ராகத்தைக் கண்டுபிடியுங்கள்!

கர்நாடக இசையில் ஆர்வம் இருக்கிறவர்கள், இசைக் கச்சேரிகளுக்குச் செல்கையில், இசைக் கலைஞர் ராகமோ, கீர்த்தனையோ பாடும்போது அது
ராகத்தைக் கண்டுபிடியுங்கள்!

கர்நாடக இசையில் ஆர்வம் இருக்கிறவர்கள், இசைக் கச்சேரிகளுக்குச் செல்கையில், இசைக் கலைஞர் ராகமோ, கீர்த்தனையோ பாடும்போது அது என்ன ராகம் என்று கண்டுபிடித்துவிடுவார்கள். சிலர் பக்கத்தில் இருப்பவர்களைக் கேட்பார்கள்; அதாவது நச்சரிப்பார்கள்.  இன்னும் சிலர் முன் ஜாக்கிரதை முத்தண்ணா மாதிரி பாடல்கள்- ராகங்கள் கையேடு ஒன்றைக் கையோடு கொண்டு வந்துவிட்டு, பாட்டைத் தொடங்கியவுடன் பக்கத்தைப் பிரித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வார்கள்.

சிலர் மோகனம், கல்யாணி, சங்கராபரணம் என்றால் சட்டென்று கண்டுபிடித்துவிடுவார்கள்.  ஜகன்மோகினி, சாயாதரங்கிணி போன்ற ராகங்களை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?  அங்கேதான் இருக்கிறது போட்டியின் சுவாரசியம். (இசை கற்றவர்கள் அதில் வரும் ஸ்வரங்களை வைத்து எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்!)  இன்னும் சிலர் கச்சேரிகளுக்குப் போகும்போதெல்லாம் ஒரு குட்டி நோட்டுப் புத்தகத்தையும் எடுத்துச் செல்வார்கள்.

என்ன பாட்டு, என்ன ராகம் என்றெல்லாம் குறித்துவைத்துக்கொள்வார்கள்.  பத்து தடவை பாட்டுக் கேட்டபின் அடுத்த தடவை கச்சேரிக்குப் போகும்போது, இது மோகனம் தானே?  இந்து ஹிந்தோளம் தானே என்று உறுதி செய்துகொள்வார்கள்.  (ரேடியோவில் சொல்வது மாதிரி ராகத்தையும் தாளத்தையும் கச்சேரிகளில் முன்னாலேயே அறிவிக்க மாட்டார்கள்!)  ஆனால் பாடகர் பாடியது இன்ன ராகம் என்று ஊகித்துக் கண்டுபிடிப்பவரின் முகத்தில் காணப்படும் உற்சாகக் களை இருக்கிறதே, அதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் த்ரில்!

மியூசிக் அகாடமியும், டேக் மையமும் சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் ராகங்களைக் கண்டுபிடிக்கப் போட்டி வைத்திருக்கிறார்கள்.  
இம்மாதம் 15- ஆம் தேதி காலை 9.30 முதல் 12 மணி வரை மியூசிக் அகாடமியில்  நடக்கும் இந்தக் கோலாகலமான நிகழ்ச்சியில், வயது வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.  (ஆனால் சாரி, வித்வான்களே, நீங்கள் ஒதுங்கி வழிவிட்டுவிட வேண்டும்!) "வென்றால் ரொக்கப் பரிசுகள் உண்டு! சுடச் சுடக் கைக்கு வந்துவிடும்.  சான்றிதழ் மட்டும் ஒரு வாரத்துக்குள் உங்களுக்கு வந்து சேரும்' என்கிறார் சுமதி கிருஷ்ணன். இவர்தான் இந்தப் போட்டியை வடிவமைத்து நடத்துபவர்.  

டேக் மையத்தையும் ராமு அறக்கட்டளையையும் நடத்தும் ஆர்.டி. சாரி சேர்த்து வைத்து அன்பளிப்பாக அகாடமிக்கு அளித்திருக்கும் ஏராளமான கர்நாடக இசை சிடி- க்களின் பதிவிலிருந்து இதற்கான கேள்விகள் தயாரிக்கப்பட்டு, கேள்விகள்
கேட்கப்படும்.

பாடலின் வரியைக் கேட்டுவிட்டு என்ன ராகம் என்று குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.  அதற்குத் தனியே தாள் கொடுத்துவிடுவார்கள். பிறகு சரியான விடைகளை அறிவிக்கும்போது உங்கள் கெட்டிக்காரத்தனத்துக்கு எத்தனை மதிப்பெண்கள் என்று தெரிந்துவிடும்.  

உங்களுக்கு ராகம் தெரியவில்லை என்றால் அப்பா- அம்மா, தாத்தா- பாட்டியிடம் எல்லாம் கேட்டுக் கேட்டு எழுத முடியாது.  நீங்கள் தனியாகத்தான் உட்கார வேண்டும்.  தனியாகத்தான் கண்டுபிடித்தாக வேண்டும். தனியாகத்தான் எழுத வேண்டும்!

போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், smooty@gmail.com அல்லது rajagopalk@tagcorporation.net என்ற இமெயில் முகவரிக்கு விண்ணப்பித்தால் போதும்.  உங்களுக்குப் போட்டியில் கலந்துகொள்ளத் தகவல் வந்து சேரும்.
சிறப்பாக, பாடகர்- வயலின் கலைஞர் ஸ்ரீராம் பரசுராமின் "ராகங்களைக் கண்டுபிடித்தல் - முறைகளும், உத்திகளும்' என்ற செயல்முறை சொற்பொழிவும் உண்டு.

ராகங்களைக் கண்டுபிடியுங்கள்! பரிசுகளை வெல்லுங்கள்!  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com