை வர்ணிக்கும் பாடல்களுக்கு நடனமாடி, ருக்மிணி கல்யாணத்தில் முடித்து வைத்த "தீமேட்டிக்' நடன நிகழ்ச்சியாக வழங்கினார்.
ஒருமுறை வித்துவான் மதுரை கிருஷ்ணன், அம்புஜம் கிருஷ்ணாவை மதுரையில் சந்தித்தாராம். ""கிருஷ்ணர் பிறந்தது முதல் ருக்மிணியைத் திருமணம் செய்துகொள்வது வரை ஒரு தொகுப்பாகப் பாடல்கள் எழுதிக்கொடுங்களேன். நான் மெட்டமைக்கிறேன்!''என்று கேட்டுக்கொண்டாராம். ""எனக்கு ஒன்றுமே தோன்றவில்லையே, நீங்கள் இப்படிக் கேட்டுவிட்டீர்களே!'' என்று அம்புஜம் கிருஷ்ணா பதில் சொல்ல, கிருஷ்ணன் கிளம்பிப் போகப் புறப்பட்டு, வாசல் வரை சென்றுவிட்டாராம். அதற்குள் அம்புஜம் கிருஷ்ணாவுக்கு முதல் பாடல் மனதில் உதித்துவிட்டது. "நந்தன் மனை தனிலே...' பாடல் பிறந்த கதை இதுதான். அப்புறம் என்ன? மளமளவென்று கிருஷ்ணரின் லீலைகளை விவரிக்கும் பாடல்கள் ஒவ்வொன்றாக மனத்தில் உதிக்க, ஒரு நடன நாடகத்துக்கு } ஆபராவுக்கு } வேண்டிய பாடல்களை எழுதி முடித்துவிட்டாராம் அம்புஜம் கிருஷ்ணா. கவிஞர்களுக்கு ஒரு தூண்டுதல் போதும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ரேவதி சங்கரன், மதுரைக்காரர். டி.வி.எஸ் குடும்பத்தில் ஒருவர் மாதிரிதான். அவர் ஒரு முறை அம்புஜம் கிருஷ்ணா இவருக்கு எழுதிக் கொடுத்த "ஊஞ்சல் பாட்டு', அந்தக் குடும்பத்தில் இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. "அண்ணல் ராமச்சந்திரனுடன் ஆரணங்கு சீதை வண்ணமுடன் ஊஞ்சலாடும் வைபவத்தைக் காணவே' என்ற இந்த ஊஞ்சல் பாட்டுக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கிறது என்பது, அம்புஜம் கிருஷ்ணாவின் மகள் ராதா பார்த்தசாரதி சொல்லித்தான் நமக்குத் தெரியும்!
அருணா சாயிராம் இசை நிகழ்ச்சியில் சுரேஷ் கிருஷ்ணா, ராதா பார்த்தசாரதி என்று எல்லோரும் நிறையவே பேசிவிட்டதாலோ என்னவோ, இந்த நடன நிகழ்ச்சியில் பேச்சு குறைவு. முதலில் மட்டுமே மேடையில் தோன்றிய ரேவதி சங்கரன், நிகழ்ச்சி நிறைவு வரை உள்ளிருந்தபடியே அறிவிப்புகளைச் செய்தார். 
பரதாஞ்சலியின் "கிருஷ்ண லீலா மாதுர்யம்' என்ற இந்த நிகழ்ச்சியில் அனிதா குஹா குழுவினர் வழங்கிய பாடல்களின் பட்டியலைப் பாருங்கள்:
நந்தன் மனைதனிலே, பேயொருத்தி அழகுப் பெண் வடிவில், புன்னகை பூத்தனனே, தளர் நடையிட்டு வாரான், சின்னச் சின்னப் பதம் வைத்து, மாயா ஜாலங்கள் செய்கிறான், கண்ணன் வருகின்றான், நின்றாடினானே நீல மேக வண்ண மேனி குலுங்கக் குலுங்க, குழலூதி அமர்ந்திருந்தான் கோவிந்தன், கண்டாரே கரை காணா ஆனந்தம், வந்தாரே மறையோதும் அந்தணர், மாலையிட வரம் வேண்டி, ஞாலந்தனில் உன் புகழும் பேரழகும், அழகுத் திருமுகம் கண்டாளே, கல்யாண வைபவனே காணக் கண் கோடி வேண்டுமே, என்று கண்ணன் பிறப்பு முதல் ருக்மிணி திருமணம் வரை வழங்கி, நிறைவாக மத்யமாவதியில் மங்களத்துடன் நடன நிகழ்ச்சியை ஓர் அஞ்சலியாகவே நடத்தினார் நடன அமைப்புக்குப் பொறுப்பாளரான "ந்ருத்ய சூடாமணி' அனிதா குஹா. ஆனால் எல்லாமே பெஹாக், மோகனம், காபி, ஹம்சாநந்தி, கிசிதிகௌளை, பாகேஸ்ரீ, ஆபோகி, தர்பார், வசந்தா, பைரவி என்று மனசை ஈர்த்து ரசிக்க வைக்கும் ராகங்கள்.
இத்தனை அழகான நிகழ்ச்சியில் பங்கு கொண்ட கலைஞர்களின் பெயர்களைச் சொல்லாமல் இருக்க முடியாது. ஜனனி சேதுநாராயணன், ஸ்மிருதி கிருஷ்ணமூர்த்தி, ப்ரியங்கா, மஹிமா, நூதனா, சிருஷ்டி, அடாணா, ஸ்மிருதி சுதாகர் ஆகியோரின் கட்டுக் கோப்பான நடனங்கள் பாடல்களுக்கு உயிரூட்டின. கோபிகைகளாக ஜெயஸ்ரீ, நிவேதிதா, லக்ஷிதா, அஞ்சலி, ரோஹிணி, ஸ்வேதா, மோனஜா பங்கேற்றனர்.
இசைப் பகுதிக்குப் பொறுப்பாக பி.ஆர். வேங்கடசுப்பிரமணியம், கே. ஹரிபிரசாத், ராம்சங்கர் பாபு, ஜெயஸ்ரீ ராமநாதன், கணபதி வேங்கடசுப்பிரமணியம் ஈசுவர் ராமகிருஷ்ணன், சுருதி சாகர் என்று பொறுப்பு எடுத்துக்கொண்டு ஆர்கெஸ்ட்ராவை அழகாக நிர்வகித்தார்கள். சிறப்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் சுஜாதா விஜயராகவன். ஸ்ரீனிவாசனும், ஐயப்பனும் மேடை ஒளி அமைப்பைப் பாராட்டுக்கு உரிய முறையில் அளித்ததையும் சொல்ல வேண்டும்.
அம்புஜம் கிருஷ்ணா சங்கீத மேடைகளில் பல இசைக் கலைஞர்கள் பாடத் தகுந்த கீர்த்தனைகளை இயற்றியவர். அவருடைய நூற்றாண்டை இத்தனை சிறப்பாகக் கொண்டாடிய அவர் குடும்பத்தினரின் அக்கறை, விழாவில் நன்றாகத் தெரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com